சாமானியப் பெண் டூ அரசியல்வாதி: ‘இஐஏ 2020’ பத்மபிரியாவின் மகளிர் தின சிறப்புப் பேட்டி!
இஐஏ 2020 என்ற ஒரே வீடியோ மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பத்மபிரியா. சாமானியப் பெண்ணாக வாழ்க்கையைத் தொடங்கி இன்று அரசியல் களத்தில் குறிப்பிடத்தகுந்தவர்களுள் ஒருவராக உயர்ந்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் சுற்றுச்சூழல் அணியின் செயலாளராக இருக்கும் பத்மபிரியாவின் மகளிர் தினச் சிறப்புப் பேட்டி.
EIA 2020 எனப்படும் மத்திய அரசின் 'சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020' வரைவு அறிக்கையைக் கடுமையாக விமர்சித்து ஒரே நாளில் நாடு முழுவதும் பிரபலமானவர் தான் 'சென்னை தமிழச்சி' என்கிற பத்மப்ரியா.
ஊரடங்கில் எல்லோரும் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்க, இஐஏ 2020 பற்றி அவர் விளக்கமாகப் பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் சூழல் போராக மாறி மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது மறுக்க முடியாதது.. மறக்க முடியாதது...
தன் ஆவேசப் பேச்சால் ‘யார் இந்தப் பத்மபிரியா?’ என மக்களை வியக்க வைத்தவர். ஒரே ஒரு வீடியோவால் போராளி என முத்திரைக் குத்தப்பட்டார் பத்மபிரியா. இவர் முகவரியைக் கண்டுபிடித்து தாருங்கள் என சிலர் மிரட்டும் தொனியில் சமூகவலைதளங்களிலேயே வெளிப்படையாகவே கேட்டனர். ஆனால் மிரட்டல்கள் ஒருபுறம் இருந்தாலும், அவருக்கு பாராட்டுகளும், ஆதரவுக்குரலும் அதிகமாகவே கிடைத்தது.
முன்னரே பல விழிப்புணர்வு வீடியோக்களை பத்மபிரியா வெளியிட்டிருந்த போதும், இஐஏ வீடியோ தான் அவரை மக்கள் மத்தியில் மேலும் பிரபலமாக்கியது.
ஆராய்ச்சியாளராக, சமூக சிந்தனை கொண்டவராக, மக்கள் நலனில் அக்கறைக் கொண்டவராக, வருங்கால தலைமுறையை உருவாக்கும் ஆசிரியர் பொறுப்பில் இருந்து வந்தவரை இப்போது அரசியல் கை பிடித்து அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறது.
நடுத்தர வர்க்கக் குடும்பத்திலிருந்து வந்து, இன்று அரசியல் களத்தில் குறிப்பிடத்தகுந்தவராக, மக்கள் நீதி மய்யத்தின் சுற்றுச்சூழல் அணியின் செயலாளராக இருக்கும் பத்மபிரியாவை மகளிர் தினத்தை ஒட்டி சந்தித்தோம்.
உங்களைப் பற்றி...
என் முழுப் பெயர் பத்மபிரியா சீனிவாசன். சென்னை தான் சொந்த ஊர். அதனால் தான் சமூகவலைதளப் பக்கத்திற்கு சென்னை தமிழச்சி எனப் பெயரிட்டேன். எம்.எஸ்சி மைக்ரோபயாலஜி முடித்திருக்கிறேன். ஒரு வருடம் பெங்களூருவில் புற்றுநோய் ஆராய்ச்சி செய்தேன். கடந்த வருடம் தான் சென்னை வந்தேன். இங்கே பயாலஜி ஆசிரியையாக பணி புரிந்து வந்தேன்.
இஐஏ 2020 வீடியோ டிரென்டிங்கானது பற்றி...
பொதுவாகவே மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அது படிப்பு தான் என்றில்லை. எனக்குத் தெரிந்த, நான் கற்றுக் கொண்ட புதிய விசயங்களை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுப்பது எனக்கு எப்போதுமே பிடித்தமான வேலை.
அதோடு எனக்கு பேசுவதும் நன்றாகவே வரும் என்பதால், மருத்துவம், அழகுக் குறிப்புகள், சமூகம் சார்ந்த விசயங்கள், இயற்கை பற்றி மக்களிடம் பேச ஆரம்பித்தேன். டிக்டாக், டப்ஸ்மாஷ் போன்றவற்றிலும் நான் வீடியோக்கள் வெளியிட ஆரம்பித்தேன்.
இஐஏ 2020 வீடியோக்கு முன்பே விலங்குகளுக்கு நடக்கும் அநீதி, நாப்கின் முக்கியத்துவம், மாரடைப்பு, ஆசிட் வீச்சால் பாதிக்கப்படும் பெண்கள் என பல்வேறு சமூகம் சார்ந்த விசயங்கள் பற்றி நான் பேசிய பல வீடியோக்கள் வைரலாகியுள்ளது.
ஆசிட் வீச்சு பற்றி நான் போட்ட வீடியோ ஒன்றும் பயங்கர வைரல் ஆனது. விழிப்புணர்விற்காக ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் போல் நான் மேக்கப் போட்டிருந்தேன். ஆனால், அதையே சிலர், ‘இந்த சகோதரிக்கு நடந்த அவலத்தைப் பாருங்கள்’ என்ற ரேஞ்சுக்கு டேக் போட்டு வைரலாக்கி விட்டனர்.
ஆனால் நானே எதிர்பார்க்காத அளவுக்கு இஐஏ 2020 வீடியோ ஒரே இரவில் என்னை பிரபலமாக்கி விட்டது. மாலையில் போட்ட வீடியோ காலைக்குள் டிரெண்டிங்காகி விட்டது.
அந்த வீடியோ மக்கள் மத்தியில் பேசு பொருளானதும், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் எனப் பலர் என்னுடன் பேசினார்கள். ஆதரவுக் குரல்களைப் போலவே எதிர்ப்புக் குரல்களும் எழுந்தது. பல மிரட்டல்களும் வந்தது. அதே போல் தங்கள் கட்சியில் நல்ல பதவி தருவதாக ஆஃபர்களும் வந்தது. ஆனால் அப்போது நமது அரசியல்வாதிகள் பற்றி எனக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லை. அதனால் அவற்றை எல்லாம் மறுத்து விட்டேன்.
அரசியல் பிரவேசம் பற்றி...
எனக்கு சிறுவயதில் இருந்தே கமல் சாரை மிகவும் பிடிக்கும். நடிப்பைத் தாண்டி அவரது ஐடியாலஜியும் எனக்குப் பிடிக்கும். அதனால் தான் கமல், ‘சுற்றுச்சூழல் பற்றி நிறைய பேசுகிறீர்கள். வெளியில் இருந்து நீங்கள் செய்ய நினைப்பதை நம் கட்சியில் சேர்ந்து செய்யுங்கள்’ எனக் கூறிய போது, அதனை ஏற்றுக் கொண்டேன். மேலும், ‘உங்களுக்கு என்னென்ன தேவைகளோ அதை செய்து தருகிறோம். தேவையான பாதுகாப்பும் தரப்படும்’ எனவும் அவர் வாக்குறுதி அளித்தார். இவையெல்லாம் தான் என்னை மய்யத்தில் சேர சம்மதிக்க வைத்தது.
ஆனால் அப்போதும் அவர் என்னை மக்கள் நீதி மய்யத்தின் சுற்றுச்சூழல் அணியின் செயலாளராக போடுவார் என நான் எதிர்பார்க்கவே இல்லை. அது மிகப்பெரிய சர்ப்பிரைஸ் எனக்கு. சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்கென தனியே ஒரு அணி உருவாக்கினார்கள். சுற்றுச்சூழல் பற்றி ஆராய்ச்சிகள் மற்றும் ஆவணப்படங்கள் செய்ய ஆரம்பித்தோம்.
சந்தித்த எதிர்ப்புகள்...
மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருந்து வந்த பெண் நான். எல்லா வீடுகளிலும் இருப்பது போலவே எங்கள் வீட்டிலும் பல தடைகள் இருக்கத்தான் செய்தது. ஒரு வீடியோ போட்டாலே, எனக்கு ஏதாவது ஆகி விடுமோ எனப் பயப்படும் குடும்பம். எனது முதல் வீடியோவிற்கே எனது பெற்றோர் எதிர்ப்பு தான் தெரிவித்தனர். இப்படி பேசாதே.. வீடியோ போடாதே என ஏகப்பட்ட அறிவுரைகள்.
யாராவது எதையாவது செய்யக் கூடாது என்று கூறினால், என்னால் அப்படியே விட்டுவிட முடியாது. செய்யாதே என்றால் ஏன் செய்யாதே அதற்கு சரியான காரணம் சொல்லுங்கள் எனக் கேட்பேன். அப்படி அவர்கள் கூறும் காரணம் சரியானதாக இருந்தால் அதனைக் கேட்டுக் கொள்வேன். இல்லையென்றால் அவர்கள் எதைச் செய்யக்கூடாது எனக் கூறுகிறார்களோ அதைச் செய்து காட்டுவது தான் என் குணம்.
எல்லா செயல்களிலும் அதற்குப் பின்னால் இருக்கும் அறிவியலைத்தான் பார்ப்பேன். மூடநம்பிக்கைகளை ஏற்றுக் கொள்ள மாட்டேன்.
எதிர்காலத் திட்டம்...
நான் எதையுமே திட்டமிட்டு செய்ய மாட்டேன். எனக்கு வரும் வாய்ப்புகளில் எதை எடுத்தால் எனக்கும், என்னைச் சார்ந்தவர்களுக்கு பயனுள்ளதாக இருக்குமோ அதைத் தேர்வு செய்பவள். அரசியல் பிரவேசம்கூட அப்படித்தான். நான் வாழ்க்கையில் நினைத்தே பார்க்காத ஒன்று. எதிர்காலத்தில் நடனக் கலைஞராக வேண்டும், பாடலாசிரியர் ஆக வேண்டும் இப்படித்தான் நிறைய கனவுகள் வைத்திருந்தேன். முறைப்படி நடனம் கற்றுக் கொள்ளவில்லை. ஆனால் சிறுவயதில் இருந்தே கிளாசிகல் நடனம் மீது ஆர்வம் அதிகம்.
நடுத்தர குடும்பம் என்பதால் சிறுவயதில் மாதம் குறிப்பிட்ட தொகைச் செலுத்தி முறைப்படி நடனம் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு அமையவில்லை. இருந்தபோதும் டிவியில் போடும் பாடல்களைப் பார்த்து நடனம் கற்றுக் கொண்டேன்.
ஆனால் வாழ்க்கை என்னை அரசியலில் கொண்டு சேர்த்து விட்டது. நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் என்னை வேட்பாளராக நிற்கச் சொல்லி வருகிறார்கள். அது பற்றி இன்னமும் முடிவெடுக்கவில்லை. தொடர்ந்து பேசி வருகிறோம்.
அரசியலில் என் பணி...
ஆசிரியராக இருக்கும்போதும் என்னிடம் பயிலும் மாணவர்களுக்கு புத்தக அறிவு மட்டும் இல்லாது, சமூகம் சார்ந்த விழிப்புணர்வு பாடங்களை நிறையச் சொல்லிக் கொடுத்திருக்கிறேன். ஆராய்ச்சி என்றால் என்ன? சமூகத்தை எதிர் கொள்வது எப்படி போன்ற வாழ்க்கைக்குத் தேவையான கல்வியைச் சொல்லித் தருவதாலேயே மாணவர்களுக்கும் என்னை மிகவும் பிடிக்கும்.
இதையே தான் நான் அரசியலிலும் செய்ய நினைக்கிறேன். அரசியலில் எதையும் சாதித்துக் காட்ட வேண்டும் என்றெல்லாலும் விரும்பவில்லை. இப்போதிருக்கும் சட்ட திட்டங்களை மக்கள் எப்படி முறையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதைக் கற்றுக் கொடுக்க நினைக்கிறேன்.
என்னென்ன திட்டங்கள் இருக்கிறது என்பதே பலருக்கும் தெரிவதில்லை. அதை மக்களுக்கு சொல்வதற்கு அவர்களில் இருந்து ஒருவர் மேலே வர வேண்டும். அப்போது தான் அது அவர்களுக்கு சரியாகச் சென்று சேரும். இது தான் எனது ஐடியாலஜி. நாம் சொல்லிக் கொடுத்தாலே போதும் மக்கள் அதனை சரியாக பயன்படுத்திக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
பெண்களுக்கு சொல்ல விரும்புவது...
பெண்களுக்கு இட ஒதுக்கீடு தேவை என்ற கருத்து பரவலாக உள்ளது. ஆனால் இட ஒதுக்கீடு என்ற ஒன்றை பெண்கள் கேட்கவே தேவையில்லை. நீங்கள் எப்போதுமே ஆண்களுக்கு சமமானவர்கள் தான். அப்படி இருக்கையில் நாம் ஏன் மற்றவர்களிடம் இட ஒதுக்கீடு தாருங்கள் எனக் கேட்க வேண்டும்.
நம்மை பலவீனமானவர்கள் என நம்ப வைக்கிறார்கள். ஆனால் அது உண்மையில்லை. எல்லாத் துறையிலுமே சாதித்தாலுமே இன்னமும் இட ஒதுக்கீடு தாருங்கள், பேருந்தில் தனியாக உட்கார இடம் தாருங்கள் எனக் கேட்பது தேவையேயில்லை. நாமாக மாறினால் தான் மாற்றம் வரும். இதை நாம் செய்யலாம் என ஒரு அடி முன் நோக்கி எடுத்து வைத்து விட்டாலே போதும். பிறகு தடையென எதுவுமே வராது.
உதாரணத்திற்கு என் வீட்டில் வீடியோ போடாதே எனக் கூறிய போது, ஆமாம் அப்பா-அம்மா சொல்வது சரிதான், நான் வீடியோ போட்டால் என் முகத்தை மார்பிங் செய்து தவறாக சித்தரிப்பார்கள் என நினைத்து நான் வீட்டிலேயே முடங்கி இருந்தால் இருந்தால் நான் அப்படியே முடங்கிப் போய் இருந்திருப்பேன்.
நல்லதோ கெட்டதோ... பெண்களுக்கு சுயமாக முடிவு எடுக்கக்கூடிய தைரியம் இருக்க வேண்டும். கல்வியால் மட்டுமல்லாமல், சிறுவயதில் இருந்தே பெண் குழந்தைகளுக்கு இதனைக் கற்றுக் கொடுக்க வேண்டும். இது பெண்ணியம் இல்லை. ஒவ்வொருவருக்குமே அவர்களது மனதில் உள்ளதை வெளியில் கொண்டு வருவதற்கான உரிமை இருக்கிறது. அதை எப்போது பெண்கள் புரிந்து கொள்கிறார்களோ அப்போது நிச்சயம் ஒவ்வொரு பெண்ணாலும் சாதிக்க முடியும்.
இளைஞர்கர்களுக்கு அழைப்பு...
இளைஞர்கள் அதிக அளவில் அரசியலுக்கு வர வேண்டும். அரசியலையும் தங்களது கேரியராக எடுத்துக் கொண்டு அதில் இறங்க வேண்டும். நிச்சயம் நிறைய புதிய விசயங்களைக் கற்றுக் கொள்ள முடியும். அரசியல் என்றாலே சேவை, சேவை என்று சொல்லி விட்டு, பலர் தங்களது தேவைக்காகத்தான் அதனைப் பயன்படுத்தி வருகிறார்கள். எனவே இளைஞர்கள் உள்ளே வந்தால் நிச்சயம் இதனை மாற்ற முடியும் என நான் நம்புகிறேன்.
நம்மால் முடியுமா என நினைப்பது வேறு விசயம். அப்பா-அம்மா என்ன சொல்வார்கள், சமூகம் என்ன நினைக்கும் என நினைத்து தேங்கி விடக் கூடாது. தங்களது சொந்த வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என விரும்பினால், ‘உங்களுக்கு இது வேண்டுமா தேவையில்லையா என உங்களை நீங்களே முதலில் கேட்டுக் கொள்ள வேண்டும்.
நம்முடைய நாட்டின் சுதந்திர போராட்டக் களத்தில்கூட பெண்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்துள்ளது. ஒருவேளை அவர்களது பங்களிப்பு இல்லாமல் இருந்திருந்தால், சுதந்திரம் கூட கிடைக்காமல் போய் இருக்கலாம். தற்போது அந்த போராட்டக் குணம் எல்லா பெண்களுக்கும் தேவையான ஒன்றாக இருக்கிறது. திருமணத்திற்குப் பிறகு தனது எதிர்காலக் கனவைத் தொலைத்தவர்கள் இங்கு ஏராளம். ஒருமுறை உள்மனது சொல்வதைக் காது கொடுத்துக் கேளுங்கள். நிச்சயம் உங்களது வாழ்க்கை மாறும்.
நான் திரும்பத் திரும்பச் சொல்வதெல்லாம் இளவயதுடையவர்கள் அரசியலை தங்களது கேரியராக எடுத்துக் கொள்ள முன்வர வேண்டும். நிச்சயம் அப்போது எல்லாம் மாறும்.