கணவனால் நேர்ந்த துயரம்; பாலியல் தொழிலாளி டூ வழக்கறிஞர்: சர்வைவல் கதை!
16 வயதில் இருந்து கொடுமைகளை அனுபவித்த பெண்ணின் கதை!
16 வயதில் குடும்பச் சூழ்நிலை காரணமாக திருமணம் முடிக்கப்பட்டு கணவனால் பின்னாளில் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டு தற்போது பாலியல் தொழிலாளிகளுக்காக வழக்கறிஞராக பணிபுரிந்து வரும் பபிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது கதையை பகிர்ந்துகொள்கிறார்.
இந்த வார சர்வைவல் தொடரில் தனது 16 வயதில் இருந்து அவர் அனுபவித்த கொடுமைகளை அவர் கூறும் வார்த்தைகளிலேயே கேட்போம்.
”நான் 7 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது என் தந்தைக்கு பக்கவாதம் ஏற்பட்டது. அவருடைய சிகிச்சைக்கு நிறைய பணம் கடன் வாங்க வேண்டியிருந்தது. கடனுக்கு பணம் கொடுத்தவர், மிக அதிக வட்டி வசூலித்தார். என் குடும்பம் கடனில் மூழ்கியது. கொஞ்ச நாட்களில் உடனடியாக கடன் திருப்பிச் செலுத்தக் சொல்லி தொந்தரவு கொடுத்தார். அதை எங்களால் தாங்க முடியவில்லை. கடனை கொடுக்க முடியவில்லை என்றதும் என்னை வற்புறுத்தி ஒரு டான்சராக மாற்றினார். இந்த தொல்லையில் இருந்து தப்பிக்க திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தேன். அப்போது எனக்கு 16 வயதுதான்.
திருமணம் முடிந்த மூன்று ஆண்டுகளுக்குள், நான் ஒரு பெரிய தவறு செய்தேன் என்பதை உணர்ந்தேன். ஏனென்றால், என் கணவர் ஒரு சூதாட்ட அடிமையாக இருந்தார், மேலும், ஒரு கட்டத்தில் ரூ.10 லட்சத்தைத் தொட்ட கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக என்னை அடித்து, தனது நண்பர்களிடம் பாலியல் வல்லுறவில் ஈடுபடுத்த தொடங்கினார். ஒரு பெண் மற்றும் ஒரு பையன் என எங்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகும் உடல் ரீதியான துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் சுரண்டல் தொடர்ந்தது.
இறுதியில், நான் ஆந்திராவில் உள்ள என் அம்மாவின் வீட்டிற்கு மீண்டும் வந்துவிட்டேன். இருப்பினும், அதே ஆண்டில் என் தந்தை இறந்துவிட்டார், என் குடும்பத்திற்கு உணவளிக்க நான் மீண்டும் நடனத் தொழிலில் மீண்டும் நுழைய வேண்டியிருந்தது. இந்த காலங்கள் முடிந்தபோது, பாலியல் சுரண்டலில் இருந்து தப்பியவர்களுக்கான ஒரு குழுவான விமுக்டியில் நான் சேர்ந்தபோது 2007ல் என் வாழ்க்கை முழுமையாக மாறியது. விமுக்டி குழுவானது, இது ஹெல்ப் என்ற கடத்தல் எதிர்ப்பு அமைப்பால் உருவாக்கப்பட்ட குழு. இதில் இணைந்து, பாலியல் கடத்தல் மற்றும் விபச்சாரத்தில் இருந்து தப்பியவர்களின் உரிமைகளுக்காக நான் வழக்கறிஞராக வாதிட ஆரம்பித்தேன்.
பாலியல் தொழிலாளர்கள் என்ற வகையில், நாங்கள் களங்கத்தால் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், வறுமை மற்றும் கடனின் தீய சுழற்சியில் சிக்கித் தவித்து வருகிறோம். நாங்கள் விபச்சார விடுதிகளில் வசிப்பதால், வீடு முகவரி இல்லை என்ற காரணத்தால் எங்களால் வங்கிக் கணக்கு கூட தொடங்க முடியவில்லை. யாரும் எங்களுக்கு கடன்களையோ, இன்சூரன்ஸோ கொடுப்பதில்லை. இதனால், மாதத்திற்கு 5 முதல் 12 சதவிகிதம் வட்டி விகிதங்களை வசூலிக்கும் உள்ளூர் கடன் கொடுப்பவர்களிடம் சிக்க வேண்டி இருக்கிறது.
இந்த சங்கடத்துக்கு மத்தியில் எங்கள் குழந்தைகள் பள்ளி, கல்லூரி போன்ற தளங்களில் களங்கத்தை எதிர்கொள்வதால், அவர்கள் படிப்பை தொடர மறுக்கிறார்கள். இதனால் குழந்தைகள், மனச்சோர்வு மற்றும் உளவியல் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள். கடத்தல் மற்றும் பாலியல் சுரண்டலுக்கு எதிரான எங்கள் போராட்டத்தில் பாலியல் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் பாதுகாப்பிற்கான பிரச்சாரமும் அடங்கும். யாரும் விபச்சாரத்திற்குத் தள்ளப்படாதபடி சமூக மற்றும் நிதி பாதுகாப்பை நாங்கள் முயற்சித்து வழங்குகிறோம்.
தற்போது, நான் ஊறுகாய் விற்கும் ஒரு சிறு வணிகத்தையும் தொடங்கி நடத்தி வருகிறேன். அதேநேரம், மாநில கன்வீனராக விமுக்தியின் வக்காலத்து முயற்சிகளில் நான் தீவிரமாக ஈடுபட்டு வருகிறேன். கடத்தலுக்கு எதிரான இந்திய தலைமைத்துவ மன்றத்துடன் (ILFAT) நாங்கள் கைகோர்த்துள்ளோம்.
அங்கு இந்தியா முழுவதும் இருந்து மனிதக் கடத்தலில் இருந்து தப்பியவர்களுடன் நாங்கள் வந்துள்ளோம், கடத்தலுக்கு எதிராகக் கடுமையான சட்டங்களுக்காக போராடவும், தப்பிப்பிழைப்பவர்களுக்கு சிறந்த சமூகக் கொள்கைகளுக்காகவும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வுக்காகவும் போராடுகிறோம். சிறந்த புனர்வாழ்வு, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கல் மற்றும் கடத்தல்காரர்களுக்கு சட்ட அமலாக்க தண்டனை வழங்குவதற்காக நாங்கள் அரசாங்கத்துடன் பிரச்சாரம் செய்ய முயற்சிக்கிறோம்," என்றுள்ளார்.
ஆங்கிலத்தில்: ருக்ஷனா மிஸ்ட்ரி | தமிழில்: மலையரசு