Romance Scam | அன்புக்கு பணம் வேண்டாம் மனம் போதும்; அதனால் ஈசியா ஏமாந்துடாதீங்க!
அன்பானவர்களை அடையாளம் காண ஆன்லைன் டேட்டிங் உதவுகிறது. மில்லியன் கணக்கான பேர் ஆன்லைன் டேட்டிங் சேவை நிறுவனங்களை பயன்படுத்தி வருகின்றனர். இருந்தாலும் இதில் கொஞ்சம் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பெரும்பாலானவை செயற்கையாக மாறிவிட்டது. சுயமாக சிந்திக்கும் ஏஐ திறன் கொண்ட கேட்ஜெட்கள் சூழ் மனிதர்களின் வாழ்வு அமைந்துள்ளது.
வீட்டில் நான்கு பேர் இருந்தாலும் ஒவ்வொருவரும் ஒரு கேட்ஜெட்டில் மூழ்கி இருப்போம். மற்றொரு அறையில் இருக்கும் உறவுகளை அழைக்கவே ஒரு மெசேஜோ அல்லது அழைப்போ மேற்கொள்ளும் காலத்தில் உள்ளோம். தொடக்கத்தில் குறிப்பிட்ட தேவைகளுக்காக மட்டுமே இந்த கேட்ஜெட்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது. கால ஓட்டத்தில் அது மனிதர்களை ஆட்கொண்டு விட்டது.
ஸ்மார்ட்போன், டேப்லெட், லேப்டாப், டெஸ்க்டாப், ஸ்மார்ட் வாட்ச் என கேட்ஜெட்களின் பட்டியல் நீள்கிறது. இத்தனை சாதனங்களின் பயன்பாடு அந்த உறவுகளிடம் இருந்து அந்நியப் படுத்துகிறது. பல்வேறு துறை சார்ந்த ஆலோசனைகள், அட்வைஸ்கள், பசி ஆற்ற, உடல் மற்றும் உள்ளத்தின் நலனை ட்ராக் செய்ய, வழிகாட்டியாகவும் உதவுகிறது.
இது அனைத்துக்கும் மேலாக டேட்டிங் செயலிகள் அல்லது தளங்கள் சார்ந்த சேவைகளை இந்த கேட்ஜெட்களின் வழியே பயன்படுத்தி வருகிறோம். தனிமை எனும் சிறையில் இருப்பவர்களுக்கு அன்பான இதயங்களை தேடவும் உதவுகிறது. இதையே தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி மோசடி மேற்கொள்ளும் ஆசாமிகளும் உள்ளனர். அன்பானவர்களை இந்த டேட்டிங் தளங்களில் தேடும் நபர்கள் தான் இவர்களது டார்கெட்.
தரவுகள் ஏன் முக்கியம்?
இணையவெளியில் பயனர்கள் பகிரும் தரவுகள் மிகவும் வளமானவை. கிட்டத்தட்ட ஒரு நபரின் முழு விவரத்தை இந்த தரவுகளின் மூலம் அறிந்து கொள்ள முடியும். பெயர், வயது, ஊர், மொபைல் எண் என சகலமும் இதில் அடங்கும். டார்க் வெப்பில் சாமானியர்களின் தனிப்பட்ட தரவுகளுக்கு டிமாண்ட் மிகவும் அதிகம். அண்மையில் சுமார் 81 கோடி இந்தியர்களின் தனிப்பட்ட தரவு சார்ந்த விவரங்கள் டார்க் வெப்பில் விற்பனைக்கு வந்தன. இந்த தரவுகளை வைத்து தான் உலக நாடுகளில் ஏதோ ஒரு பகுதியில் உள்ள இணையவழி குற்றங்களை மேற்கொள்ளும் நபர்கள் இயங்குகிறார்கள்.
இந்த தரவுகளை வைத்து தான் ‘சார், வங்கியில் இருந்து பேசுகிறோம். OTP சொல்லுங்கள்’, ‘வீட்டிலிருந்து தொழில் செய்து லாபம் ஈட்டலாம்’, ‘கிரிப்டோ முதலீடு’ என இணையதள பயனர்களை குறிவைத்து வலை விரிக்கிறார்கள். சதுரங்க வேட்டை படத்தின் பாணியில் ஆசையை தூண்டி ஆதாயம் பெறுவது. அரசின் விழிப்புணர்வு காரணமாக தற்போது ஓரளவுக்கு இந்த விவகாரங்களில் பயனர்கள் அலர்ட் ஆகியுள்ளனர்.
ஆனால், இதற்கும் மாற்றை மோசடியாளர்கள் உருவாக்கவே செய்வார்கள். அதில் ஒன்று தான் Romance Scam. ஆசை வார்த்தை பேசி அன்பை பெற்று மோசடி செய்வது. உலக அளவில் ஏற்பட்டுள்ள இணையதள புரட்சி இதற்கு உதவுகிறது. அதனை தங்களுக்குச் சாதகமாக மோசடியாளர்கள் பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலும் ரேண்டமாக மேற்கொள்ளப்படும் இந்த வகை வலையில் சிலர் சிக்குகின்றனர். இதற்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியையும் மோசடியாளர்கள் பயன்படுத்துகிறார்கள். குரல், வீடியோ என ஏஐ அம்சங்களை இதற்கு பயன்படுத்துகிறார்கள்.
ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் இதற்கு இரையாகி உள்ளனர். இவர்கள் இணையவழி ரொமான்ஸ் மோசடியில் ஏமாந்து நிதியிழப்பை எதிர்கொண்டவர்கள். கடந்த 2022-ல் அமெரிக்காவில் மட்டும் சுமார் எழுபதாயிரம் பேர் இந்த வகை மோசடியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது FTC-ன் அறிக்கை. இது அந்த பகுதிகளில் மட்டுமல்லாது உலக அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அண்மையில் புனேவை சேர்ந்த நபர் ஒருவர் ஆன்லைன் மூலம் அறிமுகமான தோழியிடம் 22 லட்ச ரூபாயை இழந்தார். அதன் பிறகே அது மோசடி என அவர் அறிந்து கொண்டார். இது குறித்து வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரொமான்ஸ் ஸ்கேம் என்றால் என்ன?
டேட்டிங் தளங்கள் அல்லது செயலிகள், சமூக வலைதளம் என பயனர்களைக் கண்காணித்து யார் என்றே தெரியாத ஐடி-யில் இருந்து மெசேஜ் செய்து மோசடியாளர்கள் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ள முயல்வார்கள். ஆண் என்றால் பெண், பெண் என்றால் ஆண் போலவும் இந்த டார்கெட் இருக்கும். வசீகரிக்கும் ப்ரொபைல் படத்தை வைத்து, போலியான அடையாளத்தில் ஐடிகளை உருவாக்கி மோசடியாளர்கள் தங்கள் வேலையை காட்டுவார்கள். முதலில் பயனர்களுடன் இனிதாக பேசி, நம்பிக்கையை பெற்று, அவர்களது வேலையை தொடங்குவார்கள்.
எடுத்த எடுப்பில் இல்லாமல் துளியும் சந்தேகம் வராத வகையில் பொதுவாக வாழ்க்கை குறித்து பேசத் தொடங்குவார்கள். இதில் மோசடியாளர்கள் தரப்பில் மேற்கொள்ளப்படும் முதலீடு நேரம் மட்டுமே. அதன் மூலம் பயனர்களிடத்தில் தனக்கென தனி இடத்தை பெறுவார்கள். அந்த அளவிற்கான உணர்வினை ஏற்படுத்துவார்கள்.
அப்படியே உடல்நலக் குறைபாடு, அவசர பணத் தேவை எனச் சொல்வார்கள். அந்த உதவியை பயனர்களால் மட்டுமே செய்ய முடியும் என நம்பச் செய்வார்கள். அதைக் கொண்டு பணமும் பெறுவார்கள். அது ஒரு முறை, பல முறை என இருக்கும். ஒருநாள் தனிப்பட்ட முறையில் சந்திக்கலாம் எனச் சொல்வார்கள். கொஞ்ச காலத்தில் அப்படியே அந்த கணக்கு இணையவெளியில் முகவரி இன்றி மறைந்துவிடும்.
இதிலிருந்து தப்பிப்பது எப்படி?
- ஆன்லைனில் அறிமுகமாகும் ஐடி-கள் துரிதமாக அன்பை வெளிப்படுத்தினால் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இயங்க வேண்டும். ஏனெனில், மோசடியாளர்கள் இந்த ப்ராசஸில் கொஞ்சம் வேகம் காட்டுவார்கள்.
- அந்த ஐடியின் போட்டோ அல்லது டிஸ்க்ரிப்ஷன் விவரங்களைக் கொண்டு இதற்கு முன்னர் மோசடி வேலையில் ஈடுபட்டு உள்ளார்களா என்பதை அறியலாம். ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் அந்த ப்ரொபைல் உடன் வேறு யாரேனும் லிங்க் ஆகி உள்ளார்களா என்பதை அறியலாம்.
- நேரில் பார்க்காத வரையில் யாருக்கும் என்ன கதை சொன்னாலும் பணம் கொடுத்து உதவ வேண்டாம்.
- நண்பர்களிடம் ஆன்லைன் டேட்டிங் அனுபவங்களை பகிரலாம். அதன் மூலம் அவர்களது அட்வைஸ்களை பெறலாம்.
- ஒரு ஐடி மோசடி வேலையில் ஈடுபடுவது தெரிந்தால் சம்பந்தப்பட்ட தளத்துக்கு ரிப்போர்ட் செய்யலாம். அதோடு உள்ளூர் அளவில் இயங்கும் சைபர் பாதுகாப்பு துறைகளில் தெரிவிக்கலாம்.
அன்புக்கு பணம் வேண்டாம் மனம் போதும்!
அன்பானவர்களை அடையாளம் காண ஆன்லைன் டேட்டிங் உதவுகிறது. மில்லியன் கணக்கான பேர் ஆன்லைன் டேட்டிங் சேவை நிறுவனங்களை பயன்படுத்தி வருகின்றனர். இருந்தாலும் இதில் கொஞ்சம் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். அன்பான பந்தம் என்பது நம்பிக்கையின் பேரிலும், அனுபவங்களை பகிர்ந்து கொள்வதிலும் தான் கட்டமைக்கப்படுகிறது.
எந்தவொரு இடத்திலும் நிதி சார்ந்த தேவைகளால் பிணைப்பை உருவாக்க முடியாது. அதனால் ’அன்புக்கு பணம் வேண்டாம் மனம் போதும்’. அதன் மூலம் மோசடியாளர்களிடம் இருந்து தப்பிக்கலாம். ஆன்லைனில் பாதுகாப்பான முறையில் டேட் செய்யலாம்.
Edited by Induja Raghunathan