ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சர் குறிப்பிடும் 'அம்ரித் கால்’ என்றால் என்ன?
நாட்டின் வளர்ச்சிக்கு இலக்காக வைக்கப்பட்டுள்ள அமிர்த காலம் என்றால் என்ன? அந்த வார்த்தை எதைக் குறிக்கிறது?
2023 பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் தொடங்கி, பொது பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் வரை தங்களது உரையில் மேற்கோள் காட்டியது ‘Amrit kaal' 'அமிர்த காலம்' என்ற ஒன்று.
அதைத்தொடர்ந்து பலரும் ‘அம்ரித் கால்’ என்றால் என்ன? அது ஏன் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது என இணையத்திலும், சமூக ஊடகங்களிலும் சந்தேகமாக கேட்கப்பட்டு வருகிறது, அதனால் அதைப்பற்றி விரிவாகப் பார்ப்போம்.
Amrit Kaal என்றால் என்ன?
2023-24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டம் குடியரசுத் தலைவர் உரையுடன் ஜனவரி 31ம் தேதி தொடங்கி இருக்கிறது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிப்ரவரி 1ம் தேதி பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என இருவருமே தங்களின் உரை முழுவதிலும் அமிர்த காலம் என்பதை மேற்கோள் காட்டிக் கொண்டே வந்தனர்.
நிதியமைச்சர் நிர்மலா இந்த பட்ஜெட் ‘அமிர்த் கால’த்தின் முதல் பட்ஜெட் என்று அவர் குறிப்பிட்டார். தொடக்கத்தில் மட்டுமல்ல பட்ஜெட்டில் எதிர்காலத்தை வளமாக்க இளைஞர்கள், பெண்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்த வளர்ச்சியையும், அதற்கான திட்டங்களை பட்டியலிடும் போதும் அவர் இந்த வார்த்தையை சுட்டிக்காட்டினார்.
‘அமிர்த காலம்’ வார்த்தையை முதலில் பயன்படுத்தியவர் யார்?
‘அம்ரித் கால்’ என்கிற வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்தியவர் பிரதமர் நரேந்திர மோடி. 75வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது நாட்டு மக்கள் மத்தியில் பேசிய அவர், “Amril Kaal” என்ற வார்த்தையை முதலில் குறிப்பிட்டார்.
அடுத்த 25 ஆண்டுகளில் அதாவது, 2047ம் ஆண்டில் இந்தியா அடைய வேண்டிய இலக்கின் வளர்ச்சிக்காலத்தையே அவர் ’அமிர்த காலம்’ என்று சுட்டிக்காட்டி பேசினார்.
இந்தியர்களின் வாழ்வாதார மேம்பாடு, கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்கள் இடையேயான இடைவெளியை குறைக்கும் விதத்திலான வளர்ச்சியை அமிர்த காலத்தில் மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் பேசி இருந்தார்.
பொதுமக்களின் வாழ்வில் அரசின் குறுக்கீடு இன்றி நவீன தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் முறையில் வாழ்வை மேம்படுத்துவதற்கான ஊக்கத்தை அவர் தந்திருந்தார்.
இந்தியா விரைவான வளர்ச்சியை அடைந்திருக்கிறது, எல்லா கிராமங்களிலும் சாலை வசதி, அனைத்து குடும்பத்தினருக்கும் வங்கிக் கணக்கு, தகுதிவாய்ந்த ஒவ்வொரு இந்தியனுக்கும் ஆரோக்கிய காப்பீடு, கேஸ் இணைப்பு உள்ளிட்டவற்றை செய்தால் மட்டுமே 100 சதவிகித வளர்ச்சியின் செறிவூட்டலை அடைய முடியும் என்று குறிப்பிட்டிருந்தார் பிரதமர்.
இந்த இலக்கை அடைவதற்கான கடின உழைப்பு, தியாகம் மற்றும் சிக்கனத்தை கடைபிடிப்பதற்கான காலகட்டத்தையே அமிர்த காலம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.
இலக்கை அடைவதற்கு வெகு காலம் எடுத்துக்கொண்டு காத்திருக்கக் கூடாது. இப்போதே நம்முடைய கடமையை செய்யத் தொடங்க வேண்டும். ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்கக் கூடாது. இதுவே சரியான நேரம். நம்முடைய நாடு மாற வேண்டும் என்றால் முதலில் மாற்றம் உங்களிடம் இருந்து வர வேண்டும் என்று பேசி இருந்தார் பிரதமர்.
கடந்த ஆண்டு தன்னுடைய சுதந்திர தின உரையில் அமிர்த காலம் என்கிற வார்த்தையை 14 முறை அவர் பயன்படுத்தி இருந்தார்.
அமிர்த காலம் என்றால் என்ன?
'Amrit kaal' என்ற சமஸ்கிருத வார்த்தையின் தமிழாக்கம் ‘அமிர்த காலம்’ ஆகும். 'அம்ரித் கால்' என்பது மிக உயர்ந்த மனித ஆற்றலை அடைவதற்கு அனைவருக்கும் கிடைக்கக்கூடிய ரு முக்கியமான நேரத்தை விவரிக்கும் சொல் ஆகும்.
‘இந்த வார்த்தை வேத ஜோதிடத்தில் இருந்து வந்தது, இது பொன்விழா ஆண்டின் தொடக்கத்தை குறிப்பிடுகிறது. ’அமிர்த காலம்’ என்பது மனிதர்கள் தங்களின் உணமையான ஆற்றலை புரிந்துகொண்டு, அறியாமையில் இருந்து விடுபட்டு, புதிய வாய்ப்புகளை தொடங்குவதற்கான முக்கியமான நேரமாகக் கருதப்படுகிறது. புதிய பணிகளைத் தொடங்க அமிர்த காலம் சிறந்த மற்றும் மிகவும் மங்களகரமான நேரமாகக் கருதப்படுகிறது.
2024ம் ஆண்டில் பொதுத் தேர்தலை நாடு சந்திக்க உள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசு “அமிர்த காலம்” என்கிற உச்சத்தை இலக்காக வைத்திருக்கிறது. வருகின்ற காலம் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நீதி உள்ளிட்ட விஷயங்களில் இந்தியாவிற்கு மிகவும் முக்கியமான ஆண்டு என்பதை இது குறிக்கிறது.
மேலும், அமிர்த காலம் என்பது சிறந்த எதிர்காலத்திற்கான நம்பிக்கை, அதில் இந்தியர்கள் தற்சார்புடனும் அனைத்து கடமைகளையும் பூர்த்தி செய்தவர்களாகவும் இருப்பார்கள் என்பதையும் இந்த வார்த்தைக குறிப்பிடுவதாக சொல்லப்படுகிறது.
'5வது இடத்துக்கு முன்னேறிய இந்திய பொருளாதாரம்' - பட்ஜெட் தாக்கல் உரையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!