'டெர்மினேட்டர் முகக் கவசம்' - சுகாதாரப் பணியாளர்களைப் பாதுகாக்க உதவும் இளைஞரின் கண்டுபிடிப்பு!
பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய கோ-டெர்மினேட்டர் ஷீல்டு!
கொரோனா தொற்றுநோயில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் அயராது உழைத்து வருகின்றனர்.
கொரோனா நோய் தொற்று தன்மை காரணமாக, PPE கிட் கருவிகள், முகக் கவசங்கள் மருத்துவர்களின் அடையாளமாகி போனது. இருப்பினும், PPE கிட் போன்ற உபகரணங்களை அணிந்து நீண்ட நேரம் வேலை செய்வது வியர்வை, தலைவலி, வெப்பம் மற்றும் சோர்வு போன்ற பல சவால்களை மருத்துவர்களுக்கு ஏற்படுத்தி வருகிறது. இந்த சிக்கலை தீர்க்க 16 வயது மாணவன் ஒருவர் முயன்று வருகிறார்.
ஹரியானா மாநிலம் ரேவாரியைச் சேர்ந்த 16 வயது தொழில்முனைவோர் ஹர்திக் குமார் திவான். மருத்துவர்களுக்கு பயன்படும் வகையில் ஹர்திக் ‘தி கோ-டெர்மினேட்டர் ஷீல்டு’ என்ற முகக் கவசத்தை உருவாக்கியுள்ளார். முழுக்க முழுக்க, சுகாதார மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டு இருக்கிறது இந்த முக கவசம். தற்போது, 10ம் வகுப்பு மட்டுமே படிக்கும் ஹர்திக், தொழில்நுட்ப துறையில் இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்வதில் பங்களிப்பதை நோக்கமாகக் கொண்டு கடந்த சில ஆண்டுகளாக புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் இந்த முகக் கவசத்தை கண்டுபிடித்துள்ளார். தனது கண்டுபிடிப்பு தொடர்பாக யுவர்ஸ்டோரியிடம் பேசியிருக்கும் ஹர்திக்,
“மருத்துவர்கள் பிபிஇ கிட் அணிந்து எப்படி வேலை செய்கிறார்கள் என்பது பற்றிய வீடியோவை யூடியூப்பில் பார்த்தபோது அவர்கள் எப்படி சங்கடப்படுகிறார்கள், வேதனைப்படுகிறார்கள் என்பது புரிந்தது. இதற்கு ஒரு தீர்வு கண்டுபிடிக்க வேண்டும் என்று முகக்கவசம் கண்டுபிடிக்கும் பணியில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன்," என்றுள்ளார்.
ஹர்திக்கின் தொழில் முனைவோர் பயணம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தது. வாட்ஸ்அப் பயன்பாடு போல பீட்டில் சாஃப்டெக் என்ற மெசேஜ்ஜிங் ஆப் தான் அவரின் முதல் கண்டுபிடிப்பு. துரதிர்ஷ்டவசமாக, சில கட்டுப்பாடுகள் காரணமாக இந்த ஆப் பிளேஸ்டோரில் பட்டியலிடப்படவில்லை. இதன்பின்னரே தனித்துவமான முகக் கவசத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். ஹர்திக் கண்டுபிடிக்கும் முகக் கவசத்தில் இருக்கும் சிறப்பம்சம் என்னவென்றால், குளிரூட்டல், அயனியாக்கம், காற்று சுத்திகரிப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்தது.
இது வெப்பம் மற்றும் வியர்வையால் ஏற்படும் அசௌகரியங்களைத் தடுக்கும். காற்றை குளிரூட்டும் வசதி இருப்பதால் வெப்பநிலையை உள்ளே இருந்து பராமரிக்கும்.
“நாங்கள் எங்கள் கண்டுபிடிப்பின் முன்மாதிரியை வெற்றிகரமாக முடித்துள்ளோம். இதனை மேலும் மருத்துவர்களுக்கு மிகவும் ஏற்ற ஒன்றாக மாற்றுவதற்கு நாங்கள் உழைத்து வருகிறோம். குறிப்பாக முகக் கவசத்தின் எடையை குறைப்பதில் எங்களின் தற்போதைய கவனம் இருந்து வருகிறது. அப்போது முகக் கவசத்தின் எடை சுமார் 350-400 கிராம் இருக்கும்," என்கிறார் ஹர்திக்.
இந்த முகக் கவசத்தில் அயனியாக்கி (ionizer) பொருத்தப்பட்டுள்ளது, இது காற்றில் பரவும் வைரஸ்களை விலக்கி வைக்கக்கூடியது. இதனால் நோய் தாக்கும் அபாயம் குறையும். உடல்ரீதியான தாக்குதல்கள் போன்ற ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், அணிந்திருப்பவரைப் பாதுகாப்பதற்காக, கேடயத்தில் SOS என்ற அமைப்பும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு டிசம்பரில் இந்தத் தயாரிப்பை சந்தையில் அறிமுகப்படுத்த இருப்பதாக கூறும் ஹர்திக், தயாரிப்பின் விலை இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில், தயாரிப்புக்கான வளர்ச்சி மற்றும் R&D செலவுகள் அதிகம் என்றும் கூறியுள்ளார்.
”தயாரிப்பை மேலும் அதிகரிக்கவும், குறைந்த விலையில் கிடைப்பதை உறுதி செய்யவும் நாங்கள் நிதி திரட்ட இருக்கிறோம். கொரோனா பரவியபோது குறிப்பாக சுகாதாரத் துறையில் PPE கிட்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதையடுத்து முகக் கவசங்கள் மற்றும் முகமூடிகளைத் தயாரிக்கும் பணியில் பலர் ஈடுபட்டுள்ள நிலையில், எங்களின் கோ-டெர்மினேட்டர், முகக் கவசம் அணிபவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தீர்க்கும்," என்றும் பேசுகிறார் ஹர்திக்.
தமிழில்: மலையரசு