தமிழக அரசு அறிமுகம் செய்துள்ள 'வலிமை' சிமெண்ட்: எத்தனை ரகம்; விலை விவரங்கள்!
விற்பனை சந்தையில் விலை குறையும் என எதிர்பார்ப்பு!
கொரோனா சூழ்நிலைக்கு பிறகு கட்டுமானப் பொருட்களின் விலை விண்ணை முட்டியது. குறிப்பாக, நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக சிமெண்ட் விலை உயர்ந்தது. இதனால் ஏரளமான மக்கள் பாதிப்பைச் சந்தித்தனர். திமுக அரசு பொறுப்பேற்ற சமயத்தில் இந்த விலை உயர்வு கவலை அளிக்கும் விதமாக இருந்ததால் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பட்ஜெட் சட்டப்பேரவை கூட்டத்தொடரில், தமிழக அரசு சார்பில் 'வலிமை' என்ற பெயரில் சிமெண்ட் விரைவில் அறிமுகம் செய்யப்படும் எனத் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அப்போதே அறிவித்திருந்தார்.
அதன்படி 'வலிமை' என்ற பெயரில் சிமெண்ட் அறிமுகம் செய்யப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இதை அறிமுகம் செய்துவைத்தார். தமிழக அரசின் டான்செம் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும் ’வலிமை’ சிமெண்ட் காரணமாக இனி விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மலிவு விலை ‘வலிமை’ சிமெண்ட், ஒரு மூட்டை 360 ரூபாய்க்கு விற்கப்பட இருக்கிறது. இதன்மூலமாக சிமெண்டின் சில்லறை விற்பனை விலை சந்தையில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, வலிமை சிமெண்ட் அறிமுகம் செய்து வைத்த பிறகு அதன் விற்பனை குறித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு,
“தமிழ்நாடு சிமெண்ட் கழகம் சார்பில் இரு தரங்களில் வலிமை சிமெண்ட் தயாரிக்கப்படும். தரத்தின் அடிப்படையில் ப்ரீமியம் ரகம் ரூ.350 என்ற விலையிலும் மற்றும் சூப்பீரியர் ரகம் ரூ.365 என்ற விலையிலும் வலிமை சிமெண்ட் விற்பனையை செய்யப்படும். சிமெண்ட் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் அரியலூரில் புதிய தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. வெளிச்சந்தையில் வலிமை சிமெண்ட் கிடைப்பதை உறுதி செய்ய முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்," என்று கூறினார்.
தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும், ஆலங்குளம் சிமெண்ட் ஆலை ஆண்டு ஒன்றுக்கு 2 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தித் திறனுடன் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலை தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியால் 1970ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
அதன்பின், தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தால் ஆண்டு ஒன்றுக்கு 5 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தித் திறன் கொண்ட ஆலையும், 10 லட்சம் மெட்ரிக் டன் திறன் கொண்ட மற்றொரு புதிய சிமெண்ட் ஆலையும் அரியலூரில் நிறுவப்பட்டது. இந்த மூன்று ஆலைகளுக்கும் மத்தியில் இன்னொரு ஆலை அரியலூரில் தொடங்கப்பட இருக்கிறது.