CEO Fraud: உங்கள் சிஇஒ இடமிருந்து மெசேஜ் அல்லது மெயில் வந்தால் உஷார் - இது புது வகை மோசடி!
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அனைத்தும் இணையமயமாகி விட்டது. அதனால் 24x7 என ஆன்லைனில் ஆக்டிவாக இயங்கும் இணைய பயனர்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அனைத்தும் இணையமயமாகி விட்டது. அதனால் 24x7 என ஆன்லைனில் ஆக்டிவாக இயங்கும் இணைய பயனர்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். இல்லையெனில் மோசடியாளர்களின் வலையில் சிக்க வேண்டியிருக்கும்.
சமயங்களில் பயனர்கள் விழிப்புடன் செயல்பட்டாலும் ‘புது புது’ ரூட்டில் மோசடி ஆசாமிகள் தங்கள் கைவரிசையை காட்டி விடுகிறார்கள். குறிப்பாக இதில் விவரம் அறிந்த இணைய சமூகத்தினர் கூட ஏமாற்றப்படுகிறார்கள். அந்த அளவுக்கு இது மோசடியாக இருக்க வாய்ப்பே இல்லை என்ற வகையில் துளி அளவு கூட சந்தேகம் வராத வகையில் அரங்கேற்றப்படுகிறது.
வங்கியில் இருந்து பேசுகிறோம், லாபம் தரும் தொழில் வாய்ப்பு, பகுதி நேர வேலைவாய்ப்பு, கிரிப்டோகரன்சி முதலீடு, ரொமான்ஸ் ஸ்கேம், போலியான சமூக வலைதள கணக்கை உருவாக்கி பண உதவி கேட்பது என பயனர்களை ஈர்க்கும் வகையிலான மோசடி குறித்த செய்திகள் அண்மைய காலமாக அதிகம் வெளி வருகிறது.
அதனால் பயனர்கள் இது சார்ந்து உஷார் ஆகி உள்ளனர். அதனால் மாற்று வழியில் புது ரூட் எடுத்துள்ளனர் மோசடியாளர்கள். அப்படி ஒரு சம்பவம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொல்கத்தாவில் அரங்கேறி உள்ளது. வருமானம் ஈட்டும் தனிநபர்கள் தான் இவர்களது டார்கெட்.
சிஇஒ மோசடி என்றால் என்ன?
பயனர்களுக்கு அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தின் முதலாளி அல்லது மேல் அதிகாரி அல்லது சிஇஒ மெசேஜ் செய்வது போல தொடர்பு கொள்கிறார்கள் மோசடியாளர்கள். அதில் மேல் அதிகாரிகள் வழக்கமாக பயன்படுத்தும் மொபைல் எண் அல்ல. ஆனால், அதில் அவர்களது ப்ரொபைல் படம் இருந்துள்ளது. அதோடு பெயர் போன்ற இதர விவரங்களும் சரியாக இருந்துள்ளது. இப்படித்தான் ஆதாயம் ஈட்டும் நோக்கில் வலை விரிக்கப்பட்டுள்ளது.
“எனக்கு எனது சி.இ.ஓ-விடம் இருந்து ஒரு மெசேஜ் வந்தது. அதில் அவர் அமெரிக்காவில் இருப்பதாகவும். ஆன்லைனில் கிஃப்ட் கார்டுகள் வாங்கி, அந்த கோடினை (Code) அவருக்கு ஷேர் செய்யும் படி சொல்லி இருந்தார். அதோடு அவர் மீட்டிங்கில் இருக்கின்ற காரணத்தால் போன் கால் செய்ய முடியவில்லை என டெக்ஸ்ட் செய்திருந்தார். அதன்படி, நானும் கிஃப்ட் கார்டுகளை வாங்கி, கோடினை பகிர்ந்தேன். அதன் பிறகு தான் அது மோசடி என எனக்கு தெரிந்தது,” என்கிறார் சி.இ.ஓ மோசடியில் சிக்கி, பணத்தை இழந்த ஒரு நபர். சுமார் 80,000 ரூபாயை அவர் இழந்துள்ளார்.
இது போல கடந்த ஒரு மாதத்தில் மட்டுமே சுமார் 4 பேர் நிதி இழப்புக்கு ஆளாகி உள்ளனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படியாக இந்தியாவில் நாள் ஒன்றுக்கு சில லட்சங்கள் முதல் பல கோடி ரூபாய் வரையில் பலரும் இணைய மோசடியால் நிதி இழப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.
நிறுவனத்தின் மூத்த அதிகாரி போல தங்களை அடையாளம் காட்டிக் கொள்ள நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரி மற்றும் வாட்ஸ்அப் தரவு சார்ந்த விவரங்களை மோசடியாளர்கள் திரட்டி உள்ளனர். அதன் மூலம் வருமானம் ஈட்டும் தனிநபர்களை குறிவைத்து தரவுகளை திரட்டுவது அல்லது நிதி ஆதாயம் ஈட்டுவது போன்ற மோசடிகளை செய்துள்ளனர்.
இது ‘ஸ்பியர்-பிஷ்ஷிங்’ (Spear Phising) என அறியப்படுகிறது. இணையவெளியில் உள்ள பயனர்களின் சுய விவரங்களை ரேண்டமாக திரட்டி, அதனை நுட்பமாக ஆராய்ந்த பிறகு மேற்கொள்ளப்படும் மோசடி. இதற்கு சமூக வலைதள ப்ரொபைல்களை கூட மோசடியாளர்கள் பயன்படுத்தி இருக்கலாம் என சைபர் பிரிவு காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதில் அவர்களது இலக்கு ஒரு சிறு குழு தான். அது ஒரு நிறுவனத்துக்குள் பணியாற்றும் ஊழியர்களாக இருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, சிஇஒ அல்லது உங்கள் மேலதிகாரியின் பெயரில் மெயிலோ, மெசேஜ் வந்தால், உடனடியாக அதை அவரிடம் விசாரித்துவிட்டு பதிலளிக்கவும். அல்லது உங்கள் அந்த மெசேஜ் பற்றி சந்தேகம் வந்தால் அதனை உடனே ப்ளாக் அல்லது டெலீட் செய்து விடுங்கள்.
இணையத்தில் உலவும் பயனர்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக கவர்ச்சிகரமான மெசேஜ்களை பார்த்தால், அதில் உள்ள லிங்குகளை க்ளிக் செய்யாமல் இருக்கலாம். அதே போல தெரியாத எண்ணில் இருந்து வரும் மெசேஜ், அழைப்புகளை பிளாக் செய்யலாம். இதன் மூலம் ஓரளவுக்கு இணைய மோசடியாளர்களிடமிருந்து தப்பிக்கலாம்.
Romance Scam | அன்புக்கு பணம் வேண்டாம் மனம் போதும்; அதனால் ஈசியா ஏமாந்துடாதீங்க!
Edited by Induja Raghunathan