மண்புழு உரம் வணிகம் - முதலீட்டு தொகையில் நான்கு மடங்கு வரை லாபம்!
ஆர்கானிக் பொருட்கள் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டிருப்பதால் ஆர்கானிக் விவசாயம் அதிகரித்து வரும் நிலையில், மண்புழு உரத்திற்கான சந்தை தேவை அதிகரித்து வருகிறது.
விவசாயம் சம்பந்தப்பட்ட வணிகத்தில் ஈடுபட விரும்புபவர்கள் மண்புழு உரம் வணிகத்தில் ஈடுபடலாம். சிறிய இடம் இருந்தால் போதும், அதிகப்படியான லாபம் ஈட்டலாம்.
ஆர்கானிக் விவசாயத்தில் மண்புழு உரம் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. அரசாங்கமும் டெண்டர் முறையில் அதிகளவில் மண்புழு உரங்களை வாங்குகின்றன. விவசாயம் செய்யும் ஒவ்வொரு விவசாயிக்கும் உரம் தேவைப்படும். இப்படிப்பட்ட காரணங்களால மண்புழு உரம் வணிகத்திற்கு எப்போதும் சந்தை தேவை இருந்து வருகிறது.
ஆர்கானிக் பொருட்கள் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டிருப்பதால் ஆர்கானிக் விவசாயம் அதிகரித்து வருகிறது. இதனால் மண்புழு உரத்திற்கான சந்தை தேவையும் அதிகரித்து வருகிறது.
எளிதான வணிகம் அல்ல
மண்புழு உரம் வணிகம் லாபகரமானது என்றாலும், எல்லோராலும் இதை எளிதாக செய்துவிடமுடியாது. மண்புழுக்களைக் கைகளால் தொடவேண்டியிருக்கும். சிலர் மண்புழுக்களைத் தொட பயப்படுவார்கள். சிலருக்கு இது அருவருப்பாக இருக்கும். மண்ணிலும் அழுக்கிலும் வேலை செய்யவேண்டும். துணி அழுக்காகும். இதையெல்லாம் அனுசரித்துக் கொள்பவர்களால் மட்டுமே இந்த வணிகத்தை செய்யமுடியும். இந்தக் காரணிகளை யோசித்துப் பார்த்து மனதைத் தயார்படுத்திக்கொண்ட பிறகு வணிகத்தைத் தொடங்கலாம்.
மண்புழு உர வணிகம்
இந்த வணிகத்தைப் பொறுத்தவரை தரிசு நிலத்திலும் மேற்கொள்ளலாம். படுக்கை போன்ற அமைப்பை ஏற்படுத்தி மண்புழு தயாரிக்கலாம். இந்த படுக்கைகள் 3-4 அடி அகலத்திலும் 1-2 அடி உயரத்திலும் இருக்கவேண்டும். இடத்தைப் பொறுத்து நீளத்தை முடிவு செய்துகொள்ளலாம்.
மாட்டுசாணத்தைக் கொண்டு இந்த படுக்கைகள் உருவாக்கப்படும். இதில் மண்புழுக்கள் போடப்படும். இந்த மண்புழுக்கள் மாட்டு சாணத்தை சாப்பிட்டு உரமாக மாற்றுவிடும். வெறும் மூன்றே மாதங்களில் உரம் தயாராகிவிடும். அதாவது ஓர் ஆண்டிற்கு 4 முறை மண்புழு உரம் கிடைக்கும்.
செலவும் லாபமும்
மண்புழு உரத்தைப் பொறுத்தவரை முதல் முறையாக ஒரு தொகையை முதலீடு செய்யவேண்டும். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு முறை உரம் தயாரிக்கும்போதும் குறிப்பிட்ட தொகையை செலவு செய்யவேண்டியிருக்கும்.
ஆரம்பகால முதலீட்டுத் தொகையில் படுக்கை அமைப்பது, ஷெட் அமைப்பது, இயந்திரங்களுக்கான செலவு, மண்புழு வாங்கும் செலவு போன்றவை அடங்கும்.
100 சதுர அடியில் இந்த வணிகம் செய்வதற்கு சுமார் 1.5 லட்ச ரூபாய் வரை செலவாகும். இதுதவிர மாட்டுச் சாணம், தொழிலாளர்கள் கூலி, போக்குவரத்து போன்ற இதர செலவுகளுக்கு 1.5 லட்ச ரூபாய் வரை செலவாகும். மொத்தத்தில் 3 லட்ச ரூபாய் வரை ஆரம்பத்தில் செலவிடவேண்டியிருக்கும். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு முறை உரம் தயாரிக்கும்போதும் 1.5 லட்ச ரூபாய் செலவாகும்.
100 சதுர அடியில் 30 படுக்கைகள் அமைத்தால் 50 டன் வரை மண்புழு உரம் கிடைக்கும். இவற்றை விவசாயிகளிடம் நேரடியாக விற்பனை செய்யலாம். அத்துடன் பெரியளவில் செயல்படும் வர்த்தகர்கள் டன் கணக்கில் வாங்கிக்கொள்கிறார்கள். இப்படி மொத்தமாக விற்பனை செய்யும்போது ஒரு கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை செய்தாலும் 5 லட்ச ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.
பேக்கேஜ் செய்து விற்பனை செய்தால் மேலும் அதிக லாபம் கிடைக்கும். அளவில் பெரிதாக இருகும் பேக்கேஜ்கள், சந்தையில் கிலோவிற்கு 30-50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. சிறிய பேக் 70-80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன.
மண்புழு உர வணிகத்தில் உரம் மூலமாக மட்டுமில்லாமல் மண்புழுக்கள் மூலமாகவும் லாபம் பார்க்கமுடியும். ஆண்டிற்கு 4500 கிலோ வரை மண்புழுக்கள் கிடைக்கும். இவை கிலோ 150-200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிலோ 200 ரூபாய் என்கிற விலையில் விற்பனை செய்தாலும் மண்புழு மூலமாக மட்டுமே 5 லட்ச ரூபாய் வரை லாபம் ஈட்டமுடியும்.