'சிஇஒ பதவிக்கு ஒரு முட்டாள் கிடைத்ததும் பதவியை ராஜினாமா செய்றேன்’ - எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு!
ட்விட்டரை கைப்பற்றியதில் இருந்தே சர்ச்சைகளையும், சரிவுகளையும் சந்தித்து வரும் எலான் மஸ்க், அதன் சிஇஓ பதவியில் இருந்து ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளார்.
ட்விட்டரை கைப்பற்றியதில் இருந்தே சர்ச்சைகளையும், சரிவுகளையும் சந்தித்து வரும் எலான் மஸ்க், அதன் சிஇஓ பதவியில் இருந்து ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளார்.
எலான் மஸ்க் ட்விட்டர் சர்ச்சை
முன்னணி சமூக ஊடகங்களில் ஒன்றான டிவிட்டரை வாங்க இருப்பதாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ஏப்ரல் மாதம் அறிவித்தார். ஏப்ரல் 4 அன்று ட்விட்டர் நிறுவனத்தின் 9.2% பங்குகளை வாங்கியதன் மூலமாக அதன் பெரும் பங்குதாரராக மாறினார்.
இதனையடுத்து, உலகின் மிகப் பெரிய பணக்காரர் ட்விட்டரின் குழுவில் சேர ஒப்புக்கொண்டார். ஒரு பங்குக்கு $54.20 க்கு நிறுவனத்தை வாங்க முன்வந்தார் எனினும், டிவிட்டர் தரப்பில் பொய் கணக்குகள் தொடர்பான தகவல்கள் அறிவிக்கப்படவில்லை என்று கூறி இந்த ஒப்பந்தத்தில் இருந்து பின் வாங்க இருப்பதாகவும் தெரிவித்தார். மஸ்க்- டிவிட்டர் விவகாரம் சர்ச்சைக்குள்ளாகி நீதிமன்ற விவகாரமாகவும் மாறியது.
இது தொடர்பாக அமெரிக்க நீதிமன்றம் கெடுவும் விதித்தது. இதனையடுத்து, கடந்த அக்டோபர் மாதம் 28ம் தேதி ட்விட்டரை அதிகாரப்பூர்வமாக எலான் மஸ்க் கைப்பற்றினார்.
ட்விட்டரை வாங்கியப்பிறகு பணிநீக்கம், ப்ளூ டிக் பெற 8 டாலர்கள் கட்டணம் போன்ற சர்ச்சையான அறிவிப்புகளும் பங்குச்சந்தையில் எலான் மஸ்கின் பங்குகளை பதம் பார்த்தன. இதனால் கடும் விமர்சனங்களுக்கு ஆளானதோடு, ட்விட்டரின் பெரும்பான்மையான விளம்பரதாரர்களும் அதனை விட்டு வெளியேற காரணமாக அமைந்தது.
டெஸ்லா பங்குகளில் சரிவு:
ட்விட்டரை வாங்கியதில் இருந்தே எலான் மஸ்க் முன்னணி எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் பங்குகள் கடும் சரிவை சந்தித்து வருகிறது. ட்விட்டரை வாங்க முடிவெடுத்த எலான் மஸ்க் தனது டெஸ்லா பங்குகளில் குறிப்பிட்ட சதவீதத்தை விற்றே $21 பில்லியனைத் திரட்டினார்.
போதாக்குறைக்கு ட்விட்டரை சரிவில் இருந்து காப்பதற்காக, நவம்பர் 2021 முதல் டிசம்பர் 2022 வரை மஸ்க் சுமார் $40 பில்லியன் மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளார். இதன் மூலம், டெஸ்லா நிறுவனத்தில், ஓராண்டுக்கு முன், 17 சதவீதமாக இருந்த மஸ்க்கின் பங்கு, தற்போது, 13.4 சதவீதமாக சரிந்துள்ளது.
இதனால் டெஸ்லா முதலீட்டாளர்கள் எலான் மஸ்க் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். எலான் மஸ்க் ட்விட்டரை மட்டுமே கண்டுகொள்வதால் டெஸ்லாவின் பங்குகள் தொடர்ந்து சரிந்து வருவதாகக் குற்றச்சாட்டினர்.
இந்த குற்றச்சாட்டுக்களை அடுத்து டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களை முழுமையாக கண்காணிப்பதற்காக எலான் மஸ்க் ட்விட்டர் சிஇஓ பதவியில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
வாக்கெடுப்பால் அதிரடி முடிவு:
தனது சொந்த முடிகள் குறித்து அவ்வப்போது சோசியல் மீடியாவில் கருத்துக்கணிப்பு நடத்தும் மஸ்க், ட்விட்டர் சிஇஓ பொறுப்பில் நீடிக்கலாமா? அல்லது ராஜினாமா செய்ய வேண்டுமா? என்றும் சமீபத்தில் ட்விட்டரில் கருத்துக்கணிப்பு ஒன்றினை நடத்தினார்.
நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட எலான் மஸ்க்,
“ட்விட்டர் தலைமைப் பொறுப்பில் இருந்து நான் விலக வேண்டுமா? இந்த வாக்கெடுப்பு முடிவுக்கு நான் கட்டுப்படுவேன்,” எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு ஆம், இல்லை என இரண்டு ஆப்ஷன்களையும் கொடுத்திருந்தார். அந்த வாக்கெடுப்பில் 57 சதவீதத்திற்கும் அதிகமானோர் விலக வேண்டும் என்றும், 42 சதவீதத்திற்கும் அதிகமானோர் நீடிக்க வேண்டும் என்றும் வாக்களித்திருந்தனர்.
இந்நிலையில், இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில்,
“முட்டாள் ஒருவர் சிஇஒ பதவிக்கு கிடைத்ததும் ட்விட்டர் சிஇஓ பதவியை ராஜினாமா செய்வேன். அதன் பிறகு, சாஃப்ட்வேர் மற்றும் சர்வர் டீம்களை மட்டும் நான் கவனித்துக் கொள்வேன்,” எனக்குறிப்பிட்டுள்ளார்.
எலான் மஸ்கின் இந்த பதிவும் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டரால் நெருக்கடிக்கு ஆளான எலான் மஸ்க் - மீண்டும் $3.6 பில்லியன் மதிப்பு டெஸ்லா பங்குகள் விற்பனை!