அருணாச்சலப் பிரதேசத்தில் சாலையோர நூலகம் அமைத்துள்ள பெண்மணி!
10 வயதிற்குட்பட்ட குழந்தைகளும் வேலைக்குச் செல்லும் பெண்களும் இந்த நூலகத்திற்கு அடிக்கடி வருகின்றனர்.
பெருந்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு பல புத்தாக்க சிந்தனைகளை ஊக்குவித்துள்ளது. பலர் புதிய திறன்களை கற்கவும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. 30 வயது Ngurang Meena அருணாச்சலப் பிரதேசம் நிர்ஜுலி நகரைச் சேர்ந்தவர். இவர் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் சாலையோர நூலகத்தை அமைத்துள்ளார்.
“இந்த நூலகத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. திறந்த அலமாரியில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் இதுவரை திருடு போகவில்லை. ஒருவேளை யாராவது திருடினாலும் எனக்குக் கவலையில்லை. அந்தத் திருடனுக்கு அந்தப் புத்தகம் உதவும் என்று மகிழ்ச்சியடைவேன். புத்தகத்தை வைத்துக்கொண்டு படிப்பதைத் தவிர வேறென்ன செய்துவிடமுடியும்?” என்று 'நார்த் ஈஸ்ட் டுடே’ இடம் தெரிவித்தார் Ngurang Meena. நூலகத்தை நிறுவியுள்ள இவர் அரசுப் பள்ளி ஆசிரியர்.
Ngurang இந்த ஆண்டு தொடக்கத்தில் மிசோரம் பகுதியில் சாலையோரத்தில் நூலகம் ஒன்று திறக்கப்பட்டதைக் கண்டார். இதைக் கண்ட பிறகே நூலகம் திறக்கவேண்டும் என்கிற உந்துதல் ஏற்பட்டுள்ளது. தனது நண்பர் திவாங் ஹவோசி உடன் இது குறித்து கலந்துரையாடினார். அவர்களது சொந்த நகரில் சாலையோர நூலகம் அமைக்கும் திட்டம் உருவானது.
2014-ம் ஆண்டு Ngurang அவரது தங்கை Ngurang Reena உடன் இணைந்து Ngurang Learning Institute (NLI) தொடங்கினார்கள். Ngurang Reena டெல்லி ஜேஎன்யூ-வில் பிஎச்டி ஸ்காலர். இந்த சகோதரிகள் மறைந்த தங்களது அப்பாவின் நினைவாகவே இந்த நூலகத்தைத் தொடங்கியுள்ளனர். கடந்த ஆறாண்டுகளில் பல்வேறு திறன் பயிற்சி திட்டங்கள் மூலம் இந்த நூலகம் ஆயிரக்கணக்கானோர் படிக்கவும் எழுதவும் மட்டுமல்லாது கௌரவமாக வாழவும் உதவியுள்ளது.
இந்த கொரோனா பெருந்தொற்று சமயத்தில் கிடைக்ககூடிய ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் செலவிட விரும்பிய இவர் இந்த நூலகத்தைத் தொடங்கியுள்ளார். இங்கு வெவ்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. இவர் அலமாரிகளில் 70-80 புத்தகங்கள் வைத்துள்ளார்.
இவர் புத்தகங்கங்கள் வாங்க 10,000 ரூபாய் செலவிட்டுள்ளார். மேலும் 10,000 ரூபாய் செலவிட்டு மர அலமாரிகள் ஏற்பாடு செய்துள்ளார். இந்த நூலகத்திற்கு வரும் குழந்தைகளுக்கு இனிப்புகளும் கொடுக்கிறார். பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளும் வேலைக்குச் செல்லும் பெண்களும் இங்கு அடிக்கடி வருகின்றனர்.
“என் குடும்பத்தில் மேற்படிப்பு படித்த முதல் பெண் நான் மட்டுமே. பழங்குடியினராக எங்களுக்கு புத்தகங்களும் நூலகங்களும் கைக்கு எட்டாததாகவே இருந்தன. பாடபுத்தகங்களை படிக்க மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். மாநிலத்தில் ஒரு சில அரசாங்க நூலகங்கள் இயங்கியபோதும் சிறு வயதில் எனக்கும் என் உடன்பிறந்தவர்களுக்கும் நூலகங்கள் செல்ல வாய்ப்பு கிடைத்ததே இல்லை,” என்று மீனா 'தி லாஜிக்கல் இந்தியா’ இடம் தெரிவித்தார்.
இந்த நூலகங்களின் பலன்களைக் கருத்தில் கொண்டு பலர் இந்த முயற்சியை ஊக்குவிக்கின்றனர். பலர் புத்தகங்கள் வாங்க நன்கொடையும் கொடுத்துள்ளனர்.
“மிசோரம் எனக்கு உந்துதலாக இருந்தபோதும் அருணாச்சலப் பிரதேசத்தின் நிலை வேறு. குழந்தைகளின் எழுதும் திறன் மோசமாக உள்ளது. ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலும் உள்ள மாணவர்கள் அதிகம் வாசித்து தங்கள் எழுதும் திறனை மேம்படுத்திக்கொள்ளவேண்டும் என்று விரும்புகிறேன்,” என்றார்.
மற்றவர்களும் இதேபோன்ற முயற்சிகளை தங்களது பகுதிகளில் மேற்கொள்ள மீனா ஊக்குவிக்கிறார்.
கட்டுரை: THINK CHANGE INDIA