1,200 கோடி சாம்ராஜ்யம் உருவாக்கி ‘சுய முயற்சியால் செல்வந்தர் ஆன இளம் இந்திய பெண்’
நவீன தொழில்நுட்ப கூட்டு நிறுவனமான The Vu Group தலைவர் மற்றும் சிஇஓ தேவிதா சரஃப் சமீபத்தில் Hurun India 2020 Rich List of Self-Made Entrepreneurs பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே பெண் ஆவார்.
நவீன தொழில்நுட்ப கூட்டு நிறுவனமான The Vu Group தலைவர் மற்றும் சிஇஓ தேவிதா சரஃப். இவர் சமீபத்தில் Hurun India 2020 Rich List of Self-Made Entrepreneurs பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே பெண் ஆவார்.
நாட்டில் தொழில் துறையில் உள்ள மிகச்சிறந்தவர்களுடன் போட்டியிட்டு 16வது இடத்தைப் பிடித்துள்ளார்.
சுயநிதியில் தொடங்கப்பட்டு தொழில்நுட்பக் கூட்டு நிறுவனமாக உருவெடுத்த இவரது தொழில்முனைவுப் பயணம் எளிதானதாக அமைந்துவிடவில்லை. எத்தனையோ சவால்களைக் கடந்து வந்துள்ளார். இளம் பெண்கள் தொழில்முனைவர்களாகவும் தலைவர்களாகவும் உருவாக தேவிதா உந்துதலளிக்கிறார்.
மேலும் தேவிதா ஃபார்சூன் இந்தியாவின் சக்தி வாய்ந்த 50 பெண்களின் பட்டியல் (2019), GQ அதிக செல்வாக்குள்ள 50 இந்தியர்கள் (2019), இந்தியா டுடே-வின் வணிக உலகில் மாற்றத்தை ஏற்படுத்திய சக்தி வாய்ந்த 8 நபர்கள் (2018) பட்டியல் போன்றவற்றில் இடம்பெற்றுள்ளார்.
தேவிதா இந்த விருது வென்றதன் முக்கியத்துவம், தொழில்முனைவராக புதிய வணிக முயற்சிகளை ஆராய்வது, மற்ற பெண்களுக்கு வழிகாட்டுவது போன்றவை குறித்து ஹெர்ஸ்டோரி இடம் பகிர்ந்துகொண்டார்.
இவருடனான நேர்காணலின் தொகுப்பு இதோ:
ஹெர்ஸ்டோரி: 40 வயதிற்குட்பட்டோர்களில் சொந்த முயற்சியில் தொழில்முனைவில் ஈடுபட்டுள்ள இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளீர்கள். எப்படி உணர்கிறீர்கள்?
தேவிதா: சுயமாக தொழில் முயற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது உற்சாமளிக்கிறது. இந்தப் பட்டியல் வெளியானதில் இருந்து இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து பலர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். எனினும் இதன் மூலம் எனக்கு பொறுப்பு அதிகம் இருப்பதாக உணர்கிறேன்.
ஏனெனில் சரியான வாய்ப்பு கிடைத்தால் இந்தப் பட்டியலில் இருப்பவர்களுடன் கடுமையாக போட்டியிட எத்தனையோ பெண் தொழில்முனைவோர்கள் இந்தியாவில் உள்ளனர்.
மேலும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என கருதுகிறேன். ஏனெனில் இந்தப் பட்டியலில் பெண் தலைமையில் இயங்கும் ஒரே நிறுவனம் என்பது மட்டுமல்லாது லாபகரமாக செயல்படும் ஒரே நிறுவனமும் எங்களுடையதுதான் என்பது கூடுதல் சிறப்பு.
ஹெர்ஸ்டோரி: நாங்கள் இதற்கு முன்பு 2017-ம் ஆண்டு உங்களுடன் உரையாடினோம். அதற்குப் பின்னர் உங்கள் வாழ்க்கையிலும் வணிகத்திலும் ஏற்பட்ட முக்கிய மாற்றங்கள் என்னென்ன?
தேவிதா: தற்போது செயல்படும் அளவைக் காட்டிலும் நான்கில் ஒரு பங்கு வணிக செயல்பாடுகள் மட்டுமே அன்று இருந்தன. இன்று Vu Group 1,000 கோடி ரூபாய் மதிப்புடைய குழுமமாக செயல்பட்டு வருகிறது. இதில் லைஃப்ஸ்டைல் மற்றும் வொர்க்ஸ்டைல் பிரிவுகளும் அடங்கும். நாங்கள் செயல்படும் துறையில் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகிறோம். தற்சமயம் சோனி, சாம்சங் பிராண்டுகள் தவிர நாங்கள் மட்டுமே பிரீமியம் பிராண்டாக உள்ளோம்.
சீனாவில் இருந்து கடும் போட்டி நிலவியபோதும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு முன்னணி வகிப்பது குறிப்பிடத்தக்கது. இந்திய தொழில்முனைவு முயற்சிகளின் வலிமையை இது உணர்த்துகிறது.
தனிப்பட்ட முறையில் இந்த வணிகம் 100 சதவீதம் எனக்கு சொந்தமானது என்பதால் நான் விரும்பும் வகையில் வணிக செயல்பாடுகளை அமைக்கும் அதிகாரம் என்னிடம் உள்ளது. மேலும் நானே எனக்காக ஒரு வீட்டை வாங்கியுள்ளேன். சமூகத்தில் நிலவும் கற்பிதங்களை தகர்த்தெறிவதால் எனது செயல்பாடுகள் முக்கியத்துவம் வாய்ந்தது என கருதுகிறேன்.
நீங்கள் கடினமாக உழைத்து உங்களையே நீங்கள் போட்டியாக கருதினால் மற்றவர்கள் யாரும் உங்களுடன் போட்டியிட முடியாது.
ஹெர்ஸ்டோரி: உங்கள் புதிய வணிக முயற்சிகள் குறித்து பகிர்ந்துகொள்ளுங்கள்.
தேவிதா: கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நமது வாழ்க்கைமுறை வெகுவாக மாறியுள்ளது. எனவே நமது அன்றாட அனுபவங்கள் மேம்படும் வகையில் வருங்காலத்திற்கு உகந்த, நிலையான தீர்வுகள் அவசியம்.
இதைக் கருத்தில் கொண்டு நவீன வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு எங்கள் பிராடக்ஸ் அமைந்துள்ளது. எனவே எங்கள் டிவி ஸ்மார்ட் டிவியாக மட்டுமல்லாமல் பொழுதுபோக்கிற்கு அப்பாற்பட்டு மதிப்பு சேர்ப்பதாக அமைந்துள்ளது. உதாரணத்திற்கு இனி ஜிம் செல்லமுடியுமா என்பது சந்தேகமாக உள்ள இன்றைய சூழலில் நான் தற்போது டிவி முன்பே உடற்பயிற்சி செய்து வருகிறேன்.
இரண்டாவதாக ஒரு தொழில்முனைவராக உலகம் முழுவதும் உள்ள பலருடன் இணைப்பு இருக்கும். இவர்கள் அனைவருடனும் தொடர்பில் இருக்க சிறந்த வழி Meeting by Vu. வருங்கால தேவைகளைக் கருத்தில் கொண்டு எங்கள் ஆய்வகத்தில் அதற்கேற்ப தயாரிப்புகளை உருவாக்கி அறிமுகப்படுத்தி வருகிறோம்.
ஹெர்ஸ்டோரி: சுயநிதியில் தொடங்கப்பட்டு பல்வேறு நிறுவனங்களைக் கொண்ட குழுமாக எவ்வாறு வளர்ச்சியடைந்தீர்கள்?
தேவிதா: 2006-ம் ஆண்டு வணிகம் தொடங்கிய காலம் முதல் சிறப்பாக வளர்ச்சியடைந்து வருகிறோம்.
முக்கியமாக பங்குதாரர்களாக யாரும் இல்லாமலேயே இந்த வளர்ச்சி சாத்தியப்பட்டுள்ளது. ஆரம்பம் முதல் எங்கள் முக்கியக் குழு மாறவில்லை. நாங்கள் அனைவரும் சேர்ந்தே இந்த வளர்ச்சியை எட்டியுள்ளோம். அதேசமயம் கல்லூரிப் படிப்பை முடித்த 2005ம் ஆண்டு நான் முதலில் எழுதிய வணிக திட்டத்தில் இருந்து மாறாமல் இன்றளவும் செயல்பட்டு வருகிறோம்.
எங்கள் வளர்ச்சி நிலையாக இருக்கிறது. செலவுகளை முறையாகக் கட்டுப்படுத்தி செயல்படுகிறோம். இதனால் இன்றைய லாக்டவுன் சமயத்திலும் ஊழியர்களை பணியை விட்டு அனுப்பாமல் சம்பளத்தை முன்பணமாகக் கொடுத்துள்ளோம். நாட்டில் எந்த நிறுவனமும் இப்படிச் செய்யவில்லை.
ஹெர்ஸ்டோரி: மற்ற பெண்கள் தலைவர்களாக உருவெடுக்க வழிகாட்டுவது குறித்து பகிர்ந்துகொள்ளுங்கள்.
தேவிதா: இதில் இரண்டு விதமான அணுகுமுறைகள் உண்டு. ஒன்று நீங்கள் நேரடியாக மக்களை சந்தித்து வழிகாட்டலாம். அடுத்தது நீங்களே முன்னுதாரணமாக இருப்பதன் மூலம் வழிகாட்டலாம்.
முதல் அணுகுமுறையின்படி நான் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 150-க்கும் அதிகமான உரைகளை நிகழ்த்தியுள்ளேன். தொழில்முனைவில் ஈடுபட்டுள்ளவர்கள், ஈடுபடும் ஆர்வமுள்ளவர்கள் என பலரிடம் என்னுடைய பயணத்தைப் பகிர்ந்துகொண்டு ஊக்கப்படுத்தியுள்ளேன்.
அடுத்ததாக நான் முன்னுதாரணமாகச் செயல்படுவதை சமூக ஊடங்கள் மூலம் இளம் பெண்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்.
ஹெர்ஸ்டோரி: இந்தியாவில் பெண் தொழில்முனைவராக செயல்படுவது கடினம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
தேவிதா: நிச்சயம் சுலபம் இல்லை. இங்கு பெண்களின் தொழில் வாழ்க்கைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. படிப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆனால் பிறந்த வீட்டிலோ அல்லது புகுந்த வீட்டிலோ குடும்பத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் பெண்களின் பணி வாழ்க்கை பின்னுக்குத் தள்ளப்படுகிறது. முழுமையாக தொழில் வாழ்க்கையில் கவனம் செலுத்த எனக்குக் கிடைத்த வாய்ப்பு பல பெண்களுக்கு கிடைப்பதில்லை என்றே நான் நினைக்கிறேன். இது இடத்தைப் பொருத்து மாறுபடும்.
நான் மும்பையில் இருப்பதால் ஆணாதிக்க மனப்பான்மையை எதிர்த்து போராடும் சவால்கள் எனக்கு இருந்ததில்லை. இது மற்ற பகுதிகளில் அதிகம் இருப்பதைப் பார்க்கமுடிகிறது. ஆனால் இன்று இணைய வசதி உள்ளது. யுவர்ஸ்டோரி போன்ற தளங்கள் இளம் பெண்கள் முன்மாதிரியாகக் கருதக்கூடியவர்களை அடையாளம் காட்டுகிறது.
ஹெர்ஸ்டோரி: உங்கள பயணத்தில் நீங்கள் சந்தித்த மிகப்பெரிய வெற்றியாகவும் மிகவும் மோசமான தருணமாகவும் எதைக் கருதுகிறீர்கள்?
தேவிதா: தொழில்முனைவில் ஈடுபடுவோர் வாழ்க்கையில் வெற்றி, தோல்வி இரண்டுமே பரிச்சயமானதாக இருக்கும். பணக்காரர் பட்டியலில் இன்று இடம்பெற்றிருந்தாலும் மிகவும் கவனத்துடனேயே செலவுகளை கட்டுப்படுத்தி வருகிறேன். உங்கள் வணிகத்தைப் பொறுத்தவரை பிராடக்ட் விற்பனையாகாமல் இருப்பது, டிஸ்ட்ரிபியூஷன் வெற்றிகரமாக இல்லாதது, பண வரவு இல்லாதது, குழு உறுப்பினர் விலகுவது என எந்தவித பிரச்சனையாக இருந்தாலும் அதை சமாளிப்பதற்கான வழிமுறைகளை ஆராயவேண்டும்.
மிகப்பெரிய மைல்கல்லை எட்டும்போது வெற்றியடைந்த உணர்வு ஏற்படும். ஆனால் இதுபோன்ற ஏற்ற இறக்கங்கள் இல்லாத பயணம் சுவாரஸ்யமாக இருக்காது.
ஹெர்ஸ்டோரி: இந்தியாவில் முன்மாதிரியாக விளங்கும் சிஇஓ நீங்கள். மற்றவர்களிடமிருந்து உங்களை வேறுபடுத்திக்காட்டும் அணுகுமுறை என்ன?
தேவிதா: பிராண்டுகளைப் பொருத்தவரை இன்றைய தலைமுறையினர் மற்ற அம்சங்களைக் காட்டிலும் நம்பகத்தன்மையையே அதிகம் எதிர்பார்க்கின்றனர். இதனால் என் தயாரிப்பை நீங்கள் நம்பலாம்; கருத்துக்களைத் தெரிவிக்க நேரடியாக என்னைத் தொடர்புகொள்ளலாம்; தயாரிப்பை தரமானதாக உருவாக்க கடுமையாக முயற்சி செய்துள்ளோம் என்பதை வாடிக்கையாளர்களிடம் நேரடியாகத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
நான் முன்மாதிரியான சிஇஓ-வாக இரண்டு விஷயங்களை வலியுறுத்த விரும்புகிறேன். பெண்கள் தங்கள் பெண்மை குணாதிசயங்கள் மாறாமல் இருக்கலாம். பலம் நிறைந்தவராக ஆண்மையுடன் மாறவேண்டிய அவசியமில்லை. நடிகர் அல்லது கிரிக்கெட் வீர்ர் என்கிற தவறான பிம்பத்தைப் பிரதிபலிக்காமல் வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் யார் என்பதை வெளிப்படையாகக் காட்டிக்கொண்டு நம்பகத்தன்மையை ஏற்படுத்தலாம்.
ஹெர்ஸ்டோரி: தொழில்முனைவில் ஆர்வமுள்ள பெண் தொழில்முனைவோர்களுக்கு உங்களது அறிவுரை என்ன?
தேவிதா: இது நீண்டதூரம் பயணிக்கும் மாரத்தான் போன்றது. 15 ஆண்டுகள் கடந்த பின்னரே இன்றைய நிலையை எட்டியுள்ளேன். எனவே உங்கள் செயல்பாடுகளில் 18 மாத சுழற்சியில் வெற்றியை எட்டிவிடலாம் என நினைக்காதீர்கள்.
பூஜ்ஜியத்தில் இருந்து 65 கோடி ரூபாயை எட்ட எனக்கு 8 ஆண்டுகள் ஆனது. 65 கோடி ரூபாயில் இருந்து 1,000 கோடி ரூபாயை எட்ட மேலும் நான்காண்டுகள் ஆனது. இது ஒரு நீண்ட பயணம். இதை நீங்கள் மிகப்பெரிய விஷயமாக கருதி முக்கியத்துவம் அளிக்காத வரை இது ஆண்களுக்கான பகுதியாகவே இருக்கும். எனவே நேரம் செலவிட்டு முக்கியத்துவம் அளித்து பெரியளவில் சிந்திக்கவும் என்பதே பெண்களுக்கு எனது அறிவுரை.
ஹெர்ஸ்டோரி: பெருந்தொற்று உங்கள் வணிகத்தை பாதித்துள்ளதா?
தேவிதா: எங்களுக்கு இது மிகவும் பரபரப்பான காலகட்டமாகவே இருந்து வருகிறது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது முதல் நான்கு தயாரிப்புகளை புதிதாக வழங்கியுள்ளோம். மக்கள் டிவி அதிகம் பார்ப்பதால் விற்பனையும் அதிகரித்துள்ளது.
ஹெர்ஸ்டோரி: உங்கள் வருங்காலத் திட்டம் என்ன?
தேவிதா: இன்றைய நவீன தலைமுறையில் கவனம் செலுத்தி Vu Group நிறுவனத்தை உருவாக்கவேண்டும் என்பதே எனது நோக்கம். தற்காலத்திற்கு ஏற்றவாறு மட்டுமின்றி அடுத்த தலைமுறை வாடிக்கையாளர்களின் தேவையறிந்து செயல்பட விரும்புகிறோம். முக்கியமாக லாபகரமாகவும் வெற்றிகரமாகவும் மகிழ்ச்சியுடனும் இருக்க விரும்புகிறேன்.
ஆங்கில கட்டுரையாளர்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: ஸ்ரீவித்யா