70,000 டூ 300 கோடி: ஆடம்பர கார்களை புதுப்பித்து மறுவிற்பனை செய்யும் ஜதின் அஹூஜா!
பயன்படுத்தப்பட்ட ஆடம்பர ப்ராண்ட் கார்களை மறுவிற்பனை செய்யும் ‘பிக் பாய் டாய்ஸ்’ நிறுவனத்தை 2009ல் தொடங்கி இன்று அமோக வளர்ச்சி அடைந்து 300 கோடி டர்ன் ஓவர் பெற்று வளர்ச்சி அடைந்துள்ளது.
பிக் பாய் டாய்ஸ் (Big Boy Toyz) நிறுவனம் 2009ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் நிறுவனர் ஜதின் அஹுஜா. குருகிராமைச் சேர்ந்த இந்த ஸ்டார்ட் அப் பழைய கார்களைப் புதுப்பித்து, ஆடம்பர கார்களாக மாற்றி மறுவிற்பனை செய்கிறது.
வழக்கமாக குழந்தைகளின் பொழுதுபோக்கு என்னவாக இருக்கும்? ஸ்டாம்ப் சேகரிப்பு, ஆரிகமி பேப்பர் கொண்டு பொம்மை செய்வாது என்று இருக்கும். ஆனால் ஜதின் அஹுஜா வழக்கத்திற்கு மாறானவர். இவருக்கு கார்கள் மீது ஆர்வம் அதிகம். ஆறாம் வகுப்பு படிக்கும்போதே இதில் செயல்படுவது குறித்து தீவிரமாக சிந்தித்தார். 17 வயதில் தனது ஆர்வத்தை வணிக முயற்சியாகவே மாற்றிவிட்டார்.
ஜதின் 12 வயதிலேயே ‘பிக் பாய் டாய்ஸ்’ என்கிற பெயரை தீர்மானம் செய்துவிட்டார். 17 வயதில் மெர்சிடிஸ் எஸ் கிளாஸ் ரக கார் ஒன்றை புதுப்பித்து நல்ல லாபத்திற்கு விற்பனை செய்தார். இதுவே மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.
தொடக்கம்
ஜதினின் அப்பா பட்டயக் கணக்காளர். ஜதின் மெக்கானிக்கல் என்ஜினியரிங் முடித்து டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முடித்தார். வணிக நுணுக்கங்களை தெரிந்துகொண்டவாறே கார்களைப் புதுப்பிப்பதில் திறனை மெருகேற்றிக் கொண்டார்.
2009ம் ஆண்டு அப்பாவிடம் ஆரம்பகட்டமாக 70,000 ரூபாய் கடனாகப் பெற்றுக்கொண்டு டெல்லியில் ஒரு சிறு ஸ்டுடியோ தொடங்கினார். இதுவே தற்போது பிரம்மாண்ட வளர்ச்சியடைந்து ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட ஆடம்பர கார்கள் தொடர்பான அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் வழங்கும் நிறுவனமாக வளர்ச்சியடைந்துள்ளது. இந்தக் குழுவில் 150 பேர் உள்ளனர்.
பிரீமியம் கார்களின் டீலர்களே இந்திய சந்தையில் செயல்படத் தயக்கம் காட்டிய காலகட்டத்தில் ஜதின் நம்பிக்கையுடன் இத்தனை ஆண்டுகளாக வணிகத்தை நடத்தி வளர்ச்சியடையச் செய்துள்ளார்.
முதலில் ஆட்டோமொபைல் துறையில் காணப்படும் வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்தார். இதன் மூலம் இவருக்குத் தேவையான தொடர்புகள் கிடைத்தன. 2009ம் ஆண்டு முதல் பிக் பாய் டாய்ஸ் இந்தியாவின் முக்கிய நகரங்கள் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு சேவையளித்து வருகிறது.
பின்னர் ஹைதராபாத், பெங்களூரு ஆகிய நகரங்கள் அதிகளவில் வணிக வாய்ப்புகள் காணப்படும் சந்தையாக மாறியது. இங்குள்ள வாடிக்கையாளர்கள் தொடர்ந்து கார்கள் வாங்குகிறார்கள்.
32 வயதாகும் ஜதின் ஒரு மாறுபட்ட உத்தியை கையாள்கிறார்.
“நான் வாடிக்கையாளர்களை வற்புறுத்துவதில்லை. அவர்களை எப்போதும் கவர்ந்திழுக்கவே விரும்புவேன். பெரியளவில் விளம்பரப்படுத்துகிறோம், மக்கள் தாங்களாகவே கார்களை வாங்க எங்களை அணுகுகிறார்கள்,” என்றார்.
பிக் பாய் டாய்ஸ் கார்கள் ஒவ்வொருன்றுமே விற்பனைக்கு வருவதற்கு முன்பு 151-புள்ளிகள் கொண்ட செக்லிஸ்டைக் கடந்து வருகிறது என்கிறார் ஜதின். அதேபோல் 20,000 கி.மீட்டர்களுக்கும் மேலாக ஓடிய கார்களும் 2015ம் ஆண்டுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட கார்களும் இவர்களது பட்டியலில் வருவதில்லை என்கிறார்.
மேலும், இந்நிறுவனத்திற்கு வரவிருக்கும் கார்கள் எந்தவித விபத்திலும் சிக்கியிருக்கக்கூடாது என்பதும் சட்டரீதியான சிக்கல்கள் இருக்கக்கூடாது என்பதும் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது.
ஜதின் தனது நிறுவனத்திற்கு ஒவ்வொரு மெக்கானிக்கையும் கவனமாகத் தேர்வு செய்கிறார். ஆடம்பர கார்களை மட்டுமே இந்நிறுவனம் விற்பனை செய்வதால் இவர்கள் ஆடம்பர கார்களை பழுது பார்ப்பதில் தேர்ந்த அனுபவம் கொண்டவர்களாக இருப்பதை உறுதி செய்கிறார்.
ஒரு கிளையண்டிடம் காரை வாங்குவதற்கு முன்பு ஒவ்வொரு காரின் காப்பீட்டு விவரங்கள், சேவை விவரங்கள், ஆர்டிஓ பதிவுகள், வாடிக்கையாளரின் விவரங்கள் போன்றவற்றை ஜதின் சரிபார்க்கிறார். இத்தகைய தரமான சேவையைக் கண்டு திருப்தியடைந்த வாடிக்கையாளர்கள் மற்றவர்களுக்கும் பரிந்துரை செய்தனர். இவ்வாறு பிக் பாய் டாய்ஸ் மக்களிடையே பிரபலமானது.
ஜதின் ஆரம்பத்தில் ஜப்பான், யூகே, அமெரிக்கா, துபாய் போன்ற நாடுகளில் இருந்து கார்களை இறக்குமதி செய்தார். இதற்கு அதிகளவில் இறக்குமதி வரி, பதிவு வரி, ஆர்டிஓ, காப்பீடு என அதிகத் தொகை செலவானது. இதனால் கார் விலை அதிகமானது. ஜதின் தனது லாபத்தைக் குறைத்துக்கொண்டாலும்கூட விலை அதிகமாகவே இருந்தது. ஜதின் யுவர்ஸ்டோரி இடம் தெரிவிக்கும்போது,
“2007-ம் ஆண்டு Magus Cars Ltd என்கிற நிறுவனத்தை தொடங்கினேன். இந்நிறுவனத்தின் மூலம் இந்தியாவில் ஆடம்பர கார்கள் இறக்குமதி செய்யப்பட்டன. ஒரு கட்டத்தில் தாய் நிறுவனத்தைக் காட்டிலும் அதிக கார்கள் இறக்குமதி செய்தேன். கடந்த ஐந்தாண்டுகளில் பிக் பாய் டாய்ஸ் ஒவ்வொரு ஆண்டும் 30-40 சதவீதம் என்கிற விகிதத்தில் வளர்ச்சியடையத் தொடங்கியது. 2018-ம் ஆண்டு நிறுவனத்தின் டர்ன்ஓவர் 300 கோடி ரூபாயை எட்டியது,” என்றார்.
ஆடம்பர கார் சந்தை - தேவை மற்றும் போட்டி
பயன்படுத்தப்பட்ட கார் விற்பனையில் பிக் பாய் டாய்ஸ் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாக வளர்ச்சிடைந்துள்ளதாக ஜதின் தெரிவிக்கிறார். ஏசியாவிலேயே மிகச்சிறந்த கார் டீலர் என சிங்கப்பூர் CMO Asia பிக் பாய் டாய்ஸ் நிறுவனத்தை அங்கீகரித்துள்ளது.
பிக் பாய் டாய்ஸ் நிறுவனத்தில் ஒரே இடத்தில் 180-க்கும் அதிகமான பிராண்டுகள் உள்ளன. ஷோரூம் கிட்டத்தட்ட 36,000 சதுர அடி கொண்டது. கடந்த 15 ஆண்டுகளாக இந்நிறுவனத்திற்குக் கிடைத்த ஒவ்வொரு வாடிக்கையாளரும் தொடர்ந்து இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குறிப்பிட்ட மாடல்களுக்கு அதிக தேவை இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். பிஎம்டபிள்யூ கார்களே எப்போதும் அதிகம் விற்பனையாகிறது. லம்போர்கினி கலார்டோ, அவெண்டடோர், Bentley GT/GTC, ரேஞ்ச் ரோவர்ஸ் போன்ற கார்களுக்கான தேவையும் அதிகம் இருப்பதாக ஜதின் குறிப்பிடுகிறார்.
“நான் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி சூப்பர்சார்ஜ்ட் கார் ஓட்டுகிறேன். ரோல்ஸ் ராய்ஸ் ஃபாண்டம் எனக்கு பிடிக்கும். விரைவில் என் கேரேஜில் ஒன்று அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளேன்,” என்றார்.
இந்தியாவில் கிட்டத்தட்ட 2.5 லட்சம் மில்லியனர்கள் உள்ளனர். பிரீமியம் கார்கள் ஆடம்பரம் என்கிற பிரிவைத் தாண்டி வழக்கமான பயன்பாடிற்கு வந்துள்ளது என்கிறார். ஜதின் சந்தையில் செயல்படத் தொடங்கியபோது இந்தத் துறை ஒழுங்குபடுத்தப்படாமல் இருந்தது.
வரி மற்றும் ஒழுங்குமுறை சார்ந்த சவால்களை இவர் சந்திக்க நேர்ந்தது. போட்டிகளைப் பொருத்தவரை பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் தரப்பில் போட்டி இருக்கிறது என்கிறார் ஜதின்.
“போட்டி உங்களை வலுவாக்கும். சந்தையில் உங்கள் பங்களிப்பை அதிகரிக்கச் செய்யும். மக்கள் மனதில் பயன்படுத்தப்பட்ட கார்கள் குறித்த எதிர்மறையான கண்ணோட்டம் உள்ளது. இதை வெற்றிகரமாக எதிர்கொள்வது மிகப்பெரிய சவாலாக இருந்தது,” என்கிறார்.
ஆடி, பிஎம்டபிள்யூ போன்ற பிராண்டுகளின் ஒரிஜினல் டீலர்கள் பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான சொந்த ஷோரூம் வைத்துள்ளனர். இவர்கள் தரப்பில் போட்டியை சந்தித்தாலும் கடினமான உழைப்பால் தரமான கார்களை வழங்கி சந்தையில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார் ஜதின்.
50 லட்ச ரூபாய் முதல் 3.5 கோடி ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள பிக் பாய் டாய்ஸ் கார்களுக்கு விராட் கோலி, யுவராஜ் சிங், தினேஷ் கார்த்திக் போன்ற பிரபலங்கள் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
ஆங்கில கட்டுரையாளர்: சம்பத் புட்ரேவு | தமிழில்: ஸ்ரீவித்யா