கறந்த பாலில் சுத்தமான நெய் ப்ராண்ட் தொடங்கி வெற்றி கண்ட 50 வயது பெண்மணி!
பஞ்சாபின் ஜஹாங்கீர் கிராமத்தைச் சேர்ந்த கமல்ஜீத் கவுர் என்கிற கிம்மு 50 வயதில் தொழில் தொடங்கி கிராமத்திலிருந்து சுத்தமான நெய் தயாரித்து பல்வேறு நகரங்களுக்கு விற்பனை செய்கிறார்.
பஞ்சாப் லூதியானாவில் உள்ள ஜஹாங்கீர் என்கிற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் 'கமல்ஜீத் கவுர்’ என்கிற 'கிம்மு’. திருமணம் முடிந்த பிறகு கிராமத்திலிருந்து பரபரப்பான நகர வாழ்க்கைக்கு மாற்றலானார்.
பசுமையான வயல்கள்; வீட்டிலேயே விளைந்த பச்சை பசேல் காய்கறிகள்; சுத்தமான மாட்டுப் பால்; சுத்தமான முறையில் தயாரிக்கப்படும் அசல் நெய்; இப்படி இயற்கை உணவுடன் ரம்மியமான இயற்கைச் சூழலில் வளர்ந்துள்ளார் கிம்மு.
கிராமத்தில் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் சுத்தமான நெய்யை வணிக ரீதியாக இந்தியா முழுவதும் உள்ள நகரங்களுக்குக் கொண்டு சேர்க்கும் யோசனை 50 வயதைக் கடந்த பின்னரே இவருக்குத் தோன்றியுள்ளது.
கடந்த ஆண்டு கிம்முவிற்கு கோரோனா பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடினமான சூழ்நிலையை எதிர்கொண்ட கிம்மு எப்படியோ இந்தக் கொடிய நோயை எதிர்த்து மீண்டுள்ளார்.
பெருந்தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்த கிம்முவிற்கு மறுபிறவி எடுத்தது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்கிற உந்துதல் பிறந்துள்ளது. ஆனால் தொழில் தொடங்க உந்துதல் மட்டும் போதுமா என்ன? குடும்பத்தின் ஆதரவு முக்கியம் அல்லவா?
அதிர்ஷ்டவசமாக கிம்முவின் கணவரும் குழந்தைகளும் மிகப்பெரிய அளவில் ஆதரவாக இருந்துள்ளனர். பிறகென்ன? Kimmu’s Kitchen என்கிற பெயரில் தனது தொழில்முனைவுப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். இதன் மூலம் பண்ணையில் கிடைக்கும் ஃப்ரெஷ்ஷான நெய்யை விற்பனை செய்து வருகிறார்.
கிம்மு தொடங்கியுள்ள Kimmu’s Kitchen ரசாயனங்கள் அல்லது பதப்படுத்தும் செயற்கைப் பொருட்கள் ஏதும் கலக்கப்படாத சுத்தமான நெய்யைப் பாரம்பரிய 'பிலோனா’ முறையில் தயாரித்து விற்பனை செய்கிறது. நேரடியாக கிராமத்தில் இருந்து சுத்தமான முறையில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
துவக்கப்புள்ளி
கிம்மு மும்பிரா பகுதியில் வசிக்கிறார்.
“ஆரம்பத்தில் மும்பிரா பகுதியிலேயே பால் வாங்கி நெய் தயாரித்தேன். ஆனால் எனக்குத் திருப்தியில்லை. நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கொடுத்தேன். அவர்களுக்குப் பிடித்திருந்தது. ஆனால் நான் கிராமத்தில் பார்த்த நெய்யின் மணமும் சுவையும் கிடைக்கவில்லை. குறிப்பிட்ட சூழல், பாலின் தரம், மாட்டுக்குக் கொடுக்கப்படும் தீவனம் என பல அம்சங்கள் சுவையைத் தீர்மானிக்கின்றன,” என்கிறார் கிம்மு.
ஜஹாங்கீரில் இருக்கும் பண்ணையில் கூடுதல் மாடுகள் வாங்கினார். உதவியாட்களைக் கூடுதலாக நியமித்தார். அங்கேயே நெய் தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மும்பைக்கு கொண்டு வரப்பட்டன. மும்பையில் இருந்து மற்ற இடங்களுக்கு விநியோகிக்கப்பட்டன. இப்படியே வணிகம் சூடு பிடித்துள்ளது.
“கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த யோசனை பிறந்தது. சோதனை முயற்சியை அடுத்து ஜனவரி மாத இறுதியில் வலைதளத்தை அறிமுகப்படுத்தினோம். கிம்மு கொரோனா தொற்றில் இருந்து மீண்ட பிறகு சமூகத்திற்கு ஆரோக்கியமானத் தயாரிப்பை வழங்க விரும்பினார்,” என்று பகிர்ந்துகொண்டார் கன்சல்டிங் சிஇஓ, ஹர்பிரீத் சிங்.
நெய் தயாரிப்பு மற்றும் சந்தை தேவை
இந்திய உணவில் நெய் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது. சின்னக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நெய்யை உணவில் விரும்பி சேர்த்துக்கொள்வார்கள்.
கர்ப்பிணிகள், புதிதாகக் குழந்தைப் பெற்ற தாய்மார்கள் போன்றோருக்கும் உணவில் நெய் கலந்து கொடுக்கப்படும்.
Kimmu’s Kitchen நெய் பாரம்பரியமான பிலோனா முறையில் தயாரிக்கப்படுகிறது. இதன்படி, முதலில் பால் தயிராக்கப்படும். இந்தத் தயிரிலிருந்து கடைந்து கிரீம் எடுக்கப்படும். இதைக் கொண்டு நெய் தயாரிக்கப்படும். எந்தவித இயந்திரப் பயன்பாடும் இல்லாமல் கைகளாலேயே நெய் தயாரிக்கப்படுகிறது.
இந்திய சந்தையில் நெய் தயாரிப்பிற்கான தேவை மற்றும் விநியோகம் குறித்து ஹர்பிரீத் சிங் விவரிக்கும்போது,
”நெய்யைப் பொருத்தவரை விநியோகத்தைக் காட்டிலும் தேவை பன்மடங்கு அதிகமாக உள்ளது. வேறு வழியின்றி தேவையைப் பூர்த்தி செய்ய பிரபல பிராண்டுகள் கிரீம் பிளெண்ட் இறக்குமதி செய்கின்றன. உங்கள் கைக்குக் கிடைக்கும் நெய் பெரும்பாலும் ஆட்டுப்பால், ஒட்டகப்பால், எருமை அல்லது பசுவின் பால் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் கிரீமை கலந்து தயாரிக்கப்பட்டதாகவே இருக்கும். ஆனால் பிராண்டுகளை குறைகூறிப் பலனில்லை. ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளிடமிருந்து பாலை சேகரித்துத் தயாரித்தாலும் தேவையை முழுமையாகப் பூர்த்திசெய்துவிட முடியாது,” என்று சுட்டிக்காட்டினார்.
அதிக தரம் – குறைந்த விலை
நேரடியாகப் பண்ணையில் இருந்து பெறப்படும் Kimmu’s Kitchen நெய் லைட்டாக இருக்கும்; பிசுபிசுப்புத்தன்மை இருக்காது; வாசனையைக் கூட்ட அதிகப்படியான நறுமணம் சேர்க்கப்படுவதில்லை; எளிதில் ஜீரணமாகிவிடும் என விவரிக்கிறார் கிம்மு.
மற்ற பிராண்டுகள் ஒரு கிலோ நெய் 3,500 ரூபாய் என விற்பனை செய்யும் நிலையில் Kimmu’s Kitchen நெய் 1,100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
”எங்களுக்குச் சொந்தமான பண்ணையில் எருமை மாடுகளை வளர்த்து பால் கறந்து தயாரிப்பதால் தொழிலாளர்களுக்குக் கொடுக்கும் கூலி தவிர, வேறு எதற்கும் பெரிதாக செலவு செய்வதில்லை. இதனால் எங்களால் குறைந்த விலையில் விற்பனை செய்யமுடிகிறது,” என்றார்.
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் கிம்முஸ் கிச்சன் பிராண்டை விளம்பரப்படுத்தினாலும் உள்ளூர் செய்தித்தாள்களிலும் சானலிலும் விளம்பரத்துகிறார்கள்.
வாடிக்கையாளர்களிடையே இந்தத் தயாரிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 80 சதவீத வாடிக்கையாளர்கள் தொடர்ந்து Kimmu’s Kitchen நெய் வாங்குகிறார்கள்.
”இதை நான் வணிகமாக மட்டும் பார்க்கவில்லை. சமூக நலனிலும் பங்களிக்க விரும்புகிறேன். எங்கள் பகுதியில் பலர் ஏழ்மை நிலையில் இருக்கிறார்கள். எங்கள் முதல் மைல்கல்லை எட்டியதும் ரம்சான் சமயத்தில் பலருக்கு உணவு விநியோகம் செய்தோம். ஒவ்வொரு மாதமுமோ அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறையோ இதேபோல் தொடர்ந்து முடிந்த உதவிகளைச் செய்ய விரும்புகிறோம்,” என்கிறார் கிம்மு.
தற்சமயம் Kimmu’s Kitchen வலைதளத்தில் நெய் கிடைக்கிறது.
”வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வாங்குவதால் அவர்களுக்கு தேவைப்படும் கால இடைவெளியில் தொடர்ந்து விநியோகிக்க சந்தா மாதிரியை அறிமுகப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருகிறோம்,” என்கிறார் கிம்மு.
ஆங்கில கட்டுரையாளர்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: ஸ்ரீவித்யா