உலகின் மூலை முடுக்கெல்லாம் 'மேட் இன் தமிழ்நாடு' குரல்- ஏற்றுமதி மாநாட்டில் முதல்வர் விருப்பம்!
ரூ.2120.54 கோடி முதலீட்டில் 24 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
இந்திய சுதந்திர தின விழாவின் 75-வது வருடத்தை முன்னிட்டு, தமிழக அரசு ’ஏற்றுமதியில் ஏற்றம்- முன்னணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் தமிழ்நாடு ஏற்றுமதி மாநாடு நடத்தி வருகிறது. இன்று காலை சென்னை கலைவாணர் அரங்கில் மாநாடு தொடங்கியது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநாட்டை தொடங்கிவைத்து பேசினார். அப்போது,
“மேட் இன் இந்தியா' போல 'மேட் இன் தமிழ்நாடு' என்ற அடிப்படையில் இனி நாம் பொருட்களை உற்பத்தி செய்திட வேண்டும். உலகின் மூலை முடுக்கெல்லாம் 'மேட் இன் தமிழ்நாடு' என்ற குரல் ஒலிக்க வேண்டும்,” என்றார்.
அதுவே இந்த அரசின் ஆசை, லட்சியம். இந்த லட்சியத்தை நோக்கி எங்கள் பயணம் நிச்சயமாக அமையும், என்று பேசியதுடன் தமிழ்நாட்டிற்கான ஏற்றுமதிக் கொள்கையை வெளியிட்டார்.
அதேபோல், ’மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு’ என்று ஒரு அமைப்பு தலைமைச்செயலாளர் தலைமையில் விரைவில் அமைக்கப்படும் என்பதையும் மாநாட்டில் உறுதிப்படுத்தினார்.
முன்னதாக, இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ரூ.2120.54 கோடி முதலீட்டில் 41 ஆயிரத்து 695 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 24 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.
ஜவுளி, ரசாயனங்கள், தகவல் தொழில்நுட்பச் சேவைகள், எக்கு பொருட்கள், தோல் ஆடைகள், பொது உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடுகள் செய்யப்படும் வகையில் இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. சென்னை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, மதுரை, சேலம், திருச்சி, தஞ்சாவூர், தூத்துக்குடி, திண்டுக்கல், திருநெல்வேலி என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் முதலீடுகள் அமையும் என்று கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில்,
“MSME நிறுவனங்களுக்கு இ-காமர்ஸ் தளங்களில் பயிற்சி அளித்து, அந்த நிறுவனங்களை தேசிய சந்தைகளுக்கு மட்டுமின்றி உலகளாவிய சந்தைகளுக்கும் தயார் செய்திடும் வகையில் எம்.டி.ஐ.பி.பி. நிறுவனம் உலகின் முன்னணி இ-காமர்ஸ் தளங்களான ஃபிளிப்கார்ட், வால்மார்ட் போன்ற நிறுவனங்களுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் செய்துள்ளது.”
இதேபோல் தமிழகம் மற்றும் ஜெர்மனி இடையே முதலீடுகள் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு திட்டங்கள் ஏற்றுமதி வாய்ப்புகள் போன்றவற்றுக்காக இணைந்து செயல்படும் வகையில் எம்-டி.ஐ.பி.பி. நிறுவனம் இந்தோ-ஜெர்மன் சேம்பர் ஆப் காமர்ஸ் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டு கொள்கையின் சிறப்பு அம்சங்கள் வெளியிடப்பட்டது. இந்த கொள்கையில்,
“2030-ம் வருடத்திற்குள் 100 பில்லியன் அமெரிக்க டாலராக ஏற்றுமதியை உயர்த்திட இலக்கு நிர்ணயம், அதற்காக ஏற்றுமதியை மேம்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி பன்முகப்படுத்துதல் என்று இரு அணுகுமுறைகள் கடைபிடிப்பு, ஏற்றுமதியை மேற்கொள்ளும் வகையில் மாநல்லூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 2 இடங்களில் பொருளாதார வேலைவாய்ப்பு பகுதிகள் உருவாக்கம், மாநிலத்தில் 10 ஏற்றுமதி பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, ஒரு ஏற்றுமதி மையத்திற்கு தலா 10 கோடி ரூபாய் என்ற அளவில் 25 சதவீத மானியம் அளிக்கப்படும்," என்பது போன்ற பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.