TikTokல் பாப்புலராகி ரசிகர் கூட்டத்தை ஈர்த்த நம்மவர்கள், பிரபலங்கள் யார் என தெரியுமா?
2018ல் ’தி பெஸ்ட் எண்டர்டெயின்மென்ட் ஆப்’ என அறிவிக்கப்பட்ட TikTok பயங்கர பிரபலமாகி, தீபாவளி சமயத்தில் மட்டும் 5.3மில்லியன் வீடியோக்கள் பதிவாகி டிரெண்டாகியுள்ளது. மேலும் பல சுவாரசிய தகவல்களுடன் TikTok Rewind...
இன்னும் இரண்டே வாரங்களில் 2018க்கு பை பை சொல்லி விட்டு, கமல் சாரின் ‘விஷ் யூ ஹாப்பி நியூ இயர்’ பாடலுடன் 2019ம் ஆண்டில் அடி வைக்க இருக்கிறோம். அதற்கு முன்பாக காலங்காலமாய் ஒவ்வொரு ஆண்டின் இயர் எண்டில் செய்யக்கூடிய சம்பிரதாயமுறைப்படி, சிறந்த பத்து பாடல்கள், பத்து படங்கள், கனவுக் கன்னி... என சகட்டு மேனிக்கு எல்லா டாபிக்லையும் டாப் 10 பட்டியலிடுவது பச்சை தமிழனின் கடமை. அக்கடமையை உணர்ந்த கூகுள் பிளேவும் க.வாரம் ‘சிறந்த எண்டர்டெயின்மென்ட் ஆப்’, ‘சிறந்த கேம்’, ‘சிறந்த செயலி’... பல கேட்டகரியில் சிறந்தவற்றை அறிவித்திருந்தது.
அதன் தொடர்ச்சியாய், 2018ம் ஆண்டின் ’தி பெஸ்ட் எண்டர்டெயின்மென்ட் ஆப்’பாக தேர்வாகியுள்ளது மியூசிக்கலி @டிக்டோக் என்பதில் ஆச்சரியமே இல்லை. பட்டித்தொட்டி முதல் பாலிவுட் பிரபலங்கள் வரை அனைவரையும் வைரஸாக பற்றியுள்ளது இந்த ‘டிக்டாக்’ வீடியோ ஆப் என்றே சொல்லலாம்.
அதில் அதிக ட்ரெண்டிங்காகிய வீடியோக்கள், பாடல்கள், ட்ரெண்டிங் சேலஞ்ச்கள், ஃபேமசான பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது அந்நிறுவனம். ஒன், டூ, த்ரீ ஆர்டர் அடிப்படையில் இன்றி பயனாளர்களை கொண்டாடும் விதத்தில் பெயர்களை வெளியிட்டு இருக்கிறது டிக்டாக்.
டிக் டோக்கிலும் ட்ரெண்டாகிய ஒரு அதார் லவ்!
உலகளவில் #1MillionAudition மற்றும் #IndependenceDaychallenge ஆகிய சேலஞ்ச்ளை அதிக மக்கள் ஏற்றுக் கொண்டு ட்ரெண்டாக்கிட, அழகியலை விரும்பும் இந்திய டிக் டாக் பயனாளர்கள் கொட்டும் மழைத்துளியை கையில் பிடித்து உறைய வைக்கும் #raindropchallenge -ஐ அதிகளவில் செய்து ட்ரெண்டாக்கி உள்ளனர்.
ஒரே ஒரு பாட்டில் முன்னேறிய சூரியவம்சம் சரத்குமார் போல், வெறும் ஒரு கண்சிமிட்டலில் இந்தியாவை தாக்கிய கேரளத்தைச் சேர்ந்த புருவப்புயல் பிரியா வாரியரின் ‘ஒரு அதார் லவ்' படத்தில் இடம்பெற்றுள்ள க்யூட்டான சீனை டிக் டாக்கில் எக்கசக்கமானோர் டப்பிங் கொடுத்து ட்ரெண்ட்டாக்கி உள்ளனர்.
நடித்தல், ஆடல், பாடல், ஏன்... உளறல், சொதப்பல்கள் கூட டிக் டாக் மேடையில் அங்கீகரிக்கப்பட்டு ஓவர் நைட்டில் ஓவியாவைவிட பிரபலமாக்கிவிடுவதால், உள்ளுக்குள் உறங்கிக் கிடக்கும் கலைஞனை மக்கள்முன் வெளிக்கொணவர்தற்கான மேடையாகவே, டிக்டாக்கை பாவித்து திறமையாளர்கள் அவர்களது திறமைகளை வெளிக்காட்டிக் கொண்டிருக்க, ஆல்ரெடி முத்திரை பதித்த சினி பிரபலங்களும் டிக் டாக்கின் பயனாளர்களாக உள்ளனர்.
அக்கவுண்ட்டை ஓபன் செய்து ஒரு வீடியோவுடன் முடித்துக் கொள்ளலாமல், நித்தம் நித்தம் ரசிகர்களுக்காக ரசித்து டிக்டாக் செய்கின்றனர். அந்த லிஸ்ட்டில் பாலிவுட் செலிபிரிட்டிகளான ஷாகித் கபூர், ஜாக்குலின் பெர்னாண்டஸ், மற்றும் டைகர் ஷெராப், ஷ்ரத்தா கபூர், புவன் பாம், ரித்தேஷ் தேஷ்முக்,ஜெனிலியா தேஷ்முக், திஷா பானானி மற்றும் பாபா செகால் ஆகியோர் டாப்பில் உள்ளனர்.
தென் இந்தியாவில் கேரளத்துத் தேவதையான நடிகை அனுபாமா பரமேஸ்வரன் மற்றும் தமிழ் நடிகை அட்டகத்தி நந்திதா ஸ்வேதாவும் அதிகளவில் டிக் டாக்கில் வீடியோக்களை செய்து வருகின்றனர். அதிலும், அனுபாமாவின் ஒவ்வொரு டிக்டாக் வீடியோக்களிலும் அத்தனை மெனக்கெடல்கள்.
சாதரண மனிதர்களில் இருந்து டிக்டாக் பிரபலம் ஆனவர்கள்
காமென் மேனாக இருந்து டிக்டாக்கில் பெரும் ரசிகர் கூட்டத்தைச் சேர்த்து வைத்து, இன்ஸ்டன்ட் செலிபிரிட்டியாகிய தமிழ் டிக்டாக் பயனாளர்களின் சிலர். அப்படி தன் க்ரியேட்டிவிட்டியை கிண்டிவிட்டு ஒவ்வொரு வீடியோவிலும் கிச்சுமூச்சு மூட்டும் டிக்டாக் பிரபலமான பி. சுப்ரமணி, பாப்புலர் கிரியேட்டர்ஸ் ஆப் டிக் டாக் பட்டியலிலும் இடம்பிடித்துட்டார். 2.5லட்சத்துக்கு அதிகமான ஃபேன் பாளோயிங் கொண்டுள்ள அவருடைய அடுத்த வீடியோவுக்காக ஆல் ஆர் வெயிங்டிங். ஏனெனில், அவருடைய ஒவ்வொரு வீடியோவும் கெய்க்க பொய்க்க என சிரிப்பலைகளை வரவழைக்கக் கூடியது. ஊரே நாய் பிரியாணி பீதியில் பதறிக் கொண்டிருந்த சமயத்தில், அதையும் கான்செப்ட்டாகிய காமெடி கிங்கின் ஸ்பெஷலாட்டியே கன்டன்ட் தான்.
டிக்டாக் வீடியோ மூலம் தமிழ் திரைப்படங்களில் கதாநாயகி, நாயகன்களாக நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர் சிலர். அப்படியொரு டிக்டாக்கின் ஹிட் முகம் உன்னி கிருஷ்ணன். ஒளிப்பதிவாளராக வேண்டும் கனவோடு சென்னை பட்டணத்தை நோக்கி வந்த உன்னி கிருஷ்ணன், கோடம்பாக்கத்தில் காத்திருந்த சமயங்களில் டிக்டாக்கில் வீடியோ செய்ய, இப்போது அதுவே திரையுலகத்துக்கு அவரை அறிமுகம் செய்துவைத்துள்ளது. ஆம், விஜய்டிவி சரவணன் மீனாட்சி மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் இப்போது, திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.
‘இலங்கை தமிழச்சி’ என்ற டிஸ்கிரிப்ஷனோடு, ஹிட் அடித்த தமிழ் மற்றும் மலையாள பட டைலாக்குகள், பாடல்களுக்கு டப்பிங் கொடுக்கும் காயத்ரி ஷானின் அனைத்து வீடியோக்களும் அடிபொலி ரகம். வல்லிய ரசிகர்களை கொண்ட காயத்ரிக்காக, அவர்களது டிக்டாக்கில் ஃபேன்ஸ் கிளப் என்ற ஐடியும் வைத்துள்ளனர். அவருடைய வீடியோவை காண கிளிக்குக
1997ம் ஆண்டு ரெக்கார்ட் செய்யப்பட்டு, கடந்தாண்டு ரீரெக்கார்ட் செய்யப்பட்ட பானாமியன் சிங்கர் பாடிய ‘டேம் டூ கொசிடா’ பாடலுக்கு முழுவதுமாய் பச்சை வர்ண ஆடையணிந்து ஏலியன் அவதாரம் எடுத்து வீடியோ பதிவிடும் #DameTuCosita சேலஞ்ச் இந்தியாவில் அதிகம் விரும்பி செய்யப்பட்டஒன்றாகும்.
டிக்டாக் அறிக்கையில் இருந்து முக்கிய அம்சங்கள்:
வெட்டியாய் இருக்கும் வீக்கெண்ட் பொழுதுகளை, இந்தியர்கள் அதிகமாக டிக் டாக்’ உடனே செலவழிப்பதாக தெரிவித்துள்ளது.
அதிலும், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் இரவு 11 மணி முதல் 1 மணிவரை அதிகப் பயனாளிகள் டிக்டாக்கில் உலாவருகின்றனர் என்று வெளியிட்டுள்ளது.
பக்கம் பக்கமாய் வாழ்த்து மெசேஜ் டைப் செய்த காலம் போய், டெக் யுகத்தார் அவரவர்களே சொந்தமாய் வாழ்த்து வீடியோ கிரியேட் செய்வதால், வீடியோக்கள் குவிய இந்த தீபாவளி சமயத்தில் மட்டும் 5.3 மில்லியன் வீடியோக்கள் டிக்டோக்கில் பதிவாகியதாம்.
அதேபோல், இந்திய இன்டிபென்டன்ட் சிங்கர் ஹார்ரி சாந்தின் ‘கியா பாத் ஹே’ பாடலும், ஷ்ரத்தா கபூர் நடித்து வெளியாகிய ‘ஸ்ட்ரீ’ படத்தில் இடம்பெற்ற ‘மிலேகி மிலேகி’ பாடல், (ம) பலே பலே என மாஸாக இருக்கும் பஞ்சாபி பாடல்களுக்கு இடையே மெலோடியாய் வெளிவந்த ‘சோனியா’ பாடல்...’ என இம்மூன்று ஹிட் அடித்த பாடல்களுக்கு அதிக எண்ணிக்கையாளான இந்திய டிக் டாக்’வாசிகள் போகிற போக்கில் டப்பிங் கொடுத்து வைரல்களின் வடிவங்களாக மாறியுள்ளனர்.