அமிதாப் முதல் கமல் வரை NFT வடிவில் டிஜிட்டல் உலகில்: NFT என்றால் என்ன; அதன் மதிப்பு என்ன?
சல்மான் கானில் துவங்கி, கமல் ஹாசன் வரை பிரபலங்கள் ஈடுபாடு காட்டத்துவங்கியிருக்கும் என்.எப்.டி., தொழில்நுட்பம், அதன் பின்னணி குறித்து ஒரு பார்வை.
தொழில்நுட்பப் புரிதல் என்று வரும் போது திரை ஆளுமைகளில் கமல் ஹாசன் எப்போதுமே ஒரு படி முன்னே இருப்பவர். டிஜிட்டல் உலகின் அண்மை தொழில்நுட்பமமான என்.எப்.டி (NFT) நுட்பத்திலும் கமல் மற்றவர்களை விட ஒரு படி முன்னே சென்று தனக்கான மெட்டாவெர்ஸ் பரப்பில் தனக்கான இடத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் NFT வடிவிலான போட்டோ கலெக்ஷன்கள் அண்மையில் வெளியிடப்பட்டது. இவை கோடிகளில் மதிப்பிடப்பட்டுள்ளது.
அதென்ன மெட்டாவெர்ஸ் என்று தனியே பார்க்கலாம், அதற்கு முன், என்.எப்.டி., (NFT ) என்றால் என்ன என பார்த்துவிடலாம்.
NFT என்றால் என்ன?
Non-fungible token (நான் ஃபங்கியபில் டோக்கன்) என்பதை தான் சுருக்கமாக என்.எப்.டி., என குறிப்பிடுகின்றனர். இதுவும் ஒரு வகை டிஜிட்டல் டோக்கன். ஆனால் டிஜிட்டல் உலகில் விலை மதிப்பில்லாதது.
இன்னும் புரியவில்லையா?
இதைத் தமிழில் குறிப்பிட்டால் இன்னும் தெளிவாகப் புரியும். Non-fungible என்றால் ’மாற்ற முடியாத’ எனப் பொருள். அதாவது,
தனித்தன்மை வாய்ந்த டிஜிட்டல் அடையாளம் எனக் கொள்ளலாம். ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்பார்களே அதே போல, டிஜிட்டல் வடிவில் ஒண்ணே ஒண்ணாக இருக்கக் கூடிய தனித்தன்மை வாய்ந்த டோக்கன்களாக என்.எப்.டி., திகழ்கின்றன.
இப்போதும் குழப்பமாக இருக்கிறது? இன்னும் சற்று விரிவாக பார்க்கலாம்.
இணைய உலகில் இப்போது பிட்காயின் போன்ற கிரிப்டோ நாணயங்கள் பரபரப்பாக பேசப்படுகின்றன அல்லவா? என்.எப்.டி. என்றாலும், பிட்காயின் போன்ற டிஜிட்டல் டோக்கன் என்று புரிந்து கொள்ளலாம்.
இருப்பினும், பிட்காயின் போன்ற கிரிப்டோ நாணயங்களை விட என்.எப்.டி, டோக்கன்கள் மிகவும் ஸ்பெஷல். ஏன் தெரியுமா? பிட்காயினை நீங்கள் இன்னொரு பிட்காயினுடன் மாற்றிக் கொள்ளலாம். ஆனால் என்.எப்.டியை இப்படி மாற்ற முடியாது.
பிட்காயின் கிரிப்டோ நாணயம் என்றாலும், டாலர் போல, ரூபாய் போல அதற்கும் ஒரு குறிப்பிட்ட மதிப்பு இருக்கிறது. அந்த மதிப்பின் அடிப்படையில் அவற்றை பரிமாற்றம் செய்து கொள்ளலாம். ஆக, ஒரு பிட்காயினுக்கு நிகராக இன்னொரு பிட்காயினை பரிவர்த்தனை செய்யலாம்.
ஆனால், என்.எப்.டி தனித்தன்மையான குணாதிசயங்கள் அடிப்படையில் உருவாக்கப்படுவதால், ஒவ்வொரு என்.எப்.டி.,யும் தனித்தன்மையானது. அதற்கு நிகரான இன்னொரு என்.எப்.டியுடன் மாற்றிக்கொள்ள வழியில்லை.
என்.எப்.டி., எதற்காக?
பிட்காயின் போன்றது, ஆனால் தனித்தன்மையானது என்பது எல்லாம் சரி தான். என்.எப்.டி எதற்காக, எங்கிருந்து வந்தது. இதனால் என்ன பயன்?
பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ நாணயங்கள் டிஜிட்டல் பணம் என்று சொல்லப்படுகின்றன. மாறாக, என்.எப்.டி டிஜிட்டல் சொத்தாக அமைகின்றது. இன்னும் சரியாக சொல்வது என்றால்,
நிஜ உலக சொத்துக்களுக்கான டிஜிட்டல் சான்றிதழாக அல்லது பத்திரமாக அமைகின்றன. நிஜ உலகப் பொருட்கள் மட்டும் அல்ல டிஜிட்டல் கலைப்படைப்புகள் மற்றும் பொக்கிஷங்களுக்கான டிஜிட்டல் சான்றிதழாகவும் இவை உருவாக்கப்படுகின்றன.
ஆக, டிஜிட்டல் ஆக்கங்களை விற்பதற்கு ஏற்ற வழியாக என்.எப்.டி அமைகிறது. தனித்தன்மை வாய்ந்த எதற்கும் என்.எப்.டி ஏற்றதாக இருக்கும். ஆனால் இதற்கும் காப்புரிமைக்கும் தொடர்பில்லை. இது டிஜிட்டல் உரிமை.
என்.எப்.டி.யை எப்படி செயல்படுகிறது?
பிட்காயின் போலவே, என்.எப்.டியும், பிளாக்செயின் எனப்படும் டிஜிட்டல் லெட்ஜரில் உருவாக்கப்படுகிறது. இப்போதைக்கு எரித்ரியம் கிரிப்டோ மேடை பிளாக்செயினில் இவை அதிகம் உருவாக்கப்படுகின்றன. மற்ற கிரிப்டோ மேடைகளிலும் உருவாக்கலாம். பிட்காயின் வாங்குவது போலவே இவற்றையும் வாங்கிக் கொள்ளலாம்.
என்.எப்.டியால் என்ன பயன்?
என்.எப்.டி. நுட்பம் 2014ம் ஆண்டு முதல் இருக்கிறது. ஆனால் அண்மையில் தான் இது கவனத்தை ஈர்த்து வருகிறது. அதற்கு முக்கியக் காரணம், டிஜிட்டல் சொத்துரிமைக்கு இது வழியாக அமைவது தான்.
மேதைகளின் கலைப்படைப்புகளுக்கு மற்றும் அரிய பொருட்கள் விலை மதிப்பில்லாதவையாக கருதப்படுவதை நீங்கள் அறிந்திருக்கலாம். அதனால் தான் பிக்காசோ தீட்டிய மூல ஓவியம் அல்லது ஸ்டீவ் ஜாப்ஸ் கையெழுத்திட்ட கடிதத்திற்கு அதிக மதிப்பு இருக்கிறது.
ஆனால், டிஜிட்டல் உலகில் ஒரு ஆக்கத்தை உருவாக்கினால் அதற்கு உரிமை கொண்டாடுவது மிகவும் கடினம். மிக எளிதாக அதன் டிஜிட்டல் நகல்களை உருவாக்கிவிடலாம் என்பதோடு, எது மூலம் என நிருபிப்பதும் கடினம். இந்த இடத்தில் தான் என்.எப்.டி உதவிக்கு வருகிறது.
ஒரு டிஜிட்டல் மூலப் படைப்பை விற்க விரும்பினால் அதற்கான என்.எப்.டி-ஐ உருவாக்கி அதன் டிஜிட்டல் சொத்துரிமையை உறுதி செய்ய உதவுகிறது. இதே போலவே, நிஜ உலக பொக்கிஷங்களுக்கான என்.எப்.டி-ஐ உருவாக்கி ஆன்லைனில் விற்பனை செய்யலாம்.
அடிப்படையில் என்.எப்.டி., மூலத்தன்மை மற்றும் உரிமைகான சான்றாக விளங்குகிறது. ஏனெனில், ஒரு தனித்தன்மை வாய்ந்த பொருளை அடிப்படையாகக் கொண்டு அதன் டிஜிட்டல் வடிவமாக இது உருவாக்கப்படுகிறது.
என்.எப்.டியில் என்ன இருக்கிறது?
என்.எப்.டி., மெட்டா டேட்டா மற்றும் தனித்தன்மையான அடையாளத்தை கொண்டிருக்கின்றன. மெட்டா டேட்டா என்பது என்.எப்.டி அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பொருள் தொடர்பான தகவல்களை குறிக்கிறது. இந்தத் தகவல்களோடு, பார்கோடு போன்ற தனித்த அடையாளமும் இடம் பெற்றிருக்கும்.
எதற்கெல்லாம் என்.எப்.டி பொருந்தும்?
தனித்த அடையாளம் கொண்ட எதற்கும் என்.எப்.டி அடையாளத்தை உருவாக்கலாம். உதாரணமாக, ஒரு மீமின் முதல் புகைப்படம் அல்லது ஒரு பிரபலத்தின் முதல் டிவீட்டிற்கு என்.எப்.டி உருவாக்கலாம். இதே போலக, ஜிப்கள், வீடியோக்கள், விளையாட்டு ஹைலெடிகள், டிஜிட்டல் படைப்புகள் என எதற்கு வேண்டுமாமாலும் என்.எப்.டி உருவாக்கலாம். முதல் பாடல் ஆல்பம், திரைப்பட முதல் போஸ்டர் ஆகியவற்றுக்கும் உருவாக்கலாம்.
எப்படி வாங்குவது?
பிட்காயின் வாங்குவது போல இதை வாங்கலாம். இதற்காக என்று பிரத்யேகமான மேடைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. பிட்காயின் வாலெட் போல இதற்கும் வாலெட் உண்டு. ரசிகர்கள் தங்கள் அபிமான நட்சத்திரங்களுடன் உறவு கொள்ள என்எப்.டி. இன்னொரு டிஜிட்டல் வழியாக அமைகிறது.
டிஜிட்டல் கலைப் படைப்புகளையும்,, நிஜ உலக ஆக்கங்களிலும் என்.எப்.டி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர். எனவே தான் மேலை நாடுகளில் என்.எப்.டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. இப்போது இந்தியாவில் என்.எப்.டி அலை வீசத்துவங்கியிருக்கிறது.