யூட்யூப் சானலில் சமையல் நிகழ்ச்சிகளை பதிவேற்றி ஆயிரக்கணக்கான ஆதரவற்றோருக்கு உணவளிக்கும் நபர்!
முன்னாள் பத்திரிக்கையாளரான க்வாஜா மொய்தீனின் ’நவாப்ஸ் கிச்சன்’ யூட்யூப் தளத்தில் மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களை கொண்டுள்ளார். இந்த யூட்யூப் நட்சத்திரம் இந்தத் தளத்தைப் பயன்படுத்தி ஆயிரத்திற்கும் அதிகமான ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவளிக்கிறார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த 39 வயதான க்வாஜா மொய்தீன் முன்னாள் பத்திரிக்கையாளர். இவர் தனது யூட்யூப் சானலில் டோமினோ ஸ்டைலிலான பிட்சா, சிக்கன் பிரியாணி உள்ளிட்ட உணவு வகைகளை தயாரிக்கும் வீடியோக்களை பதிவிடுகிறார்.
யூட்யூப் தளத்தில் வீட்டு பாணியில் உணவு வகைகளை தயாரித்து பல செஃப்கள் பிரபலமடைந்திருப்பினும் இவரது சமூக அக்கறையே இவரை வேறுபடுத்திக் காட்டுகிறது.
க்வாஜா ஒவ்வொரு மாதமும் நகரம் முழுவதும் உள்ள பல்வேறு ஆதரவற்றோர் இல்லங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகளுக்கு உணவளிக்கிறார்.
சமையல் புத்தகங்களின் உதவியுடன் ப்ளாக் ஃபாரஸ்ட் கேக், பாவ் பாஜி, தந்தூரி சிக்கன், துனா ஸ்டீக் என சுவையான உணவு வகைகளை இந்தக் குழந்தைகளுக்காக சமைக்கிறார். இவரது வீடியோப் பதிவுகளை ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.
சுமார் ஐந்தாண்டுகளுக்கு முன்பு நண்பர்களுடனான ஒரு உரையாடலின்போது யூட்யூப் தொடங்கும் எண்ணம் இவருக்குத் தோன்றியுள்ளது. ’தி நியூஸ் மினிட்’ உடனான உரையாடலில் க்வாஜா கூறும்போது,
”அந்த சமயத்தில் தெலுங்கு செய்தி சானல் ஒன்றில் பணிபுரிந்து வந்தேன். ’எம்.எல்.ஏ உடன் ஒரு நாள்’ போன்ற அரசியல்வாதிகளுடனான நிகழ்ச்சிகளை வழங்கி வந்தேன். என்னுடைய தேவையைப் பூர்த்திசெய்துகொள்ள என்னுடைய வருவாய் போதுமானதாக இருப்பினும் எனக்குத் திருப்தியளிக்கவில்லை,” என்றார்.
2018-ம் ஆண்டு இறுதியில் க்வாஜா தனது நண்பர்களான ஸ்ரீநாத், பகத் ஆகியோருடன் இணைந்து வெளிப்புறச் சூழலில் சமையல் செய்யப்படும் வீடியோக்களை வழங்கும் யூட்யூப் சானலைத் தொடங்கத் தீர்மானித்தார். க்வாஜா சமையல் செய்தார். மற்ற இருவரும் படம்பிடித்து அதை எடிட் செய்தனர்.
ஆரம்பத்தில் சமைக்கும் விதத்தை விவரிக்கும் வீடியோக்களை மட்டுமே படம்பிடிக்க திட்டமிட்டனர். எனினும் 10 எபிசோட்களை உருவாக்கிய பிறகு நகரில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களை இணைத்துக்கொண்டு அங்குள்ளவர்களுக்காக உணவு தயாரிக்க மூவரும் திட்டமிட்டனர். க்வாஜா ’தி சிட்டிசன்’ உடனான உரையாடலின்போது,
”சிறு வயதில் ஒருமுறை நான் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தபோது என் வயதிருக்கும் குழந்தைகள் சிலர் குப்பைத் தொட்டியில் இருந்து உணவை சேகரித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். நீண்ட நாட்களுக்குப் பின்னரும் இது என்னுடைய நினைவில் இருந்து நீங்கவில்லை,” என்றார்.
தற்போது க்வாஜா அதிகமான குழந்தைகளுக்கு உணவளிக்க வாரத்தில் இரண்டு நாட்கள் சமைக்கிறார்.
இவரது வீடியோக்கள் பிரபலமானது. ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்ட இவரது வீடியோவில் தங்களது அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த காணாமல் போன குழந்தை ஒன்றை அந்த வீடியோவில் பார்த்ததாக குஜராத் போலீஸ் தெரிவித்தது. இந்தக் குழந்தை எட்டாண்டுகளுக்கு முன்பு காணாமல் போனது. க்வாஜா ‘தி நியூஸ் மினிட்’ உடன் கூறும்போது,
”நான் அவர்களை ஆதரவற்றோர் இல்லத்துடன் இணைத்தேன். எட்டாண்டுகள் வீட்டை விட்டு வெளியே இருந்தபோதும் மன நலம் குன்றிய அந்தக் குழந்தை தனது அப்பாவிடம் ஓடிச்சென்று இறுக கட்டியணைத்துக்கொண்டது,” என்றார்.
சமூக நலன் சார்ந்த யூட்யூப் சானலை நடத்தும்போது அதற்கே உரிய சவால்களும் இருக்கும். ஐந்து வீடியோக்களுக்குப் பிறகு நிதிப்பற்றாக்குறை காரணமாக மூவரால் பணியைத் தொடரமுடியவில்லை.
பின்னர் ஆதரவற்றோர் இல்லத்தில் இருப்போருக்கு உணவளிக்கவும் சானலைத் தொடர்ந்து நடத்தவும் நன்கொடை அளிக்குமாறு யூட்யூப் வாயிலாக கோரிக்கை வைத்தார். அன்றிரவே உதவ முன்வருவதாக 18 இமெயில்கள் வந்தது. அப்போதிருந்து நவாப்ஸ் கிச்சன் ஸ்பான்சர்ஷிப் மூலம் இயங்கி வருகிறது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து க்வாஜா கூறும்போது,
“என்னுடைய அடுத்த ரெசிபி நூடுல்ஸ். கடந்த முறை உணவுடன் ஆதரவற்றோர் இல்லத்திற்குச் சென்றபோது அங்கிருந்த குழந்தைகள் அதுவரை நூடுல்ஸ் சுவைத்ததில்லை என்றனர். இதற்கு முன்பு என்னுடைய நிகழ்ச்சியில் நான் நூடுல்ஸ் தயாரித்துள்ளபோதும் குழந்தைகளுக்காக மீண்டும் தயாரிக்க இருக்கிறேன்,” என்றார்.
கட்டுரை: THINK CHANGE INDIA