வீல் சேரில் வாழ்க்கை; கேன்சருடன் போராட்டம்; பத்மஸ்ரீ வென்ற கே.பி.ராபியாவின் தன்னம்பிக்கைக் கதை!
கே.பி.ராபியா கேரள மக்கள் மத்தியில் பிரபலமான பெயர். தற்போது பத்மஸ்ரீ விருது பட்டியலில் இவரது பெயர் இடம் பெற்றுள்ளதால் கேரள மக்களிடம் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. வீல் சேரில் பயணித்தாலும், தன்னம்பிக்கை நாயகியாக வலம் வரும் கே.பி.ரா யார்?
கே.பி.ராபியா கேரள மக்கள் மத்தியில் பிரபலமான பெயர். தற்போது பத்மஸ்ரீ விருது பட்டியலில் இவரது பெயர் இடம் பெற்றுள்ளதால் கேரள மக்களிடம் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
வீல் சேரில் பயணித்தாலும், தன்னம்பிக்கை நாயகியாக வலம் வரும் கே.பி.ராபியா யார்? என்பதை விளக்குகிறது இந்த தொகுப்பு...
நம்மில் பலரும் கை, கால், கண்கள் என அனைத்தும் நன்றாக இருந்தாலும், சிறிய பிரச்சனைகளைக் கூட பெரிதாக்கி மனச்சோர்வை அதிகரித்துக் கொள்கிறோம். அதேவேளையில் நம்மால் மாற்றுத்திறனாளிகள் என அழைக்கப்படுவோர் வெற்றியின் படிக்கட்டுகளில் வேகமாக முன்னேறி, வாழ்க்கையில் வெற்றி பெற கை, கால், கண்களை விட மன உறுதி திடமாக இருந்தால் போதும் என்பதை உணர்த்தி வருகின்றனர். அப்படிப்பட்ட உற்சாகமூட்டு சாதனை பெண்மணி தான் கே.வி. ராபியா.
யார் இந்த கே.வி.ராபியா?
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திரூரங்காடியை அடுத்த வெள்ளினக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கே.பி.ராபியா. பெற்றோருக்கு 6வது பிள்ளையாக பிறந்த ராபியா, திரூரங்காடி அரசுப் பள்ளியில் ஓன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது, உடலில் தளர்வு ஏற்பட்டது.
இருப்பினும், வீட்டிற்குள் முடங்கிவிடாமல் பள்ளி படிப்பை முடித்தார். திரூரங்காடி பி.எஸ்.எம்.ஓ கல்லூரியில் சேர்ந்து படித்து வந்த ராபியாவிற்கு அடுத்த அதிர்ச்சியாக போலியோவால் இடுப்புக்கு கீழ் உடல் முற்றிலும் செயலிழந்தது.
உடல் செயலிழந்தாலும் உள்ளத்தில் கொண்ட உறுதியான தன்னம்பிக்கையால், திறந்தவெளி பல்கலைக்கழகம் மூலமாக இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்ற கே.வி.ராபியா, அறியாமை எனும் இருளை நீக்கி அனைவருக்கும் கல்வி கண் திறக்க முடிவெடுத்தார். முதலில் தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு எழுத்தறிவு கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார்.
அதன் பின்னர், 1990ம் ஆண்டு கேரள அரசின் ‘எழுத்தறிவு இயக்கம்’ திட்ட விழிப்புணர்விலும் தீவிரமாக செயல்பட்டார். இதற்காக அவருக்கு 1993ம் ஆண்டு, மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் தேசிய இளைஞர் விருது வழங்கப்பட்டது.
சோதனைகளை சாதனையாக்கி பழக்கப்பட்ட ராபியாவுக்கு தனது 32 வயதில் மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. தீவிர சமூக சேவையில் ஈடுபட்டு வந்த ராபியாவுக்கு கேன்சர் பாதிப்பு இருப்பது கண்டறிப்பட்டது. திருச்சூரில் உள்ள அமலா கேன்சர் செண்டரில் சிகிச்சை எடுத்துக்கொண்டார். அதன் பின்னரும் தன்னுடைய முயற்சிகளில் சற்றும் தளர்வில்லாத ராபியா, முதியோர்கள், பெண்கள் உள்ளிட்டோரின் நலன் மற்றும் கல்விக்காக ‘சலனம்’ என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார்.
சலனம் அமைப்பு மூலமாக மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அறிவுசார் ஊனமுற்ற குழந்தைகளுக்காக ஆறு பள்ளிகளை நடத்தி வருகிறார். இது தவிர, 60 சுயஉதவிக் குழுக்களை பெண்களுக்காக தொடங்கி, ஊறுகாய், கேரி பேக்குகள் மற்றும் பிற பொருட்கள் தயாரிக்க பயிற்சி அளித்து வருகிறார்.
வெள்ளினக்காட்டில் சலனம் பப்ளிகேசனை நடத்தி வரும் ராபியா, அதில் தான் எழுதிய புத்தகங்களை வெளியிட்டு வருமானம் ஈட்டி வருகிறார். அதில் கிடைக்கும் பெரும்பாலான தொகையையும் தனது ‘சலனம்’ அறக்கட்டளைக்கு செலவிட்டு வருகிறார்.
கே.பி.ராபியா இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில்,
“அறிவைப் பெறுவது முதன்மையானது, இதை மற்றவர்களுக்கு வழங்குவதும் முக்கியமானது. நீங்கள் அதை மற்றவர்களுக்குக் கற்பித்து அவர்களுக்கு அதிகாரம் அளித்தால் மட்டுமே கல்வி அதன் நோக்கத்தை முழுமையாக சென்றடைவதாக நான் நம்புகிறேன்,” எனத் தெரிவிக்கிறார்.
56 வயதிலும் வீல் சேரில் அமர்ந்த படி சமூக சேவைகளை ஆற்றி வரும், தன்னம்பிக்கை நாயகி கே.வி.ராபியாவுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது கேரள மக்களை மட்டற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தகவல் உதவி: இந்துஸ்தான் டைம்ஸ் | தமிழில் - கனிமொழி