அப்துல் கலாம் முதல் அத்திவரதர் வரை: ஏலக்காய் மாலையில் மணக்க வைத்த இந்திராணி!
கல்லீரல் பாதிப்பால் கணவனை இழந்து, ஒற்றை ஆளாய் மகனை வளர்க்க வீட்டில் இருந்தே ஏலக்காய் மாலை தொடுக்கும் தொழிலை தொடங்கிய இந்திராணியின் கைவண்ணம் ஜெயலலிதா, கருணாநிதி, மோடி என அனைவரின் கழுத்தையும் அலங்கரித்துள்ளது.
மாலைகள்... பிறப்பு முதல் இறப்பு வரை மனித வாழ்க்கையின் பல கட்டங்களில் முக்கியப் பங்காற்றி நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளன. கல்யாணம், காதுகுத்து என பெரும்பாலான விசேஷங்களில் வசந்தகாலத்து தேவதைகளான வண்ண வண்ண மலர்களால் தொடுத்த மலர் மாலைகளே இடம்பெற்றாலும், அதன் ஆயுள் ஒரு நாளே. ஆனால், நறுமணங்களின் ராணியான ஏலக்காய்களால் தொடுக்கப்பட்ட ஏலக்காய் மாலை, பல மாதங்களுக்கு மணம் பரப்பக்கூடியவை. அத்தகு ஸ்பெஷாலிட்டி உடைய ஏலக்காய் மாலையை தொடுப்பதில் ஸ்பெஷலானவராக திகழ்கிறார் இந்திராணி பாஸ்கரன்.
கடந்த 25 ஆண்டுகளாக ஏலக்காய் மாலை தொடுக்கும் தொழில் புரிந்துவரும் அவரது மாலைகள் அப்துல் கலாம் முதல் பிரதமர் மோடி வரை பல அரசியல் ஆளுமைகளுக்கு அணிவிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளது.
ஏலக்காய் நகரமான போடிநாயக்கனூரிலே பிறந்து வளர்ந்த அவருக்கு ஏலக்காய் மாலை தயாரிப்பு தொழில் அந்நியமாய் அமைய வாய்ப்பில்லை. என்றாலும், காலத்தின் கட்டாயத்தில் தொழிலுக்குள் நுழைந்த இந்திராணி, 20 பெண்களுக்கு வேலை வாய்ப்பையும் வழங்கியுள்ளார்.
இந்திராணி பாஸ்கரன் தனது 25 ஆண்டுக்கால வெற்றிகரத் தொழில் பயணத்தை நம்முடன் பகிரத் தொடங்கினார்.
“வாழ்க்கைல ஆரம்பத்தில இருந்தே கஷ்டங்களோடு தான் வாழ்ந்துட்டு இருக்கேன். முதலில் கணவர் தான் இந்த தொழில் செய்து வந்தார். எப்பவுமே கலையார்வம் எனக்கு அதிகம். அவர் இடையில தொழிலை விட்டு விட்டு குன்றக்குடி அடிகளாரிடம் பி.ஏ.ஆக வேலைக்குச் சேர்ந்தார். அந்த சமயத்தில நான் மாலை தொடுத்திட்டு இருந்தேன். முதன் முதலில் கோவிலுக்கு ஒரு ஏலக்காய் மாலை தொடுத்து சாமிக்கு சார்த்தினேன். அதை பார்த்துட்டு சொந்த பந்தம், அக்கம் பக்கம் என பலரும் மாலை செய்து தரக்கேட்டாங்க.
”ஒரு ஆக்சிடென்ட்டில் கணவருக்கு காலில் எலும்புமுறிவு ஏற்பட்டுச்சு. கடனை வாங்கி அவருக்கு ஆப்ரேஷன் பண்ணி, நல்லா வந்திட்டு இருக்க சமயத்தில் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டிருச்சு. எவ்வளவோ முயற்சி செய்தும் அவர காப்பாத்த முடியல. என்னால அந்த வலியில் இருந்தும் வெளிவர முடியல. ஒரு 10 நாள் எதுவுமே செய்யாம உட்காந்தே இருந்தேன். அவரது சிகிச்சைக்காக ரூ.6 லட்சம் வரை கடனாகிருச்சு. சூழ்நிலையை புரிஞ்சு திரும்பி மாலைதொடுக்கச் சொன்னாங்க. ஆனா, அப்போ இருந்த மனநிலையில என்னால அத ஏத்துக்கவே முடியல.”
அப்போ, என் மகனுக்கு வயசு 10. சின்னப்பையனா இருந்தாலும் என்கிட்ட வந்து, ‘நீங்க இப்படியிருக்கிறது எனக்கு பிடிக்கவே இல்லம்மா. எப்பவும் போல இருங்கனு’ சொன்னான்.
அப்ப தான், என் புள்ளய அப்பா இல்லாத குறை இல்லாம வளர்த்திரணும்னு வைராக்கியமா பத்தே நாளில் மாலை தொடுக்க ஆரம்பிச்சேன். இறப்பதற்கு முன்பே அவரு, ‘நான் இறந்துட்டாலும் உதவி கேட்டு உங்கம்மா வீட்டுக்கு நீ போயிறாத. நீயே நம்ம மகன பாத்துக்கணும்’னு சொன்னாரு. அந்த வார்த்தைகள் கிடைத்த சக்தியில் தொழிலை மேற்கொண்டேன். மொத்தமாக ஏலக்காய் கொடுத்து மாலை செய்ய கொடுப்பவர்களும் ஆதரவா இருந்து நிறைய ஆர்டர் கொடுத்தாங்க,” என்று கடந்த காலத்துக்குள் மூழ்கினார் இந்திராணி.
இந்திராணியின் ஏலக்காய் மாலைகள் என்றாலே... நேர்த்தி, அழகிய ஃபினிஷிங் இருக்கும். அதனாலே, ஊரில் மலர் மாலை தொடுப்பவர்களும் ஏலக்காய் மாலைகள் தயாரித்தாலும் இந்திராணி மாலைகளின் நேர்த்திக்காகவே ஆர்டர்கள் குவிகின்றன.
அக்கம் பக்கத்திலுள்ள 20 பெண்களை பணிக்கு அமர்த்தி தொழிலை விரிவுப் படுத்தியுள்ளார். மாலைகளுக்கான ஏலக்காய்கள் தங்கு தடையின்றி கிடைத்தாலும், மாலைகளை அலங்கரிக்க தேவையானவற்றை மாதம் ஒரு முறை மொத்தமாய் கொள்முதல் செய்து கொள்கிறார்.
வீட்டைச் சுற்றியுள்ள இல்லத்தரசிகள், இவரிடம் ஏலக்காய்களையும், அலங்காரப் பொருள்களையும் பெற்றுச் சென்று, வீட்டில் அவற்றை மாலையாகக் கோர்த்து திரும்ப அளித்து வருவாய் ஈட்டுகின்றனர். இந்த பகுதி நேர பணியில் ஒவ்வொருவரின் உழைப்புக்கு ஏற்றவாறு நாளொன்றுக்கு ரூ.200 முதல் ரூ.300 வரை வருமானம் ஈட்டுகின்றனர் என்று கூறினார்.
ஏலக்காய் மாலைகளிலே திருவாச்சி மாலை, மல்லிகை மொட்டு மாலை என பல வகைகள் உள்ளன. அத்தனை வகைகளையும் செய்வதில் வல்லவராக திகழும் அவர், ஒவ்வொரு மாதமும் மாலையின் டிசைன்களை கற்பனைத் திறனால் அப்டேட் செய்து கொண்டே இருக்கிறார்.
“சந்தைகளில் ஏலக்காய்கள் அதன் பருவட்டுக்கு (அளவு) ஏத்தமாதிரி தரம் பிரித்து விற்பனை செய்கின்றனர். 8 மி.மீ., அளவுள்ள ஏலக்காய் முதல் தரமாகவும், 7 மற்றும் 6 மி.மீ., அளவுள்ள ஏலக்காய்கள், இரண்டு மற்றும் மூன்றாம் தரமாகவும் பிரிக்கப்படுகின்றன. மாலைக்கு எப்போதுமே 7-8 பருவட்டு ஏலக்காய்கள் தான் கரெக்ட்டா இருக்கும். சந்தையிலே காய்களை உலர்த்தி பதப்படுத்திதான் வைத்திருப்பார்கள். அதனால், காயை வாங்கி வந்ததும் மாலை தொடுத்திரலாம். ஏலக்காயின் விலைக்கு ஏற்றவாறு அதன் மாலையின் விலை கூட, குறைச்சலாக நிலையாது இல்லாமல் விற்கப்படும்.
ஏலக்காயும், தங்கமும் ஒன்னு. ஏலக்காயின் விலை நிலையானதாக இருக்காது. ஆடி மாதங்களில் காய் பறிப்பு குறைவாக இருக்கும். முன்கூட்டி கொள்முதல் செய்து சேமிக்கவும் முடியாது. ஏலக்காய் நிறம் குறைந்தால், மாலை நல்ல விலைக்கு போகாது. சில சமயங்களில் தேவைக்காக ஏலக்காய் சேமித்து வைத்து, மாலையாகி விற்கும் சமயத்தில் ஏலக்காய் விலை குறைந்தால் நட்டம் தான்.
1/2 கிலோ ஏலக்காய் கொடுத்து மாலை செய்ய கூலி 400ரூபாய். ஒரு கிலோ ஏலக்காய் ரூ 1,500 விற்றால் ஒரு கிலோ மாலை கூலியுடன் சேர்த்து ரூ.1,900க்கு விற்பனை செய்கிறேன். அந்த கூலி காசில் தான் அலங்காரப்பொருள்கள், மாலை கட்டும் பெண்களுக்கான கூலி வழங்குவது எல்லாம் அதில் தான். ஆர்டர் கிடைப்பதை பொறுத்து வருவாய் கிடைக்கும். சராசரியாக மாதம் 25,000ரூபாய் முதல் 30,000வரை சம்பாதிக்கிறேன், என்கிறார் இந்திராணி.
ஆன்லைன் பிசினஸ் செய்தால், ஆர்டர்கள் இன்னும் குவியும். அதற்கு தகுந்தமாதிரி நாம ரெடியாகணும். மிஷினரி வாங்கணும், தனியா இடம் பிடிக்கணும். இப்போது தான், கடனையெல்லம் அடைத்து மீண்டுள்ளேன். சீக்கிரமே எல்லாம் நடக்கும்னு நம்பிக்கையா உழைச்சிட்டு இருக்கேன், என்றார் தன்னம்பிக்கையுடன். வீட்டில் இருந்து தொழில் புரிந்து, மற்ற பெண்களுக்கும் வேலைவாய்ப்பை வழங்கும் இந்திராணிக்கு அண்மையில் ‘சுயசக்தி விருது’ வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பல வண்ண மலர்களைக் கொண்டு மாலை தொடுத்தாலும், அந்த மாலைகள் அடுத்த நாள் வாடி வதங்கிவிடும். ஆனால், ஏலக்காய் மாலைகள் பல மாதங்களாகினாலும், நிறம் மட்டுமே மங்கும். அதையும், வீட்டில் சமைக்கும் பதார்த்தங்களில் போட்டுக்கொள்ளலாம் என்பதால் ஏலக்காய் மாலைகளுக்கு எப்போதுமே மவுசு தான். முக்கிய நிகழ்ச்சிகளில், முக்கிய பிரமுகர்களைச் சந்திக்கும்போது, அவர்களைக் கவுரவிக்க ஏலக்காய் மாலைகளை அணிவிக்கும் பழக்கம் பரவிவருகிறது.
“நிறைய பிரபலங்களுக்கு நான் செய்த மாலைகளை அணிவத்து கவுரவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதிக்கு மாலை செய்துள்ளேன். சரவணபவன் ஓட்டல் அதிபர் வீட்டார் மாதம் இருமுறை முருகனுக்கு 18 ஏலக்காய் மாலைகள் சார்த்துவார்கள். அவர்களுக்கு மாதம் இருமுறை மாலை தயாரித்து கொடுக்கிறேன். அவருடைய மறைவுக்கு தமிழகம் முழுவதும் உள்ள சரவணபவன் கிளைகளில் உள்ள ஓட்டலின் அதிபர் போட்டோவின் அளவிற்கு தகுந்த மாலைகள் தயாரித்து கொத்துள்ளோம். பிரதமர் மோடி, ராகுல் காந்தி என பலருக்கும் மாலை அணிவிக்க வாங்கிச் சென்றுள்ளனர்.
மறைந்த அப்துல் கலாமிற்காக 7கிலோ ஏலக்காய் மாலை செய்து கொடுத்துள்ளேன். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருகல்யாணத்திற்கு ஆண்டுத்தோறும் நம்ம மாலைகள் தான். சமீபத்தில் அத்திவரதருக்கு 21 அடி திருவாச்சி மாலை தயாரித்துக் கொடுத்தோம்.
அமைச்சரின் பி.ஏ ஒருவர் வாங்கி சாமிக்கு சார்த்தினார். எங்களிடம் ஆர்டர் கொடுக்க வருவது ஒருத்தராகவும், மாலையை வாங்குபவர் ஒருத்தராகவும் இருப்பர். அதனால், என் பெயர் அவர்களை சென்றடையாது. இருந்தாலும், பிரபலங்களின் கழுத்திலோ அல்லது சாமிக்கோ என் மாலை சார்த்தியபடியான புகைப்படத்தை பார்க்கும் போது ஒரு சந்தோஷம்தான். நடிகர் ராதாரவியின் 60வது கல்யாணத்திற்கு இருப்புறமும் அவர்களது புகைப்படம் வைத்த மாலை தயாரித்த கொடுத்தேன். ஏன், என்னோட மாலை ஒரு தமிழ்படத்திலே நடித்து உள்ளது, என்று கூறி புன்னகைத்தார்.
“காலையில 9 மணிக்கு வேலையை தொடங்குனா நைட் 1மணி வரை கூட ஆகும். அதுவரை உட்கார்ந்த இடத்திலே தான் வேலையை செய்வேன். முதுகுவலி பின்னி எடுக்கும். மற்ற பெண்கள், நூலில் ஏலக்காய் கோர்ப்பார்கள், மாலைக்குத் தேவையான அலங்காரப் பொருள்களை உருவாக்குவார்கள். ஆனால், ஃபினிஷிங் நான் தான் செய்யணும்.
கொஞ்சம் இழுத்து ஏலக்காய் கோர்த்த நூலினை கட்டலனாலும் மாலை ஏறிக்கும் இல்ல இறங்கிக்கும். கம்மியான கூலி. அதிக உழைப்பு இருக்கும் தொழில் இது. ஆனாலும்,
நம்மால 20 பேருக்கு வேலை கொடுக்க முடியுதுனு என்ற சந்தோஷம். கூடவே நம்மள தேடி வேலை வருது. அடிமையா ஒரு கம்பெனில போய் வேலை பார்க்க வேண்டிய அவசியமில்லை. நாமே தொழிலாளி, நாமே முதலாளி,” என்றார் கெத்தாக!