தங்கத்தை மறுசுழற்சி செய்து 3 ஆண்டில் ரூ.83 கோடி விற்றுமுதல்!

பழைய தங்க நகைகளை மதிப்பிட்டு வாங்கி, மறுசுழற்சி செய்யும் நிறுவனம் நடத்தும் 26 வயது தொழில்முனைவர்.

20th Jul 2020
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

உலகளவில் சீனர்கள் தவிர இந்தியர்களே அதிகளவில் தங்கம் வாங்குகின்றனர். எளிதாக வாங்கவும் விற்கவும் முடியும் என்பதால் மக்கள் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். இது பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது. அத்துடன் நல்ல லாபமும் கிடைக்கிறது.


பாரம்பரியமாகவே இந்தியக் குடும்பங்களில் தங்கத்தில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. மக்கள் தங்கம் வாங்க பல்வேறு வழிகள் இருந்தாலும் தேவையான நேரத்தில் விற்பனை செய்ய அதிக வழிகள் இல்லை.


சந்தையில் காணப்படும் இந்த வாய்ப்பை கவனித்த ராகுல் ஜோசப் 2017-ம் ஆண்டு வொயிட் கோல்ட் (White Gold) நிறுவினார். எஸ்எம்பிஸ்டோரி உடனான உரையாடலில் அவர் கூறும்போது,

“தங்கத்தை மக்களிடமிருந்து வாங்கிக்கொள்ளும் முறை இந்தியச் சந்தைக்கு புதிது. முன்பெல்லாம் பழைய தங்கத்தை மாற்றிக்கொண்டு புதிய நகை வாங்குவார்கள். அல்லது பொற்கொல்லர்களிடம் குறைந்த மதிப்பிற்கு அடமானம் வைத்துவிடுவார்கள். இதை ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் விரிவான நெட்வொர்க் கொண்ட கிளைகளுடன் செயல்படுத்தியதில் நாங்களே முன்னோடி,” என்றார்.
1

ராகுல் ஜோசப் உடனான நேர்காணலின் தொகுப்பு இதோ:


எஸ்எம்பிஸ்டோரி: ‘வொயிட் கோல்ட்’ தொடங்குவதற்கு முன்பு எதில் ஈடுபட்டிருந்தீர்கள்? இந்த வணிகத்தை எவ்வாறு தொடங்கினீர்கள்?


ராகுல் ஜோசப்: எனக்கு எப்போதுமே வணிக முயற்சிகளில் ஆர்வம் உண்டு. என்னுடைய குடும்பத்தினர் ரியல் எஸ்டேட் துறையில் நல்ல அனுபவமிக்கவர்கள். என்னுடைய குடும்பத்தினர் ஈடுபட்டிருந்த ரியல் எஸ்டேட் தொழிலிலேயே நானும் முதலில் ஈடுபட்டேன். என்னுடைய திறனைப் பயன்படுத்தி என்றென்றும் நிலைத்திருக்கக்கூடிய மிகச்சிறந்த பிராஜெக்ட் ஒன்றை உருவாக்க விரும்பினேன்.


என்னுடைய முதல் நிறுவனம் ‘வொயிட் பிராஜெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்’ 2015-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இன்று இந்நிறுவனம் பெங்களூருவின் எலக்ட்ரானிக் சிட்டியில் ‘வொயிட் கவுண்டி’ என்கிற பெயரில் 40 ஏக்கர் கேடட் கம்யூனிட்டி நிறைவு செய்து ஒப்படைத்துள்ளது.


வொயிட் பிராஜெக்ட்ஸ் அனுபவத்தையும் நம்பிக்கையையும் மட்டுமல்லாது முக்கியமாக வெற்றியையும் வழங்கியது. எனவே ரியல் எஸ்டேட் தொழிலுடன் மற்றுமொரு வணிகத்திலும் ஈடுபடுவது குறித்து ஆராய்ந்தோம். 5 கோடி ரூபாய் சுயநிதியுடன் 2017-ம் ஆண்டு ‘வொயிட் கோல்ட்’ என்கிற பெயரில் தங்கம் தொடர்பான வணிகத்தில் செயல்படத் தொடங்கினோம்.


நாட்டின் மிகப்பெரிய ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்பு கொண்ட தங்கம் கொள்முதல் மற்றும் மறுசுழற்சி நிறுவனமாக உருவாகவேண்டும் என்பதே ‘வொயிட் கோல்ட்’ நிறுவனத்தின் நோக்கம். இந்தியாவின் தங்கம் வாங்கும் சந்தையில் நவீன தொழில் நுட்பம், வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை புகுத்தி இந்தத் துறையில் புரட்சிகரமான மாற்றங்களை கொண்டு சேர்க்க விரும்புகிறோம்.


வொயிட் கோல்ட் நிறுவனம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பழைய தங்க நகைகளை மதிப்பிட்டு பின்னர் வாங்கிக்கொள்கிறது. இதனால் பணத்தேவை இருப்போர் பயனடையலாம்.


வொயிட் கோல்ட் தங்கத்தை வாங்கி சில செயல்முறைகளுக்கு உட்படுத்திய பின்னர் நகை தயாரிப்பாளர்களுக்கு மூலப்பொருட்களாக வழங்குகிறது. இந்த வணிகம் காரணமாக மதிப்பு கூட்டல் நடவடிக்கைகள் நாட்டிற்குள்ளேயே மேற்கொள்ளப்படுகிறது. இதனால் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகிறது. அந்நிய செலாவணி சேமிக்கப்படுகிறது.


அரசாங்கத்தின் வரி வருவாய் அதிகரிக்கும். நாட்டின் இறக்குமதி அளவும் குறையும். தங்கம் இறுதி தயாரிப்பாக இறக்குமதி செய்யப்படுவதுடன் ஒப்பிடும்போது மேற்சொன்ன அனைத்துமே இந்த வணிகத்தின் மூலம் கிடைக்கும் நன்மைகள் ஆகும்.

வொயிட் கோல்ட் கர்நாடகா, கேரளா ஆகிய இரு மாநிலங்களிலும் 50க்கும் அதிகமான கிளைகளுடன் செயல்படுகிறது. 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இந்த நிதியாண்டில் 83 கோடி ரூபாய் விற்றுமுதல் எட்டியுள்ளது. வரும் நிதியாண்டில் இதை 100 கோடி ரூபாயாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.

எஸ்எம்பிஸ்டோரி: உங்கள் துறையின் சந்தை அளவு என்ன?


ராகுல் ஜோசப்: இந்திய சந்தைகளில் தங்கம் சிறப்பாகவே வளர்ச்சியடைந்து வருகிறது. கடந்த சில பத்தாண்டுகளாகவே இதன் வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. பொன்னிறத்திலான இந்த உலோகத்தை கொள்முதல் செய்யும் நுகர்வோர்களில் இரண்டாவது மிகப்பெரிய நாடாக இந்தியா விளங்குகிறது.


உலகளவிலான கொள்முதலில் 25% இந்திய நுகர்வோர்களால் வாங்கப்படுகிறது. இருப்பினும் உள்நாட்டு சுரங்கங்களில் இருந்து உற்பத்தி செய்ய முடிவதில்லை. அல்லது இந்திய குடும்பங்களில் சேமிக்கபட்டுள்ள சுமார் 25,000 டன் தங்கத்தைப் பயன்படுத்த முடிவதில்லை. இந்தியாவின் 85 சதவீத தங்க விநியோகம் இறக்குமதி மூலமாகவே மேற்கொள்ளப்படுகிறது. ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்நாட்டு சுரங்களில் இருந்து வருகிறது. சுமார் 10 சதவீதம் மறுசுழற்சிகளின் மூலம் கிடைக்கிறது.


தங்கத்தை மறுசுழற்சி செய்வது சிறந்த முயற்சியாகும். இந்தியாவின் தங்கம் தொடர்பான விநியோக சங்கிலிக்கு இது முக்கியமானது. மக்களிடமிருந்து பயன்படுத்தப்பட்ட தங்கத்தை வாங்குவதன் மூலமாகவே மறுசுழற்சி செய்யமுடியும்.


இதுபோல் மக்களிடம் வாங்கப்படுவதன் மூலமாகவே மறுசுழற்சி துறைக்கு 90 முதல் 95 சதவீதம் தங்கம் கிடைக்கிறது. இந்தத் துறை ஒழுங்குப்படுத்தபடாத துறையாக உள்ளது. ஒழுங்குப்படுத்தப்பட்ட சந்தையின் பங்களிப்பு 10 சதவீதத்திற்கும் குறைவு.


எஸ்எம்பிஸ்டோரி: உங்கள் வணிகம் உங்கள் வாடிக்கையாளர்களிடம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது? நீங்கள் எத்தகைய சவால்களை சந்திக்கிறீர்கள்?


ராகுல் ஜோசப்: எங்கள் கிளைகளுக்கு வருகை தரும் ஒவ்வொரு வாடிக்கையாளருமே தேவை இருப்பதால்தான் வருகின்றனர். இதற்கு முன்பு மக்களிடமிருந்து தங்கத்தை வாங்கிக்கொள்ளும் சேவையை வழங்குவதில் சந்தையில் இடைவெளி இருந்தது. அதை நாங்கள் வெற்றிகரமாக நிரப்பியுள்ளோம். அனைவரிடமும் தங்கம் இருக்கலாம். ஆனால் தேவை இருக்கும் நேரத்தில் அவற்றை பணமாக்குவதற்கான இடம் இல்லை. இங்குதான் வொயிட் கோல்ட் கைகொடுக்கிறது. தங்கத்தைப் பணமாக மாற்ற விரும்பிய ஒரு லட்சத்திற்கும் மேலானோருக்கு நாங்கள் உதவியுள்ளோம்.


மேலும் நாங்கள் தொழில்நுட்பம் சார்ந்து செயல்படும் நிறுவனம் என்பதால் தங்கத்தை பரிசோதனை செய்வதற்கும் மதிப்பிடுவதற்கும் மிகச்சிறந்த நடைமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளோம். எனவே இந்தத் துறையில் ஒரு புதிய அளவுகோலை உருவாக்கியுள்ளோம். தங்கம் வாங்கப்படும் முறையில் படிப்படியாக புரட்சியை ஏற்படுத்தி வருகிறோம்.


நான் ஏற்கெனவே குறிப்பிட்டது போல தங்கம் வாங்கப்படுவது ஒழுங்குபடுத்தப்படாத சந்தையாகவே உள்ளது. இதனால் இத்தனை ஆண்டுகளாக இந்தத் துறை குறித்த தவறான கருத்து உருவாகியுள்ளது. தங்கம் வாங்கும் நிறுவனங்கள் அனைத்துமே மோசடி செய்கின்றன என்கிற கண்ணோட்டம் உள்ளது.


தங்கத்தின் உண்மையான மதிப்பைக் காட்டிலும் குறைவான பணத்தையே வழங்குவார்கள் என்றும் சொல்லப்படுகிறது. தொழில்நுட்பம், வெளிப்படைத்தன்மை, முறையான செயல்பாடுகள் ஆகியவை இந்தக் கண்ணோட்டத்தை மாற்றும் என்று வொயிட் கோல்ட் திடமாக நம்புகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த மாற்றத்தை நோக்கியே செயல்பட்டு வருகிறோம்.

2

எஸ்எம்பிஸ்டோரி: உங்கள் வணிக செயல்பாடுகளில் டிஜிட்டல் தொழில் நுட்பங்களை எவ்வாறு பயன்படுத்தி வருகிறீர்கள்?


ராகுல் ஜோசப்: எங்களது தலைமை அலுலகத்தில் உள்ள வல்லுநர்கள் அடங்கிய குழு நிறுவன செயல்பாடுகளை சிறப்பாக நிர்வகித்து வருகின்றனர். துறைசார் நிபுணர்கள் இந்தக் குழுவில் உள்ளனர்.


வாடிக்கையாளர்களின் தங்கம் சிறந்த ஸ்பெக்ட்ரோமீட்டர் கொண்டு பரிசோதிக்கப்படுகிறது. இதனால் அவர்களது நகைகளில் உள்ள தங்கம் மற்றும் உலோகக் கலப்பு மில்லிகிராம் அளவில் துல்லியமாக பிரித்துக்காட்டப்படும். பின்னர் இந்தத் தரவுகள் எங்களது தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு எந்த வகையிலும் மாற்ற முடியாதவாறு பாதுகாப்பாக சேமிக்கப்படும்.


எங்களுக்குச் சொந்தமான மென்பொருளில் வாடிக்கையாளர்கள் தரவுகள் பதிவிடப்படும். இறுதியாக டிஜிட்டல் முறையில் வாடிக்கையாளர்கள் பணத்தைப் பெற்றுக்கொள்வார்கள். இந்த செயல்முறை காரணமாக பல்வேறு குழப்பங்கள் தவிர்க்கப்படுகின்றன.


ஒட்டுமொத்த செயல்முறையும் 30 நிமிடங்களில் நிறைவடைந்துவிடும். வாடிக்கையாளர்களுக்கு எந்த சிரமமும் இருக்காது. வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையளிப்பதற்காக மனிதத் தவறுகள் ஏதும் நடைபெறாதவாறு அவற்றை எங்கள் செயல்முறைகளில் இருந்து நீக்கிவிடுகிறோம்.


எங்கள் மார்கெட்டிங் நடவடிக்கைகள் முழுவதும் டிஜிட்டல் ரீதியாகவே மேற்கொள்ளப்படுகிறது. கிட்டத்தட்ட அனைத்து போட்டியாளர்களும் பாரம்பரிய மார்கெட்டிங் முறைகளையே பின்பற்றினாலும் நாங்கள் வணிக முயற்சியைத் தொடங்கிய நாள் முதல் டிஜிட்டலில் கவனம் செலுத்தி வருகிறோம்.


எங்களது மார்கெட்டிங் செலவுகளில் 80 சதவீதம் டிஜிட்டல் செயல்பாடுகளுக்காகவே செலவிடப்படுகிறது. செலவீனங்கள் குறையவும் அளவு அதிகரிக்கவும் இது உதவுகிறது.


வாடிக்கையாளர்கள் விற்க நினைக்கும் தங்கத்தின் மதிப்பை கணக்கிட உதவும் வகையில் எங்கள் வலைதளத்தில் ஒரு டூல் உருவாக்கியுள்ளோம். எனவே வாடிக்கையாளர்கள் தகவல்களை நிரப்பி எளிய முறையில் தங்களிடம் உள்ள தங்கத்தின் மதிப்பைத் தெரிந்துகொள்ளலாம்.


எஸ்எம்பிஸ்டோரி: உங்களது வருங்கால திட்டங்கள் என்ன?


ராகுல் ஜோசப்: ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் தங்கம் வாங்கும் மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுக்கவேண்டும். ஒவ்வொரு மாநிலங்களிலும் குறைந்தபட்சம் 50 கிளைகளுடன் இந்தியா முழுவதும் செயல்படவேண்டும் என்பதே எங்களது திட்டம். இந்த ஆண்டு எங்களது கிளைகளை 100-ஆக விரிவுபடுத்த உள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய மாநிலத்தில் விரிவடைய திட்டமிட்டுள்ளோம்.


அடுத்த ஐந்தாண்டுகளில் 500 கிளைகளுடன் விரிவடைந்து ஒரு ஆண்டில் 6,000 கிலோவிற்கும் கூடுதலாக தங்கம் வாங்கும் அளவிற்கு செயல்படவேண்டும் என்பதே எங்களது நோக்கம். இதனிடையில் NBFC உரிமம் பெற்று தங்க நகைக் கடன் வழங்கும் சேவையைத் தொடங்கவும் விரும்புகிறோம். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு முழுமையான சேவையளிக்கமுடியும்.


ஆங்கில கட்டுரையாளர்: பாலக் அகர்வால் | தமிழில்: ஸ்ரீவித்யா

Want to make your startup journey smooth? YS Education brings a comprehensive Funding Course, where you also get a chance to pitch your business plan to top investors. Click here to know more.

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

Our Partner Events

Hustle across India