'பிரியாணி, சமோசா, குலாப் ஜாமுன்' - 2021ல் இந்தியர்கள் மில்லியன் கணக்கில் ஆர்டர் செய்தது இதுதான்!
2021ம் ஆண்டில் ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை இந்தியர்கள் ஒரு நிமிடத்திற்கு 115 பிரியாணி அல்லது ஒவ்வொரு நொடிக்கும் இரண்டு பிரியாணிகள் வீதம் ஸ்விக்கி-யில் ஆர்டர் செய்து, சாப்பிட்டு என்ஜாய் செய்துள்ளனர்.
2021ம் ஆண்டில் ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை இந்தியர்கள் ஒரு நிமிடத்திற்கு 115 பிரியாணி அல்லது ஒவ்வொரு நொடிக்கும் இரண்டு பிரியாணிகள் வீதம் ஸ்விக்கி-யில் ஆர்டர் செய்து, சாப்பிட்டு என்ஜாய் செய்துள்ளனர்.
2021ம் ஆண்டின் இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டோம். சோசியல் மீடியாக்களின் ட்ரெண்டிங் வீடியோ, புகைப்படங்கள் என்று 2021ம் ஆண்டில் மனதுக்கு நெருக்கமாக இருந்த விஷயங்கள் பலவற்றின் பட்டியல் வெளியாகி வருகிறது. கொரோனா லாக்டவுனின் போது வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத மக்கள் விருப்பப்பட்ட உணவு மற்றும் மளிகை, காய்கறி போன்றவற்றை பெற ஆன்லைன் ஆப்கள் பெரும்பங்காற்றின.
அதிலும் உணவு டெலிவரி ஆப்களின் செயல்பாடு வேற லெவலுக்கு இருந்தது. வீட்டில் முடங்கி உப்புமா, சப்பாத்தி சாப்பிட்டு நொந்துபோன உணவுப் பிரியர்கள் பலருக்கும் ஆன்லைன் மூலம் ஆசைப்பட்ட ஓட்டல்களில் பார்சல் உணவு வாங்கிச் சாப்பிட லாக்டவுன் தளர்வுகளின் போது அனுமதி கிடைத்தது. அப்படி மக்கள் வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக இருந்து கொண்டு பலவித உணவுகளையும் சுவை பார்க்க உதவியதில் ஸ்விக்கி நிறுவனத்தின் டெலிவரி சேவை முக்கியமானது.
ஸ்விக்கி நிறுவனம் தனது 6வது ஆண்டிற்கான புள்ளி விபர அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் 2021ம் ஆண்டில் இந்தியர்கள் பிரியாணி, சமோசா, குலோப்ஜாமூன் ஆகிய உணவுகளை மில்லியன் கணக்கில் ஆர்டர் செய்துள்ளது தெரியவந்துள்ளது.
2021ம் ஆண்டிற்கான சிறந்த உணவு ஆர்டர்கள்:
டாப்பில் ‘சமோசா’; மவுசை இழந்த ‘பாவ் பாஜி’
ஸ்விக்கி வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் சுமார் 5 மில்லியன் ஆர்டர்களை பெற்ற சமோசா தான் இந்தியர்களால் அதிகம் சாப்பிடப்பட்ட நொறுக்குத்தீனியாக உள்ளது. இன்றைய சுட்டி, குட்டீஸ் கூட விரும்பிச் சாப்பிடும் சிக்கன் விங்ஸை விட சமோசா 6 மடங்கு அதிகமாக ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.
கடந்த முறை 2.1 மில்லியன் ஆர்டர்களுடன் இந்தியர்களின் விருப்பமான ஸ்நாக்ஸ் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த பாவ் பாஜி, ஆர்டர் வரலாற்றிலேயே மிகப்பெரிய திருப்புமுனையை அடைந்துள்ளது.
ஆம், பெரும்பாலான இந்தியர்களின் இதயம் நிறைந்த பாவ் பாஜிக்கான இடத்தை சீஸ் கார்லிக் பிரட், பாப் கார்ன், பிரெஞ்சு ப்ரைஸ் போன்ற மேற்கத்திய நொறுக்குத்தீனிகள் பிடித்துள்ளன. இதற்குக் காரணம் இரவு 10 மணிக்கு மேல் ஆந்தை போல் விழித்துக்கொண்டு எதையாவது கொறித்துக்கொண்டே கணினியில் வெப்சீரிஸ் பார்க்கும் இளைய தலைமுறையினர் அவற்றை அதிக அளவில் ஆர்டர் செய்வது தான், பாவ் பாஜியின் சரிவிற்கு காரணமாக அமைந்துள்ளது.
2021ம் ஆண்டிற்கான தலை சிறந்த உணவுகள்:
6 வருடமாக அசைக்க முடியாத இடத்தில் ‘பிரியாணி’
கடந்த 6 ஆண்டுகளாகவே இந்தியர்கள் அதிகம் விரும்பும் மற்றும் ஆர்டர் செய்த உணவு பட்டியல்களை வெளியிட்டு வரும் ஸ்விக்கி நிறுவனமே இந்தியர்களிடையே பிரியாணிக்கு இருக்கும் மவுசை பார்த்து ஆச்சர்யமடைந்துள்ளது.
6 ஆண்டுகளாக தலைச் சிறந்த உணவுகள் பட்டியலில் தொடர்ந்து பிரியாணி முதலிடம் பிடித்து வருவதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவிக்கிறது.
2020ம் ஆண்டில், ஒரு நிமிடத்திற்கு 90 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டன, ஆனால் அதுவே 2021ம் ஆண்டில், நிமிடத்திற்கு 115 பிரியாணிகள் அல்லது வினாடிக்கு 2 (1.91) பிரியாணிகள் என்ற எண்ணிக்கையில் உயர்ந்துள்ளது.
குறிப்பாக இந்தியர்களின் இதய ராணியாக ’சிக்கன் பிரியாணி’ தனி இடம் பிடித்துள்ளது. சைவப் பிரியாணிக்களை விட சிக்கன் பிரியாணி 4.3 மடங்கு அளவிற்கு ஸ்விக்கி ஆப் மூலம் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.
4.5 லட்சத்திற்கும் அதிகமான ஸ்விக்கியின் முதல் வாடிக்கையாளர்கள் தங்களது முதல் உணவாக சிக்கன் பிரியாணியை ஆர்டர் செய்துள்ளனர்.
சென்னை, கொல்கத்தா, லக்னோ, ஐதராபாத்தில் சிக்கன் பிரியாணி முதலிடம் பிடித்திருந்தாலும், மும்பை அதை விட இருமடங்கு அதிகமாக தால் கிச்சிடிகளை ஆர்டர் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இனிப்பின் ராணியாக மாறிய குலாப் ஜாமூன்:
ஸ்விக்கியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட இனிப்பு வகைகளில் குலாப் ஜாமூன் 2.1 மில்லியன் ஆர்டர்களுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து ரசமலாய் 1.27 மில்லியன் ஆர்டர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
நகரவாசிகள் விரும்பிச் சாப்பிட்டது என்ன?
ஸ்விக்கி தனது புள்ளி விவர அறிக்கையில், சென்னை, ஐதராபாத், பெங்களூரு என ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பிரபல நகரங்களில் எந்த உணவை மக்கள் அதிகம் ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர் என்பதையும் பட்டியலிட்டுள்ளது.
பெங்களூரு:
- மசாலா தோசை
- சிக்கன் பிரியாணி
- பன்னீர் பட்டர் மசாலா
- நெய் சாதம்
- கோபி மஞ்சூரியன்
டெல்லி:
- தால் மக்கானீ
- வெஜ் பீட்சா மெக் பப்
- வெஜ் பர்கர்
- மசாலா தோசை
மும்பை:
- தால் கிச்சடி
- சிக்கன் ப்ரைடு ரைஸ்
- பாவ் பாஜி
- மசாலா தோசை
- கிரில் கார்லிக் பிரட் ஸ்டிக்
சென்னை:
- சிக்கன் பிரியாணி
- சிக்கன் ப்ரைடு ரைஸ்
- மட்டன் பிரியாணி
- பன்னீர் பட்டர் மசாலா
- நெய் பொங்கல்
ஐதராபாத்:
- சிக்கன் பிரியாணி
- சிக்கன் 65
- பன்னீர் பட்டர் மசாலா
- மசாலா தோசை
- இட்லி
ஆரோக்கியத்தின் மீது திரும்பிய அக்கறை:
இந்தியர்கள் என்ன தான் காரசாரமான பிரியாணிக்களையும், மொறு, மொறு சமோசக்களையும் வெளுத்துக்காட்டினாலும், ஆரோக்கியத்தின் மீதும் தனி கவனம் செலுத்தியுள்ளதை ஸ்விக்கியின் புள்ளிவிவரங்கள் கூறுகிறது.
2021ம் ஆண்டைப் பொறுத்தவரை ஸ்விக்கி ஹெல்த் ஹப் (Swiggy HealthHub) மூலமாக ஆரோக்கியமான உணவுகளை தேடுவதும், அதனை ஆர்டர் செய்வதும் 200 சதவீதம் அதிகரித்துள்ளது. ஹைதராபாத் மற்றும் மும்பைக்கு அடுத்தபடியாக பெங்களூரு உடல் நலனில் அக்கறைக் கொண்ட நகரமாக உருவெடுத்துள்ளது. இதன் காரணமாக கீட்டோ ஆர்டர்கள் 23 சதவீதமும், சைவ மற்றும் வேகன் உணவுகள் 83 சதவீதமும் உயர்ந்துள்ளது.