உலக அளவில் சைபர் தாக்குதல்கள் அதிகரிப்பது ஏன்?
சர்வதேச அளவில் 61 நிறுவனங்களில் ஒன்று, 2021 ல் சைபர் மோசடிக்கு இலக்காகி உள்ளது. நிறுவனங்கள் நவீன சைபர் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவதோடு, சைபர் பாதுகாப்பில் மேம்பட்ட திறன்களை கொண்ட ஊழியர்களை கொண்டு தங்கள் குழுவை மேலும் வலுவாக்க வேண்டும்.
பல்வேறு துறைகளில் சைபர் தாக்குதல்கள் மற்றும் சைபர் மீறல்கள் நிகழ்வது அதிகரித்துள்ளன. பெருந்தொற்றுக்கு பிறகு, பலரும் வீட்டில் இருந்தே பணியாற்றும் நிலையில் இந்த போக்கு இன்னும் தீவிரமாகியுள்ளது.
டிஜிட்டல்மயமாக்கல் அதிகரித்திருப்பது மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனை உயர்வு ஆகிய அம்சங்களும் இதற்குக் காரணாக அமைகிறது. தகவல் அமைப்பு பாதுகாப்பு சங்கத்தின் அண்மை அறிக்கை இந்த போக்கை சுட்டிக்காட்டுகிறது.
பெருந்தொற்று காலத்தில் சர்வதேச அளவில் 63 சதவீதம் சைபர் தாக்குதல் அதிகரித்துள்ளதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், உலகில் அதிகம் தாக்குதலுக்கு உள்ளான நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது.
திறன் பற்றாக்குறை
கோவிட்-19, மோசடி நபர்கள், ஹேக்கர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. அதிகரிக்கும் தாக்குதல்களினால், தாக்குதல்களை தடுக்கும் திறன் கொண்ட ஊழியர்கள் பணிக்கு வைத்திருப்பது சர்வதேச அளவில் நிறுவனங்களுக்கு இன்றியமையாததாகிறது.
ஏ.ஐ, எம்.எல் போன்ற நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது, அதிகரிக்கும் தானியங்கியம் ஆகியவை சைபர் தாக்குதல்கள் அதிகரிக்கக் காரணமாக அமைந்துள்ள நிலையில், இத்தகைய நவீன தொழில்நுட்பங்களை புரிந்து கொள்ளும் ஆற்றல் கொண்ட தொழில்முறை ஊழியர்கள் குறைவாக இருப்பதும் ஒரு காரணமாக அமைகிறது.
சர்வதேச லாப நோக்கில்லாத அமைப்பான ஐ.எஸ்.சி நடத்திய ஆய்வு, இந்த காலத்தில் சைபர் பாதுகாப்பு ஊழியர்கள் மற்ற ஐடி பணிகளில் ஈடுபடுத்தப்பட்டதாகத் தெரிவிக்கிறது.
செயல்திறன் தீர்வுகள்
தரவுகள் கசிவு மற்றும் சைபர் தாக்குதல்கள் அதிகரித்து வருவது நிதர்சனம். டிஜிட்டல்மயமாக்கல், டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரிப்பு சூழலில் சைபர் தாக்குதல்கள் வழிமுறைகளும் மாறி வருகின்றன. இந்த நிலையில், திறன் வாய்ந்த ஊழியர்கள் பற்றாக்குறைக்கு நடுவே நிறுவனங்கள் இந்த சவாலை எப்படி சமாளிக்கும் எனும் முக்கியக் கேள்வி எழுகிறது.
இந்தத் தாக்குதல்களை சமாளிக்க, சரியான சாதனங்கள் மற்றும் பங்குதாரர்கள் தேவை. பாதுகாப்பான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க இது மிகவும் அவசியம். தகுதி வாய்ந்த நபர்களுடன் இணைந்து அடிக்கடி ஆய்வுகளை மேற்கொண்டு இடைவெளிகளை கண்டறிவது அவசியம்.
சைபர் பாதுகாப்பு கலாச்சாரம்
நிறுவனங்களைப் பொருத்தவரை, ஊழியர்கள் தான் பலவீனமான இணைப்பாகும். பலவிதங்களில் தாக்குதல்கள் நடைபெற்று வரும் நிலையில், சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வில் கவனம் செலுத்துவது அவசியம்.
தொடர் பயிற்சி, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், இடர்களை எதிர்கொள்ளவும், இடர் தடுப்பு நடவடிக்கைகளை ஊழியர்கள் பின்பற்றவும் உதவும். வீ பாரம் அமைப்பின் தகவல்படி,
2021ல் உலகில் 61 நிறுவனங்களில் ஒன்று சைபர் தாக்குதலுக்கு இலக்கானது. எனினும், டிஜிட்டல்மயமாக்கல் காரணமாக தரவுகள் கசிவு, சைபர் தாக்குதல் இனி வரும் காலங்களுல் அதிகரிக்கும் என எச்சரிக்கின்றனர்.
தொழில்நுட்பம் மாறிக்கொண்டே இருப்பதால் தகுதி வாய்ந்த நபர்களுக்கான பற்றாக்குறை நிலவுகிறது. டிஜிட்டல் மாற்றம் காரணமாக, ஊழியர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி அளித்து, திறன் இடைவெளியை போக்குவது அவசியமாகிறது.
தயார் நிலையில் இருக்கும், எதிர்காலத்திற்கு ஏற்ற ஊழியர்கள் குழுவால் தான் சைபர் தாக்குதலை தடுக்க முடியும். எனவே, நிறுவனங்கள் நவீன சைபர் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவதோடு, சைபர் பாதுகாப்பில் மேம்பட்ட திறன்களை கொண்ட ஊழியர்களைக் கொண்டு தங்கள் குழுவை மேலும் வலுவாக்க வேண்டும்.
ஆங்கில கட்டுரையாளர்: குணால் பஜாஜ் | தமிழில்: சைபர் சிம்மன்