'4 வயதில் விற்கப்பட்டு, பல முறை பலாத்காரம்: 17 வயதில் தான் பள்ளிச் சீருடை அணிந்தேன்’ - மீட்கப்பட்ட பெண்!
தன்னம்பிக்கையால் மீண்ட பெண்ணின் கதை!
பெயர் வெளியிட விரும்பாத பெண் ஒருவர் தன் வாழ்நாளில் உச்சக்கட்ட சோகங்களை கடந்து வந்திருக்கிறார். அவரது வாழ்க்கைப் பயணத்தை ஒருமுறை படித்துப்பார்த்தால் நம்மில் பலரது கஷ்டங்கள் ஒன்றுமில்லாமல் ஆகிவிடலாம். கூடவே உத்வேகமும் நம்பிக்கையும் பிறக்கும்.
இனி அவரது வார்த்தைகளில்...
”கடைசியாக என் அம்மாவை பார்த்த நாள் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. நான் விளையாடுவதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றிருந்தேன். இரண்டு பெண்கள் என்னுடன் விளையாட முன்வந்தார்கள். அவர்கள் இருவரும் எனக்குத் தெரிந்தவர்கள் என்பதால் அவர்களுடன் விளையாட ஒப்புக்கொண்டேன். அப்போது அவர்கள் எனக்கு அருந்த பானம் கொடுத்தார்கள். அதை குடித்த சில நிமிடத்தில் நான் மயக்கமடைந்தேன்.
நான் கண் திறந்து பார்த்தபோது. அந்த பெண்கள் அங்கு இல்லை. அவர்களுக்கு பதிலாக நவீன் என்ற ஒரு ஆண் அங்கே இருந்தான். என் குடும்பத்தினரால் என்னை பார்த்துக் கொள்ள முடியவில்லை, அதனால் என்னை விற்று விட்டதாக என்னிடம் பொய் சொன்னான். நான் அழுதேன். என்னை வீட்டிற்குச் செல்ல அனுமதிக்குமாறு அவனிடம் கெஞ்சினேன். அப்போது நான் வெறும் 4 வயது சிறுமியாக இருந்தேன்.
அடுத்த 12 ஆண்டுகளுக்கு, நான் நவீனின் வீட்டில் அடிமையாக இருந்தேன். அவர்கள் என் பெயரை மாற்றினார்கள். எனக்கு அங்கே கொஞ்சம் கூட சுதந்திரம் இல்லை. எப்போதும் அடைத்தே வைத்திருந்தார்கள். அவரது மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் அனைவரும் பள்ளிக்குச் சென்றிருந்தாலும், நவீன் என்னை படிக்க அனுமதிக்கவில்லை. அதற்கு பதிலாக, நான் வேலைகளைச் செய்ய நிர்பந்திக்கப்பட்டேன், குடும்பத்தில் உள்ள அனைவராலும் தாக்கப்பட்டேன்.
எனக்கு 15 வயதாக இருந்தபோது, நவீனின் மகன்களில் ஒருவரின் திருமணத்தில் கலந்து கொள்ள குடும்பத்தினர் என்னை அவர்களுடன் அழைத்துச் சென்றனர். ஒரு மாதத்திற்குப் பிறகு, நவீனின் சகோதரியும் மருமகளும் என்னை கொல்கத்தாவுக்கு அழைத்து வந்தனர்.
நான் பின்னர் சோனகச்சி - கொல்கத்தாவின் மிகப்பெரிய ரெட் லைட் ஏரியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். எனக்கு 15 வயதாக இருந்ததால், அவர்களைக் கைது செய்ய காவல்துறையினர் வருவார்கள் என்று அவர்கள் அஞ்சினர், எனவே அவர்கள் என்னை நகரத்தின் மற்றொரு பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் தங்க வைத்தனர். என்னை மீண்டும் மீண்டும் மும்பைக்கு அனுப்பி வைத்தனர். நான் மறுத்தபோதும் அவர்கள் என்னை விடவில்லை. அங்கே நவீனின் மகன் என்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டான்.
எனக்கு நடந்த அநீதி தொடர்பாக மற்றவர்களிடம் சொல்ல விரும்பினேன். ஆனால் என்ன நடந்தது என்பதை நிரூபிக்க என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை. நான் வெளியில் சொன்னால், என் மீது பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி போலிக் கதைகளை உன் மீது சுமத்துவேன் என அவன் என்னை மிரட்டினான்.
ஒரு மாதத்திற்குப் பிறகு, என்னை மீண்டும் கொல்கத்தாவுக்கு அழைத்துச் சென்றனர். இந்த நேரத்தில், நவீனின் சகோதரருக்கு சொந்தமான வேறு ஒரு குடியிருப்பில் என்னை மிரட்டி நவீனின் இன்னொரு மகன் என்னை பாலியல் பலாத்காரம் செய்தான். பிறகு நான் மீண்டும் சோனகாச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்.
ஒரு பெரிய, பல மாடி விபச்சார விடுதியில், வாடிக்கையாளர்களுடன் உடலுறவு கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்பட்டேன். என்னைக் கட்டிப்போட்டு அடித்து வற்புறுத்தினார்கள். என்னால் அங்கிருந்து ஒருபோதும் வெளியேற முடியவில்லை. சர்வதேச ஜஸ்டிஸ் மிஷன் (ஐ.ஜே.எம்) எனது நிலைமையை அறிந்து கொள்ளும் வரை நான் கிட்டத்தட்ட ஒரு மாதம் விபச்சார விடுதியில் வைக்கப்பட்டேன். ஒரு வாரம் கழித்து, கொல்கத்தா காவல்துறையும், சர்வதேச ஜஸ்டிஸ் மிஷனும் என்னை மீட்டனர்.
அந்த விபச்சார விடுதியில் காவல்துறை, வக்கீல்கள், சமூக சேவையாளர்கள் அடங்கிய குழு சோதனை நடத்தியது. அப்போது உரிமையாளரைக் கண்டுபிடித்து கைது செய்தனர். நான் அங்கிருந்த திரைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டேன். ஒரு ஐ.ஜே.எம் வக்கீல் நான் மறைந்திருந்த இடத்திலிருந்து என் கையைப் பார்த்தபோதுதான் அவர்கள் என்னைக் கண்டுபிடித்தார்கள். காவல்துறையினர் என்னை பிடித்தால் கைது செய்துவிடுவார்கள் என்று என்னிடம் சொல்லி பயமுறுத்தியிருந்ததால், நான் அவர்களை பார்த்து பயந்தேன். எனக்கு 15 வயது என்பதை ஒப்புக்கொள்வதற்கு முன்பு எனது வயதைப் பற்றி பல முறை போலீசிடம் பொய் சொன்னேன்.
ஒருவழியாக நான் மீட்க்கப்பட்டு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டேன். என்னை குணப்படுத்த நீண்ட நாட்கள் தேவைப்பட்டது. அவர்கள் என்னிடம் என் பெற்றோர் எங்கே என்று கேட்ட போதெல்லாம், நான் மிகவும் வருத்தப்படுவேன். நான் மகிழ்ச்சியாகவோ அல்லது வெளிப்படையாகவோ இருக்கவில்லை. அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் எனக்குள் பல மாற்றங்கள் ஏற்பட்டது. காப்பகத்தில் இருந்துகொண்டு படிப்பது மற்றும் தொழிற்பயிற்சியை கற்கத் தொடங்கினேன். ஆனால் நான் உண்மையில் விரும்புவது படிப்பைத் தான்.
குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதைப் பார்த்தபோது, நான் ஒரு சீருடையை அணிந்து அவர்களைப் போலவே பள்ளிக்குச் செல்ல விரும்பினேன். ஆனால், 16 வயதில் முறையான கல்வி இல்லாததால், வாய்ப்புகள் குறைவாகவே இருந்தன. ஐ.ஜே.எம் கடின முயற்சியால், இறுதியாக, நவம்பர் 2014ல், நான் பள்ளியில் சேர்க்கப்பட்டேன். எனது 17வது பிறந்த நாளுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு, நான் என் வாழ்க்கையில் முதல் முறையாக பள்ளி சீருடையை அணிந்தேன். 13 வருட கட்டாய உழைப்பு மற்றும் பாலியல் சுரண்டலுக்குப் பிறகு, இறுதியாக எனது குழந்தைப்பருவத்தை மீட்டெடுக்க எனக்கு சுதந்திரம் கிடைத்தது.
எனது கல்வியுடன், எனது தொழிற்கல்வி தையல் படிப்பையும் தொடர்ந்தேன். தற்போது ஒரு வணிக நிறுவனத்தில் வேலை செய்கிறேன். கொல்கத்தாவின் நினைவுகள் காரணமாக, ஒருநாள் நான் மும்பைக்குத் திரும்ப விரும்புகிறேன், என் குடும்பத்தைக் கண்டுபிடிப்பேன் என்று நம்புகிறேன். நான் வாழ்க்கையில் முன்னேறி வருகிறேன், கற்றலைத் தொடர உறுதியாக இருக்கிறேன். நான் கொல்கத்தாவில் உள்ள ஐ.ஜே.எம் சாம்பியன் திட்டத்தின் செயலில் உறுப்பினராக உள்ளேன்.
பாலியல் கடத்தல் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக வானொலி பேச்சு நிகழ்ச்சிகள், பயிற்சி, பட்டறைகள் போன்றவற்றில் தப்பிப்பிழைத்தவர்களை பிரதிநிதித்துவப் படுத்துகிறேன். இந்தியா முழுவதும் இருந்து கடத்தலில் இருந்து தப்பிப்பிழைத்தவர்கள் ஒன்று கூடி, கடத்தலுக்கு எதிரான இந்திய தலைமைத்துவ மன்றத்தை (ILFAT) உருவாக்கி மன்றத்தில் நான் பங்கேற்றேன்.
ஒன்றாக, நபர்களின் கடத்தல் (தடுப்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு) மசோதா, 2018 ஐ நிறைவேற்ற நாங்கள் வாதிட்டோம்.
நீங்கள் வாழ்க்கையில் ஏதாவது செய்ய விரும்பினால், நீங்கள் உங்கள் கடந்த காலத்தை விட்டுவிட்டு எதிர்காலத்தில் கவனம் செலுத்த வேண்டும். எனது கடந்த காலத்தை மறந்து எனது புதிய வாழ்க்கையுடன் முன்னேற விரும்புகிறேன், என்று அத்தனை தன்னம்பிக்கையுடன் கூறுகிறார் அவர்.
(*அடையாளங்களைப் பாதுகாக்க பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.)
ஆங்கிலத்தில்: காஷி | தமிழில்: மலையரசு