'டிஜிட்டல் அவதாரம்' எடுக்கும் நடிகர் கமல் ஹாசன்: மெட்டாவெர்ஸ்-ல் NFT வெளியிட முடிவு!
இன்னும் சில மாதங்களில் NFTs வெளியீடு என அறிவிப்பு!
சமீபத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் NFT வடிவில் தனது புகைப்படங்கள், அரிய பொக்கிஷங்களை வெளியிட்டு கோடிகளை ஈட்டினார். அமிதாப் பச்சனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் கமல்ஹாசன் தற்போது தனது அரிய புகைப்படங்கள் மற்றும் அவரின் படிப்புகளை NFT வடிவில் வெளியிட இருக்கிறார்.
நடிகர் கமல் தனது NFT-க்களை ’மெட்டாவெர்ஸ்’ கேமிங் தளமான Fantico கிரிப்டோ தளத்தில் வெளியிட இருக்கிறார். இதன்மூலம், கமல்ஹாசன் தனது சொந்த டிஜிட்டல் அவதாரத்தை Metaverse-இல் வைத்திருக்கும் முதல் இந்திய பிரபலமாக மாற உள்ளார்.
கமல் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் திரைப்படம் ’விக்ரம்’. இந்த படத்தின் பிரத்தேயேக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அடங்கிய தொகுப்பை தான் கமல் Fantico தளத்தில் வெளியிட இருக்கிறார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள நடிகர் கமல்ஹாசன்,
“இந்த டிஜிட்டல் பயணம் குறித்து ஆர்வமுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கிறேன். ஆறு தசாப்தங்களுக்கும் மேலான எனது வாழ்க்கைப் பயணம் இந்த மெட்டாவேர்ஸ்-க்கான எனது பிரசாதமாக இருக்கும்," என்றுள்ளார்.
Fantico நிறுவனர் அபயானந்த் சிங் இது தொடர்பாக பேசுகையில்,
“கமல் ஹாசனுக்கான போஸ்டர்கள், அவதார்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளிட்ட பல்வேறு டிஜிட்டல் சேகரிப்புகளை Fantico முதலில் வெளியிடும். அடுத்த சில மாதங்களில், கேம் அடிப்படையிலான மெட்டாவேர்ஸ் தொடங்கப்படுவதை நாங்கள் பார்க்கிறோம். அதில் அவருடைய படைப்புகள் மெட்டாவெர்ஸ் கேமிங் தளத்தில் அவருக்கென தனி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு வெளியிடப்படும்," என்றுள்ளார்.
உலகளவில் கமல்ஹாசனின் உலகத்தை ஆராய்வதன் மூலமும், அவரது டிஜிட்டல் அவதாரங்களுடன் தொடர்புகொள்வதன் மூலமும், நினைவுப் பொருட்களை வாங்குதல் வாழ்த்து அமர்வுகளில் பங்கேற்பதை அவரின் ரசிகர்களை இது அனுமதிக்கும், என்றவர்,
”மேலும் பல நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் ஸ்டுடியோக்கள் மற்றும் படைப்பாற்றல் சமூகத்தைச் சேர்ந்த மற்றவர்களுடன் மெட்டாவேர்ஸின் ஒரு பகுதியாக இருக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்," என்றுள்ளார்.
தொகுப்பு: மலையரசு