‘பெண்கள் கையில் கரண்டி மட்டுமல்ல ஸ்பானரும் இருக்கலாம்’ – டாடா பவர் எலக்ட்ரீஷியன் ரோஷ்னி!
ஐடிஐ படிப்பு முடித்து டாடா பவர் நிறுவனத்தில் ஜூனியர் டெக்னீஷியன் வேலை பார்த்து வரும் ரோஷ்னி மேலும் பல பெண்கள் டெக்னிக்கல் வேலைகளில் களமிறங்கவேண்டும் என்கிறார்.
மேற்படிப்பு என்றதும் மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளே அதிக கவனம் பெறுகின்றன. எல்லோராலும் இதில் சேர்ந்துவிட முடிவதில்லை. அதேபோல், இந்தப் படிப்புகளில் சேர்ந்தவர்கள் மட்டுமே வாழ்க்கையில் வெற்றியடைய முடியும். நல்ல வேலையில் சேரமுடியும். நன்றாக சம்பாதிக்க முடியும். இப்படி பலர் நினைக்கிறார்கள்.
ஆனால் அது தவறு. தொழில் சம்பந்தப்பட்ட ஏராளமான படிப்புகள் இருக்கின்றன். இவற்றில் திறனை மெருகேற்றிக் கொண்டால் பெரிய நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பைப் பெறமுடியும் என்பதற்கு உதாரணமாக விளங்குகிறார் ரோஷ்னி.
ரோஷ்னியின் அம்மா உயிரிழந்ததும் அப்பா வீட்டைச் சேர்ந்தவர்களுடன் பெரிதாக ஒட்டுதல் இல்லாமல் போனது. அம்மா வழி பாட்டி வீட்டில் ரோஷ்னி வளர்ந்திருக்கிறார். வசதியான குடும்பம் இல்லை. வருமானம் குறைவுதான். இருப்பினும் ரோஷ்னியை பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்க வைத்திருக்கிறார்கள்.
“ஹைஸ்கூல் முடிச்சதும் படிப்பை நிறுத்திக்க வேண்டியதா போச்சு. பாட்டி வீட்ல அதுக்கு மேல படிக்கவைக்க வசதி இல்லை. 2015-லேர்ந்து 2017 வரைக்கும் வீட்லயே இருந்தேன்,” என்கிறார் ரோஷ்னி.
2017-ம் ஆண்டு ரோஷ்னி டெல்லி அரசு ஐடிஐ-யில் சேர்ந்தார்.
“ரெண்டு வருஷ ஸ்கில் இந்தியா கோர்ஸ் பத்தி ரிலேடிவ்ஸ் மூலமா தெரிய வந்துது. சேரச் சொல்லி என்கரேஜ் பண்ணாங்க. நானும் சேர்ந்தேன். கஷ்டப்பட்டு ஆர்வமா படிச்சேன். ரெண்டாவது வருஷம் வர்றதுக்குள்ள டாடா பவர் நிறுவனத்துல டெக்னீஷியன் வேலை கிடைச்சிடுச்சு,” என்கிறார்.
தற்போது மூன்றாண்டுகளாக டாடா பவர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பட்டப்படிப்பை முடித்த ரோஷ்னி அக்டோபரில் வேலையில் சேர்ந்துவிட்டார். ஐடிஐ கல்வி நிறுவனத்திலிருந்து டாடா பவரில் வேலைக்கு சேர்ந்த மூன்றாவது நபர் ரோஷ்னி என்பது குறிப்பிடத்தக்கது.
முழுநேரமாக டாடா பவரில் வேலையில் சேர்ந்த ரோஷ்னி அத்துடன் நின்றுவிடவில்லை. பகுதி நேரமாக டெல்லி ஆர்யபட் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் எல்க்ட்ரிகல் ட்ரேட் பிரிவில் டிப்ளமோ சேர்ந்திருக்கிறார்.
“டிப்ளமோ முடிச்சிட்டு எப்படியாவது டாடா பவர்ல அசிஸ்டண்ட் ஆபிசர் இல்லைன்னா ஜூனியர் என்ஜினியர் ஆகணும்னு ஆசைப்படறேன்,” என்கிறார் ரோஷ்னி.
முன்னேற்றம்
தற்போது ரோஷ்னி ட்ரான்ஸ்ஃபார்மர்களை பழுது பார்ப்பது, பராமரிப்பது போன்ற வேலைகளை செய்து வருகிறார். ஜூனியர் என்ஜினியர் ஆனதும் விநியோகத்தை நிர்வகிப்பது, ஜூனியர் டெக்னீஷியன்களை மேற்பார்வையிடுவது போன்ற கூடுதல் பொறுப்புகளை ஏற்க ஆர்வமாக காத்திருக்கிறார்.
“சமீபத்துல சீனியர் டெக்னீஷியன் பொசிஷனுக்கு இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணியிருக்கேன். புரொமோஷன் கிடைக்கும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு,” என்கிறார்.
டாடா பவர் நிறுவனத்தில் பல்வேறு விருதுகளையும் வாங்கியிருக்கிறார்.
“Employee of the Month விருதை ரெண்டு தடவை வாங்கியிருக்கேன். தேசிய அளவுல பிராஜெக்ட் சம்பந்தப்பட்ட நிறைய விருதுகளுக்கு நாமினேட் ஆகியிருக்கேன். டாடா பவரோட Women of Will வீடியோ சீரிஸ்லயும் வந்திருக்கேன்,” என்கிறார்.
பெண்கள அதிகளவில் ஐடிஐ-க்களில் சேர்ந்து டெக்னிக்கல் வேலைகளில் பயிற்சி பெறவேண்டும் என்று ரோஷ்னி விரும்புகிறார்.
“நான் ஐடிஐ-ல படிச்சப்ப வெறும் ஆறு பேர் மட்டும்தான் பொண்ணுங்க. மத்தவங்க எல்லாருமே பசங்கதான். சில வேலைங்களை ஆண்கள் மட்டும்தான் செய்யமுடியும்னு சொல்றாங்க. இது தப்பு. முழு ஈடுபாட்டோட களமிறங்கினா எல்லா வேலைங்களையும் எல்லாராலயும் செய்யமுடியும்,” என்கிறார் நம்பிக்கையுடன்.
பாட்டி வீட்டினர் கொடுத்த ஆதரவால் மட்டுமே இந்த அளவிற்கு முன்னேற முடிந்தது என்கிறார் ரோஷ்னி.
“வேலை செய்யற இடத்துலயும் நல்லா என்கரேஜ் பண்றாங்க. கூட வேலை பார்க்கறவங்க எந்த ஒரு பாகுபாடும் பார்க்கறது கிடையாது,” என்கிறார்.
டிப்ளமோ முடித்துவிட்டு ஜூனியர் ஆபிசர் ஆகவேண்டும் என்கிற கனவுடன் இருக்கும் ரோஷ்னி,
“சின்ன சின்னதா அடுத்தடுத்து குறுகிய கால இலக்கு நிர்ணயிச்சு அதுல கவனம் செலுத்தினா பெரிசா முன்னேறமுடியும்,” என்கிறார்.
ஆங்கில கட்டுரையாளர்: தியா கோஷி ஜார்ஜ் | தமிழில்: ஸ்ரீவித்யா