கணவருக்காக சத்தான ஸ்னாக்ஸ் செய்து அதையே வணிகமாக்கி லாபம் கண்டுள்ள விஜயா ராஜன்!
2.5 லட்சத்துடன் ஸ்நாக்ஸ் வணிகம் தொடங்கி 2 ஆண்டுகளில் 370 வருவாய் வளர்ச்சியை இவர் எப்படி சாத்தியப்படுத்தினார்?
விஜயா ராஜனின் கணவர் 2015ம் ஆண்டு ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடக்கும் பயிற்சியில் ஈடுபட்டார். இவருக்கு ஊட்டச்சத்து நிறைந்த ஸ்நாக்ஸ் தர விரும்பிய விஜயா ராஜன் அது குறித்து ஆய்வு செய்யத் தொடங்கினார்.
”பதப்படுத்தும் பொருட்கள், செயற்கைப் பொருட்கள், சர்க்கரை போன்றவை சேர்க்கப்படாத ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் வகைகளைத் தேடினேன். அதைக் கண்டறிவது மிகவும் கடினமாக இருந்தது,” என்று விஜயா நினைவுகூர்ந்தார்.
இதுவே சிரிமிரி (SIRIMIRI) என்கிற ஊட்டச்சத்து நிறைந்த ஸ்நாக்ஸ் வணிகத்தை இவர் தொடங்குவதற்கான ஆரம்பப்புள்ளியாக அமைந்தது.
ஊட்டச்சத்து நிறைந்தது என சந்தையில் கிடைக்கக்கூடிய மியூஸ்லி (Muesli), கிரானோலா பார்கள் போன்றவை சர்க்கரை, செயற்கையான பதப்படுத்தும் பொருட்கள், ஆரோக்கியமற்ற பொருட்கள் ஆகியவற்றைக் கொண்டிருப்பதைக் கண்டார். எனவே நட்ஸ், தானியங்கள், பழங்கள் ஆகியவற்றைக் கொண்டு ஊட்டச்சத்து நிறைந்த பல்வேறு ஸ்நாக்ஸ் வகைகளைத் தயாரிக்கும் முயற்சியில் களமிறங்கத் தொடங்கினார் விஜயா.
இதற்குப் பயன்படுத்தும் பொருட்கள் குறித்தும் அவற்றில் உள்ள ஊட்டச்சத்து குறித்தும் கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் வரை செலவிட்டு தீவிரமாக ஆய்வு செய்தார்.
ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்
விஜயா ஆரம்பத்தில் தனது குடும்பத்திற்காக மட்டுமே இந்த வகைகளை தயாரிக்க ஆரம்பித்தார். பின்னர் இதுபோன்ற தயாரிப்பிற்கான தேவை அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே இருப்பதை கவனித்தார். விரைவில் அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் வீட்டில் உள்ள குழந்தைகளிடையே விஜயாவின் ஸ்நாக்ஸ் வகைகள் பிரபலமானது.
2017ம் ஆண்டு ஒரே ஒரு ஊழியருடன் விஜயாவின் வீட்டிலேயே தொடங்கப்பட்ட வணிகம் இன்று பெங்களூருவில் 15 பேர் அடங்கிய குழுவாக 5,000 சதுர அடி கொண்ட தொழிற்சாலையில் செயல்பட்டு வருகிறது.
”2017-ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த முயற்சியை வணிகமாக மாற்ற தீர்மானித்தேன். என் குடும்பத்திற்காக நான் உருவாக்கிய ரெசிபிக்களை தரப்படுத்தி அதன்பிறகு அதிகளவில் தயாரித்து பேக் செய்து விற்பனை செய்ய திட்டமிட்டேன்.
SIRIMIRI தயாரிப்புகளை அமேசான் சந்தைப்பகுதியில் வாயிலாக விற்பனை செய்ய அமேசானின் சஹேலி திட்டத்தில் பதிவு செய்தேன். 2017-ம் ஆண்டில் இறுதி காலாண்டில் இதில் விற்பனை செய்வதற்கான வெவ்வேறு தயாரிப்பு வகைகளை இறுதியாக முடிவு செய்தேன்,” என்றார்.
ஸ்பானிஷ் மொழியில் SIRIMIRI என்றால் “சிறு துளி” என்று பொருள். கன்னட மொழியில் SIRI என்பது லக்ஷ்மி கடவுள். SIRIMIRI என்கிற பெயர் மக்களைக் கவரும் வகையில் இருப்பதுடன் நினைவில் வைத்துக்கொள்ளவும் எளிதாக இருக்கும் என்பதால் இதையே பிராண்ட் பெயராக வைக்க எண்ணினார் விஜயா.
ஆரம்பத்தில் SIRIMIRI மூன்று வகையான எனர்ஜி பார்கள் மற்றும் மூன்று வகையான மியூஸ்லி தயாரிப்புகளை அமேசான் தளத்தின் மூலம் விற்பனை செய்யத் தொடங்கியது. தற்போது வாடிக்கையாளர்களின் தேவையை அடிப்படையாகக் கொண்டு எட்டு வகையான ஹெல்த் பார், ஆறு வகையான மியூஸ்லி, ஒரு ஹெல்த் மிக்ஸ் வகை என அதன் தயாரிப்புகள் விரிவடைந்துள்ளது.
”தயாரிப்புகளை பட்டியலிடும் முறை குறித்தும் பிரத்யேகமாக விற்பனை செய்யும் முறை குறித்தும் நாங்கள் புரிந்துகொள்ள அமேசான் சஹேலி திட்டத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் உதவினார்கள். இத்திட்டம் வணிகம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்த நுண்ணறிவுகளை வழங்கியதுடன் பேக்கேஜிங், சந்தைப்படுத்துதல், போக்குவரத்து போன்ற பகுதிகளிலும் ஆதரவளித்து எங்கள் தயாரிப்புகள் இறுதி பயனரைச் சென்றடைய உதவியது,” என்றார் விஜயா.
மேலும் SIRIMIRI மிகப்பெரிய விநியோக உத்திகளை வகுப்பதற்காக செலவிடக்கூடிய பெருநிறுவனம் அல்ல. அமேசான் தளத்தில் விற்பனை செய்வதன் மூலம் தயாரிப்புகளை சேமித்து வைப்பதற்கோ விற்பனைக்காக காட்சிப்படுத்துவதற்கோ பிரத்யேகமாக இடம் ஒதுக்கி செலவிடவேண்டிய அவசியம் இல்லாமல் போனது என்கிறார். தயாரிப்புகளில் அதிக லாபம் ஈட்டவும் கூடுதல் முதலீடு செய்து வணிகத்தை வளர்ச்சியடையச் செய்யவும் அமேசான் தளம் இவருக்கு உதவியுள்ளது.
சரியான வாடிக்கையாளர்களைக் கண்டறிதல்
விஜயா ஸ்நாக்ஸ் தயாரிப்புகளுக்குத் தேவையான பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் வாங்குவதற்காக ஆரம்பத்தில் 2.5 லட்ச ரூபாய் முதலீடு செய்தார்.
“நாங்கள் வளர்ச்சியடைகையில் உற்பத்தி அளவை அதிகரிக்கவேண்டியிருந்தது. எனவே 5,000 சதுர அடி கொண்ட தொழிற்சாலைக்கு மாற்றலானோம். அதுமட்டுமின்று ஒரே ஒரு நபருடன் தொடங்கப்பட்ட முயற்சி 15 உறுப்பினர்கள் அடங்கிய குழுவாக மாறியது. தயாரிப்பிற்காகவும் பேக்கிங் செய்யவும் கூடுதல் இயந்திரங்களை இணைத்துக்கொண்டோம். அமேசான் தளத்தில் விற்பனை செய்யத் தொடங்கியது முதல் எங்களது விற்பனை அளவு 20 மடங்கு அதிகரித்ததால் இந்த முதலீடு சாத்தியமானது. அமேசான் வாயிலான விற்பனை காரணமாக எங்களது வருவாய் 370% அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த நிதியாண்டு 500% வளர்ச்சியடைவோம்,” என்றார்.
SIRIMIRI வளர்ச்சியைக் கண்ட விஜயாவின் கணவர் வணிக செயல்பாடுகளில் இணைந்துகொள்ள அதிக சம்பளத்துடன்கூடிய பிரிட்டிஷ் டெலிகாம் நிறுவனத்தின் பணியை விட்டு விலகினார். தற்போது பிராண்டின் பல்வேறு வணிக நடவடிக்கைகளை நிர்வகித்து வருகிறார்.
ஊட்டச்சத்து நிறைந்த ஸ்நாக்ஸ் வணிகப் பிரிவில் செயல்படத் தொடங்கியது எளிதான முயற்சியாக இருக்கவில்லை என்கிறார் விஜயா.
“எங்களது தயாரிப்புகளுக்கான சரியான நுகர்வோரைக் கண்டறிந்து அவர்களது விருப்பமான தேர்வாக மாறுவது மிகப்பெரிய சவாலாகவும் கற்றல் அனுபவமாகவும் இருந்தது. எனக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவு வணிகத்தில் ஆர்வம் அதிகம் இருப்பதால் இந்தப் பகுதியில் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவேன்,” என்கிறார்.
SIRIMIRI வளர்ச்சி தொடர்பான நீண்ட கால திட்டம் வகுத்துள்ளார் இந்நிறுவனர். ஊட்டச்சத்து நிறைந்த ஸ்நாக்ஸ் வகைகளை விரும்பும் நுகர்வோரை அதிகளவில் சென்றடைவதில் இந்நிறுவனம் தீவிர முனைப்புடன் செயல்படுகிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக புதுமையான பல தயாரிப்புகளைத் தொடர்ந்து வழங்கி தற்போதுள்ள வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வாங்குவதை உறுதிசெய்வதில் கவனம் செலுத்தப்படுகிறது.
”அமேசான் சஹேலி போன்ற திட்டங்கள் மின்வணிக உலகில் புதிதாக தடம் பதிக்கும் பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்கிறது. SIRIMIRI வளர்ச்சிப்பாதையில் பயணிக்க இத்திட்டம் நிச்சயம் உதவியது,” என்றார் விஜயா.
ஆங்கில கட்டுரையாளர்கள்: ரேகா பாலகிருஷ்ணன் மற்றும் தன்வி துபே | தமிழில்: ஸ்ரீவித்யா