கொச்சி மாணவி நடத்தும் நூலகம்: உறுப்பினர் கட்டணம் தேவை இல்லை!
கேரளாவில் கொச்சியில் உள்ள TD உயர்நிலைப் பள்ளி மாணவியான யசோதா டி ஷெனாய் தனது வீட்டிலேயே இலவச நூலகத்தைத் தொடங்கியுள்ளார். இங்கு ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி, தமிழ், சமஸ்கிருதம், கொங்கனி போன்ற பல்வேறு மொழிகளில் புத்தகங்கள் உள்ளன.
ஒரு நூலகத்தில் புத்தகத்தை எடுத்துக்கொண்டு அதைத் திருப்பிக்கொடுக்க குறிப்பிட்ட நேரத்தைக் காட்டிலும் கூடுதலாக எடுத்துக்கொண்டால் அதற்கான கூடுதல் கட்டணம் விதிக்காத நூலகம் இருந்தால் எப்படி இருக்கும்? அதுமட்டுமல்ல. இந்த நூலகத்தில் உறுப்பினர் கட்டணம்கூட செலுத்தத் தேவையில்லை. இது புத்தகப் பிரியர்கள் ஒவ்வொருவரின் கனவு இல்லையா?
கொச்சியைச் சேர்ந்த மக்களுக்கு இது சாத்தியமானது. TD உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு மாணவியான யசோதா ஷெனாய் தனது வீட்டிலேயே ஒரு இலவச நூலகத்தை நடத்தி வருகிறார். இங்கு ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி, தமிழ், சமஸ்கிருதம், கொங்கனி ஆகிய மொழிகளில் 3,500-க்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன.
Edex Live உடனான நேர்காணலில் யசோதா கூறும்போது,
”என் சகோதரர் நூலகத்தில் உறுப்பினராக இருந்தார். நான் எப்போதாவது அங்கு செல்வேன். அந்த நூலகத்தை நடத்தி வந்தவரிடம் என்னுடைய அப்பா பணம் கொடுத்ததைப் பார்த்தேன். இவ்வாறு பணம் செலுத்துவது தவறு என்று யோசித்தேன். புத்தகங்கள் மற்றவர்கள் படிக்க அனுமதிப்பது ஒரு சேவை என்றே எனக்குத் தோன்றியது. பொருளாதாரs சூழலை அடிப்படையாகக் கொள்ளாமல் அனைவரும் படிக்கவேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்,” என்றார்.
யசோதா உறுப்பினர் கட்டணம் ஏதும் வசூலிப்பதில்லை. ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் புத்தகத்தை திருப்பியளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார்.
யசோதா நூலகத்தைத் தொடங்குவது எளிதாக இருந்துவிடவில்லை. அவரது அப்பா அவருக்கு உதவியுள்ளார். புத்தகப்பிரியர்கள் தனது மகளின் இலவச நூலகத்திற்கு பங்களிக்கலாம் என அவரது அப்பா தினேஷ் ஷெனாய் முகநூலில் பதிவிட்டார்.
விரைவில் குடும்பத்தினர் உதவிக்கு வந்தனர். 10,000 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை அவருக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் யசோதா ஸ்கிராப் டீலர்களிடமிருந்தும் புத்தகங்களை சேகரிக்கத் தொடங்கினார்.
”அதிகம் பயன்படுத்தப்படாத புத்தகங்கள் பொறுப்பின்றி தூக்கியெறியப்படுவதைப் பார்க்க வருத்தமாக உள்ளது. ஒருமுறை முன்னாள் எம்பி கேவி தாமஸ் பத்தாம் வகுப்பிலும் பன்னிரண்டாம் வகுப்பிலும் முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு புத்தகங்களைப் பரிசாக வழங்கினார். புத்திசாலி மாணவர்கள்கூட புத்தகங்களை தூக்கியெறிவது வருத்தமளிக்கிறது. என்னால் அவற்றை சேமித்துவைக்க முடிவது மகிழ்ச்சியளிக்கிறது,” என யசோதா தெரிவித்ததாக ’தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்’ குறிப்பிடுகிறது.
யசோதாவின் அப்பா ஓவியர் என்பதால் அவரது கேலரியின் ஒரு பகுதியை நூலகத்திற்காக ஒதுக்கிக்கொடுத்தார். குடும்ப நண்பர் ஒருவர் புத்தக அலமாரிகளைக் கட்ட உதவியுள்ளார்.
தற்போது நூலகத்தில் சுமார் 110 உறுப்பினர்கள் உள்ளனர். ஒவ்வொருவரும் அவர்களது தனிப்பட்ட புத்தக தொகுப்பிலிருந்து நன்கொடை வழங்குமாறு யசோதா கேட்டுக் கொண்டுள்ளார். சமீபத்தில் யசோதா தனது நூலகத்திற்கு ஆதரவளிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
“அவரது பதிலுக்காக காத்திருக்கிறேன். அவர் எங்களுக்கு புத்தகம் அனுப்புவார் என்று நம்பிக்கை உள்ளது,” என்கிறார்.
கட்டுரை: Think Change India