BYJU'S-இல் நடப்பது என்ன? முதன் முறையாக ஊழியர்களிடம் மனம் திறந்த பைஜு ரவீந்திரன்!
நிறுவனம் கடினமான கட்டத்தை கடந்து வருவதாகவும், ஆனால் விரைவில் மீண்டு வரும் என்றும் பைஜு ரவிந்திரன் தெரிவித்துள்ளார்.
எட்டெக் நிறுவனமான பைஜூஸ் நிறுவனத்தின் நிறுவனர் பைஜு ரவீந்திரன் இன்று ஊழியர்களுடன் நடத்திய டவுன்ஹால் மீட்டிங்கில் நிறுவனம் சந்தித்து வரும் சவால்கள் குறித்தும், அதிலிருந்து மீள மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் பேசியுள்ளார்.
ஸ்டார்ட்அப் நிறுவனமாக தொடங்கிய பைஜூஸ், இன்று கல்வி உலகில் மாபெரும் நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. ஆனால், கடந்த சில மாதங்களாக ஊழியர்கள் பணி நீக்கம், வருவாய் இழப்பு, கடன் சுமை, அடுத்தடுத்து நிர்வாகக் குழு உறுப்பினர்கள் விலகல் என கடலில் துடுப்பிழந்த படகாக தத்தளித்து வருகிறது.
அதோடு, சில தினங்களுக்கு முன் பைஜூஸ் நிறுவனத்தின் மூன்றாவது போர்டு உறுப்பினர் விலகியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அது மட்டுமின்றி, BYJU'S மற்றும் Aakash நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ ஆடிட் கணக்கு தாக்கல் விவகாரங்களில் தாமதப்படுத்திய காரணத்தால் அவர்களின் அதிகாரப்பூர்வ ஆடிட்டர் பதவி விலகி இருப்பதாக செய்திகள் வந்தது.
இந்நிலையில், இன்று அந்நிறுவனத்தின் நிறுவனரான பைஜு ரவிந்தீரன் தனது ஊழியர்களுடன் டவுன் ஹாலில் மீட்டிங்கில் உரையாற்றியுள்ளார். பைஜூஸ் நிறுவனம் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வரும் நிலையில், வீடியோ கால் மூலம் ஊழியர்களுடன் ஆலோசித்த அவர், நிறுவனம் சவால்களை சந்தித்து வருவதையும், அதில் இருந்து மீள முயன்றுவருவதையும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார் ரவீந்திரன்.
"டெர்ம் லோன் B-ஐ கட்டி முடிக்க வேண்டும். தணிக்கையை நிறைவு செய்ய வேண்டும். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைமை நிதி அதிகாரியாக அஜய் கோயல் அதனை செய்து முடிப்பார் என நான் நம்புகிறேன். இதை நான் சவாலாக பார்க்கவில்லை. நிறுவனத்தின் மறுசீரமைப்புக்காக சில வலுவான இயக்குநர்களை சேர்க்க வேண்டியது முக்கியம். அடுத்த சில வாரங்களில் இவை அனைத்தும் செய்து முடிக்கப்படும்.”
நிறுவனம் கடினமான கட்டத்தை கடந்து வருவதாகவும், ஆனால், விரைவில் மீண்டு வரும் என்றும் பைஜு ரவிந்திரன் தெரிவித்துள்ளார்.
"கடந்த 12 மாதங்களாக நாங்கள் போராடி வருகிறோம். ஆனால், எட்டெக் என்றென்றும் நிலைத்திருக்கும், நாம் முன்னோடிகளாக இருக்கிறோம். நாம் சரியான இடத்தில் இருக்கிறோம். நாங்கள் தொடர்ந்து முன்னேறிச் செல்வதை நீங்கள் காண்பீர்கள். முதல் 5 ஆண்டுகள் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வந்தது. ஏனெனில், 2015-2020 காலக்கட்டத்தில் பைஜூஸ் மட்டுமே இருந்ததால் திறமையான வளர்ச்சி சாத்தியமானது. ஆனால், இந்த இரண்டு வருடங்கள் மிகவும் கடினமானது. நிறைய சந்தை மூலதனத்தை இழந்துவிட்டோம்.”
ஆகாஷ் எஜுகேஷன்ஸ், கிரேட் லேர்னிங் போன்ற மிகப்பெரிய கையக்கப்படுத்தல்கள் லாபகரமானதாக இருன்ந்தாலும் பைஜூஸ் நிறுவனம் சில தவறுகள் நடந்துள்ளதையும் ஒப்புக்கொண்டுள்ளார்.
“உண்மையில் மூலதனத்தை எவ்வாறு ஒதுக்கியுள்ளோம் என்பதை நீங்கள் பார்த்திருந்தால் மிகவும் நல்லது. இன்று, எங்களிடம் 4-40 வயதுடையவர்களுக்கான தயாரிப்புகள் மற்றும் சேவைகள் உள்ளன. நாங்கள் பல்லாயிரக்கணக்கான வேலைகளை உருவாக்கியுள்ளோம். துரதிர்ஷ்டவசமாக, நாம் வணிக மாதிரிகளை மாற்றி அமைப்பதற்காக சில மாற்றங்களை (பணிநீக்கம்) செய்ய வேண்டியதாயிற்று,” என்றார்.
சட்டப்பூர்வ தணிக்கையாளர் டெலாய்ட் மற்றும் நிறுவனத்தில் முக்கிய முதலீட்டாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று போர்டு உறுப்பினர்கள் அனைவரும் அடுத்தடுத்து ராஜினாமா செய்த பின்னர், ரவீந்திரன் முதன் முறையாக ஊழியர்களிடையே உரையாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
2022 நிதி நிலை அறிக்கையை செப்டம்பரில் தாக்கல் செய்ய Byju's திட்டம் என தகவல்!