Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

சிங்காரச் சென்னை 2.0: குப்பைகளின்றி சென்னை அழகாய் மிளிர திறம்பட உழைக்கும் ‘உர்பசேர்-சுமீத்’

சிங்காரச் சென்னையாக மாற்றுவதில் மிகப்பெரிய சவாலாக இருக்கும் திடக்கழிவு மேலாண்மையை திறம்பட செயல்படுத்தி மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது உர்பசேர்.

சிங்காரச் சென்னை 2.0: குப்பைகளின்றி சென்னை அழகாய் மிளிர திறம்பட உழைக்கும் ‘உர்பசேர்-சுமீத்’

Tuesday January 04, 2022 , 5 min Read

வந்தவர்களை எல்லாம் வாழவைக்கும் சென்னை மாநகரம் தனக்கான எழிலை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது. மக்கள் தொகை பெருக்கத்தால் நிலப்பரப்புகள் குடியிருப்புகளாக மாறி வரும் நிலையில் இயற்கைப் பேரிடர்கள் ஒருபுறம் சவால் விடுக்க மற்றொரு புறம் கழிவுகள் மேலாண்மை எச்சரிக்கை மணி அடித்துக் கொண்டே இருக்கிறது.

'சிங்காரச் சென்னை 2.0' என்று சென்னையை எழிலூட்டும் விதத்தில் அரசால் அறிவிக்கப்பட்டிருக்கும் திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு மக்களுக்கும் இருக்கிறது.

Urbaser Sumeet

'உர்பசேர்-சுமீத்' முயற்சி

உலர் கழிவு மேலாண்மையில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டுமே இது சாத்தியம் என்பதை உணர்ந்து புதிதாக சென்னை மாநகராட்சியில் குப்பைகளை அகற்றும் ஒப்பந்தத்தை கையில் எடுத்துள்ள இந்தோ-ஸ்பானிஷ் கூட்டு நிறுவனமான 'உர்பசேர்-சுமீத்' ’Urbaser-Sumeet' பல கட்ட விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது.

பரவலாக்கப்பட்ட கழிவு மேலாண்மை என்ற அடிப்படையில் 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம், தென்சென்னை மற்றும் மத்திய சென்னையின் ஏழு மண்டலங்களில் கழிவு மேலாண்மையை இந்த நிறுவனம் 8 ஆண்டுகளுக்கு பெற்றிருக்கிறது.

வீடுவீடாகச் சென்று குப்பைகளை வகைபடுத்திப் பெறுதல் மற்றும் சாலைகளை சுத்தப்படுத்துவதே உர்பசேரின் முக்கியப் பணி என்கிறார் அதன் Information, Education and Communication (IEC), பிரிவின் தலைவர் வி. ஆர். ஹரி பாலாஜி. திடக்கழிவு மேலாண்மை எனும் சவாலை உர்பசேர் எப்படி கையாள்கிறது என்ற கேள்வியுடன் ஹரி பாலாஜியுடன் பேசத் தொடங்கினோம்.

நிச்சயமாக திடக்கழிவு மேலாண்மை என்பது மிகப் பெரிய சவால். குப்பைகளை மொத்தமாக சேர்த்து ஒரே பையில் போட்டு பழகியவர்களிடம் அவற்றை வகைபடுத்தி பிரித்து போட வேண்டும் என்றதுமே ஒரு வித எதிர்ப்பு இருந்தது உண்மை தான். குப்பைகளை சேகரித்து பின்னர் பிரித்தெடுப்பது என்பது மிகப்பெரிய நேர மற்றும் மனித உழைப்பின் விரயம் இதனால் இதனை முடிந்தவரை தவிர்ப்பதற்காக வீடுகளில் இருந்து குப்பைகளைப் பெறும் போதே அவற்றை 3 வகைப்படுத்திய குப்பைகளாக பிரித்து கொடுக்கும்படி கேட்கிறோம்.

”மக்கும் கழிவுகள் (காய்கள், மீந்த உணவு போன்றவை), மக்காத கழிவுகள் (பிளாஸ்டிக், பால் கவர், பேனா போன்றவை) மற்றும் அபாயகரமான வீட்டு கழிவுகள் (மருந்து, ரேசர், ஸ்பிரே பாட்டில்) ஆகியவை சேகரிக்கும் போதே தூய்மைப் பணியாளர் பிரித்து வாங்கும் வகையில் பணிக்கப்பட்டுள்ளனர். மேலும், வீடு வீடாகச் சென்று கழிவுகளை சேகரிக்க தூய்மை பணியாளர்களுக்கு இ-ரிக்ஷாக்கள் வழங்கப்பட்டுள்ளன,” என்றார்.
corporation

குப்பைகளை பிரித்துப் போடுவதனால் சென்னை தூய்மையான நகரமாக மாறிவிடும் என்பதல்ல, ஆனால் சுற்றுச்சூழல் தூய்மையாகும் நிலை உருவாகும் என்கிறார் ஹரி. குப்பைகளை வகைபடுத்தி வீட்டிற்கே வந்து சேகரித்துச் செல்லும் தூய்மைப் பணியாளரிடம் கொடுப்பதனால் சாலைகளில் குப்பைகள் கொட்டப்படுவது தவிர்க்கப்படும்.

மேலும், பிரிக்கப்படாமல் சேகரிக்கப்பட்டு குவியல் குவியலாக கொட்டி வைக்கப்படும் குப்பைகளில் இருந்து நாட்கள் செல்லச்செல்ல அபாயகரமான நச்சுவாயுக்கள் வெளியேறுவதனால் சுற்றப்புறச் சூழல் பாதிப்பதோடு ஒரு தலைமுறையின் சூழலியலே மாறிவிடும் என்பதோடு ஆரோக்கியத்திற்கும் தீங்குகளை ஏற்படுத்தும்.

இந்த பாதிப்புகளைத் தவிர்ப்பதற்காகவே வீடுகளில் குப்பைகளை பிரித்து வாங்குவதற்கென 12,000 ஊழியர்கள் நியமிக்கப்பட்டு 3000 பேட்டரியால் இயங்கும் இ-ஆட்டோக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இ-ஆட்டோக்களால் தினசரி வாகனப் புகையால் ஏற்படும் காற்று மாசு குறைக்கப்படுகிறது.

காலை 6 மணி முதல் 2 மணி வரை வீடுகளிலும், 2 மணி முதல் இரவு 10 மணி வரை கடைகளுக்கும் சென்று ஊழியர்கள் குப்பைகளை சேகரித்து மக்கும் குப்பைகளை மண்டல வாரியாக அமைக்கப்பட்டுள்ள உரமாக்கும் இடத்திலும், மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்யும் இடத்திலும் கொண்டு சேர்த்துவிடுவர்.

”ஒவ்வொரு வீட்டிலும் குப்பை பிரித்தலை பழக்கப்படுத்தினால், அது தெருவுக்கே உதாரணமாகும். சங்கிலி போலத் தொடரும் இந்த அன்றாட பழக்கத்தினால் ஊரையே சுத்தமாக வைத்துக் கொள்ள முடியும்,” என்று நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார் ஹரி பாலாஜி.

வழக்கமாக குப்பைகள் அகற்றும் ஒப்பந்தம் எடுக்கும் நிறுவனங்களும் இதைத்தானே செய்கிறது இதில் உர்பசேர் எப்படி தனித்துவமானது என்பதற்கும் பதிலளிக்கிறார் ஹரி.

குப்பைகளை பிரித்து சேகரித்தல், ஊரை சுத்தமாக வைத்துக் கொள்ள சாலைகளை பெருக்குதல் (மனிதர்களே பெருக்குவது மற்றும் பெரிய சாலைகளில் இயந்திரம் கொண்டு சுத்தம் செய்தல்) சாலையில் இறந்து கிடக்கும் விலங்குகளின் சடலங்களை தகவல் தெரிவித்தவுடன் carcass வாகனத்தில் சென்று அகற்றுதல் மற்றும் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து சென்று மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் உடைந்து சிதறிக் கிடப்பவற்றை சுத்தம் செய்தல், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிக அளவில் வீசப்படும் குப்பைகளை தூய்மைபடுத்துதல் என துரிதமாக செயல்படுவதே உர்பசேரின் சிறப்பாகும்.

e auto

எத்தனை டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது என்பது முக்கியமல்ல, சரியான நேரத்தில் குப்பைகள் சேகரிக்கப்பட்டு அவை சரியான நேரத்திற்கு கொண்டு சேர்க்கப்படுகிறதா என்பதைப் பொருத்தே ஒப்பந்தத்திற்கான தொகையானது அளிக்கப்படும். எனவே, நிர்வாக ரீதியில் இந்த முறையை திறம்பட செயல்படுத்துவதும் சவாலான விஷயமே.

7 மண்டலங்கள், 92 வார்டுகள் நாள் ஒன்றிற்கு 16 ஆயிரத்து 620 தெருக்களில் தூய்மை பணிக்காக 12 ஆயிரம் பணியாளர்கள் 3 ஆயிரம் இ-ஆட்டோக்கள் உள்ளன. இவற்றின் செயல்பாட்டை கவனிப்பது கடினம் என்பதனால் தொழில்நுட்ப உதவியுடன் இதனை சாத்தியப்படுத்தி வருகிறோம், என்றார்.

ஆலந்தூரில் இருக்கும் உர்பசேர் அலுவலகத்தில் இருந்து பெரிய திரையில் அனைத்து இ-ஆட்டோக்களின் போக்குவரத்தும் ஜிபிஎஸ் கருவி மூலம் கண்காணிக்கப்படுகிறது. குப்பைகளை மொத்தமாக எடுத்துச் செல்லும் போது சாலையில் சிதறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும், அவ்வாறு குப்பைகள் சிதறினால் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்.

பெருந்தொற்று காலம் என்பதனால் 15 நாட்களுக்கு ஒருமுறை சாலையோர குப்பை தொட்டிகளை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தி வைக்க வேண்டும் என்பன போன்ற பயிற்சிகள் தூய்மை பணியாளர்களுக்கு கொடுக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில் வர்த்தகம் நிறைந்த பகுதிகளில் சேரும் குப்பைகளை அப்புறப்படுத்துவதென்பது மிகச் சவாலான விஷயம். எனவே வீடுகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதைப் போன்று வணிக நிறுவனங்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பண்டிகைக் காலங்கள், விளையாட்டு அரங்கங்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஹாட்ஸ்பாட்டுகள் அமைக்கப்பட்டு அவ்வபோது குப்பைகள் அகற்றப்பட்டு கொண்டே இருக்கும்.

ஹரி பாலாஜி

உர்பசேர் சுமீத்-ன் Information, Education and Communication (IEC), பிரிவின் தலைவர் வி. ஆர். ஹரி பாலாஜி

நவம்பரில் வெளுத்து வாங்கிய பெருமழையில் பல தெருக்களில் மழைநீர் வடிகால்வாய்களில் பிளாஸ்டிக் குப்பைகள் அடைத்துக் கொண்டு வெள்ளநீர் வடிய முடியாமல் இருந்த போதும் கூட உர்பசேர் தூய்மைப் பணியாளர்கள் அடைமழையிலும் கடமை தவறாது சிறப்பாக செயல்பட்டு பொதுமக்களின் மனதை மட்டும் வெல்லவில்லை முதல்வரின் பாராட்டையும் பெற்றிருக்கின்றனர்.

சென்னையின் 15வது மண்டலம் சோழிங்கநல்லூரில் ஒரு வார்டில் சக்தி துவக்க முயற்சி என்கிற பெயரில் குப்பை வண்டிகளை இயக்குவதில் , மேற்பார்வையிடல், துப்புரவுப் பணி என அனைத்துப் பணிகளையும் பெண்கள் மட்டுமே செய்து வருகின்றனர்.

12 ஆயிரம் ஊழியர்களை பணியில் அமர்த்த வேண்டிய நிலை ஏற்பட்ட போது அதிகம் ஆண்களே பணிக்கு வருவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், பெண்கள் அதிக அளவில் எங்கள் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற வந்தனர். சிங்கிள் மதர், குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபராக இருக்கும் பெண்களுக்கு பணி பாதுகாப்புடன் நல்ல ஊதியத்தையும் வழங்கி வருவதனால் பெண்கள் அச்சமின்றி உர்பசேருடன் பயணித்து வருகின்றனர்.

ஒப்பந்தம் எடுத்ததற்காக பணியாற்றுகிறோம் என்று கடமைக்கு செய்யாமல் மக்களுக்கு சிரமம் இல்லாமல் இரவு நேரங்களில் மொத்தமாக குப்பைகளை தெருமுனை குப்பைத் தொட்டிகளில் இருந்து எடுத்துச் செல்வது, சாலை துப்புரவுப் பணிகளை இரவிலேயே செய்து முடிப்பது என்று அனைத்தும் திட்டமிட்டு செய்யப்படுகிறது.

இது மட்டுமின்றி எந்த அளவிற்கு சுத்தம் செய்கிறோமோ அந்த அளவிற்கு பராமரிப்பு அவசியம் என்பதையும் பொதுமக்களுக்கு உணர்த்தி வருகிறோம். இதற்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுடன் இணைந்து சென்னை லாக் நகர் குடிசை மாற்று வாரியத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு பயன்படுத்த முடியாமல் இருந்த ஒரு பகுதியை அங்கு வசிப்பவர்களின் உதவியோடு சுத்தம் செய்து வர்ணம் பூசி ஊஞ்சல்கள் போட்டு குழந்தைகளுக்கான விளையாடும் இடமாக மாற்றி இருக்கிறோம்.

”சில மாதங்களுக்கு முன்னர் பல்லக்கு மாநகர் குடிசை மாற்று வாரியத்தில் இதே போன்று புதுப்பிக்கப்பட்டது. அடுத்ததாக மூர்ஸ் சாலையில் உள்ள சுதந்திர நகர், வால்மீகி நகர் குடிசை மாற்று வாரியங்களிலும் இப்பணிகள் செய்யத் திட்டமிட்டிருக்கிறோம்,” என்றார்.

change

ஒன்றுபட்டு சிந்தித்தால் இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் வெற்றியடைவோம் அதற்கான இலக்கை நோக்கியே உர்பசேர் செயல்பட்டு வருகிறது. சோர்ந்து போகாமல் தன்னார்வலர்களைக் கொண்டு தொடர்ந்து நாங்கள் ஏற்படுத்தி வந்த விழிப்புணர்வின் பலனாக குப்பையை பிரித்து போட வேண்டும் என்ற தெளிவு மக்கள் மனதில் முளைவிடத் தொடங்கி இருக்கிறது.

இதே போன்று பலர் தங்களின் சமையலறையில் இருந்து வீசப்படும் மக்கும் குப்பைகளை தாங்களே தோட்டத்தில் எருவாக பயன்படுத்திக் கொள்கின்றனர், மக்காத குப்பைகள் மட்டுமே எங்களிடம் சேர்க்கப்படுகிறது. இதுவும் ஒரு நல்ல தொடக்கமே. குப்பைகளை பிரித்து போடுவது முதல் நிலை என்றால் ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கு குப்பைகள் சேருவதை குறைப்பதும் நல்லதாகும். குப்பைகளை பிரிப்பதோடு அவற்றை எப்படி வீட்டிலேயே மறுசுழற்சி செய்யலாம் என்று நடைமுறையில் செயல்படுத்தும் பல முன்மாதிரிகள் சென்னையிலேயே இருக்கின்றனர். அவர்களைக் கொண்டும் மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றோம்.

குப்பைகளை அகற்றுதல் மற்றும் மேம்படுத்திக் கொள்ள வேண்டிய விஷயங்கள் என எதுவாக இருந்தாலும் பொதுமக்கள் மண்டல வாரியாக இருக்கும் மேற்பார்வையாளரிடமோ அல்லது சென்னை முழுமைக்குமோ செய்யலாம் போன்ற நல்ல விஷயங்களை 8925522069 என்ற எண்ணில் கருத்து தெரிவிக்கலாம்.

media

அது சம்பந்தப்பட்டவர்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டு அதற்கான தீர்வு எட்டப்பட்டிருக்கிறதா என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். குறைகள், நிறைகள், பாராட்டுகள், புகார்கள் என எதுவாக இருந்தாலும் ’சிட்டிசன்’ செயலி அல்லது எங்களின் சமூக ஊடக பக்கங்களில் மக்கள் கருத்து பதிவிடலாம்.

முந்தைய தலைமுறை போட்ட விதையின் பலனை இப்போது அனுபவிக்கும் நாம் எதிர்காலத் தலைமுறையினர் நல்ல காற்று மற்றும் நீரைப் பெறுவதற்கான விதையை இன்று விதைப்போம் குறுகிய காலத்தில் பலன் தராமல் நீண்ட கால சுற்றுச்சூழல் நன்மையை அது ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து நேர்மறையாக செயல்பட்டால் வீடு, தெரு, பகுதி என ஊரே சுத்தமாகிவிடும் என்கிறார் ஹரி பாலாஜி.