‘சுமார் ரூ.60லட்சம் மதிப்பு LWB E-Class இந்தியாவில் 41,000 கார்கள் விற்பனை ஆனது’– மெர்சிடிஸ் பென்ஸ் சிஇஓ!
மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிர்வாக இயக்குநர் மற்றும் சிஇஓ மார்டின் ஷ்வங்க் யுவர்ஸ்டோரி நிறுவனர் மற்றும் சிஇஓ ஷ்ரத்தா ஷர்மா உடன் நடந்த உரையாடலின்போது மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்திய வாடிக்கையாளர்களின் பயன்பாடும் தேவையும் மாறுபட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
இந்தியாவின் முன்னணி சொகுசு கார் மெர்சிடிஸ் பென்ஸ். 1994ம் ஆண்டு மெர்சிடிஸ் பென்ஸ் இந்திய சந்தையில் நுழைந்தது. இந்தியாவின் சொகுசு கார் சந்தையில் 40% பங்களிக்கும் இந்நிறுவனம் ஜெர்மனியின் பிஎம்டபிள்யூ உடன் போட்டியிடுகிறது.
கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் மெர்சிடிஸ் பென்ஸ், இந்திய வாடிக்கையாளர்கள் குறித்து ஆழமாக ஆய்வு செய்து சிறப்பாகப் புரிந்துகொண்டுள்ளது.
“இந்திய வாடிக்கையாளர்கள் தாங்கள் செலவிடும் பணத்திற்கு சிறந்த மதிப்பைப் பெறவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். ஆடம்பரப் பிரிவு எனும்போது இந்த எதிர்பார்ப்பு கூடுதலாகவே இருக்கும். எனவே எங்கள் தயாரிப்பு, சேவை உள்ளிட்ட அம்சங்கள் அத்தகைய மதிப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதை நாங்கள் உறுதி செய்கிறோம்,” என்றார் மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிர்வாக இயக்குநர் மற்றும் சிஇஓ மார்டின் ஷ்வங்க்.
அவ்வாறு பணத்திற்கான சிறந்த மதிப்பை வழங்குகிறது லாங் வீல்பேஸ் (LWB) E-Class என்று யுவர்ஸ்டோரி நிறுவனர் மற்றும் சிஇஓ ஷ்ரத்தா ஷர்மா உடன் நடைபெற்ற உரையாடலின்போது மார்டின் குறிப்பிட்டார். இது ஏராளமான வாடிக்கையாளர்களின் கவனத்தைப் பெற்று சிறப்பாக விற்பனையாகி வருகிறது.
இந்தியா மற்றும் சீனாவில் மட்டுமே LWB E-Class விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை 57.5 லட்ச ரூபாய் முதல் 62.5 லட்ச ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகிறது.
LWB E-Class 3079 mm வீல்பேஸ் கொண்டிருப்பதால் இந்தப் பிரிவின் நீளமான கார் ஆகும். இந்தியாவில் 41,000 யூனிட்களுக்கும் மேல் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மாறுபட்ட பயன்பாடு
மற்ற சந்தைகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் பயன்பாடு மாறுபட்டுள்ளதாக மார்டின் தெரிவிக்கிறார். இந்தியர்கள் ஓட்டுநர்களை நியமித்து பயணிக்கும் வழக்கம் கொண்டவர்கள். இதனால் பின் இருக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
“மற்ற சந்தைகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் ஓட்டுநர்களே கார்களை அதிகளவில் இயக்குகின்றனர். கார் உரிமையாளர்களே நூறு சதவீதம் வாகனத்தை இயக்கலாம் அல்லது 20 சதவீதம் இயக்கலாம் அல்லது உரிமையாளர் இயக்காமலேயே போகலாம் என்கிற கருத்தை அடிப்படையாகக் கொண்டே வாடிக்கையாளர்களிடம் தயாரிப்பை வழங்கவேண்டியுள்ளது. இதனால் பின் இருக்கைகளில் எத்தகைய வசதியை எதிர்பார்ப்பார்கள் என்பது குறித்து மாறுபட்ட கண்ணோட்டத்துடன் அணுகவேண்டியுள்ளது,” என்று மார்டின் விவரிக்கிறார்.
இந்நிறுவனத்தின் E-Class Sedan மட்டுமல்லாது SUV வாகனங்களான GLE, GLS உள்ளிட்டவற்றில் பின் இருக்கைகளை வடிவமைப்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டதில்லை.
வாடிக்கையாளர்களின் இத்தகைய தனித்துவமான தேவைகளைக் கருத்தில் கொண்டே இந்நிறுவனம் பின் இருக்கைகளின் வசதியை அமைப்பதில் சிறப்பு கவனம் செலுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பின் இருக்கைகளுக்கு அதிக முக்கியத்துவமும் சிறப்பு கவனமும் அளிக்கப்படுவதால் அதன் ஸ்டைல் மற்றும் திறனில் எந்தவித சமரசமும் செய்யப்படவில்லை. இந்த அணுகுமுறையால் இந்திய சந்தையில் செயல்படுவது சற்றே கடினமாக இருந்தது என்று மார்டின் பகிர்ந்துகொள்கிறார்.
பெரும்பாலான நாடுகளில் ஓட்டுநர் மற்றும் அருகில் பயணிக்கும் பயணியின் இருக்கை முறையாக வடிவமைக்கப்பட்டிருந்தால் போதுமானது. குழந்தைகளுடன் பயணிப்பவர்கள் மட்டுமே பின் இருக்கைகளைப் பயன்படுத்துவார்கள். இதனால் மற்ற நாடுகளின் சந்தை தேவை முற்றிலும் மாறுபட்டிருக்கும்.
இந்தியச் சந்தைக்கென சில பிரத்யேக தேவைகள் இருப்பதால் அவற்றில் கவனம் செலுத்தி அதற்கேற்ப தயாரிப்பு வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டார்.
1994ம் ஆண்டு மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா அதன் கார்களை உள்நாட்டிலேயே டாடா மோட்டார்ஸ் வளாகத்தில் அசெம்பிள் செய்யத் தொடங்கியது.
2009-ம் ஆண்டு புனேவின் சக்கன் பகுதியில் சொந்த தயாரிப்பு தொழிற்சாலையை நிறுவியது. இந்த தொழிற்சாலையில் இருந்தே ‘மேட் இன் இந்தியா’ கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
புனே தொழிற்சாலையில் Sedan, C-Class, E-Class, S-Class, CLA Couple, Maybach S-Class மற்றும் GLA, GLC, GLE, GLS உள்ளிட்ட SUV-க்கள் போன்றவை தயாரிக்கப்படுகின்றன. இந்நிறுவனம் 2021-ம் ஆண்டில் கிட்டத்தட்ட 10 புதிய மாடல்களை சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
ஆங்கில கட்டுரையாளர்: ராமர்கோ சென்குப்தா | தமிழில்: ஸ்ரீவித்யா