தரமான, சுவையான ஃபுட்ஸ்: ரூ.40 கோடியில் உணவுப் பொருள் சாம்ராஜியம் அமைத்த பெங்களூரு நிறுவனம்!
பெங்களூர் நகரில் ஓர் சிறிய மசாலா விற்பனை கடையாகத் தொடங்கி, 30 ஆண்டுகள் கடந்து இன்று மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது இந்நிறுவனம்.
ஐந்தும், பத்தும் இருந்தால் அறியாதவளும் கறி சமைப்பாள் என்பது பழமொழி. இதில் ஐந்தும், பத்தும் என்பது அஞ்சரைப் பெட்டியைக் குறிக்கும். அதில் உள்ள மசாலாப் பொருள்களைப் பயன்படுத்தினால் சமைக்கவே தெரியாத பெண்ணாக இருந்தாலும் அருமையாக சமைத்து விடுவாள் என்பது இதன் பொருள்.
அந்தளவுக்கு இந்திய உணவு வகைகளில் சுவைக்கு சேர்க்கப்படும் மசாலா பொருள்களின் பங்கு சமையலில் முக்கியமானது. பல்வேறு மசாலா பொருள்களை சரியான விகிதத்தில் அரைத்து, அதனை சமையலில் சேர்க்கும்போது, உணவுப் பொருளின் சுவை பன்மடங்காக பெருகும் என்பது பாரம்பரியமான சுவையான இந்திய சமையலின் ரகசியம்.
ஆனால், இப்போது கையால் தயார் செய்யும் மசாலாக்களின் ஆயுள் முடிந்து, ரெடிமேடாக பாக்கெட்களில் அடைத்து வைத்து விற்கப்படும் இன்ஸ்டன்ட் மசாலாக்கள் தான் சமையலில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதில், நமது பாரம்பரிய சுவை இருக்கிறதோ இல்லையோ, வேலைக்குச் செல்லும் மகளிருக்கு இவை ஓர் வரப்பிரசாதம் என்பது மறுக்க முடியாத உண்மை.
இதனை பயன்படுத்திக் கொண்ட எம்.டி.எச், எம்.டி.ஆர் மற்றும் எவரெஸ்ட் மசாலா தயாரிப்பு நிறுவனங்கள் மக்கள் மத்தியில் தங்கள் தயாரிப்புகளை கொண்டு சென்று இத்துறையில் மிகப் பெரிய சந்தையை ஏற்படுத்திவிட்டனர்.
இதேத் துறையில் கால்பதித்து, தனது தந்தை நடத்திய சாதாரண மசாலா விற்பனையகத்தை, ஓர் மிகப் பெரிய மசாலா தயாரிப்பு சாம்ராஜியமாக மாற்றியவர் பெங்களூரு தொழிலதிபர் நரேஷ். இவரின் குவாலிட்டி மசாலா இந்தியாவில் முன்னணி நிறுவனமாக ஆண்டொன்றுக்கு ரூ.40 கோடி விற்றுமுதல் செய்து சாதனை படைத்துள்ளது.
1960ஆம் ஆண்டுவாக்கில், பவர்லால்ஜி பகாரியா ராஜஸ்தானை விட்டு வெளியேறி, பெங்களூருக்கு வந்து தொழில் தொடங்கினார். நகரில் ஓர் சிறிய மசாலா விற்பனை கடையைத் தொடங்கி, 30 ஆண்டுகளாக நடத்தி வந்தார்.
பல ஆண்டுகளாக, தனது தந்தை மசாலா விற்பனையில் ஈடுபட்டு வருவதை கவனித்த நரேஷ், தனது தந்தையிடம் மசாலா விற்பனை செய்வதை விட, அதனை உற்பத்தி செய்து விற்பனை செய்வது சிறந்தது என்ற தனது எண்ணத்தைக் கூறினார்.
இதுகுறித்து அவர் SMBStoryயிடம் கூறியதாவது,
"நான் படிக்கும்போதே, எங்களின் அந்த சிறிய கடையிலேயே நாங்கள் 4 வகையான மசாலாக்களை தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கினோம். நான் என் படிப்பை முடித்தபின், மசாலா உற்பத்தி தொழிலை நடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்," என்கிறார்.
நரேஷ் அதிக மசாலா பொருள்களைத் தயாரிக்க விரும்பினார். இதற்காக, 1998ஆம் ஆண்டு அவர் பெங்களூரு, மாகடி சாலையில் 300 சதுர அடியில் ஓர் பெரிய கடைக்கு இடம் மாறினார். தொடர்ந்து தனது வணிக பிராண்டுக்கு பகாரியா உணவுகள், குவாலிட்டி உணவுகள் என்று பெயரிட்டார்.
வணிகத்தில் புதிதாக 8 புதிய மசாலா தயாரிப்புகள் சேர்க்கப்பட்டன. இவர்களது தயாரிப்புகள் பெங்களூருக்கும் அப்பால் துமகுரு, அனந்தபூர் போன்ற நகரங்களில் நன்கு விற்பனையாகின. இதையடுத்து, அடுத்த ஒரே ஆண்டில், நரேஷ் மற்றொரு உற்பத்தி பிரிவை, முந்தையதை விட ஐந்து மடங்கு பெரியதாக திறந்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது,
”நாங்கள் மற்ற பிராண்டுகளை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தோம். அப்போது, ஓர் பிரபல தானிய பிராண்ட் நிறுவனம் காலை உணவுக்கான தானிய உணவுப் பொருளை அறிமுகப்படுத்தியது. இதே தானிய உணவுப் பொருளை தரமாக நன்கு பேக் செய்து, மலிவு விலையில் விற்பனை செய்தால் சிறப்பாக இருக்கும் என தோன்றியது.”
நரேஷின் இந்த எண்ணம், அவரது நிறுவனத்தின் தற்போதைய உற்பத்தித் திறன்களை மேம்படுத்துவதற்கும், சொந்த தானியங்களை உற்பத்தி செய்யத் தொடங்குவதற்கும் தூண்டியது. இதில், அவர்கள் உடனடி வெற்றியும் பெற்றனர்.
"இதையடுத்து எங்கள் சந்தைகள் தென்னிந்தியாவின் அனைத்து பிராந்தியங்களுக்கும் விரைவாக விரிவடைந்தன. தற்போது எனது மருமகன் தீரஜ் ஜெயின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தலை கவனித்து வருகிறார்,” என்று நரேஷ் தெரிவிக்கிறார்.
2006ஆம் ஆண்டு முதல், நரேஷ், தனது வணிகத்தை பொது வர்த்தகம், நவீன வர்த்தகம், மின் வணிகம் மற்றும் ஏற்றுமதி என நான்கு பிரிவாக பிரித்து தனித்தனியாக கவனம் செலுத்தினார்.
“பொது வர்த்தகத்தில், தென்னிந்தியா மற்றும் மேற்கு இந்தியா முழுவதும் 35,000-க்கும் மேற்பட்ட உள்நாட்டு சில்லறை விற்பனையாளர்களுடன், 450க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்கள் உள்ளனர்.”
நவீன வர்த்தகத்தில், டிமார்ட், பிக் பஜார், மெட்ரோ கேஷ் அண்ட் கேரி, ரிலையன்ஸ், மோர் (ஆதித்யா பிர்லா குழு), வால்மார்ட் போன்றவர்களுக்கு எங்கள் நிறுவனம் மசாலாக்களை விநியோகம் செய்கிறது.
குவாலிட்டி தனது மசாலாக்கள் மற்றும் தானியங்களை அமேசான் இந்தியா, ஃபிளிப்கார்ட் மற்றும் பிக்பாஸ்கெட்டிலும் விற்பனை செய்கிறது. 20க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் இவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 5,000க்கும் மேற்பட்ட சர்வதேச விற்பனை நிலையங்களில் குவாலிட்டி தயாரிப்புகள் கிடைக்கின்றன என்கிறார் நரேஷ்.
பெங்களூரின் சாம்ராஜ்பேட்டை குவாலிட்டி ஃபுட்ஸின் தலைமையிடமாக உள்ளது. இதுதவிர ஹரோஹள்ளியில் இரண்டு ஏக்கரில் உற்பத்தி பிரிவும் உள்ளது. இந்த உள்ளூர் உற்பத்திதான் தனது வெற்றிக்கு முக்கியக் காரணம் எனக் கூறும் நரேஷ், நாங்கள் எந்தவொரு செயற்கை வண்ணங்கள் மற்றும் சுவைகளை எங்கள் தயாரிப்புகளில் சேர்க்கமாட்டோம் என்கிறார்.
மார்க்கெட்டிங்கில் டிஜிட்டல் ஊடகங்களை நோக்கி குவாலிட்டி நகர்ந்ததால், குவாலிட்டி ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் மூலம் எளிதில் நுகர்வோரைச் சென்றடைகிறது. அமேசானில் இதன் விற்பனையை அதிகரிப்பதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
SME Forum Award 2013, Dun & Bradstreet Award for Best Emerging SME , முதலீட்டுக்கான கர்நாடக உச்சி மாநாட்டில் Best Manufacturing Excellence Award (Food category) என குவாலிட்டி பிராண்ட் பல விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
குவாலிட்டி என்றாலே சுவையான உயர்தரமான தானியங்கள், மசாலாக்கள் மற்றும் உடனடி கலவைகள், மலிவான விலையில் கிடைக்கும் என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி, இந்தியாவின் அனைத்து மெட்ரோ நகரங்களுக்கும் எங்கள் தயாரிப்புகளை விரிவுப்படுத்துவதே எங்களின் முக்கிய குறிக்கோளாகும் என்கிறார் நரேஷ்.
ஆங்கிலத்தில்: ரிஷப் மன்சூர், | தமிழில் திவ்யாதரன்.