இமாலய பகுதியின் பெண் விவசாயிகள் நிலையான வருமானம் ஈட்ட உதவும் வனவிலங்கு ஆர்வலர்!
வனவிலங்கு ஆர்வலரான ஹிமானி நவ்டியல் பெண் விவசாயிகள் ஆர்கானிக் கிவி சாகுபடியில் ஈடுபட்டு வருவாய் ஈட்ட உதவுகிறார்.
ஹிமானி நவ்டியல் வனவிலங்குகள் பிரிவில் ஆர்வம் கொண்டவர். காடுகள் இவருக்கு மிகவும் பிடித்தமான இடம். காட்டில் வாழும் உயிரினங்கள் எப்படி நடந்துகொள்கின்றன? இதுபோன்ற பகுதிகளுக்கு அருகில் வசிக்கும் மனிதர்களின் வாழ்க்கைமுறை எப்படி உள்ளது? வனவிலங்குகளும் மனிதர்களும் எப்படி ஒன்றாக அருகருகில் வசிக்கிறார்கள்? இதுபோன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடைகாண விரும்பினார்.
இதுபற்றி ஆய்வு செய்ய விரும்பியவர் 2014-ம் ஆண்டு உத்தராகண்ட் மாநிலத்தின் மண்டல் வேலி பகுதிக்குச் சென்றார்.
ஒருபுறம் விலங்குகள் குறிப்பிட்ட சூழலில் எப்படி நடந்துகொள்கின்றன என்பதை கவனிக்கத் தொடங்கினார். மற்றொரு புறம் உள்ளூர் மக்களுடன் கலந்துரையாடினார். அவர்களது சமூக பொருளாதார நிலையைக் கேட்டறிந்தார். கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக இருப்பதையும் பால் விற்பனை மூலம் சம்பாதித்து அவர்கள் வாழ்க்கை நடத்தி வருவதையும் புரிந்துகொண்டார்.
“கால்நடைகள் மேய்வதற்கு வேறு இடம் இல்லை, காடுகளை நம்பியே இருந்தன. இதனால் காட்டின் தரம் பாதிக்கப்பட்டது. வனவிலங்குகள் விளைநிலங்களை நோக்கியும் செல்கின்றன. காடுகளையும் வனவிலங்குகளையும் பாதுகாக்கவேண்டும்; அதேசமயம் இமாலயப் பகுதிகளில் வசிப்போரின் வருவாயைப் பெருக்கவேண்டும்; இவ்விரண்டு முக்கிய நோக்கங்களுடன் என் பிராஜெக்ட் உருவாக்கப்பட்டது,” என்கிறார் ஹிமானி.
தற்போது உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள 'ருத்ரநாத் மஹிலா கிராம் சங்கதான்’ என்கிற மகளிர் சுய உதவிக் குழுவிற்கு உதவ நிதி திரட்டி வருகிறார்.
இமாலயப் பகுதி பெண்களுக்கு உதவி
ஹிமானி உத்தராகண்டில் உள்ள ஹெச்.என்.பி கர்வால் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி ஃபாரஸ்ட்ரி பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வைல்ட்லைஃப் பயாலஜி பிரிவில் எம்.எஸ்சி படித்தார்.
ஜப்பானில் இருக்கும் கியோடோ பல்கலைக்கழகத்தில் விலங்குகளின் நடத்தை (primate behavioural ecology) பிரிவில் பிஎச்டி பெற்றார். ஹிமானி இமயமலைப் பகுதியில் பிறந்து வளர்ந்தவர். கடினமான நிலப்பரப்பில் வாழ்வதில் இருக்கும் சிரமங்களைப் பற்றி ஹிமானி நன்கறிந்திருந்தார்.
ஆணாதிக்க சமூகம் என்பதால் பெண்களுக்கு படிப்பதற்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.
ஹிமானி குடும்பத்தின் ஆதரவுடன் படித்தார். எத்தனையோ சவாலான சூழல்களைக் கடந்து வந்துள்ளார். வனவிலங்கு ஆராய்ச்சியாளர் என்பதால் தனியாக காட்டிற்கு செல்லவேண்டியிருந்தது. இவரது மேற்பார்வையாளரும் குடும்பத்தினரும் ஊக்கமளித்துள்ளனர்.
”நான் முதல் முறை மண்டல் வேலி சென்றபோதே அங்கிருந்தவர்கள் என்னிடம் அன்பாக நடந்துகொண்டனர். நான் வனவிலங்குகளுக்கு ஆதரவாக மட்டும் பேசவில்லை என்பதையும் கிராமத்தின் மேம்பாட்டையும் கருத்தில் கொண்டே செயல்படுகிறேன் என்பதையும் அவர்களுக்குப் புரியவைப்பது கடினமாக இருந்தது,” என்று ஹிமானி நினைவுகூர்ந்தார்.
அந்தப் பகுதியின் பருவநிலைக்கு கிவி பழ சாகுபடி ஏற்றதாக இருக்கும் என்பதை ஹிமானி தெரிந்துகொண்டார். கிவி பழத்திற்கு சந்தையில் நல்ல விலை இருந்தது. வனவிலங்குகளால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. குறைவான மனித உழைப்பு இருந்தாலே போதுமானது.
ஹிமானியின் கிவி சாகுபடி பிராஜெக்ட் வனவிலங்கு பாதுகாப்பிலும் பெண் விவசாயிகளுக்கு வருமான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பதிலும் கவனம் செலுத்துகிறது.
”என்னால் முடியுமானால் மற்ற கிராமப்புற பெண்களாலும் முடியும். இந்தியாவின் கிராமப்புறங்களில் இருக்கும் ஆயிரக்கணக்கானோருக்கு இவர்கள் முன்மாதிரியாக இருப்பார்கள்,” என்கிறார்.
ஹிமானியின் பிராஜெக்டிற்கு சர்வதேச அளவில் உதவித்தொகை பெறமுடியவில்லை. Impactguru.com தளம் மூலம் கூட்டு நிதி திரட்டத் தீர்மானித்தார். கிவி சாகுபடியின் ஒவ்வொரு அமைப்பிற்கும் 50,000 முதல் 60,000 ரூபாய் வரை ஆகும்.
“60 ஆண்டுகள் வரை நீடித்திருக்கும் வகையில் ஏற்பாடு செய்வதால் இரும்பு பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் உற்பத்தி செலவு அதிகரிக்கிறது. கிட்டத்தட்ட 50-60 பெண் விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதை இலக்காக நிர்ணயித்திருக்கிறோம். பெறப்படும் நிதித்தொகையைப் பொருத்து இந்த எண்ணிக்கை மாறுபடும்,” என்கிறார்.
இமாலய பகுதிகளில் பெண்களுக்கு வேலைப் பளு அதிகம். வீட்டு வேலைகளையும் கவனித்துக்கொண்டு விவசாய வேலைகளிலும் ஈடுபடுவார்கள்.
இங்குள்ள விளைநிலங்களை வனவிலங்குகள் அடிக்கடி நாசம் செய்துவிடும். இருப்பினும் பெண்கள் கஷ்டப்பட்டு பாரம்பரிய விவசாய முறைகளையே பின்பற்றி வருகின்றனர். இதில், உழைப்புதான் அதிகமே தவிர உற்பத்தி பெரிதாக இருப்பதில்லை.
”பெண்கள் கடுமையாக உழைத்தாலும் எந்தவித பலனும் இருப்பதில்லை. அவர்களுக்குத் தேவையான பணத்தைக் கொடுத்து ஆண்கள் ஆதரிப்பதில்லை. அதுமட்டுமின்றி இந்தியாவில் ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண் விவசாயிகளுக்கு நிலம், கடன், இயந்திரங்கள் போன்றவை எளிதாகக் கிடைப்பதில்லை,” என்கிறார் ஹிமானி.
'ருத்ரநாத் மஹிலா கிராம் சங்கதான்’ மகளிர் சுய உதவிக் குழு தொழில் தொடங்குவதற்குத் தேவையான பொருளாதார உதவியை வழங்குகிறது. மனிதர்களும் வனவிலங்குகளும் அமைதியாக இணைந்து வாழ உதவுகிறது.
ஹிமானி நிதி திரட்டி அதன் மூலம் கிடைக்கும் தொகை முழுவதையும் பெண் விவசாயிகள் ஆர்கானிக் கிவி விவசாயத்தில் ஈடுபடுவதற்காக ஒதுக்குகிறார்.
நிலையான வளர்ச்சி
ஹிமானி 2014-ம் ஆண்டு தனிப்பட்ட ஆராய்ச்சியாளராக தொடங்கினாலும் அவருக்கு யூகே ரஃபர்ட் கிராண்ட் கிடைத்தது. கிராமத்தில் ஒரு நபரை உதவியாளராக நியமித்தார். வனவிலங்குகள் பற்றியும் அவற்றின் நடத்தை பற்றியும் அவருக்குப் பயிற்சியளித்தார்.
இவரது செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்பட்டதால் பல பெண்கள் இவருடன் இணைந்து கொண்டனர். தற்போது ஹிமானியின் குழுவில் 60 தன்னார்வலர்கள் உள்ளனர். இதுதவிர உள்ளூரில் சிலர் உதவுகின்றனர். முதுகலைப் படிப்பு தொடர்பான ஆய்விற்காக சில இண்டர்ன் மாணவர்கள் ஹிமானியுடன் இணைந்துள்ளனர்.
அடுத்த மூன்று முதல் நான்காண்டுகளில் மண்டல் வேலியை கிவி சாகுபடி செய்யப்படும் பகுதியாகவே மாற்றி பெண் விவசாயிகளுக்கு நிலையான வருமானம் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்பதே ஹிமானியின் திட்டம்.
ஆங்கில கட்டுரையாளர்: அபூர்வா பி | தமிழில்: ஸ்ரீவித்யா