டிவிட்டர், ஃபேஸ்புக் நாளை இருக்குமா? புதிய விதிமுறைகள் காலக்கெடு முடிவதை ஒட்டி அரசின் முடிவு என்ன?
சமூக ஊடகங்களுக்கான புதிய விதிமுறைகளுக்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைவதால், டிவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சேவைகள் நாளை முதல் முடக்கப்படுமா எனும் கேள்வி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் சமூக ஊடகங்கள் பின்பற்ற வேண்டிய புதிய கட்டிப்பாடு விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான காலக்கெடு இன்றுடன் முடியும் நிலையில், டிவிட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடங்களின் நிலை தொடர்பாக கேள்வி எழுந்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 25ம் தேதி, சமூக ஊடகங்கள், ஓடிடி மேடைகள் உள்ளிட்டவற்றுக்கான புதிய கட்டுப்பாடு விதிமுறைகளை மத்திய அரசு அறிவித்தது. சமூக வலைதளங்கள் மற்றும் ஓடிடி தளங்களில் சா்ச்சைக்குரியதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டும் பதிவுகளை 36 மணி நேரங்களுக்குள் நீக்கிவிட வேண்டும் என்பது உள்ளிட்ட அம்சங்கள் புதிய கட்டுப்பாடுகளில் இடம் பெற்றிருந்தன.
மேலும், சமூக ஊட்டக நிறுவனங்கள், குறை தீர்க்கும் அதிகாரி, முதன்மை பொறுப்பு அதிகாரி மற்றும் தொடர்பு அதிகாரி ஆகியோரையும் நியமிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
அவதூறான தகவல்களை முதலில் பரப்பும் நபரை சமூக வலைதளங்கள் கண்டறிய வேண்டும். நீதிமன்றங்கள், அரசுக்கு, அந்த பயனரின் தகவல்களை வழங்க வேண்டும் என்றும் புதிய நடைமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை பின்பற்றுவதற்கு 3 மாதங்கள் அவகாசமும் மத்திய அரசு தரப்பில் அளிக்கப்பட்டு இருந்தது.
சமூக ஊடகங்களுக்கான புதிய கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்ற அளிக்கப்பட்ட காலக்கெடு இன்றுடன் (25/05/21) முடிவடையும் நிலையில், இந்திய சமூக ஊடக நிறுவனமான கூ (Koo ) மட்டுமே விதிமுறைகளை செயல்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிறுவனம், குறை தீர்ப்பு அதிகாரி உள்ளிட்டோரை நியமனம் செய்துள்ளது.
முன்னணி சமூக ஊடக நிறுவனங்களான ஃபேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் இன்னமும் இதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
புதிய கட்டுப்பாடுகளின் கீழ், விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் தடை செய்யப்படும் என்றும் மத்திய அரசு எச்சரித்திருந்ததால், தற்போது காலக்கெடு முடிவடையும் நிலையில், டிவிட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்களின் இந்திய செயல்பாடு என்னாகும் எனும் கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே,
“மே 26ம் தேதி முதல் டிவிட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சேவைகள் இந்தியாவில் தடை செய்யப்படுமா? எனும் வந்ததியும் சமூக ஊடகங்களில் வெளிவரத் துவங்கியுள்ளன. புதிய விதிமுறைகளை பின்பற்றாமல் இருக்கும் சமூக ஊடக நிறுவனங்கள் மீது மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் எனும் கேள்வி தொடர்பான விவாதமும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், டிவிட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த விதிமுறைகளை பின்பற்ற மேலும் கால அவகாசம் கேட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
“தகவல் தொழில் நுட்பத்தின் புதிய விதிகளுக்கு இணங்குவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். சில விஷயங்கள் குறித்து தொடர்ந்து விவாதித்து வருகிறோம். இந்த விஷயங்கள் குறித்து அரசுடன் கூடுதலாக ஆலோசிக்க வேண்டியுள்ளது,” என ஃபேஸ்புக் செய்தி தொடர்பாளர் இந்த விஷயம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்,
மேலும், சில சமூக ஊடக நிறுவனங்கள் இது தொடர்பாக, அமெரிக்காவில் உள்ள தலைமையகத்தில் இருந்து உத்தரவுக்குக் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், சமூக ஊடகங்கள் மூன்று அதிகாரிகளை நியமினம் செய்ய மூன்று மாதங்களுக்கு மேல் எடுத்துக்கொள்வதற்கான காரணம் என்ன? இந்திய சந்தை தொடர்பாக அவை கொண்டுள்ள அலட்சிய போக்கின் அடையாளமாக இது அமைந்திருக்கிறது, என மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரிகள் அதிருப்த்தி கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, டூல்கிட் விவகாரம் தொடர்பாக டிவிட்டர் அலுவலகத்தில் தில்லி காவல்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ள செய்தியும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்டுரை: சைபர் சிம்மன்