கோவையில் ‘லுலு மால்’ திறப்பு எப்போது; சிறப்பம்சங்கள் என்னென்ன தெரியுமா?
கோவையில் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள லுலு மால் வரும் 14ம் தேதி திறக்கப்பட உள்ளது. இத்தருணத்தில் லுலு மாலில் என்னென்ன மாதிரியான வசதிகள் செய்யப்பட்டுள்ளன, அதன் சிறப்பம்சம் என்னவென பார்க்கலாம்...
கோவையில் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள லுலு மால் வரும் 14ம் தேதி திறக்கப்பட உள்ளது. இத்தருணத்தில் லுலு மாலில் என்னென்ன மாதிரியான வசதிகள் செய்யப்பட்டுள்ளன, அதன் சிறப்பம்சம் என்னவென பார்க்கலாம்...
கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய்க்கு 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு தொழிலதிபர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து பல்வேறு முதலீடுகள் ஈர்க்கப்பட்டன.
அதன் ஒரு பகுதியாக சர்வதேச அளவில் பிரபலமான ’லுலு ஹைபர் மால்’ அமைக்கப்பதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது. கேரள தொழிலதிபரான யூசுப் அலிக்குச் சொந்தமான லுலு குழுமம் 3,500 கோடி ரூபாய் மதிப்பில் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து, கடந்த சில மாதங்களாக கோயமுத்தூரில் மிகவும் பிரபலமான லட்சுமி மில்ஸ் வளாகத்தில் லுலு மால் மிகவும் வேகமாக கட்டப்பட்டு வந்தது. சமீபத்தில் இதுசம்பந்தமான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலான நிலையில், கோவை லுலு மால் வரும் 14ம் தேதி திறக்கப்பட உள்ளது.
பொதுவாக மால்கள் என்றால் பல மாடி கட்டிடமாக தான் இருக்கும், ஆனால், கோவை லட்சுமி மில்ஸ் வளாகத்தில் உருவாக்கபட்டுள்ள லுலு மால் தரைதளம் மற்றும் முதல் தளத்துடன் மிகவும் பிரம்மாண்டமான முறையில் உருவாகி வருகிறது. இது வடிவமைப்பில் மிகவும் வித்தியாசமாக இருக்கும் காரணத்தால் மக்கள் மத்தியில் அதிகப்படியான வரவேற்பு கிடைக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லுலு மால் சிறப்பம்சங்கள்:
- கோவையில் ஏற்கனவே பல மால்கள் இருந்தாலும் லூலூ ஹைபர் மார்க்கெட்கள் தனி ரகம். அதாவது, டிபார்ட்மெண்ட் ஸ்டோர் மற்றும் குரோசரி சூப்பர் மார்க்கெட் ஆகியவற்றின் இணைப்பான ஹைபர் மார்க்கெட் ஆக உருவாக உள்ளது. இங்கு கிடைக்காத பொருட்களே இல்லை எனச் சொல்லலாம்.
- தரைத்தளத்தில் மட்டுமே ஷாப்பிங் பகுதி இருக்கும். மளிகை, காய்கறி, பழங்கள், சைக்கிள் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள், பிட்னஸ், அழகு சாதனம், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிகல், மெத்தை, வீட்டு உபயோக பிளாஸ்டிக் பொருட்கள், எழுதுபொருட்கள், குழந்தைகளுக்கான பொம்மைகள், புத்தக பைகள், லக்கேஜ் , கண் கண்ணாடி என, ஒரு வீட்டுக்குத் தேவையான அனைத்து உள்நாட்டு, வெளிநாட்டு தயாரிப்புகளையும் ஒரே இடத்தில் வாங்கலாம்.
- விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டது முதல் உலகின் முன்னணி பிராண்ட்களைச் சேர்ந்த வெவ்வேறு ரக காய்கறிகள், பழங்கள் வரை அனைத்தும் கிடைக்கும்.
- வாடிக்கையாளர்கள் பில் போடுவதற்காக நீண்ட வரிசையில் அதிக நேரம் காத்திருப்பதை தவிர்க்க 28 பில் கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- உணவுப்பிரியர்களை மகிழ்விப்பதற்காக சைவம், அசைவம், கான்டினெண்டல் என அனைத்து உணவு வகைகளும் கிடைக்கும். கேக் முதல் சாட் வரை வகை வகையான நொறுக்குத்தீனிகளும் விற்பனை செய்யப்பட உள்ளன. லுலு மால் ஸ்பெஷலாக அரேபிய உணவு வகைகளும் கிடைக்க உள்ளன.
லூலூ மால், முதலில் கோவையிலும், அடுத்ததாக சென்னையிலும் அமைய உள்ளது. சென்னையில் 2024ஆம் ஆண்டு இறுதியிலும் பயன்பாட்டிற்கு கொண்டு வர2த் திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.