Call Forwarding மோசடி என்றால் என்ன? - YS தமிழ் Explainer!
டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் கைதேர்ந்த மோசடி பேர்வழிகள் அதே ரூட்டில் பயணித்து, பயனர்கள்/மக்களை ஏமாற்றி, அவர்களது வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை களவாடுகிறார்கள். அது எப்படி நடக்கிறது? அதிலிருந்து தப்பிப்பது எப்படி?
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக பெரும்பாலான மக்கள் தங்களது நிதி விவகாரங்களை டிஜிட்டல் முறையில் கையாண்டு வருகிறார்கள். யுபிஐ, மொபைல் பேங்கிங், நெட் பேங்கிங் என பல்வேறு விதமான முறைகள் மக்களின் பண பரிமாற்றத்துக்கு உதவி வருகிறது. ஏடிஎம், ஓடிபி போன்றவற்றை வைத்தே இதன் இயக்கம் உள்ளது.
இத்தகைய சூழலில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் கைதேர்ந்த மோசடி பேர்வழிகள் அதே ரூட்டில் பயணித்து, பயனர்கள்/மக்களை ஏமாற்றி, அவர்களது வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை களவாடுகிறார்கள்.
இதுகுறித்து வங்கி தரப்பிலும், சைபர் பாதுகாப்பு வல்லுநர்களும் பயனர்களிடம் ஓடிபி, ஏடிஎம் எண் போன்ற விவரங்களை யாருடனும் பகிர வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். சமயங்களில் அது விழலுக்கு இறைத்த நீராக போகிறது. இருந்தும் மோசடியாளர்கள் வசம் மெத்த படித்த, பெரிய நிறுவனத்தில் பணியில் உள்ளவர்கள் கூட சிக்கி ஏமாறுகிறார்கள். அந்த அளவுக்கு சந்தேகம் என்பது துளி அளவும் வராத வகையில் மோசடியாளர்களின் செயல்பாடு இருக்கும். அதில் ஒன்றுதான் Call Forwarding மோசடி.
Call Forwarding மோசடி என்றால் என்ன?
“சார், வங்கியில் இருந்து பேசுகிறோம். உங்கள் டெபிட் கார்டு காலாவதி கெடு தேதி நெருங்கிவிட்டது. ஓடிபி சொன்னால் புதிய ஏடிஎம் கார்டை மாற்றித் தருவோம்” என தட்டுத்தடுமாறி தமிழில் பேசும் வடநாட்டு மோசடியாளர்களின் தொலைபேசி அழைப்பை நம்மில் பலரும் கடந்து வந்திருப்போம்.
அந்த மாதிரியான சூழலில் பெரும்பாலானவர்கள் அந்த அழைப்புக்கு பதில் ஏதும் தெரிவிக்காமல் அப்படியே அதை துண்டிப்போம். சிலரோ வங்கியில் இருந்து தான் பேசுகிறார் என நம்பி ஏடிஎம் விவரங்களை தெரிவித்து இருப்போம். பணத்தை இழந்த பிறகே அது குறித்து அறிந்திருக்கக் கூடும். இந்த வகை மோசடி சார்ந்த விழிப்புணர்வு மக்களிடம் தற்போது பரவலாக அதிகரித்துள்ளது. அதன் காரணமாக புது வகையில் தங்கள் கைவரிசையை வெளிக்காட்ட வேண்டி உள்ளது.
தினந்தோறும் வெளியாகும் நாளேடுகளில் 12+ பக்கங்களில் ஒரு பேட்டி செய்தி அளவிலாவது இணையவழி மோசடி குறித்த செய்தி வெளியாகிறது. அண்மையில் ஆதார் எண்ணுடன் லிங்க் ஆகியுள்ள வங்கிக் கணக்கில் இருந்து சம்பந்தப்பட்ட பயனர்களின் கை விரல் ரேகையை மோசடியாளர்கள் பயன்படுத்தி பணத்தை எடுத்த மோசடி செய்தி குறித்து அறிந்தோம். இப்படி பல்வேறு வழிகளில் மோசடியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
மோசடி நடப்பது எப்படி?
மொபைல் போன் பயனர்களுக்கு மோசடியாளர்கள் ரேண்டமாக போன் செய்வார்கள். பயனர்கள் அந்த அழைப்பை பிக் செய்தால், தங்களை ஐடி வல்லுநர் அல்லது டெலிகாம் நெட்வொர்க் பிரதிநிதி என சொல்லி மோசடியாளர்கள் அறிமுகம் செய்து கொண்டு பேச்சை தொடர்வார்கள். தங்களுக்கு முறையாக இணைய இணைப்பு கிடைக்கிறதா, நெட்வொர்க் சிக்னல் உள்ளதா என பேச்சு கொடுப்பார்கள். அதில் சிக்கல் இருப்பதாக பயனர்கள் தெரிவித்த மறு நொடியே அதை நாங்கள் ஃபிக்ஸ் செய்து தருகிறோம் என சொல்வார்கள்.
“உங்கள் மொபைல் போனில் 401 என்ற டயல்பேடில் உள்ளிட்டு நாங்கள் சொல்லும் எண்ணை உள்ளிட்டு, அதோடு # சேர்த்து டயல் செய்யுங்கள்...” என சொல்வார்கள். அதை செய்தால் அந்த பயனரின் மொபைல் எண்ணுக்கு வரும் இன்கம்மிங் அழைப்புகள் அனைத்தும் அந்த மோசடியாளர் சொன்ன எண்ணுக்கு Forward ஆகும். இது அந்த பயனருக்கு அறவே தெரியாது. அதன் மூலம் வங்கிக் கணக்கு, வாய்ஸ் ஓடிபி போன்ற விவரங்களை பெற முடியும். அதன் மூலம் நிதி சார்ந்த ஆதாயம் பெறப்படும். சில நேரங்களில் பயனரின் தனிப்பட்ட விவரங்களை சேகரிக்கவும் இந்த வகை மோசடி மேற்கொள்ளப்படும்.
இதிலிருந்து தப்பிப்பது எப்படி?
பயனர்கள், தங்கள் மொபைல் எண்ணுக்கு தெரியாத எண்களில் இருந்து வரும் தொலைபேசி அழைப்பை எடுக்கும் போது எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். பெரும்பாலும் எந்தவொரு டெலிகாம் நிறுவனமும் பயனர்கள் கோடினை உள்ளிடுமாறு தெரிவிக்காது. அப்படி இருக்கும் நிலையில் குறிப்பிட்ட எண்ணில் இருந்து வந்த அழைப்பில் சந்தேகம் இருந்தால் அதை துண்டித்து விட்டு, அது குறித்து புகாரை தெரிவிக்கலாம். கஸ்டமர் கேரில் பேசியும் விவரம் தெரிவிக்கலாம்.
Call Settings குறித்த விவரத்தை கஸ்டமர் கேர் பிரதிநிதியிடம் கேட்டு பெறலாம். அந்த எண் குறித்து புகார் அளிக்கலாம். முக்கியமாக தொலைபேசி வழியே இதுமாதிரியான விவரங்களை பகிர்ந்து கொள்ளாமல் இருக்கலாம்.
கவனிக்க வேண்டியவை... பயனர்கள் Call செட்டிங்ஸில் Call Forward சார்ந்த விவரங்களை அவ்வபோது செக் செய்யலாம். அதில் Call Forwarding எனேபிள் ஆகி இருந்தால் அதை டிஸேபிள் செய்யலாம். மோசடி சார்ந்து அறிந்து கொண்டு இருப்பது உகந்தது. இந்த மோசடி குறித்த விவரத்தை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளலாம்.
CEO Fraud: உங்கள் சிஇஒ இடமிருந்து மெசேஜ் அல்லது மெயில் வந்தால் உஷார் - இது புது வகை மோசடி!
Edited by Induja Raghunathan