#100Unicorns | 'யுனிக்' கதை 15 - BYJU'S - சர்ச்சைகளைத் தாண்டி ஆசிரியர் பைஜுவின் இமாலய வெற்றிப் பயணம்!
இந்தியாவின் ஒரு மூலையில் உள்ள சிறிய கடற்கரை கிராமமான அழிகோடில் பிறந்து, அரசு பள்ளியில் மலையாள மீடியத்தில் படித்து உலகைச் சுற்றி, இன்று உலகம் உற்றுநோக்கும் கல்வி நிறுவனத்தை நடத்தி வரும் பைஜு ரவீந்திரனின் கதை படிக்க வேண்டிய ஒன்று.
#100Unicorns | 'யுனிக் கதை 15 | Byju's
கல்விக்கான முக்கியவத்துவத்தை இந்தியர்கள் தினமும் எதாவது ஒரு செயல் மூலம் அறிந்துகொண்டே இருக்கிறார்கள். ஆனால், கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வீட்டில் இருந்து வந்து அந்தக் கல்வியையே மூலதனமாக்கி கோடிகளில் புரளும் ஒரு கல்வி ராஜ்ஜியத்தை உருவாக்கி இந்தியாவின் நான்காவது மதிப்புமிக்க நிறுவனமாக அதை உயர்த்திய 'பைஜூஸ்' (BYJU'S) பைஜுரவீந்திரனின் வெற்றிப் பயணமே இன்றைய யூனிகார்ன் பார்வை.
பைஜூஸ் மாபெரும் கல்வி ஸ்டார்ட்-அப் ஆக உருவான கதை
கேரளத்தின் கடைகோடியான கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமே பைஜு ரவீந்திரனின் சொந்த ஊர். கண்ணூருக்கே உரித்தான கம்யூனிச பின்புலமும், தந்தையும் தாயும் ஆசிரியர்கள் என்பதால் அந்தப் பின்புலமும் சிறுவயது முதல் ரவீந்திரனை சமூகத்தின் மீதான அக்கறைகொண்டவராக வளர்த்தது. ஒரு வீட்டில் ஒரு ஆசிரியர் இருந்தாலே, குழந்தைகளை படிக்கச் சொல்லி நிறைய அட்வைஸ்கள் இருக்கும். ஆனால், இரண்டு ஆசிரியர்கள் இருந்த ரவீந்திரனின் வீட்டில் அப்படியே தலைகீழ்.
ஆம், வகுப்புறைக்கு வெளியேதான் வாழ்க்கைக் கல்வி என்பதை அழுத்தமாக நம்பிய பெற்றோர்கள், ரவீந்திரனுக்கு பிடித்த விளையாட்டில் கவனம் செலுத்த முழு சுதந்திரம் கொடுத்தனர். அதனால் அவருக்கு அப்போது கல்வி இரண்டாம் இடமே இருந்தது. இந்த விளையாட்டே தனக்கு தலைமைப் பண்பையும், குழுவாக வேலைச் செய்ய வேண்டியதையும் கற்றுக்கொடுத்தது என்று பலமுறை வெளிப்படுத்தியுள்ள ரவீந்திரன், அதற்காக சிறுவயதில் விளையாட்டே கதி என்று இருக்கவில்லை. பள்ளிப்படிப்பு முடித்ததும் பொறியியல் கல்வி, அப்படியே வேலை என வாழ்க்கையின் கியரை மாற்றினார். பெரும்பாலும் வெளிநாட்டிலேதான் வேலை.
மாத்தி யோசிக்க வைத்த வெற்றி!
ஐடி வேலை, வெளிநாடு என இன்பமாய் வாழ்க்கை சென்றநேரத்தில் 2003ம் ஆண்டு பெங்களூருக்கு வருகிறார். அப்போது அவரின் நண்பர்கள் இந்தியாவின் முன்னணிக் கல்வி நிலையங்களில் பயில்வதற்காக CAT தேர்வுக்கான பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். கணக்கில் புலியாக இருந்த ரவீந்திரனிடம் CAT தேர்வுக்கு உதவி கேட்க, அவர்களுக்கு உதவிக்கொண்டே தானும் CAT தேர்வை எழுதுகிறார்.
இந்த தேர்வில் ரவீந்திரன் சென்டம் எடுத்தார் என்றால், அவர் உதவிய நண்பர்களும் நல்ல மதிப்பெண்கள் பெறுகின்றனர். மீண்டும் வெளிநாடு சென்று திரும்பிய அவரை, மீண்டும் அதே நுழைவுத் தேர்வுக்கு மற்ற சில நண்பர்கள் மொய்க்க, அவர்களுக்கும் உதவி வெற்றிபெற வைக்கிறார். இந்த வெற்றியே அவரை மாற்றி சிந்திக்க வைத்தது.
சொல்லப்போனால் அவரின் வாழ்க்கையில் இதுவே திருப்புமுனை ஏற்படுத்திய தருணம் எனலாம். இந்த வெற்றிக்கு பின்னரே தனது உடம்பில் இருக்கும் ஆசிரியர் ரத்தத்தை உணர்ந்த ரவீந்திரன், ஐடி வேலையை உதறினார். கேட் தேர்வு பயிற்சி மையம் ஒன்றை ஒரு சிறிய அறையில் தொடங்கி, அதற்கு “பைஜூஸ் கிளாஸஸ்” என பெயரிட்டார் .
வழக்கமாக கடந்த ஆண்டு கேள்வித்தாளின் அடிப்படையில் மாணவர்களை தயார் செய்யும் மற்ற ஆசிரியர்களில் இருந்து ரவீந்திரன் தன்னை வேறுபடுத்திக் காட்டினார். கேள்வியின் அடிப்படையை மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்து தனக்கென ஒரு பாணியை உருவாக்கினார். ஏனென்றால் கேள்விகள் கேட்பதுதானே கற்றலின் அடிப்படை. இந்த மனப்பான்மையை மாணவர்கள் மத்தியில் வளர்த்த ரவீந்திரன், ஊர் ஊராகப் பறந்து அதை பரப்பினார்.
அடுத்தக்கட்ட பாய்ச்சல்
விரைவாகவே 'Byju's Classes' ஒரு பிராண்டாக மாறியது. பல நகரங்களில் கிளையாக பரவினாலும், ஒரு கட்டத்தில் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய முடியாத சூழலில் தன் வகுப்புகளை வீடியோவாக மாற்றுகிறார். கூடுதல் வருமானம் இதிலிருந்து கிடைக்க, ஓர் ஆசிரியர் நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு வருமானம் பார்க்கிறார்.
ஒரு சிறிய அறையில் தொடங்கி ஹால், அப்படியே ஆடிட்டோரியமாக அவரின் வகுப்பறைகள் விரிகிறது. பள்ளி மட்டுமல்ல கல்லூரி மாணவர்கள்கூட பைஜுவின் செமினார்களைக் கேட்க கூட்டம் கூட்டமாகக் குவிந்தனர்.
அப்படி குவிந்த மாணவர்களில் ஒருவர் பிரகாஷ் என்பவர். நிறைய முறை CAT தேர்வு எழுதிய பிரகாஷுக்கு ஆசைப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து அழைப்பு என்பது வரவேயில்லை. இறுதியாக, ரவீந்திரனை தேடிவந்த பிறகே அவர் நினைத்த கல்லூரிகளில் படிக்கும் வாய்ப்பு தேடிவந்தது. அப்படியே, ரவீந்திரன் கொடுத்த வாய்ப்பும். ஆம், பைஜூஸின் முதல் பணியாளர் பிரகாஷ்தான். இவர்கள் இருவரால் 2011-ல் பைஜூஸ் நிறுவனமாக வளர்ந்தது.
“நான் மாணவர்களை மேலும் மேலும் பயமுறுத்தும் ஆசிரியர் இல்லை. கற்றலைக் காதலிக்க வைக்கும் ஆசிரியர்.” - பைஜு ரவீந்திரன்.
நிறுவனராக ரவீந்திரன், மார்க்கெட்டிங் பிரிவு அதிகாரியாக பிரகாஷ். மூன்றாவது முக்கியமான ஆள் திவ்யா கோகுல்நாத். இவரும் பைஜு ரவீந்திரனின் மாணவிதான். இப்போது மனைவியும்கூட. ரவீந்திரனின் கற்றல் முறையில் ஈர்க்கப்பட்ட திவ்யா, காதலிலும் ஈர்க்கப்பட்டு அவரைக் கரம்பிடித்தார். இப்படி, தனது மாணவர்களை முக்கியமான பொறுப்பில் அமர்த்தி பைஜூஸ் நிறுவனத்தை அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயார்படுத்தினார் ரவீந்திரன்.
அசுர வளர்ச்சி
பள்ளி மாணவர்களுக்காக 2011-ம் ஆண்டு ‘திங்க் அண்ட் லேர்ன் பிரைவேட் லிமிலெட்’ என்னும் நிறுவனம் என்ற பெயரில் பைஜூஸ் தொடக்கம் கண்டாலும், 2015-ல் பைஜூஸ் செயலி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகே அசுர வளர்ச்சி கண்டது. அனைத்திலும் வந்துவிட்ட தொழில்நுட்பம், கல்வியிலும் இருக்க வேண்டும்.
தொழில்நுட்பமே உலகை மாற்றும் கருவி. அப்படிப்பட்ட தொழில்நுட்பம் மனதின் உள்ளங்கைகளில் கைபேசியாக தவழ்ந்த 2015 காலகட்டத்தில் அதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்த நினைத்து உருவாக்கியதே பைஜூஸ் ஆப். இந்த ஆப் இலவசம், ஆனால் வகுப்புகளுக்கு கட்டணம் என்ற கான்செப்ட்டில் இயங்குகிறது. பட்டதாரிகளுக்கு மட்டுமன்றி 6 - 12 வகுப்புகளுக்கான பாடங்களும் பைஜூஸ் செயலியில் கிடைத்தன.
நல்ல கான்செப்ட் உடன் நிறுவனமாக தொடங்கிவிட்டாலும் நினைத்த வளர்ச்சி வேண்டும் என்றால் முதலீடுகள் தேவை. மற்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் போல் வெளிநாட்டு முதலீட்டாளர்களே குறி.
ஆனால், முதலீட்டாளர்களுக்கு இந்திய பெற்றோர்கள் கல்விக்காக பணம் செலவழிப்பார்களா என்பது ஐயமாக இருந்தது. இந்த ஐயத்தை போக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த ரவீந்திரன், இந்திய பெற்றோர்கள் கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தையும், கல்வி எப்படி இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்தியுள்ளதையும் எடுத்துரைத்து முதலீடுகளைக் கொண்டுவந்தார். ரவீந்திரனின் முன்னெடுப்பால், கோடிக்கணக்கில் முதலீடு குவிந்தது.
15வது யூனிகார்ன்
ஃபேஸ்புக் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், சீனாவின் டென்சென்ட், தென்னாப்பிரிக்க தனியார் பங்கு நிறுவனமான நாஸ்பெர்ஸ், கனடா பென்ஷன் பண்ட் மற்றும் சிலிக்கான் வேலியின் மேரி மீக்கரின் பாண்ட் கேபிடல் என உலகின் முன்னணி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் முதலீடுகளை அள்ளிக்கொடுக்க, பைஜூஸ் வேகமாக வளர்ந்து இன்று இந்தியாவின் வலிமையான கல்விசார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமாக மாறியது.
21 சுற்றுகள் நிதி திரட்டல் மூலமாக முதலீடுகள் பெருக, 2018ல் இந்தியாவின் 15வது யூனிகார்ன் அந்தஸ்து பெற்ற ஸ்டார்ட்அப் ஆக பெருமை பெற்றது byju's. ஒரு தசாப்தத்திற்கு முன்பு தொடங்கப்பட்ட பைஜூஸ், ஃபிளிப்கார்ட், பேடிஎம், ஓயோ, ஓலா ஆகிய நிறுவனங்கள் வரிசையில் இந்தியாவின் மிக மதிப்புமிக்க ஸ்டார்ட்அப் நிறுவனமாகவும் உயர்ந்தது.
இந்தியாவின் ஐந்தாவது பெரிய ஸ்டார்ட் அப் மட்டுமல்ல, எஜுகேஷன் டெக்னாலஜி துறையில் மிகப்பெரிய சந்தை மதிப்பை வைத்திருக்கும் முதல் நிறுவனமும் இதுதான்.
“தொழில்நுட்பத்தின் உதவியால் மட்டுமே லட்சக்கணக்கான மாணவர்கள் தரமான கல்வியை பெறமுடியும்,” - பைஜு ரவீந்திரன்.
சந்தையில் Byju's மதிப்பு தற்போதைய நிலையில் 3.9 பில்லியன் டாலர் ஆகும். மார்ச் 2020 நிதியாண்டில், பைஜூஸ் தனது வருவாயை இருமடங்காக 2,800 கோடி ரூபாயாக உயர்த்தியது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய எட்டெக் சந்தையாக இந்தியா உள்ளது. இதில் இப்போதைய ராஜா என்றால் கண்ணை மூடிக்கொண்டு பைஜூஸ் நிறுவனத்தை கைகாட்டலாம். இந்தியாவை தாண்டியும் மேலும் பல நாடுகளுக்கு பைஜூஸின் சேவை கிடைக்கிறது.
ஃபிளிப்கார்ட், ஓலா என அனைத்து நிறுவனங்களுக்கும் சர்வதேச அளவிலான போட்டி இருக்கிறது. ஆனால், பைஜூஸ் நிறுவனத்துக்கு பெரிய அளவிலான போட்டி இல்லை. தவிர பணியாளர்களின் எண்ணிக்கையும் குறைவு. ஃபிளிப்கார்ட் நிறுவனத்தில் 30,000 பணியாளர்கள் உள்ளனர். பேடிஎம் நிறுவனத்தில் 20,000, ஓயோவில் 20,000 மற்றும் ஒலாவில் 6,000 பணியாளர்கள் உள்ளனர். ஆனால், பைஜூஸ்-ல் 2600+ பணியாளர்கள் மட்டுமே.
குறைவான பணியாளர்கள், நிறைவான லாபம், சர்வதேச அளவில் போட்டி இல்லாதது, நம்பிக்கையான முதலீடுகள் ஆகியவைக் காரணமாக கடந்த சில ஆண்டுகளில் மிகப்பெரும் நிறுவனமாக உருவெடுத்துள்ளது பைஜூஸ்.
மாணவர்களால், கற்றல் ஆர்வம் உள்ளவர்களால் உருவாக்கப்பட்ட பைஜூஸ், மீது ஆன்லைன் ட்யூஷன் சென்டர் என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. அடிமட்ட மக்களின் குழந்தைகளுக்கு ஆன்லைன் கல்வி மீது ஆர்வத்தை பெருக்கி, அதிக அளவு கட்டணம் வசூலிப்பதாக பல குற்றச்சாட்டுகள் ஒரு பக்கம் பெருகி வந்தாலும், கல்வித்துறையில் கோலோச்ச வந்துள்ள எங்களை எளிதாக அசைக்கமுடியாது என்பது போல் மேலும் மேலும் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது பைஜூஸ்.
கல்வி சார்ந்த மற்ற ஸ்டார்ட்-அப்’களான, WhiteHat Jr, Aakash Institute, என தனது கல்வி சேவையை விரிவாக்கம் செய்துகொண்டே போகும் பைஜூஸ், அண்மையில் பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியை, பைஜூஸ்-இன் ப்ராண்ட் அம்பாசிடராக அறிமுகப்படுத்தி உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.
"நான் கோடிகளில் பணம் ஈட்ட முயற்சிக்கவில்லை, இங்குள்ள கோடி மக்களின் எண்ணத்தையும், கற்றல் முறையையும் மாற்றவே முயற்சிக்கிறேன்,” - பைஜு ரவீந்திரன்
இந்தியாவின் ஒரு மூலையில் உள்ள சிறிய கடற்கரை கிராமமான அழிகோடில் பிறந்து, அரசு பள்ளியில் மலையாள மீடியத்தில் படித்து உலகைச் சுற்றி, இன்று உலகம் உற்றுநோக்கும் கல்வி நிறுவனத்தை நடத்தி வரும் பைஜு ரவீந்திரனின் வாழ்க்கை முன் அவர் பெற்றும் வரும் விமர்சனங்கள் சுக்குநூறாக்கப்பட்டுள்ளன.
இன்றைய சூழ்நிலையில் இந்தியாவின் மிக முக்கியமான, மிகப்பெரிய கல்வி சார்ந்த ஸ்டார்ட் அப் பைஜூஸ். இந்திய ரூபாயில் கிட்டத்தட்ட 31,000 கோடி மதிப்புடன் பைஜூஸின் டேக்லைன் Fall in love with learning (கற்றலைக் காதலிப்போம்).
ஆம், கற்றலைக் காதலிக்கும் ஆசிரியரான ரவீந்திரனின் பாதையில் பைஜூஸ் இந்தியாவின் கல்வியை உலக நாடுகளில் பெருமைப்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
யுனிக் கதைகள் தொடரும்...
கட்டுரை உதவி: ஜெய்
#100Unicorns | 'யுனிக்' கதை 14 - BillDesk: ‘நம்பகமே மூலதனம்’ - மும்மூர்த்திகள் ஜெயித்த கதை!