களவாடப்படும் கலைப் பொருட்களை அயல்நாடுகளில் இருந்து மீட்க உதவும் ‘கலைக்காதலர்’ விஜய்குமார்!
இந்தியாவில் இருந்து திருடப்பட்டு அயல்நாடுகளில் காட்சிப்பொருட்களாக அருங்காட்சியகங்களில் லட்சக்கணக்கில் விற்பனையாகும் புராதனப் பொருட்கள் மற்றும் சிலைகளை சொந்த ஆர்வத்தில் தாய்நாட்டிற்கு கொண்டு வர உதவும் தமிழர் விஜய்குமார்.
அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி இந்தியா திரும்புகையில் 157 பழமைவாய்ந்த தொல்லியல் பொருட்களை தாயகத்திற்கு கொண்டு வந்தார். அமெரிக்கா ஒப்படைத்துள்ளவற்றில் 10-ம் நூற்றாண்டில் மணற் கல்லில் தயாரிக்கப்பட்ட ரேவண்டா, 56 டெரகோட்டா துண்டுகள், பல வெண்கலச் சிலைகள், செப்புப் பொருட்கள் உள்ளிட்ட விலைமதிக்க முடியாத பொருட்கள் உள்ளன.
கி.மு. 2000-ம் ஆண்டைச் சேர்ந்த ஒரு செப்பு மனித உருவம், 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்த டெரகோட்டா குவளை ஆகிய பொருட்களும் உள்ளன. 71 கலாச்சாரப் பொருட்கள். 60 இந்து மத சிலைகள், 16 புத்த மதம் சிலைகள் மற்றும் 9 சமணசமய சிலைகளாகும். இந்த பொருட்கள் அனைத்தும் பெரும்பாலும் 11 மற்றும் 14-ம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்டவை.
நம் வரலாற்றுப் பொக்கிஷங்களான இந்தப் பொருட்கள் கடத்தப்பட்டு அயல்நாடுகளில் எப்படி தஞ்சமானது? களவுபோன சிலைகளை மீட்க முடியுமா, என்றெல்லாம் பல சிந்தனைகள் நமக்குத் தோன்றலாம், முயற்சி செய்தால் முடியும். சுவாமி சிலைகளையும் புராதானப் பொருட்களையும் மீட்டெடுப்பதை தனிப்பட்ட ஆர்வத்தில் செய்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த எஸ். விஜய்குமார்.
எந்த எதிர்பார்ப்பும் இன்றி 17 ஆண்டுகளாக தொடர்ந்து தொல்லியல் பொருட்கள் மற்றும் கலைப் பொக்கிஷங்களை மீட்பதில் ஆர்வமாக இருக்கும் அவரை பேட்டி கண்டது யுவர் ஸ்டோரி தமிழ்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலுரை அடுத்த கொளத்தூரை பூர்வீகமாகக் கொண்ட விஜய்குமார் பிறந்து வளர்ந்து எல்லாமே சென்னையில். பள்ளி, கல்லூரி படிப்பை முடித்து விட்டு சிங்கப்பூரைச் சேர்ந்த கப்பல் நிறுவனம் ஒன்றில் 2006ம் ஆண்டில் பணிக்குச் சேர்ந்து அப்போது முதல் அங்கேயே வசித்தும் வருகிறார்.
கல்லூரி முடித்த பிறகு நண்பர்களுடன் சேர்ந்து தஞ்சாவூர் பெரிய கோவிலுக்குச் சென்ற போது அங்கு சிற்பக்கலை மற்றும் இந்தியக் கோவில் கலையால் ஈர்க்கப்பட்டு சோழர்கள் பற்றி அறிந்து கொள்ள பின்னர் பொன்னியின் செல்வன் புத்தகத்தை படித்ததில் இருந்து கலைக்கான பயணம் தொடங்கியதாகக் கூறுகிறார் விஜய்குமார்.
“புத்தகத்தில் வரலாற்றைப் படித்ததற்கும் நேரில் பார்த்ததற்கும் பல இடைவெளி இருந்தது. நண்பர்கள் பலரும் சோழர் வரலாற்றை பல விதங்களாக ஆராயத் தொடங்கினர். நான் சோழர் காலத்து செப்பு திருமேனிகளைப் பற்றி சொந்தமாக படித்து தகவல்களைச் சேகரிக்கத் தொடங்கினேன். செப்பு சிலைகள் பற்றிய புத்தகங்கள் பாமரர்க்கு புரியாமல் இருப்பதனால் அதனை சாத்தியமாக்கும் முயற்சியாக இந்தியக் கலையை ஆர்வத்தோடு படிக்க வைப்பதற்கான வழிகாட்டியாக 2006ம் ஆண்டில் Poetryinstone என்ற பெயரில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சிற்பக்கலைகள் பற்றி நான் அறிந்துகொண்டதை blog-ல் எழுதத் தொடங்கினேன்,” என்கிறார் விஜய்குமார்.
கப்பல் நிறுவனத்தில் பணி என்பதால் பணி நிமித்தமாக இந்தியா, தென்கிழக்கு நாடுகள், கம்போடியா, வியட்நாம் என்று பல நாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. பணி நேரம் போக ஓய்வு நேரத்தை அங்கு இருக்கும் தனித்துவமான பொக்கிஷங்களை ஆவணப்படுத்துவற்காக நானும் நண்பர்களும் நேரத்தை செலவிட்டோம்.
Passion என்று Fashionக்காக சொல்லாமல் அதில் ஆர்வத்தோடு செயல்பட்டிருக்கின்றனர் விஜய்குமாரும் அவருடைய நண்பர்களும். எனக்கு நல்ல நினைவுத் திறனும், புகைப்படக்கலையிலும் ஆர்வம் உண்டு என பொக்கிஷங்களை ஆவணப்படுத்துவதில் என் பங்கு இதுவாகும். நண்பர்களில் ஒருவர் தொழில்நுட்பப் பணிகளை பார்ப்பது, மற்றவர் திட்டமிடல் செய்வது என்று இந்தியக் கலை மீட்புக்கான பணியை ஆளுக்கொருவராக பிரித்துக் கொண்டு செயல்படுகிறோம்.
இரண்டு ஆண்டுகளில் இந்தப் பணிகள் முடிந்த பின்னர், இந்தியாவில் மாநில வாரியாக புராதனக் கோவில்கள் பற்றிய தகவல்களைத் திரட்டி அவை பற்றி 6 மாதங்கள் படித்து நேரில் சென்று அதனை பார்த்து எழுதத் தொடங்கினோம்.
2008ல் இந்தச் செயலை தொடங்கிய போது தான் பல கோவில்களில் தொன்மை வாய்ந்த பொருட்கள் காணாமல் போய் இருப்பதை உணர்ந்தோம். அது பற்றி சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் கேட்டாலும் சரியான பதில் இல்லை, இந்தியக் கலைக்கு ஏதோ ஒரு ஆபத்து இருக்கிறது என்பதை மட்டும் அப்போது நாங்கள் உணர்ந்தோம், என்கிறார் விஜய்குமார்.
கப்பல்துறையில் பணியாற்றிக் கொண்டிருப்பதோடு தொழில்நுட்பமும் அறிந்த நண்பர்கள் என்னுடன் இருந்ததால் சர்வதேச அளவில் இந்திய கலைபொருட்கள் களவாடப்பட்டு பல லட்சங்களுக்கு விற்கப்படுவதை பார்த்து அதிர்ச்சியடைந்தோம். அதிலும், பல சிலைகள் தோண்டி எடுக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் மற்றும் மண்கூட சரியாக துடைக்கப்படாத சிலைகள் என்று திருடப்பட்டு கொண்டு வரப்பட்ட கையோடு ஏலத்தில் இருப்பதை பார்த்து அரண்டே போய்விட்டோம்.
இந்திய கலைப்பொருட்களை மீட்பதற்கு எங்களின் பங்களிப்பை செய்ய வேண்டும் என்பதற்காக 2014ம் ஆண்டில் INDIA PRIDE PROJECT என்ற தன்னார்வ அமைப்பாக செயல்படத் தொடங்கினோம் என்று சொல்கிறார் அவர்.
சமூக ஊடகத்தை பயன்படுத்தி எங்களைப் போன்ற கலை ஆர்வலர்களை இணைக்கும் விதமாக அவர்களை ஒன்றிணைத்து ஒரு மிஷனை தொடங்கினோம். அயல்நாடுகளில் அருங்காட்சியகங்கள் அல்லது வேறு இடங்களில் இந்தியச் சிலைகளைக் கண்டால் அவற்றை புகைப்படம் எடுத்து பதிவிட கேட்டுக் கொண்டோம். இதற்குக் கலை ஆர்வலர்களிடம் ஆதரவும் கிடைத்த நேரத்தில் இந்தியக் கலையில் மாநில வாரியாக இருக்கும் பிரதிநிதித்துவங்களான ஆபரணங்கள், சிலை அமைப்பு உள்ளிட்டவற்றை தனித்தனியே படிக்கத் தொடங்கினோம்.
இதனால், இந்திய கலைபொருட்கள் வெளிநாட்டு அருங்காட்சியகத்தில் இருப்பது தெரிந்தால் அது எந்த மாநிலத்தைச் சார்ந்ததாக இருக்கும் என்பதை கணிப்பதற்கு உதவியாக இருந்தது. இவை அனைத்துமே முழு நேரமாகச் செய்யவில்லை, பகல் நேரத்தில் கப்பல் நிறுவனப் பணி பொழுதுபோக்காக தினந்தோறும் 2 மணி நேரம் இந்தியக் கலை பற்றிய தேடலுக்கான அர்ப்பணிப்பு என்று நானும் என்னுடைய நண்பர்கள் குழுவினரும் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறோம் என்று கூறுகிறார் விஜய்குமார்.
இரண்டு ஆண்டுகள் இவ்வாறான தேடலில் அயல்நாடுகளில் எங்கெல்லாம் இந்திய கலைபொருட்கள் இருக்கிறது என்ற புரிதல் ஏற்பட்டது. கலையை கலையாகப் பார்க்கும் ஆர்வலர்கள் பலர் இந்தியச் சிலைகள் பற்றிய தகவல்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டனர், இன்டர்போல் போலீசாரும் இவற்றைப் பற்றிய தகவல்களை எங்களிடம் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினர். வெளி உலகிற்குத் தெரியாமலே எங்களின் பங்களிப்பை தொடர்ந்து செய்து வந்தோம்.
கலைபொருட்களின் திருட்டு பற்றி இந்திய அரசு பொருட்படுத்துவதில்லை என்கிறது சிஏஜி அறிக்கை. 1970 - 2000 வரையிலான காலகட்டத்தில் 19 கலைபொருட்கள் மட்டுமே மீட்கப்பட்டிருக்கிறது, 2000 – 2012 காலகட்டத்தில் எந்தச்சிலையும் மீட்கப்படவில்லை இதனால் சர்வதேச கலைச்சந்தையில் இந்திய கலைப்பொருட்கள் என்றால் எந்த சட்டச்சிக்கலும் இல்லை என்ற எண்ணம் விற்பவர்கள் மத்தியில் நிலவியது.
இந்தியக் கலை பற்றி நாம் அறியாததாலும் சிலைத்திருட்டுகளுக்கு நம் சட்டங்கள் வலுவானதாக இல்லாததுமே இதற்குக் காரணம். கம்போடியா, எகிப்து உள்ளிட்ட நாடுகள் தங்களின் கலைபொருட்களை திருடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளை விதிப்பதால் அந்த நாட்டின் கலைபொருட்களைக் களவாடுவதற்கே கூட தயங்குகிறார்கள்.
1998ம் ஆண்டில் லண்டனைச் சேர்ந்த அருங்காட்சியகம் ஒன்று இந்திய கலைபொருட்களில் விலை உயர்ந்தது எது என்பதை கண்டறிவதற்காக அறிஞர்கள் குழுவுடன் சுற்றுலா வந்து அந்தக் குழுவினர் சுட்டிக்காட்டும் கலைபொருட்களை திருடுவது என்று திட்டமிட்டே இந்திய கலைபொருட்கள் திருடப்பட்டன.
பீட்டர் வாட்சன் என்ற பிபிசி பத்திரிக்கையாளர் சிலைகள் திருட்டு பற்றி எழுதி இருக்கும் புத்தகத்தில் இந்தியாவைப் பற்றியும் ஒரு பகுதி இடம்பெற்றுள்ளது. அதில் அவர் குறிப்பிட்டிருப்பது ராஜஸ்தானைச் சேர்ந்த வாமங்கயா என்பவர் ஏறத்தாழ 10 ஆயிரம் சிலைகளை 4 ஸ்விட்சர்லாந்து நிறுவனங்கள் மூலம் விற்றார் என்று வழக்கு பதியப்பட்டது.
2002ல் அவர் கைது செய்யப்பட்ட போது 2013ம் ஆண்டில் அவர் விடுதலையானார். அதற்கான காரணம் அவர் திருடியதாக சொல்லப்பட்ட 10 ஆயிரம் சிலைகளில் இந்த இடைபட்ட காலத்தில் ஒன்று கூட நாடு திரும்பவில்லை. இந்த அவலம் மீண்டும் ஏற்படக் கூடாது எங்கள் கண் முன்னேயே பல இந்திய கலைபொருட்கள் மொத்தமாக விற்கப்படுவது வேதனையாக இருந்தது இதனை மீட்க வேண்டும் என்பதை நோக்கமாக வைத்து நாங்கள் செயல்படத் தொடங்கினோம் என்கிறார் விஜய்குமார்.
கலைபொருட்கள் பற்றி விவரம் கேட்டு கடிதம் எழுதினாலும் இந்தியாவிடம் இருந்து எந்த பதிலும் இல்லை என்று ஆதங்கப்பட்ட அமெரிக்கா, எங்களை தொடர்பு கொண்டு சந்தேகப்படும் பொருட்கள் இந்தியாவிற்கு சொந்தமானது என்பதை உறுதிபடுத்தித் தருமாறு உதவி கேட்டனர். நாங்கள் அவர்களுக்கு அந்தப் பொருட்கள் இந்தியாவினுடையது தான் என்பது மட்டுமின்றி அது எந்த நூற்றாண்டைச் சேர்ந்தது சரியாக எந்த கோவிலில் இருந்தது என்ற ஆதாரங்களைக் கொடுத்ததால் அவர்கள் அதில் திருப்தியடைந்து எங்களுடன் இணைந்து செயல்படத் தொடங்கினர்.
இந்த ஆதாரங்களை வழங்கியதற்காக எங்களுக்கு எந்த நிதிஉதவியும் தேவையில்லை, சொல்லப்போனால் எங்கள் பெயர் கூட எதிலும் வர வேண்டாம் என்றே கூறி விட்டோம். ஏனெனில் தொடக்கத்தில் இருந்தே எங்களின் நோக்கம் இது இந்திய கலையை மீட்பதற்கான எங்களின் முயற்சி இதற்காக எந்த விளம்பரமோ, நிதி பங்களிப்போ, நன்கொடையோ தேவையில்லை எங்களின் கடமையைச் செய்கிறோம் என்பதில் நானும் என்னுடைய நண்பர்களும் உறுதியாக இருந்து கொண்டிருக்கிறோம்.
எங்களுடன் இணைந்து செயல்பட்டு கொண்டிருந்த சர்வதேச சட்ட முகமைகள் மற்றும் தமிழ்நாடு சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவின் உதவியால் சுபாஷ் கபூர் என்ற சிலைத் திருடனை பிடிக்க முடிந்தது. சுபாஷ் கபூர் பல நெட்வொர்க் மூலம் சிலைகளைத் திருடி தன்னுடைய ஆர்ட் கேலரி மூலம் விற்று வந்தார்.
2012ல் நியூயார்க்கில் இருந்த அவருடைய 12 அருங்காட்சியகங்களில் விற்கப்படாமல் இருந்து கைப்பற்றப்பட்ட கலைபொருட்களின் மதிப்பே ரூ.900 கோடி இவற்றில் பெரும்பாலானவை இந்திய கலைபொருட்கள் என்பது மற்றொரு அதிர்ச்சியான விஷயம். இன்டர்போல் உதவியுடன் சுபாஷ் கபூர் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டார்.
இதைப் பற்றி ‘சிலைத் திருடன்’ என்ற ஒரு புத்தகத்தையும் நான் எழுதி இருக்கிறேன், அந்த புத்தகம், ஆங்கிலம், மராத்தி உள்ளிட்ட மொழிகளில் வெளிவந்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த 3 முக்கியமானவர்கள் இந்திய கலைபொருட்களை நாடு திருப்புவதற்கு உதவியாக இருந்தனர். இண்டி என்று நாங்கள் குறிப்பிடும் ஒரு ரகசிய அதிகாரி, மேத்யூ பொக்டோனாஸ் மற்றும் இந்திய வம்சாவெளியைச் சேர்ந்த அப்சரா ஐயரின் உதவியால் 100க்கும் மேற்பட்ட கலைபொருட்கள் நமக்கு மீண்டும் கிடைத்துள்ளன.
2012ம் ஆண்டிற்குப் பிறகு சுமார் 210 சிலைகள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, லண்டனில் இருந்து மீட்டு கொண்டு வரப்பட்டுள்ளது. இவற்றில் 95 சதவிகிதம் கலைபொருட்கள் நாங்கள் அடையாளம் கண்டு கொடுத்தவை. 1970கள் வரை கலைபொருட்கள் திருட்டு பற்றி ஆவணபடுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், அதற்குப் பின்னர் திருடப்படும் கலைப் பொக்கிஷங்கள் குறித்து சரியான ஆவணப்படுத்துதல்கள் இல்லை என்பது வருத்தமான விஷயம்.
கலைபொருட்கள் காணவில்லையெனில் அதை சாதாரணமாக கடந்து சென்று விடாமல் எங்களை அணுகினால் நாங்கள் சேகரித்து வைத்திருக்கும் தகவல்களை வைத்து அவற்றை கண்டறிய உதவ முடியும் என்பதால் வெளி உலகிற்குத் தெரியாமலேயே செயல்பட்டுக் கொண்டிருந்த நாங்கள் 2014ம் ஆண்டில் இந்தியா பிரைடு ப்ராஜெக்ட் அமைப்பின் இணை நிறுவனர் என்று வெளிஉலகிற்கு நான் அறிமுகமானேன் என்கிறார் விஜய்குமார்.
2012ல் தனிப்பட்ட முறையில் காணாமல் போன புன்னைநல்லூர் கோவில் நடராஜர் சிலையை மீட்டெடுக்குமாறு ஒரு கோரிக்கை எங்களுக்கு வந்தது. அதன் அடிப்படையில் அங்கே சென்று ஆய்வு செய்த போது சிலை திருடப்பட்டது குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது, ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று வழக்கு முடிக்கப்பட்டு விட்டது.
அதிர்ஷ்டவசமாக அந்தச் சிலையின் புகைப்படம் ஒன்று கிடைக்கவே அதை வைத்து நாங்கள் ஆராய்ந்ததில் அந்த அழகிய நடராஜர் சிலை நியூயார்க்கில் ஒரு அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டறியப்பட்டு 2 ஆண்டுகள் தொடர் விசாரணைகளுக்குப் பிறகு அந்தச் சிலை நாடு திரும்பியது. விருத்தாசலத்தைச் சேர்ந்த அர்த்தநாரீஸ்வரர் சிலை ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவிற்கு கொண்டு வந்தோம். ஸ்ரீபுரந்தன் நடராஜர் மற்றும் உமா சிலை, கணேசா சிலை, குப்தர் காலத்து புத்தர் என்று சிங்கப்பூர், லண்டன், ஜெர்மனியில் இருந்து பலவற்றை மீட்டு தந்திருக்கிறோம்.
தற்போது பிரதமர் இந்தியாவிற்கு கொண்டு வந்திருக்கும் 157 கலைபொருட்கள் ஒரு தொடக்கமே இது போன்று மேலும் பல வரும் நாட்களில் நம் நாட்டிற்கே திரும்பும் என்று நம்பிக்கையோடு கூறுகிறார் விஜயகுமார்.
கலைபொருட்கள் பற்றிய விழிப்புணர்வு நம் மக்களிடம் அதிகம் இல்லை மேலும் அவை திருடுபோனால் முதல் தகவல் அறிக்கை பதிவது கட்டாயம் என்பதோடு, அவற்றை புகைப்படமாக எடுத்து நிர்வாகம் ஆவணப்படுத்தி வைத்திருந்தால், ஒருவேளை அவை நாடு கடத்தப்பட்டாலும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அதனை நாம் மீட்டெடுக்க முடியும்.
சிலைகள் நாடு கடத்தப்படுவதை அமெரிக்கா தீவிரமாக எடுப்பதற்கான காரணம் அவற்றை வைத்து அந்நிய செலாவணி, தீவிரவாத அமைப்புகளின் பணப்பரிமாற்றம் மற்றும் பண மோசடி உள்ளிட்டவையே நடத்தப்படுகின்றன, கருப்புப் பண புழக்கத்திற்கு முக்கியமான வழியாக சிலை விற்பனையானது இருப்பதனால் கடுமையான சட்ட நடவடிக்கைகளை அமெரிக்கா கொண்டு வந்துள்ளது.
”தொல்பொருட்கள் அழிவை தடுப்பதற்கு கடுமையான சட்டங்களை இந்தியா கொண்டு வர வேண்டும். நாம் தெய்வங்களாக வழிபடும் சிலைகள் பல வெளிநாடுகளில் செல்வந்தர்களின் குளியல் அறை, படுக்கை அறையில் காட்சிப் பொருட்களாக இருக்கின்றன, இவை தடுக்கப்பட வேண்டும். மேலும் மீட்கப்படும் சிலைகள் நாடு திரும்பியதும் மீண்டும் இங்கு அருங்காட்சியகங்களுக்கு கொண்டு செல்லாமல் அந்த சிலைக்கு சொந்தமான கோவில்கள் அதனை கேட்டுப்பெற்று மீண்டும் வழிபாட்டிற்கு கொண்டு செல்ல வேண்டும்,” என்கிறார் விஜய்குமார்.
இந்தியக் கலை மற்றும் வரலாறு பல்வேறு சிறப்பு அம்சங்களை உள்ளடக்கிய காலப் பொக்கிஷம் அதை அழியாமல் பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை, நம் சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்லும் பெருமைகள் அவை எனவே அவற்றை சரியாக பாதுகாக்க தேசிய கலை அணி என்று தொன்மைவாய்ந்த அம்சங்களை அறிதல் மற்றும் கலைபொருட்களை மீட்டெடுக்கும் அமைப்பாக அதனை உருவாக்கி எங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து அந்தக் குழுவை வழிநடத்த வாய்ப்பு ஏற்படுத்தித் தரவும் அரசிடம் கோரிக்கை வைக்க திட்டமிட்டுள்ளோம் என்று கூறுகிறார் விஜய்குமார்.