டிசம்பருக்குள் 216 கோடி தடுப்பூசி டோஸ்கள்: மத்திய அரசின் மெகா பிளான்!
அடுத்த வாரம் முதல் விற்பனைக்கு வரும் ஸ்புட்னிக் வி தடுப்பூசி!
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக தற்போது சீரம் நிறுவனம் தயாரிப்பான கோவிஷீல்ட், மற்றும் பாரத் பயோடெக் ஐசிஎம்ஆர் தயாரிப்பான கோவாக்சின் மருந்துகள் உடன் 3-வதாக ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி (Sputnik V) தடுப்பூசிக்கும் இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு மையம் சமீபத்தில் அனுமதி அளித்திருந்தது.
ஆகஸ்ட் 11, 2020 அன்று, ஸ்புட்னிக்-வி என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தடுப்பூசியை பதிவு செய்த உலகின் முதல் நாடாக ரஷ்யா ஆனது. இதையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரஷ்யாவின் ரஷ்ய நேரடி முதலீட்டு நிறுவனம், இந்தியாவில் உள்ள ரெட்டீஸ் மருந்து நிறுவனத்துடன் இணைந்து ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டது.
அதன்படி, தொற்றுநோய்வியல், நுண் உயிரியலுக்கான காமாலியா தேசிய ஆய்வு நிறுவனம் தயாரித்துள்ள ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இறக்குமதி செய்யப்படும் என்பது தான் ஒப்பந்தம். ஒப்பந்தத்தின்படி, இந்தியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கான கிளினிக்கல் பரிசோதனையை ரெட்டீஸ் நிறுவனம் முடித்துவிட்டது. இதையடுத்து தற்போது 100 மில்லியன் தடுப்பூசி அளவுகளை விநியோகிப்பதற்கான உரிமையை அந்த நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
முதல் கட்டமாக 1.25 கோடி ஸ்புட்னிக் தடுப்பூசிகளை ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்ய டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் முடிவு செய்து, 150,000 டோஸ் தடுப்பூசிகள் சமீபத்தில் ஹைதராபாத் வந்தடைந்தது. அவை அங்குள்ள டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்களில் வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இந்திய சந்தைகளில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி அடுத்த வாரம் முதல் விற்பனைக்குக் கிடைக்கும் என்று நிதி ஆயோக்கின் உறுப்பினர் வினோத் குமார் பால் என்பவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் பேசிய அவர்,
“ரஷ்யாவில் இருந்து மேலும் தடுப்பூசிகள் இந்தியா வரவிருக்கிறது. அதேநேரம், இந்த ஸ்புட்னிக்-வி தடுப்பூசி ஜூலை மாதம் முதல் இந்தியாவிலேயே தயாரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றனர்,” என்றார்.
மொத்தம் 15.6 கோடி டோஸ்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும். இதற்காக டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்கத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவை மட்டுமல்ல, இந்திய மக்களுக்காக வரும் ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதத்திற்குள் 216 கோடி தடுப்பூசி டோஸ்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அளவு உற்பத்தியால் தடுப்பூசியானது இந்தியாவின் தேவைக்கும் அதிகமாக, ஒவ்வொரு இந்தியனுக்கும் தடுப்பூசி போட்ட பின்னரும் இருப்பு இருக்கும். இதனால் அதன்பிறகு தடுப்பூசி தட்டுப்பாடு குறித்த பேச்சுக்கே இடமிருக்காது.
தற்போது கிடைத்து வரும் கோவேக்ஸின், கோவிஷீல்ட் தடுப்பூசிகள் உடன் மேலும் 6 கொரோனா தடுப்பூசிகள் இந்தியாவில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டு வருகிறது, என்று குறிப்பிட்டுள்ளார்.