உருவகேலி, மன அழுத்தம்; பளு தூக்கும் வீராங்கனை ஆகி ஃபிட்னெஸ் நிறுவனம் தொடங்கிய தீக்‌ஷா!

By YS TEAM TAMIL|2nd Sep 2020
திக்‌ஷா சப்ரா சந்தித்த போராட்டங்கள் அவரை ஃபிட்னெஸ் ஆலோசகராகவும் விளையாட்டு வீர்ர்களுக்கான சான்றிதழ் பெற்ற ஊட்டச்சத்து ஆலோசகராகவும் வெல்னெஸ் பயிற்சியாளராகவும் உருவெடுக்க உதவியுள்ளது.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

தீக்‌ஷா சப்ராவிற்கு 28 வயதிருக்கையில் மன அழுத்தம், ஹார்மோன் பிரச்சனை, உடல் எடை அதிகரிப்பு போன்றவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டார். அவர் தனது வாழ்க்கையில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட காலகட்டமாக இதை நினைவுகூறுகிறார்.

“ஒரு அம்மாவாகவோ, மனைவியாகவோ என்னுடைய கடமையை செய்வதில் ஆர்வமின்றி இருந்தேன். அனைத்திற்கும் மேலாக என் வாழ்க்கைக்கான அர்த்தத்தை உணரமுடியாமல் இலக்கின்றியே காணப்பட்டேன்,” என்று ஹெர்ஸ்டோரி-இடம் தெரிவித்தார் தீக்‌ஷா.

தீக்‌ஷாவிற்கு இராணுவ அதிகாரியுடன் திருமணம் நடந்த பிறகு கார்ப்பரேட் பணி வாழ்க்கையைத் தொடர இயலாமல் போனது. 2015ம் ஆண்டு தனது மகனைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பில் முழுநேரமும் செலவிட்டார். அவருக்கு மன அழுத்தம் மட்டுமின்றி பிசிஓடி பிரச்சனையும் இருந்தது.


2013-ம் ஆண்டு ஹைபோதைராடிசம் இருப்பது கண்டறியப்பட்டது. இதுபோன்ற பல்வேறு குறைபாடுகள் காரணமாக அவரது உடல் எடை 100 கிலோவிற்கும் அதிகமானது. உடல் உழைப்பு அதிகம் இல்லாத வாழ்க்கை முறையும் இதற்குக் காரணம் என்கிறார்.

2

உருவகேலி

உடல் பருமன் குறித்து பல சந்தர்ப்பங்களில் உருவகேலி செய்யப்பட்டதை தீக்‌ஷா நினைவுகூர்ந்தார். ராணுவ அதிகாரிகள் வட்டத்தில் அவர்கள் மட்டுமின்றி அவர்களது துணையும் கட்டுக்கோப்புடன் இருக்கவேண்டியது அவசியமாகக் கருதப்படும்.

சமூக நிகழ்வுகளில் கலந்துகொண்டபோது ஃபிட்டாக இருப்பவர்களுடன் ஒப்பிட்டுக் கேலி செய்யப்பட்ட சம்பவங்களை விவரித்தார்.


இவரைப் பார்த்து கர்ப்பமாக இருப்பதாக எண்ணியவர்களும் உண்டு. இதுபோன்ற தொடர் உருவகேலி காரணமாக பள்ளி முன்னாள் மாணவர்கள் மீண்டும் ஒன்று கூடும் நிகழ்வு, குடும்பத்தினர்கள் ஒன்று கூடுதல் போன்ற மக்கள் சேரும் இடங்களுக்கு செல்வது கடினமாக இருந்துள்ளது. ஒரு கட்டத்தில் தன்னம்பிக்கை இழந்து தன்னையே வெறுக்கத் தொடங்கினார்.


எனினும் அவர் தனது வாழ்க்கை முறையை சுறுசுறுப்பாக மாற்றிக்கொள்ள உருவகேலியோ அருவருக்கத்தக்க பேச்சுக்களோ காரணமாக இருக்கவில்லை. பிசிஓடி இருப்பது கண்டறியப்பதே திருப்புமுனையாக அமைந்தது. பிசிஓடி என்பது ஹார்மோன் கோளாறு. இதனால் சினைப்பைகள் பெரிதாகி நீர்க்கட்டிகள், மலட்டுத்தன்மை, நீரிழிவு, இதய நோய் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும்.

ஆரோக்கியத்தில் கவனம்

வாழ்கை முறை மட்டுமின்றி மோசமான உணவுப் பழக்கம், உடலுழைப்பு இல்லாமை, அதிக மன அழுத்தம், பரம்பரை போன்ற பல காரணிகள் தனது பிரச்சனைகளுக்கு காரணம் என்பதை தீக்‌ஷா உணர்ந்தார். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தத் தீர்மானித்த தீக்‌ஷா தனது உணவுப் பழக்கத்தை மாற்றத் தொடங்கினார்.


உடல் பருமன் காரணமாக உடற்பயிற்சி செய்வது கடினமாக இருந்தது. இருப்பினும் சிறு உடற்பயிற்சிகளை செய்யத் தொடங்கினார். நடைபயிற்சி செய்தார். ஜங்க் உணவுகளை தவிர்த்தார். எனினும் முறையான உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து குறித்து அவர் அறிந்திருக்கவில்லை. பட்டினி கிடந்தார். கார்டியோ உடற்பயிற்சிகளும் செய்தார்.


2016ம் ஆண்டு இந்த முயற்சிகளை மேற்கொண்டார். விரைவில் 18 கிலோ வரை உடல் எடையைக் குறைத்தார். இருப்பினும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உடல் சோர்வு, முடி கொட்டுதல், தூக்கமின்மை, வலுவின்மை போன்ற மற்ற பிரச்சனைகள் ஏற்பட்டது. அப்போதுதான் சரியான முறையில் உடல் எடையைக் குறைப்பது பற்றியும் ஊட்டச்சத்து மற்றும் உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்தும் படிக்கத் தொடங்கினார். இதுவே பளு தூக்கும் முயற்சிக்கான ஆரம்பப் புள்ளியாக அமைந்தது.

“பளு தூக்குதல் சுவாரஸ்யமாக இருந்தது. நான் படித்த நாட்களில் விளையாட்டு மற்றும் நடனத்தில் கலந்துகொள்வேன். சுறுசுறுப்பாகவே இருந்தேன். ஒல்லியான உடலமைப்புடன் இருக்கவேண்டும் என்று எண்ணியதில்லை. ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருக்கவே விரும்பினேன். என்னுடைய இலக்கை எட்ட பளு தூக்கும் பயிற்சி சரியான வழியாக இருந்தது. அப்போதுதான் பளு தூக்கும் முயற்சியைத் தொடங்கினேன். அதில் ஆர்வம் அதிகரித்தது,” என்றார் தீக்‌ஷா.

தினசரி ஜிம்மில் கடினமாக உழைத்தார். அதன் பலனாக அவரது உடலில் மாற்றம் தென்பட்டது. அதைக் காட்டிலும் அவரது மன நலன் மேம்பட்டது. சுறுசுறுப்பான வாழ்க்கை முறையின் நன்மைகளை உணரத் தொடங்கினார்.

“வலுவூட்டுவதற்கான பயிற்சிகள் மன அழுத்தத்தைப் போக்கவும் நம்பிக்கையளிக்கவும் உதவியது. சமூகத்துடன் ஒருங்கிணைய நான் அச்சப்படவில்லை. மாறாக என்னுடைய கடின உழைப்பைப் பலர் பாராட்டினார்கள். இது மேலும் நம்பிக்கையளிதது,” என்றார் தீக்‌ஷா.

அவர் முழு ஆரோக்கியத்தைப் பெற ஓராண்டு வரை ஆனது. அதன் பின்னரே வாழ்க்கைமுறை சார்ந்த பிரச்சனைகளுக்காக மருந்து எடுத்துக்கொள்வதை நிறுத்திக்கொண்டார்.

தொழில்முனைவு முயற்சி

சுய முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியை நோக்கிய அவரது பயணம் கடினமானதாக இருந்தது என்கிறார் தீக்‌ஷா. இவர் சந்தித்த போராட்டங்கள் இவரை ஃபிட்னெஸ் ஆலோசகராகவும் விளையாட்டு வீர்ர்களுக்கான சான்றிதழ் பெற்ற ஊட்டச்சத்து ஆலோசகராகவும் வெல்னெஸ் பயிற்சியாளராகவும் உருவெடுக்க உதவியுள்ளது.


இரண்டாண்டுகள் பளு தூக்கும் வீராங்கனையாக இருந்த பிறகு ‘தீக்‌ஷா சப்ரா ஃபிட்னெஸ் கன்சல்டேஷன்ஸ்’ (Diksha Chhabra Fitness Consultations) தொடங்கினார். மற்றவர்கள் முறையான ஊட்டச்சத்துடன் ஃபிட்டாக இருக்க உதவவேண்டும் என்பதே இந்த முயற்சியைத் தொடங்கியதன் நோக்கம்.

“உடல் பருமனாலும் மன அழுத்தத்தால் என்னைப் போன்று யாரும் கஷ்டப்படக்கூடாது என்று நினைத்தேன். இந்தப் பயணத்தைத் தொடங்கும்போது ஆரம்பத்தில் எவ்வளவு கடினமாக இருக்கும் என்பதையும் சரியான வழிகாட்டலும் ஆதரவும் கிடைத்தால் எவ்வளவு எளிதான பயணமாக அமையும் என்பதையும் நான் அறிவேன்,” என்றார் தீக்‌ஷா.

தீக்‌ஷா தனது வளர்ச்சி குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொண்டார். இன்ஸ்டாகிராமில் இவரை 124 ஆயிரம் பேர் பின் தொடர்கின்றனர். இதேபோன்ற பிரச்சனைகளை சந்தித்தவர்களுடன் அறிமுகமானார். அவர்களிடையே நேர்மறையான மாற்றத்தைக் கொண்டு சேர்க்க விரும்பினார். இதற்காக தனது ஃபிட்னெஸ் ஆலோசனை மையத்தைத் திறந்தார். தொடங்குவதற்கு முன்பு ஊட்டச்சத்து மற்றும் தனிப்பட்ட பயிற்சிக்கான சான்றிதழ் பெற்றார்.


நான்கு பேர்களுக்கு பயிற்சியளிக்கத் தொடங்கினார். மூன்றாண்டுகளுக்குள் உலகம் முழுவதும் உள்ள 600-க்கும் மேற்பட்ட தனிநபர்களுக்கு பயிற்சியளித்துள்ளார். இவரது நிறுவனம் அன்றாட வாழ்க்கையில் எளிதாகப் பின்பற்றக்கூடிய செயல்கள் மூலம் தனிநபருக்கு ஏற்ப பயிற்சியளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


சுயநிதியில் இயங்கும் இவரது ஸ்டார்ட் அப் மூன்று திட்டங்களை வழங்குகிறது. முதல் திட்டம் மூன்று மாதங்களுக்கானது. உடல் எடை குறைக்க விரும்புவோர்களோ அல்லது தசை வளர்ச்சி பெற விரும்புபவர்களோ #LETSLIFTWITHDIKSHA என்கிற திட்டத்தில் சேரலாம். குழந்தை பிறந்து நான்கு மாதங்களுக்குப் பிறகு உடல் எடை குறைக்கவும் உடல் வலிமையை திரும்பப் பெறவும் விரும்புவோர்களுக்கு #FITTERME என்கிற திட்டம் உதவும். தொடக்க நிலையில் ஃபிட்னெஸ் பயிற்சி எடுக்க விரும்புபவர்களுக்காக மூன்று வார அறிமுகப் பயிற்சிக்கு #TRANSFORMATION21 என்கிற திட்டம் உள்ளது.

1

கற்பிதங்கள் தகர்க்கப்பட்டன

தீக்‌ஷா சமூகம் மற்றும் உடல் சார்ந்த தடைகளை மட்டும் தகர்க்கவில்லை. மக்களிடையே நிலவும் தவறான கற்பிதங்களையும் அனுமானங்களையும் தகர்த்தெறிந்துள்ளார்.


பளு தூக்குதல் ஆண்களுக்கான களமாகவே கருதப்பட்டது. இவர் பளு தூக்க ஆரம்பித்த சமயத்தில் பளு தூக்கும் பெண்கள் ஆண்களைப் போன்று தோற்றமளிப்பார்கள் என்று மக்கள் நினைத்திருந்தனர். இவர் ஒல்லியாக காட்சியளிக்காமல் வலுவாக இருப்பதால் பெண்ணின் உருவமைப்பு இல்லை என்றும் இவரைப் பார்ப்பவர்கள் அடிக்கடி சொல்வதுண்டு.

“இந்த கண்ணோட்டம் மாறியுள்ளது என்று நினைக்கிறேன். பல பெண்கள் ஆண்களைப் போன்றே இந்த உடற்பயிற்சிகளை முயற்சிப்பதால் இனி இதுபோன்ற கற்பிதங்கள் இருக்காது என்று நம்புகிறேன்,” என்றார் தீக்‌ஷா.

2017-ம் ஆண்டு அதிக தகவலோ முன்னேற்பாடோ ஏதுமின்றி Mrs India Earth அழகுப் போட்டியில் தீக்‌ஷா பங்கேற்றார். தேசிய அளவிலான போட்டியில் 45 இறுதிப் போட்டியாளர்களுடன் போட்டியிட்டு இரண்டாவது ரன்னர்-அப் ஆக தேர்வானார். ஃபிட்னெஸ் பிரிவில் வெற்றி பெற்றார்.


பெண்களுக்கு பளு தூக்குதல் புதிது. அழகுப் போட்டியில் வெற்றி பெற்றவர் ஜிம்மில் அதிக பளு தூக்குவதைப் பார்ப்பது அரிது. தீக்‌ஷா உடல்நலக் குறைபாடுகளுடன் இதேபோன்ற சவால்களை சந்தித்து சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்கு மாற விரும்புவோர்களுக்கும் பளு தூக்க விரும்புவோர்களுக்கும் ஆலோசனை வழங்கும் விதமாக,

“உங்களது கணவருக்காகவோ ஆண் நண்பருக்காகவோ உடற்பயிற்சி செய்யாதீர்கள். திருமணம் ஆகவேண்டும் என்பதற்காகவோ குடும்பத்தில் நடக்கவிருக்கும் விழாவிற்காகவோ செய்யாதீர்கள். உங்களுக்காகவும் உங்கள் உடல் நலனுக்காகவும் செய்யுங்கள்,” என்றார்.

ஆங்கில கட்டுரையாளர்: நிரந்தி கௌதமன் | தமிழில்: ஸ்ரீவித்யா

Get access to select LIVE keynotes and exhibits at TechSparks 2020. In the 11th edition of TechSparks, we bring you best from the startup world to help you scale & succeed. Join now! #TechSparksFromHome

Latest

Updates from around the world