வங்கிகள் தனியார்மயமாக்கல்: ‘ரிசர்வ் வங்கியுடன் இணைந்து பணியாற்ற உள்ளோம்’ – நிர்மலா சீதாராமன்!
மத்திய பட்ஜெட்டில் முதலீட்டு திட்டத்தின் ஒருபகுதியாக இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இந்த நடவடிக்கையை வங்கித் தொழிற்சங்கங்கள் எதிர்த்தன.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வங்கி தனியார்மயமாக்கல் திட்டத்தை நிறைவேற்ற அரசாங்கம் ரிசர்வ் வங்கியுடன் இணைந்து செயல்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். வங்கிகளில் அரசாங்கத்தின் பங்குகளை வைத்திருக்க, முதலீட்டு நிறுவனத்தை உருவாக்கும் எந்த ஒரு திட்டமும் அரசிடம் இல்லை என்றும் அவர் கூறினார்.
மத்திய பட்ஜெட்டில் முதலீட்டு திட்டத்தின் ஒருபகுதியாக இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இந்த நடவடிக்கையை வங்கித் தொழிற்சங்கங்கள் எதிர்த்தன.
இது தொடர்பாக பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,
“இது குறித்த விவரங்கள் தயாரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. வங்கிகள் தனியார்மயமாக்கும் விவகாரத்தில் நாங்கள் ரிசர்வ் வங்கியுடன் இணைந்து செயல்படுகிறோம்,” என்றார்.
தொடர்ந்து வங்கிகள் ஒப்படைக்கப்படும் தனியார் நிறுவனம் குறித்து கேட்ட கேள்விக்கு எந்த குறிப்பிட்ட விவரங்களுக்கும் கருத்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.
”எல்லாம் முடிந்தபிறகு அரசு அறிவிக்கும் போது உங்களுக்கு தெரியப்படுத்துவோம்,” என்றார்.
மோசமான வங்கியில், தேசிய சொத்து புனரமைப்பு நிறுவனத்திற்கு (National Asset Reconstruction Company) (ARC), அரசாங்கம் சில உத்தரவாதங்களை வழங்க வேண்டியிருக்கும்.
வங்கிகளின் செயல்படாத சொத்துக்கள் கடந்த காலங்களில் நடந்த தவறான நிர்வாகத்தின் மரபு காரணமாக தேசிய சொத்து புனரமைப்பு நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்று சீதாராமன் குற்றம் சாட்டினார்.
வங்கி முதலீட்டு நிறுவனம் (Bank Investment Company (BIC)) குறித்து பேசியவர்,
“அத்தகைய முன்மொழிவு எதுவும் இல்லை. அத்தகைய விவாதம் எதுவும் இல்லை. இது போன்ற தகவல்கள் எங்கிருந்து வருகிறது என்று எனக்குத் தெரியவில்லை. குறைந்தபட்சம் அந்தத் திட்டம் குறித்து பேசப்படக்கூட இல்லை," என்று அவர் கூறினார்.
வங்கிகளின் தொழில்மயமாக்கல் தேவையானதுதான் என்றும், அதையே உறுதிப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார்.
”கொரோனா தொற்று காலத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து வங்கிகள் படிப்படியாக மீண்டு வருகின்றன. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட விவசாய உள்கட்டமைப்பு செஸிலிருந்து ரூ.30,000 கோடி வரை மத்திய அரசுக்கு வரி வருவாய் கிடைக்கும்,” என்றவரிடம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பணவீக்கம் குறித்து கேள்விக்கு,
“மத்திய அரசு கலால் வரியை குறைத்தால் மாநிலங்கள் தங்கள் வரிகளை உயர்த்தி, அதே விலையில் தான் விற்பனை செய்யும்,” இவ்வாறு அவர் கூறினார்.