#100Unicorns |'யுனிக்' கதை 02 | Flipkart: சவால்களின் சர்க்கஸில் சாதித்த 'சக்சஸ்' பன்சல்ஸ்!
பெருங்கனவு இல்லாமல் ஒரு சின்ன ஐடியாவை வெற்றி அடையச் செய்வது அவ்வளவு சுலபமில்லை என்பதற்கு பன்சல்ஸ் தொடங்கிய புத்தக விற்பனை ஆன்லைன் நிறுவனம் Flipkart ஒரு உதாரணம். பில்லியன் டாலர் யூனிகார்ன் நிறுவனத்தை கட்டமைத்த சச்சின் மற்றும் பின்னி இன்று ஃப்ளிப்கார்டில் இல்லை என்பதும் கதை!
#100Unicorns | 'யுனிக் கதை 02 |
உலக ஆன்லைன் வர்த்தகத்தின் தலைமையாகச் சொல்லப்படுவது வால்மார்ட் நிறுவனம். இந்த நிறுவனம் கடந்த 2017-ல் FlipKart நிறுவனத்தில் 77 சதவீத பங்குகளை 16 பில்லியன் டாலருக்கு வாங்கியது. உலகின் காஸ்ட்லி டீல் என அப்போது இந்த விற்பனை கொண்டாடப்பட்டது. இவ்வளவு பெரிய தொகைக்குப் போன ஃபிளிப்கார்ட் ஒரு காலத்தில் புத்தகங்களை வீட்டுக்கு வீடு சென்று டெலிவரி செய்து கொண்டிருந்த ஓர் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனம் என்று உங்களுக்குத் தெரியுமா?
இந்த நிறுவனத்தை இணைந்து நிறுவியவர்களுள் ஒருவர் பின்னி பன்சல், அவருடன் சேர்ந்து தொடங்கிய மற்றொருவர், சச்சின் பன்சல். (பன்சல் என்ற குடும்பப்பெயர் ஒற்றுமை இருவருக்கும் அமைந்தது, ஆனால் அவர்கள் இருவரும் சகோதரர்கள் இல்லை.) சண்டிகரைச் சேர்ந்த இவர்கள் இருவரும் முதன்முதலில் சந்தித்து கொண்டது, 2005ம் ஆண்டு. ஐஐடி-டெல்லியில்.
இந்தச் சந்திப்புக்கு பின் படிப்பை முடித்த இருவரும் பெங்களூருவில் வெவ்வேறு நிறுவனத்தில் பணிக்கு அமர்ந்தனர். பின்னியை பொறுத்தவரை, பெங்களூரு வேலையில் இருந்துகொண்டே, கூகுளில் வேலைக்கு விண்ணப்பித்தார். ஆனால், இரண்டு முறையும் அவரின் வேலை விண்ணப்பத்தை கூகுள் நிராகரித்தது.
அமேசானில் ‘விதை’
2007ல் சச்சின் பன்சல் அமேசானில் பணிக்கு சேர, அவரைத் தொடர்ந்து பின்னியும் சில மாதங்களிலேயே, அவரின் குழுவில் சேர்ந்தார். இந்த தருணத்தில்தான் இருவருக்கும் தொழில் துவங்கும் யோசனை வந்தது.
தொழில் துவங்கும் யோசனை வந்தாலும், ஆரம்பத்தில் அவர்களுக்கு இ-காமர்ஸ் பற்றிய சிந்தனை புலப்படவில்லை. அவர்களின் ஐடியா, விலை ஒப்பீடுத் தளம் ஒன்றை துவங்க வேண்டும் என்பதுதான். அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோதுதான் இ-காமர்ஸ் தள யோசனை துளிர்க்க, ’Flipkart’டை நிறுவினர்.
ஃப்ளிப்கார்ட்டை வால்மார்ட் கையகப்படுத்திய பின் இருவரின் மதிப்பும் 20 டாலர் பில்லியனை கடந்தது. ஆனால்,
ஆரம்பத்தில் மாதம் ரூ.10,000 வீதம் 18 மாதம் பெற்றோர்களிடம் இருந்து ஒரு தொகையை பெற்று சேமித்து ஆளுக்கு 2 லட்சம் மட்டுமே முதலீடு செய்து புத்தக விற்பனை கொண்ட நிறுவனமாக தொடங்கப்பட்டதுதான் ஃப்ளிப்கார்ட். அதுவும், பெங்களூருவில் இருவரும் தங்கி இருந்த இடத்தில் வெறும் இரண்டு கணினிகளை வைத்து ஃப்ளிப்கார்ட் ஆன்லைன் புக் ஸ்டோரை வடிவமைத்தனர். செப்டம்பர் 15ம் தேதி 2007ல் கோராமங்கலாவில் ஒரு 2BHK வீட்டில் தங்களது முதல் அலுவலகத்தைத் திறந்தனர்.
ஃப்ளிப்கார்ட் தளத்தில் விற்கப்படும் புத்தகங்கள் இந்தியா முழுவதும் டெலிவரி செய்யப்படுவதாக அறிவித்தனர். தொடங்கிய ஆண்டே தனது முதல் வாடிக்கையாளரைப் பெற்றது ஃப்ளிப்கார்ட். தெலங்கானாவில் இருந்து கிடைத்த அந்த புத்தக ஆர்டரை, சச்சினும், பின்னியும் வெற்றிகரமாக டெலிவரி செய்ததால், அவர்களைப் பற்றி வெளியில் வாய்வார்த்தை மூலம் பரவத்தொடங்கியது. 2007ம் ஆண்டை 20 ஆர்டர்களுடன் பூர்த்தி செய்து, ஒரு தொழிலாக Flipkart உருவெடுத்தது.
2007ம் ஆண்டை காட்டிலும் 2008 பன்சல்களுக்கு நன்றாகவே அமைந்தது. இந்தியா முழுதும் பரவலான வாடிக்கையாளர்களுடன் Flipkart பற்றிய பேச்சுகள் அதிகரித்ததில், 24x7 கஸ்டமர் சர்வீஸ் தொடங்கும் அளவிற்கு வளர்ச்சி அடைந்து, சுமார் 3,400 புத்தக டெலிவரிகளை பூர்த்தி செய்து ஆன்லைன் விற்பனையில் தங்களின் இருப்பை காட்டத்தொடங்கிய ஆண்டாக 2008 அமைந்தது.
அலுவலகம் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டாலும், நிறுவனத்தை பெரிதாக்க வேண்டும் என்றால் நிதி வேண்டும். பன்சல்ஸ் முதலீட்டாளர்களை வலைவீசி தேட ஆரம்பித்தனர். 2007-08 வாக்கில், இணையத்தை அடிப்படையாகக் கொண்ட தொழில்முனைவு என்பது பலவீனமான, தோல்வி தோல்வியடையும் முயற்சியாகவே கருதப்பட்டது. இதனால் ஸ்டார்ட்-அப் முயற்சிகள் அப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக தோன்றின.
சில நிதி நிறுவனங்கள் ஸ்டார்ட்அப் முயற்சிகளுக்கு நிதி அளிக்க முன்வந்தாலும், அவை வெளிநாடு சார்ந்த நிறுவனங்களுக்கே நிதி அளித்தன. ஃப்ளிப்கார்ட் போன்ற உள்நாட்டு முயற்சிகளுக்கு நிதி அளிக்க எந்த நிறுவனங்களும் முன்வரவில்லை. இதன்காரணமாக, ஃப்ளிப்கார்ட்டின் ஆரம்ப காலகட்டம் தொடர்ச்சியான பின்னடைவுகள், சிரமங்கள், சவால்களை எதிர்கொண்டு சில தவறுகளால் தடுமாற்றம் கண்டது.
தளராத மனப்பான்மை
"வெற்றி பெறுவதற்கான மனப்பான்மையும் முனைப்பும் இருந்தால், வயது என்பது பெரிய விஷயமல்ல!"
பன்சல்ஸில் இந்த மேற்கோளுக்கு அவர்களே முன்னுதாரணமாகத் திகழந்தனர். ஆரம்பத்தில் நிதி திரட்டுவதில் பன்சல்ஸ் இருவரும் தோல்வியைச் சந்தித்தனர். அவர்களால், அவர்களின் நண்பர்களைகூட, முதலீட்டாளர்களாக இணைத்துக்கொள்ள முடியவில்லை. முதலீட்டாளர்கள் பலரும் பன்சல்ஸ் இருவரும் நேரத்தை வீணடிப்பதாகவே அவர்களை உதாசீனப்படுத்தினர்.
அவமானங்கள் பின்தொடர்ந்தாலும், அவர்கள் தொடங்கிய காரியத்தில் முன்னே செல்லவே தீர்மானித்தனர். தொடங்கி 2 ஆண்டுகள் சென்ற நிலையில், 2009ல் பன்சல்ஸ் இரண்டு பேரை ஃப்ளிப்கார்ட்டின் முதல் பணியாளர்களாக அமர்த்தினர். அதில் ஒருவர், கூரியர் கம்பெனியில் வேலை இழந்த தமிழர் ஆம்பூர் ஐயப்பா, மற்றொருவர் புகைப்பழக்கம் கொண்ட நபர். இந்தப் புகைப்பழக்கம் கொண்ட நபரை பன்சல்ஸ் இருவரும் தங்களுடன் இணைத்துக்கொள்ளக் காரணம், அவர் ஒரு மடிக்கணினி வைத்திருந்தால் மட்டுமே.
தொழில் வளர்ந்தாலும் முதலீடு இல்லாமல் முன்னே செல்லத் தவித்துக் கொண்டிருந்து பன்சல்களுக்கு 2009-ல் பிரபல விசி நிறுவனமான Accel Partners இடமிருந்து முதல் முதலீடு சாத்தியமானது. கிடைத்த 1 மில்லியன் டாலர் முதலீட்டை அளவாக, அழகாகப் பயன்படுத்திய பன்சல்கள், டெல்லி, மும்பையில் கிளைகளைத் திறந்து சுமார் 150 பேரை ஊழியர்களாக்கியது அவர்களின் முதல் மற்றும் ஜாக்பாட் மைல்கல்.
முதலீடு கிடைச்சாச்சு, தொழிலும் பிரபலமாகியது, அப்படியே போகட்டும் என்று இல்லாமல், ஃப்ளிப்கார்ட்டில் புதிய ஐடியாக்களை கொண்டுவர பன்சல்கள் எப்போதும் தவறியதில்லை. இந்திய மக்களுக்கு சற்றும் அறிமுகமில்லாத ஆன்லைன் டெலிவரி மீது நம்பிக்கையை பெருக்க, ‘கேஷ் ஆன் டெலிவரி’ திட்டத்தை அறிமுகம் செய்தது, EKart வழி வசதியான பேமண்ட் வழிகள், 30 நாள் ரிட்டர்ன் பாலிசி என எல்லாமே வாடிக்கையாளர்களை தங்கள் பால் இழுக்கும் யுக்தியாக நன்கே அமைந்தது.
2010 தொடங்கி, அடுத்த சில மாதங்களில் நியூயார்க் நிதி மேலாண்மை நிறுவனம் ஒன்றிடமிருந்து 10 மில்லியன் டாலர் முதலீட்டை ஈர்த்தது Flipkart. வெறும் புத்தகங்களை மட்டும் விற்பது வளர்ச்சிக்கு வழிவகுக்காது என்று புரிந்துகொண்ட சச்சினும், பின்னியும், தங்கள் தளத்தில் எலக்ட்ரானிக் பொருட்கள், போன்கள், கேம்ஸ், மியூசிக், சினிமா என பல பிரிவுகளில் விற்பனையை தொடங்கி, ஃப்ளிப்கார்ட் இந்தியர்களின் இன்றியமையாத தளமாக மாற உதவியது.
இதன்பின், ஃப்ளிப்கார்ட் வளர்ச்சி என்பது இந்திய ஸ்டார்ட்அப் வரலாற்றில் ஒரு சரித்திரம். முதலீடுகள் கிடைத்தபின், சந்தை எப்படி என்பதைப் புரிந்துகொள்ள முயற்சித்த பன்சல்ஸ், சிறந்த எஸ்சிஓவைக் கொண்டு ஃப்ளிப்கார்ட்டை எவ்வாறு மேம்படுத்துவது என்பதை கற்றுக்கொண்டனர். அதேநேரம், முக்கியப் பணியாளர்களை பணிக்கு அமர்த்தியது, இவர்களின் வளர்ச்சியில் மற்றொரு மைல்கல் எனலாம்.
இதுபோன்ற பணியமர்த்தல் மூலம் சச்சின் மற்றும் பின்னி இருவரும் தனியாக செய்யக்கூடியதை விட 20 மடங்கு வேகமாக வணிகம் செய்ய முடிந்தது. ஃப்ளிப்கார்ட்டில் எலக்ட்ரானிக்ஸ் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகே அது அதிக வெகுஜன பார்வை கண்டது.
எது சிறந்த சேவை?
"ஒரு தொழில்முனைவோரின் சிறந்த சேவை என்றால் வாடிக்கையாளருக்கு நீங்கள் அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றுவது என்பதே..." - பன்சல்ஸ்
ஸ்டார்ட்அப் நிறுவனமாக இந்தியாவில் நம்பிக்கை கொண்டு துவக்கிய சச்சின் மற்றும் பின்னி, கேஷ் ஆன் டெலிவரியை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்றது வெற்றிக்கு முதல்படியாக அமைந்தது.
அடுத்த ஐந்தாண்டுகளில், ஃப்ளிப்கார்ட் தனது அற்புதமான சேவையால் வாடிக்கையாளர்களை ஒவ்வொருமுறையும் வியப்பில் ஆழ்த்தியது. புதிய தயாரிப்புகளைச் சேர்ப்பது, விலை குறைப்பு விற்பனை (பிக் பில்லியன் சேல்) என ஆண்டுக்கு ஆண்டு விநியோக வரம்பை விரிவுபடுத்திக் கொண்டே சென்றது.
ஒருகட்டத்தில் ஃப்ளிப்கார்ட் வருவாய் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒருமுறை இரட்டிப்பானது. வளர்ச்சிக்கு தகுந்தவாறு, முதலீட்டாளர்கள் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை ஃப்ளிப்கார்ட்டில் கொண்டுவந்து கொட்ட முன்பைவிட வேகமாக வளர்ந்தது.
2009 தொடங்கி, 2022 வரை சுமார் 12.9 பில்லியன் டாலர்களை 26 கட்டங்களில், பிரபல முதலீட்டு நிறுவனங்களான சாப்ட்பேன்க், டென்செண்ட், டைகர் க்ளோபல் உள்ளிட்ட 30+ அமெரிக்கா, சீனா, லண்டன் முதலீட்டாளர்கள் என உலகமெங்கிலுமிருந்து மொத்தமாக Flipkart நிதி பெற்றுள்ளதே ஸ்டார்ட்-அப் உலகில் அதன் அபார வளர்ச்சியை காட்டுகிறது.
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தபோது சந்தை மாதிரியையே மாற்றியமைத்து இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் காணாத அதிக லாபத்தை ஈட்டி, ஒருகட்டத்தில் இ-காமர்ஸ் ஸ்டார்ட்-அப்களுக்கு ஒரு முன்னோடி நிறுவனமாக நிலைநிறுத்தினர் பன்சல்ஸ் இருவரும்.
இதனால், ஜி.பி.வியில் 1 பில்லியன் டாலர் எட்டிய முதல் இந்திய இ-காமர்ஸ் ஸ்டார்ட்அப், முதன்முதலில் 1 பில்லியன் டாலர் நிதி திரட்டிய ஸ்டார்ட்அப் என பல்வேறு பெருமை ஃப்ளிப்கார்ட் வசமே உள்ளது.
இரண்டு அறை அபார்ட்மெண்ட்டில் தொடங்கப்பட்ட ஃப்ளிப்கார்ட், இன்று பெங்களுரு நகரில் 8.3 லட்ச சதுர அடியில் பிரம்மாண்ட அலுவலகம், இந்தியா முழுவதும் கிளைகள், பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள், சிறுதொழில்முனைவோர்களின் முன்னேற்ற தளமாக அசுர வளர்ச்சி அடைந்திருந்தாலும், அதற்கு அடிக்கல் நாட்டிய இரண்டு நிறுவனர்களான சச்சின் பன்சல் மற்றும் பின்னி பன்சல் இருவருமே அங்கு தற்போது இல்லை.
ஃபிளிப்கார்ட் நிறுவனத்தை வால்மார்ட் கையகப்படுத்திய பின்னர், சச்சின் பன்சலுக்கும், புதிய தலைமைக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள், நிறுவன கோட்பாடுகளில் வந்த மாற்றங்கள் காரணமாக, சச்சின் 2018ல் Flipkart-ஐ விட்டு வெளியேறினார். நிறுவனத்தில் தொடர்ந்த மற்றொரு நிறுவனர் பின்னி பன்சல் மீதும் வந்த புகார் காரணமாக 2019ல் அவரும் வெளியேறினார். இது தான் உலக ஸ்டார்ட்-அப்’களில் பெரும்பாலும் நிறுவனர்கள் செய்வதும் ஆகும்.
இவையெல்லாம் தாண்டி இந்தியாவின் இரண்டாவது யூனிகார்ன் ஸ்டார்ட்-அப் ஆன, ஃப்ளிப்கார்ட், இன்றைய தேதியில் $37.6 பில்லியன் சந்தை மதிப்புடன் பிரபல நிறுவனமாய் இ-காமர்ஸ் துறையில் கையோங்கி நிற்கிறது.
"நாங்கள் இருவரும் நெருக்கடி சமயங்களில் ஒருவருக்கு ஒருவர் ஆதரவு அளித்துக் கொள்வோம்...” என்று பன்சல்கள் சொல்வது வழக்கம்.
பின்னி மற்றும் சச்சின் என இரு பன்சல்ஸும், ஃப்ளிப்கார்ட் பயணத்தில் எந்த அளவுக்கு வளர்ச்சியை சந்தித்துள்ளனரோ அதே அளவு பல சவால்களையும் சந்தித்துள்ளனர். எனினும், இருவரின் வளர்ச்சி இந்தியா முழுவதும் உள்ள பலருக்கும் தொழில் முனைவோர் ஆக வேண்டும் என்ற கனவை விதைத்துள்ளது.
யுனிக் கதைகள் தொடரும்...
கட்டுரை உதவி: ஜெய்