சாதாரணமானவர் சாதனையாளர் ஆனது எப்படி? அடித்தட்டிலிருந்து ஐஏஎஸ் ஆன இளம்பகவத்!

விடாமுயற்சியுடன் இலக்கு நோக்கிய குறிக்கோளுடனான பயணத்தை மேற்கொண்டால், தடைகளை தவிடுபொடியாக்கி சாதாரணமானவர்கள் கூட சாதனையாளர்கள் ஆகலாம் என்பதற்கு இளம்பகவத் என்ற இளம் ஐஏஎஸ் அதிகாரி எடுத்துக்காட்டாக வாழ்கிறார்.

14th Jun 2019
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

ஐஏஎஸ்; இது பெரும்பாலான இளைஞர்களின் கனவுப் பணி. இப்பணியைப் பெற லட்சங்களைக் கொட்டி, பெரு நகரங்களில் உள்ள பயிற்சி மையங்களை நோக்கிப் படையெடுத்து வரும் இளைஞர்கள் கூட்டம் ஓர் பக்கம். ஆனால் எந்த ஓரு அடிப்படை வசதிகளும் இல்லாத குக்கிராமங்களில் பிறந்து அரசுப் பள்ளிகளில் படித்து, தங்களின் விடாமுயற்சியாலும், கடின உழைப்பாலும் ஐஏஎஸ் எனும் லட்சியத்தை அடைந்தவர்கள் மற்றொரு பக்கம்.

இதில் யார் பெறும் வெற்றிக்கு ருசி அதிகம், பெருமை அதிகம், மதிப்பு அதிகம்? யாரோ தூக்கித் திணித்த வெற்றியை தூக்கிச் சுமப்பவருக்கா இல்லை தன்முயற்சியால் பாடுபட்டு வெற்றி பெற்றவருக்கா?

இத்தகைய வெற்றியைத்தான் பெற்றிருக்கிறார் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகேயுள்ள சோழன்குடிகாடு என்ற குக்கிராமத்தைச் சேர்ந்த இளம்பகவத்.

Ilampagavath IAS

courtesy- marunadanmalayali

இவர் பிளஸ் 2 படிக்கும்போது, கிராம நிர்வாக அலுவலராகப் பணிபுரிந்த இவரது தந்தை காலமானார். இதனால் மேற்கொண்டு அவரால் படிக்க வழியில்லை. குடும்பத்துக்கு வருமானமில்லை. திருமண வயதில் இரு சகோதரிகள். நிலைகுலைந்து போனது குடும்பம்.

தந்தையின் பணியை கருணை அடிப்படையில் பெற முயற்சித்து தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருந்து காத்திருந்து ஆண்டுகள்தான் உருண்டோடின. செய்வதறியாது தவித்தார் இளம்பகவத். ஆனாலும், தன்னம்பிக்கையை கைவிடவில்லை. கிடைத்த வேலையை செய்து கொண்டே சென்னை பல்கலையில் தொலைதூரக் கல்வியில் பி.ஏ. படித்து பட்டம் பெற்றார்.

நிரந்தரம் இல்லாத பணிகள், போதிய வருமானமின்மை. இனி அரசுப் பணியொன்றே இலக்கு எனத் தீர்மானித்தார். தொடர்ந்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்காக தன்னை தயார்படுத்திக் கொண்டார்.

தொடர் பயிற்சி, விடாமுயற்சியின் பலனாக 2007ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்று காவல்துறை அமைச்சுப் பணியில் இளநிலை உதவியாளராகப் பணியில் சேர்ந்தார் இளம்பகவத். ஆனாலும் அவருக்கு அதில் திருப்தியில்லை.

அடுத்த ஆறே மாதத்தில் நடைபெற்ற குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று தலைமைச் செயலகத்தில் உதவியாளராக பணியில் சேர்ந்தார். ஆனால் அவருக்குள் இருந்த நெருப்பு குறையவில்லை.

அரசுப் பணியில் உயர் பதவி அடையவேண்டும் என்ற துடிப்பில் 2011ல் குரூப் 1 தேர்வெழுதி, ஊரக வளரச்சித் துறை உதவி இயக்குநர் பதவி பெற்றார்.

மீண்டும் குரூப் 1 தேர்வெழுதி காவல்துறை டி.எஸ்.பி. பதவி பெற்று ஹரியானாவில் உள்ள நேஷனல் அகாடெமி ஆப் கஸ்டம்ஸ் அன்ட் எக்சைஸ் மையத்தில் பயிற்சி பெற்று பணிபுரிந்தார்.

அப்போதுதான் அவருக்குள் இருந்த லட்சியத் தீ பெரும் ஜுவாலையுடன் கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியது. அதுதான் ஐஏஎஸ் அதிகாரியாகும் கனவு. அப்போது தொடங்கி விடாமுயற்சியுடன் தொடர்ந்து குடிமைப் பணித் தேர்வுகளை எழுதத் தொடங்கினார்.

Ilambagavath

பட உதவி: விகடன்

அவரது விடாமுயற்சியின் பலனாக வெற்றி தேவதை அவரை வாரியணைத்துக் கொண்டாள். ஆம், 2015ஆம் ஆண்டு நடைபெற்ற குடிமைப் பணித் தேர்வில் அகில இந்திய அளவில் 117வது இடம்பிடித்த இளம்பகவத், ஐஏஎஸ் ஆனார். தற்போது வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையில் சப்-கலெக்டராகப் பணிபுரிந்து வருகிறார்.

இதுகுறித்து அவர் வாரஇதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,

“நான் என் தந்தையின் வேலைக்காக மாதக்கணக்கில் காத்திருந்த தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சமீபத்தில் சென்று இருந்தேன். தற்போது அந்த கட்டடம் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால் அந்த அலுவலக வளாகத்தில் நான் காத்திருந்த நாட்களும், சந்தித்த அவமானங்களும், எனது வலிகளுமே நான் இந்த நிலைக்கு வரக் காரணமாக அமைந்துள்ளன,” என்கிறார்.

மேலும், அவர் தேர்வுக்குத் தயாராகும்போது கிராமத்தில் வாடகைக்கு எடுத்து பயன்படுத்திய அறையை அவருக்குப் பின் அவரது நண்பர்கள் என ஏராளமானோர் பயன்படுத்தி இன்று அரசுப் பணிகளில் ஜொலிக்கின்றனர் என்பது சிறப்பு.

கல்வி என்பது பகிர்தலைத்தான் கற்றுத் தருகிறது. நாம் செய்யவேண்டியதும் அதைத்தான் என்கிறார் இளம்பகவத் ஐஏஎஸ்.

விடாமுயற்சியுடன் இலக்கு நோக்கிய குறிக்கோளுடனான பயணத்தை மேற்கொண்டால், தடைகளை தவிடுபொடியாக்கி சாதாரணமானவர்கள் கூட சாதனையாளர்கள் ஆகலாம் என்பதற்கு இளம்பகவத் என்ற இளம் ஐஏஎஸ் அதிகாரி எடுத்துக்காட்டாக வாழ்கிறார் என்றால் அது மிகையல்ல.


  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close
Report an issue
Authors

Related Tags

Our Partner Events

Hustle across India