கோடிகளில் வருவாய் ஈட்டும் வணிகம் உருவாக்கிய 4 பெண் தொழில் முனைவர்கள்!
இந்தப் பெண் தொழில்முனைவர்கள் வெவ்வேறு துறைகளில் வணிக முயற்சியைத் தொடங்கி கோடிக் கணக்கில் வருவாய் ஈட்டும் நிறுவனமாக வளர்ச்சியடையச் செய்துள்ளனர்.
தொழில்முனைவைப் பொறுத்தவரை கடின உழைப்பு, வணிக நோக்கத்தின் மீது நம்பிக்கை, தீவிர ஆய்வு போன்றவையே முக்கிய அம்சங்கள் என வெற்றிகரமான தொழில்முனைவோர் பலர் சொல்வதுண்டு.
தொடங்கிய வணிக முயற்சியில் தங்களது சேமிப்பை முதலீடு செய்து தங்களது கனவின் மீது முழு நம்பிக்கை வைத்து செயல்பட்டு, இன்று கோடிகளில் வருவாய் ஈட்டி வரும் நான்கு பெண் தொழில்முனைவர்களைப் பட்டியலிடுகிறது ஹெர்ஸ்டோரி.
திஷா சிங், Zouk
திஷா சிங் அகமதாபாத் ஐஐடி-யில் எம்பிஏ இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது தொழில்முனைவில் தனக்கு அதீத ஆர்வம் இருப்பதை உணர்ந்தார்.
கட்ச் பகுதிக்கு ஒரு முறை பயணம் சென்றிருந்தார். அங்குள்ள உள்ளூர் கைவினைப் பொருட்களைப் பார்வையிட்டார். அவரது நண்பர்களுக்கு கைவினைக் கலையும் வடிவமைப்பும் பிடித்திருந்தாலும் அந்தத் தயாரிப்புகள் அவர்களது தேவைகளை சிறப்பாக பூர்த்திசெய்யாது என்பதால் அவற்றை வாங்கவில்லை.
இந்தக் கைவினைப் பொருட்களை நவீனமாகவும் பயனுள்ளதாகவும் மாற்றத் தீர்மானித்தார். பைகள், வேலட் மற்றும் துணைப் பொருட்களுக்கான வீகன் பிராண்டாக Zouk என்கிற பி2சி ஸ்டார்ட் அப்பை 2016-ம் ஆண்டு தொடங்கினார்.
பெரும்பாலான பைகள் மற்றும் துணைப்பொருட்கள் வெளிநாட்டு பிராண்டுகளைப் போன்றே தயாரிக்கப்பட்டு மலிவு விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்பதை திஷா கவனித்தார். இகாட், சணல், காதி போன்றவற்றைக் கொண்டு பல்வேறு பேக் வகைகளை அறிமுகப்படுத்தினார்.
இவர் 20 லட்ச ரூபாய் ஆரம்ப முதலீட்டுடன் Zouk பிராண்டின் முதல் தயாரிப்பை 2017-ம் ஆண்டு அறிமுகம் செய்தார். ஆன்லைன் சந்தைப்பகுதிகளில் செயல்படுவதற்கு முன்பு 50க்கும் அதிகமான கண்காட்சிகளில் விற்பனை செய்தார்.
இன்று 24 கைவினைக் கலைஞர்கள் மும்பையின் தாரவியில் உள்ள இந்த ஸ்டார்ட் அப்’பின் தொழிற்சாலையில் பணியாற்றுகின்றனர். இந்த வீகன் கைவினைத் தயாரிப்பு பிராண்ட் ஆண்டு வருவாயாக 5 கோடி ரூபாய் ஈட்டுகிறது.
பல்லவி மொகாதிகர் பத்வாரி, Karagiri
பல்லவியின் பெற்றோர் நெசவுப் பணியாளர்கள். இதனால் பல்லவி உயர்தர புடவைகள் பற்றிய நுணுக்கங்களை அறிந்திருந்தார். எனவே ஐஐஎம் லக்னோவில் படித்துக் கொண்டிருந்தபோது அன்றாட செலவுகளுக்காக சிக்கன்காரி புடவைகளை வாங்கி Ebay-ல் விற்பனை செய்யத் தொடங்கினார்.
இவர் டாடா, Goldman Sachs ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். பின்னர் தொழில்முனைவு முயற்சியில் ஈடுபட விரும்பினார். 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் Karagiri நிறுவினார். இவர் தனது கணவர் டாக்டர் அமோல் பத்வாரி உடன் இணைந்து 3 லட்ச ரூபாய் ஆரம்ப முதலீட்டுடன் இந்த வணிக முயற்சியைத் தொடங்கினார்.
கடந்த மூன்றாண்டுகளில் இந்த நிறுவனம் சிறப்பாக வளர்ச்சி அடைந்துள்ளது. மகாராஷ்டிராவில் 5 நெசவாளர்களுடன் தொடங்கப்பட்ட முயற்சி இந்தியா முழுவதும் 1,500 நெசவாளர்களுடன் விரிவடைந்து வளர்ச்சிடயைந்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 5,000 நெசவாளர் குடும்பங்களை இணைத்துக்கொள்ளவும் திட்டமிட்டுள்ளது.
2019 நிதியாண்டில் துபாய், அமெரிக்கா உள்ளிட்ட 11 நாடுகளில் 50,000-க்கும் மேலான யூனிட்களை விற்பனை செய்துள்ள இந்நிறுவனம் 12 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் அளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளது. தற்போதைய இந்த வருவாய் தொகையானது ஆரம்ப முதலீட்டுத் தொகையைக் காட்டிலும் 400 மடங்கு அதிகம்.
மேலும் இந்த நிதியாண்டில் 20 கோடி ரூபாயும் 2021-ம் ஆண்டில் 50 கோடி ரூபாயும் 2022-ம் ஆண்டில் 150 கோடி ரூபாயும் வருவாயாக ஈட்ட இந்தத் தொழில்முனைவர் திட்டமிட்டுள்ளார்.
சைலி லேட், Volksara
சைலி லேட் குடும்பத்தினர் Krystal Group of Companies நடத்தி வந்தனர். ஆனால் அவர் இந்த வணிகத்தில் இணைந்து கொள்வதற்கு பதிலாக சொந்த வணிக முயற்சியைக் கையிலெடுக்கத் தீர்மானித்தார்.
நாட்டிங்கம் பல்கலைக்கழகத்தில் ஸ்ட்ராடெஜிக் மேனேஜ்மெண்ட் அண்ட் கன்சல்டிங் பிரிவில் இளங்கலை பட்டம் முடித்தார். பிறகு லண்டன் ராயல் ஹாலோவே பல்கலைக்கழகத்தில் பிசினஸ் கன்சல்டிங் துறையில் முதுகலைப் பட்டம் முடித்தார். 2014-ம் ஆண்டு கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு தீர்வுகளை வழங்கும் நிறுவனமாக Volksara நிறுவனத்தைத் தொடங்கினார். இந்நிறுவனம் தற்போது முழுமையாக ஐடி வணிகமாக மாறியுள்ளது.
Volksara ஸ்மார்ட் நகரங்களுடன் பணிபுரிந்து சைபர் பாதுகாப்பு தொடர்பாக செயல்படுகிறது. கோந்தியா, மதேரன், நாசிக், நம்சி, பிம்ப்ரி-சின்ச்வாட் ஆகிய நகரங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. உலகின் மிகப்பெரிய திருவிழாக்களில் ஒன்றான கும்பமேளாவில் தொழில்நுட்பம் சார்ந்து செயல்பாடுகளை கையாண்டது இந்நிறுவனம் மேற்கொண்ட மிகப்பெரிய பிராஜெக்டுகளில் ஒன்று.
2020-ம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி இந்த ஸ்டார்ட் அப்பின் வருவாய் 150 கோடி ரூபாய் ஆகும். இந்நிறுவனம் வரும் ஆண்டில் 300 கோடி ரூபாய் ஈட்ட திட்டமிட்டுள்ளது.
தீப்மாலா, The Visual House
ரேடியோ மற்றும் டிவி ஜர்னலிசம் பட்டதாரியான தீப்மாலா, பத்திரிக்கையாளராகப் பணிபுரிந்தார். அந்தப் பணியை விட்டு விலகிய இவர் பல்வேறு தயாரிப்பு நிறுவனங்களில் ஃப்ரீலான்சராக பணியாற்றினார்.
இவர் 2010-ம் ஆண்டு ‘தி விஷுவல் ஹவுஸ்’ நிறுவினார். இந்நிறுவனம் வீடியோ தயாரிப்பு நிறுவனமாகவும் கிரியேடிவ் கம்யூனிகேஷன்ஸ் ஏஜென்சியாகவும் செயல்படுகிறது. ஆவணப்படங்கள், குறும்படங்கள், போன்ற பிராஜெக்டுகளை கையாள்வதுடன் கமர்ஷியல் மற்றும் கார்ப்பரேட் வீடியோக்கள் போன்றவற்றை அனிமேடட் வீடியோக்களாகவும் வழங்குகிறது.
அத்துடன் பிரச்சார பிராஜெக்டுகளின் ஒரு பகுதியாக போஸ்டர்கள், ரேடியோ ஜிங்கிள், காமிக் ஸ்ட்ரிப், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (எஃப்ஏக்யூ) போன்ற காட்சி வடிவிலான பல்வேறு உள்ளடக்கங்களையும் வழங்குகிறது.
ஃபரிதாபாத்தைச் சேர்ந்த இந்த ஸ்டார்ட் அப்'பின் முதல் பிராஜெக்ட் டிஆர்டிஓ நிறுவனத்திடம் இருந்து கிடைத்தது. 2015-ம் ஆண்டு கிடைக்கப்பட்ட இந்த பிராஜெக்ட் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புடையது. உலக சுகாதார நிறுவனம், யூனிசெஃப், UNAIDS, UN Women, உள்துறை அமைச்சகம், வெளியுறவுத் துறை அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் பிசிஜி இந்தியா போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆகியவை இந்நிறுவனத்தின் கிளையண்ட் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
10,000 ரூபாய் ஆரம்ப முதலீட்டுடன் தொடங்கப்பட்ட இந்த ஸ்டார்ட் அப் தற்போது 5 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருகிறது. அதுமட்டுமின்று சிறந்த விளம்பரங்கள், ஆவணப்படங்கள் மற்றும் குறும்படத் தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றிற்காக 2018-ம் ஆண்டு தாதா சாஹேப் பால்கே விருதும் பெற்றுள்ளது.
ஆங்கில கட்டுரையாளர்: டென்சின் நார்சம் | தமிழில்: ஸ்ரீவித்யா