தொழில்முனைவோர் ஆரோக்கியமான பணி வாழ்க்கை சமனை பெற உதவும் வழிகள்...
தொழில் வாழ்க்கை மற்றும் தனி வாழ்க்கை இடையே சமன் காண்பது சவாலானது என்றாலும் மிகவும் முக்கியமானது. இந்த உத்திகள் உங்கள் நேரத்தை திறம்பட நிர்வகித்து, பணி வாழ்க்கை சமனை பெற உதவும்.
வெற்றிகரமான வர்த்தகத்தை நடத்த கடின உழைப்பும், உறுதியும் மட்டும் போதாது. அதற்கு சரியான நேர நிர்வாகமும், ஆரோக்கியமான பணி வாழ்க்கை சமனும் தேவை. தொழில்முனைவோர்கள் பல்வேறு பொறுப்புகளை கையாள வேண்டியிருப்பது, நேர நிர்வாகம் இல்லை எனில் திக்குமுக்காட செய்துவிடும்.
தங்கள் நேரத்தை திறம்பட நிர்வகித்து, ஆரோக்கியமான பணி வாழ்க்கை சமனை அடைய வெற்றிகரமான தொழில்முனைவோர்கள் பயன்படுத்தும் நன்கு நிருபிக்கப்பட்ட வழிகளை யுவர்ஸ்டோரி விவரிக்கிறது.
முன்னுரிமை அளித்தல் – இலக்கு வகுத்தல்
குறிப்பிட்ட, அளவிடக்கூடிய, அடையக்கூடிய, பொருத்தமான, நேரம் சார்ந்த (SMART) இலக்குகளை வகுத்துக்கொள்வது தொழில்முனைவோருக்கு முக்கியமானது. ஸ்மார்ட் இலக்குகள் தெளிவையும், கவனத்தையும் வழங்கி தொழில்முனைவோர் தங்கள் செயல்களை முன்னுரிமை அடிப்படையில் வகுத்துக்கொள்ள உதவுகின்றன. உதாரணமாக, விற்பனையை அதிகரிப்பது எனும் இலக்கை விட, இலக்கு சார்ந்த மார்க்கெட்டிங் மூலம் அடுத்த காலாண்டில் 10 சதவீதம் விற்பனையை உயர்த்துவது என்பது ஸ்மார்ட் இலக்காக அமையும்.
தொழில்முனைவோர் இலக்குகளை குறிப்பிட்ட நோக்கங்கள் கொண்டதாக பிரித்துக்கொண்டு ஸ்மார்ட் இலக்குகளை வகுத்துக்கொள்ளலாம். உதாரணமாக, புதிய பொருளை அறிமுகம் செய்வது இலக்கு என்றால், சந்தை ஆய்வு, முன்னோட்ட பொருள், மார்க்கெட்டிங் உத்தி என அதை பிரித்துக்கொள்ளலாம். ஒவ்வொரு நோக்கத்தையும், அளவிட முடியும் மற்றும் முன்னேற்றத்தை கண்காணிக்க முடியும்.
தொழில்முனைவோர் ஏபிசி முறை, பேரடோ கோட்பாடு (80/20 rule) போன்ற உத்திகளை முன்னிரிமைக்காக பயன்படுத்தலாம். ஏபிசி முறை செயல்களை, மிகவும் முக்கியமானது, மிதமான முக்கியம் மற்றும் குறைந்த முக்கியமான செயல்கள் என முன்னுரிமை அடிப்படையில் ஏ, பி, சி என பிரித்துக்கொள்ள வகை செய்கிறது. பேரடோ கோட்பாட்டின்படி, 20 சதவீத செயல்கள் 80 சதவீத பலன்களை அளிப்பதாக சொல்கிறது. இதற்கேற்ப தொழில்முனைவோர் முக்கியச் செயல்களுக்கு நேரம் ஒதுக்கலாம்.
பொறுப்புகளை ஒப்படைத்தல்
பொறுப்புகளை ஒப்படைப்பது தொழில்முனைவோர் தேர்ச்சி பெற வேண்டிய திறனாகும். தகுதிவாய்ந்த குழு அல்லது வல்லுனர்களிடம் பொறுப்புகளை ஒப்படைப்பதன் மூலம் தொழில்முனைவோர் அந்த நேரத்தில் முக்கிய செயல்களில் செலவிடலாம். மேலும், பொறுப்புகளை ஒப்படைப்பது, அவற்றை திறம்பட செய்து முடிப்பதோடு, மற்றவர்களின் திறன் மற்றும் நிபுணத்துவத்தை பயன்படுத்திக்கொள்ள உதவுகிறது.
பொறுப்புகளை அடையாளம் காணுதல்
எந்த செயல்களை திறம்பட மற்றவர்களிடம் ஒப்படைக்கலாம் என அடையாளம் காண வேண்டும். ஒரே மாதிரியான செயல்கள், நேரம் எடுக்கும் செயல்கள் அல்லது சிறப்புத் திறன் தேவைப்படும் செயல்களை உரியவர்களிடம் ஒப்படைக்கலாம். நிர்வாக செயல்கள், தரவுகள் பதிவு, சமூக ஊடக நிர்வாகம், வாடிக்கையாளர் சேவை போன்றவற்றை தொழில்முனைவோர் மற்றவர்களிடம் ஒப்படைக்கலாம்.
இந்த செயல்களை ஒப்படைப்பதன் மூலம், முடிவு எடுத்தல், வளர்ச்சி உத்தி, வர்த்தக வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்த முடியும்.
மெய்நிகர் உதவியாளர் சேவை
தொழுல்முனைவோர் மெய்நிகர் உதவியாளர்கள் (VAs) சேவையை பயன்படுத்தி நேரத்தை திறம்படக் கையாளலாம். நிர்வாகப் பணிகள், நாட்காட்டி செயல்பாடுகள், இ-மெயில் ஆகிய பணிகளை இவை மேற்கொள்ளும். மெய்நிகர் உதவியாளரை அமர்த்திக்கொள்வதன் மூலம் வழக்கமான பணிகளை ஒப்படைத்து முக்கியப் பணிகளில் கவனம் செலுத்தலாம். Upwork, Freelancer, Fiverr போன்ற இணையதளங்கள் திறன்வாய்ந்த மெய்நிக உதவியாளர்களை அளிக்கின்றன.
நேர நிர்வாக உத்திகள்
குறிப்பிட்ட செயல்களை வெவ்வேறு நேரத்தில் செய்து முடிக்க நேரம் ஒதுக்கும் உத்தி கைகொடுக்கிறது. குறிப்பிட்ட நேரத்தை, குறிப்பிட்ட பணிகளுக்காக ஒதுக்குவதன் மூலம் கவனச்சிதற்லை குறைக்கலாம்.
நேரம் ஒதுக்க கீழ்கண்ட உத்திகளை கையாளலாம்:
- முக்கியப் பணிகள், செயல்களை அடையாளம் கண்டு பட்டியலிடுதல்.
- உங்கள் அட்டவணையில் குறிப்பிட்ட பணிகளுக்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குவது.
- பணியின் தேவை, சிக்கலை பொருத்து ஒவ்வொன்றுக்கும் உரிய நேரம் ஒதுக்கவும்.
- ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வதை தவிர்த்து, குறிப்பிட்ட நேரத்தில் அதற்கான பணியை செய்வது.
போமோடோரோ உத்தி
போமோடோரோ உத்தி பிரான்சஸ்கோ சிரில்லோவால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த உத்தி குறிப்பிட்ட நேர இடைவெளியில், பணிகளை பிரித்துக்கொண்டு கவனம் செலுத்துவதாகும். பொதுவாக இது 25 நிமிடமாக அமைகிறது. போமோடோரோ என இது அழைக்கப்படுகிறது. இதன் பின் சிறிய இடைவெளி எடுத்துக்கொள்ளலாம்.
இதை தொழில்முனைவோர் பயன்படுத்துவதற்கான வழிகள்:
- கவனம் செலுத்த வேண்டிய பணியை தேர்வு செய்யவும்.
- 25 நிமிடம் ஒதுக்கி அந்த செயலில் மட்டும் கவனம் செலுத்தவும்.
- நேரம் முடிந்த பின், 5 நிமிடம் இடைவெளி எடுத்துக்கொள்ளவும். நான்கு முறை இவ்வாறு செய்த பிறகு 30 நிமிடம் வரை ஓய்வு எடுத்துக்கொள்ளவும். இதை தொடர்ச்சியாக செய்யவும்.
- இந்த உத்தி, கவனத்தை குவித்து, அயர்ச்சியை தவிர்க்கவும், செயல்களை குறுகிய நேரத்தில் முடிக்கவும் உதவுகிறது.
கவனச்சிதறல் தவிர்ப்பு
செயல்களைத் தள்ளிப்போடுவது பல காரணங்களினால் உண்டாகலாம். தோல்வி அச்சம், தெளிவின்மை, முழுமை உணர்வு, திக்குமுக்காடுவது உள்ளிட்டவை காரணங்களாகலாம். தொழில்முனைவோர் இதற்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றை திறம்பட எதிர்கொள்ள வேண்டும்.
தள்ளிப்போடுவதை தவிர்க்கும் உத்திகள்:
- செயல்களை, அவற்றின் சுமை குறைக்கும் வகையில் எளிதான சிறு பகுதிகளாக பிரித்துக்கொள்ளவும்.
- கெடு வகுத்து பின்பற்றவும் – கெடு வகுத்துக்கொள்வது செயலை முடிக்க வேண்டிய அவசரத்தை உண்டாக்குகிறது. ஒவ்வொரு செயலுக்கும் குறிப்பிட்ட கெடுவை நிர்ணயிப்பது தீவிர செயல்பாட்டிற்கு உதவி, தள்ளிப்போடுவதை குறைக்க உதவும்.
- நல்ல பணி சூழலை உருவாக்குவது- சுத்தமான, நன்கு அமைந்திருக்கும் பணிச்சூழல் கவனச்சிதற்லை குறைத்து கவனத்தை அதிகரிக்கும். சமூக ஊடக அறிவிக்கைகள் அல்லது பொருத்தமில்லாத இணையதளங்களை தவிர்க்கவும்.
- உற்பத்தி திறன் செயலிகள்- நேரத்தை திறம்பட நிர்வகிக்க உற்பத்தி செயலிகள் உதவும். Todoist ,Trello போன்ற டூடு இணையதளங்கள் மற்றும் Freedom, RescueTime போன்ற இணையதள தடுப்பு சேவைகள் தொழில்முனைவோர் பணிகளில் கவனம் செலுத்த உதவும்.
- இரண்டு நிமிட விதி – ஒரு செயலை செய்ய இரண்டு நிமிடத்திற்கும் குறைவாக ஆகும் என்றால் அதை உடனடியாக முடிக்கவும். இந்த எளிய விதி, சின்ன செயல்கள் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்துவதை தவிர்க்க உதவும்.
தகவல் தொடர்பு, கூட்டு முயற்சி
செயல்திறன் வாய்ந்த குழு செயல்பாடு மற்றும் கூட்டு முயற்சிக்கு தகவல் தொடர்பு முக்கியம். வெற்றிகரமான தொழில்முனைவோர், தகவல்தொடர்பு பிழை, தாமதம், முயற்சி வீணாவதை தவிர்க்க சீரான தகவல் தொடர்பு முக்கியத்துவத்தை அறிந்துள்ளனர். தெளிவான தகவல் தொடர்பு கூட்டுமுயற்சியை உருவாக்கி, அனைவரையும் ஒரே பக்கத்தில் கொண்டு வந்து, செயல்திறனை அதிகரிக்கிறது.
தொழில்முனைவோர் இதற்காக மென்பொருள்கள் மற்றும் சாதனங்களை பயன்படுத்தலாம். இவை வருமாறு:
- திட்ட நிர்வாக சேவைகள் - Asana, Trello, Basecamp. இவை, பொறுப்புகளை ஒப்படைப்பது, முன்னேற்ற கண்காணிப்பு, சீரான கூட்டுமுறைச்சிக்கு உதவுகின்றன.
- மெசேஜிங் சேவைகள் - ஸ்லேக், மைக்ரோசாப்ட் டீம்ஸ் மற்றும் கூகுள் வொர்க்ஸ்பேஸ் போன்ற சேவைகள் உடனடி தகவல்தொடர்பு, தகவல் பகிர்வுக்கு உதவி, நிகழ்நேர ஒத்துழைப்பிற்கு வழி செய்கின்றன.
- செக்கின்கள் – குழு கூட்டங்கள் அல்லது செக்கிங்களை அடிக்கடி ஏற்பாடு செய்வதன் மூலம், தொழில்முனைவோர், திட்டத்தின் முன்னேற்றத்தை அறிந்து, வெளிப்படையாக தகவல் தொடர்பை ஊக்குவிக்கலாம்.
ஆரோக்கியமான பணி வாழ்க்கை சமன்
வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இடையே தெளிவான எல்லை அமைத்துக்கொள்வது ஆரோக்கியமான பணி வாழ்க்கை சமனுக்கு மிகவும் முக்கியம். தொழில்முனைவோர் தெளிவான பணி நேரத்தை வரையறுத்து வாடிக்கையாளர்கள், குழு உறுப்பினர்கள், குடும்பத்தினர், உறவினர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இது பணி அட்டவணையை உருவாக்கி, தனிப்பட்ட நேரத்தை ஒதுக்கி கொள்ள உதவும்.
பணி நாளின் போது அடிக்கடி இடைவேளை எடுத்துக்கொள்வது உற்பத்தித் திறனை அதிகரித்து, களைப்பை தவிர்க்கும். தொழில்முனைவோர் தங்கள் மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும் செயலில் ஈடுபடுவதற்கான குறுகிய இடைவேளைகளுக்குத் திட்டமிட வேண்டும்.
மேலும், பணி நேரத்திற்கு வெளியே பொழுதுபோக்கிற்கான நேரம் ஒதுக்குவது ஆரோக்கியமான பணி வாழ்க்கை சமனை உண்டாக்கும். தொழில்முனைவோர் பொதுவாக சுய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதில்லை. எனினும், களைப்பை போக்கி சிறப்பாக செயல்பட இது மிகவும் அவசியம்.
உடற்பயிற்சி செய்வது, ஊட்டச்சத்து மிக்க உணவு உட்கொள்வது, நல்ல தூக்கம், தியானம் அல்லது யோகா போன்ற பழக்கம் ஒட்டுமொத்த உடல்நலனுக்கு உதவும். தொழில்முனவோர் தனிப்பட்ட நலனுக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
இந்த உத்திகளை தங்கள் தினசரி அட்டவணையில் கடைப்பிடிப்பதன் மூலம் தொழில்முனைவோர் ஆரோக்கியமான பணி வாழ்க்கை சமனை பெற்று, மன அழுத்ததத்தை குறைத்து, தொழில் வாழ்க்கை மற்றும் தனி வாழ்க்கையில் மேம்பட்ட நிறைவை பெறலாம்.
ஆங்கிலத்தில்: குரு சக்தி | தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan