'World Savings Day' - நிலையான வருமானம் தரும் 5 சிறந்த முதலீடுகள் எவை?
உலக சேமிப்பு தினமான இன்று, ஓய்வு பெற்றவர்கள் மற்றும் பாதுகாப்பான முதலீடுகளுக்காக காத்திருப்பவர்களுக்கான நிலையான வருமானம் தரக்கூடிய முதலீட்டு திட்டங்கள் குறித்து பார்க்கலாம்...
உலக அளவில் நீடித்து வரும் பணவீக்கம் மற்றும் பொருளாதார மந்த நிலை மக்களை ஈக்விட்டி சார்ந்த திட்டங்களில் இருந்து நிலையான வருமானம் தரக்கூடிய சேமிப்புத் திட்டங்களை நோக்கி நகர வைத்துள்ளது.
ஏற்கனவே, கொரோனா காலக்கட்டத்தில் சேமிப்பின் மகத்துவத்தை உணர்ந்த மக்கள் தற்போது பணவீக்கம் காரணமாக அடுத்தடுத்து வட்டி விகிதங்கள் உயர்த்தப்படுவதால் பிக்சட் டெபாசிட்களில் அதிக அளவில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர்.
உலக சேமிப்பு தினமான இன்று, ஓய்வு பெற்றவர்கள் மற்றும் பாதுகாப்பான முதலீடுகளுக்காக காத்திருப்பவர்களுக்கான நிலையான வருமானம் தரக்கூடிய முதலீட்டு திட்டங்கள் குறித்து பார்க்கலாம்...
நிலையான வருமான முதலீடு என்றால் என்ன?
உலகளவில் காணப்படும் நிச்சயமற்ற தன்மை காரணமாக பங்கு சந்தை நிலையாக இல்லாமல் ஏற்ற இறக்கத்துடன் செல்கிறது. எனவே, முதலீட்டாளர்கள் பாதுகாப்பான மற்றும் தங்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் முதலீட்டு திட்டங்களை தொடர்ந்து தேடுகின்றனர்.
அப்படிப்பட்டவர்களுக்கு நிலையான வருமான முதலீடு சிறந்த தேர்வாகும்.
நிலையான வருமான முதலீடு என்பது, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு செய்யப்படும் முதலீடு மீது வட்டி விகிதம் மூலமாக நிலையான வருமானம் கிடைப்பதைக் குறிக்கிறது.
ஃபிக்ஸட் டெபாசிட் எனப்படும் வைப்புத்தொகை, பொது வருங்கால வைப்பு நிதி (public provident fund மற்றும் தேசிய சேமிப்புத் திட்டம், அரசாங்க பத்திரங்கள் ஆகியவை பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானம் தரக்கூடிய சேமிப்பு திட்டங்கள் ஆகும்.
இத்தகைய முதலீடுகள் நிலையான வட்டித் தொகையை வழங்குவதோடு, குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பணத்தையும் திரும்பப்பெற உதவுகிறது.
1. மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS):
மூத்த குடிமக்கள் சேமிப்புத்திட்டம் என்பது 2004ல் இந்திய அரசாங்கத்தால் மூத்த குடிமக்களுக்கு பாதுகாப்பான முதலீட்டின் மூலம் உத்தரவாதமான வருமானத்தை வழங்குவதற்காக தொடங்கப்பட்டது.
60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலமாக, ஆபத்து இல்லாத முதலீட்டை பெறலாம். மத்திய அரசின் இத்திட்டத்தின் கீழ் தபால் அலுவலகங்கள் மற்றும் வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்ய முடியும். 7.4 சதவீதமாக இருந்த இதன் வட்டி விகிதம் கடந்த காலாண்டில் தான் 20 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தப்பட்டு 7.6 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது.
2. பிரதான் மந்திரி வயா வந்தனா யோஜாஜா (PMVVY):
’பிரதான் மந்திரி வாய வந்தனா யோஜனா’ என்பது மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதியத் திட்டமாகும், 2017ம் ஆண்டு மே மாதம் மத்திய அரசால் தொடங்கப்பட்ட திட்டமான இது, நிலையான வருமானத்தை எதிர்பார்க்கும் மூத்த குடிமக்களுக்கு ஏற்றது.
60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே PMVVY இல் இணைய முடியும். உச்ச வயது வரம்பு இல்லை. இத்திட்டத்தில் 10 ஆண்டுகள் பாலிசி கால அவகாசம் உள்ளது, இக்காலத்தில் ஓய்வூதிய தொகை செலுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் செய்யப்படும் முதலீட்டை பொறுத்து 1,000 ரூபாய் முதல் 1.2 லட்சம் ரூபாய் வரை மாதாந்திர ஓய்வூதியமாக பெறலாம். தற்போது, PMVVY ஆண்டுதோறும் 7.40% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது. மாதம் குறைந்த பட்சம் ரூ.1,000 ஓய்வூதியம் பெறுவதற்கான முதலீடு ரூ.1,62,162 ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
3. தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS):
அஞ்சல சிறப்பு சேமிப்புத் திட்டமான இதன் மூலமாக மாதந்தோறும் நிலையான வருமானத்தை பெற முடியும். இந்த திட்டத்தில் கணவன் - மனைவி இருவரும் கூட்டாக சேரலாம். அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்தின் கீழ், நீங்கள் ஆண்டுக்கு 6.7% மாதந்தோறும் வட்டி பெறுவீர்கள்.
இத்திட்டத்தில் 18 வயது நிரம்பிய யார் வேண்டுமானாலும் சேரலாம். குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் அதிகபட்சம் ரூ.4.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம், இதுவே கூட்டுக்கணக்கு என்றால் அதிகபட்சமாக 9 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
4. வங்கிகள்/NBFCகள்/அஞ்சலகங்களில் ஃபிக்சட் டெபாசிட்:
ஃபிக்சட் டெபாசிட் என்பது அனைத்து தரப்பினருக்கும் நன்கு பரிட்சயமான சேமிப்பு முறையாகும். வங்கிகள், தபால் அலுவலகம், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் என எவையாக இருந்தாலும் ஃபிக்சட் டெபாசிட்கள் பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானத்தை தருகின்றன.
முதலீட்டு நிறுவனத்தைப் பொறுத்து, அது வங்கியாக இருந்தாலும் சரி NBFC ஆக இருந்தாலும் சரி, முதலீடுகளில் அதிகபட்சமாக 7 முதல் 8.50% வரை வருமானம் ஈட்ட முடியும். அஞ்சல் அலுவலகத்தில் முறையே 1, 2, 3 மற்றும் 5 ஆண்டுகள் முதிர்வு காலங்களில் ஃபிக்சட் டெபாசிட் சேமிக்கப்படுகிறது.
ஓராண்டிற்கு 5.5 சதவீதமும், இரண்டு ஆண்டுக்கு 5.7 சதவீதமும், 3 ஆண்டுகள் வரையிலான சேமிப்பிற்கு 5.8 சதவீதமும், 5 ஆண்டுகள் வரையிலான சேமிப்பிற்கு 6.7 சதவீதம் வரையிலும் வட்டி வழங்கப்படுகிறது.
5. பொது வருங்கால வைப்பு நிதி (PPF):
சந்தை அபாயம் இல்லாத பாதுகாப்பான முதலீட்டு திட்டத்தை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு இந்த தபால் அலுவக சேமிப்பு திட்டம் சரியானது. பொது வருங்கால வைப்பு நிதியானது 15 ஆண்டுகள் முதிர்வு காலத்தைக் கொண்டது, இடையில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட தொகையை அவசர காரணங்களுக்காக வித்டரா செய்து கொள்ளலாம்.
ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும், பிபிஎஃப் கணக்குகளுக்கான வட்டி விகிதங்களை அரசாங்கம் மாற்றுகிறது. தற்போதைய நிலவரப்படி, பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 7.1 சதவீதம் ஆகும். மருத்துவம், கல்வி, திருமணம் போன்ற காரணங்களுக்காக 3 ஆண்டுகளுக்குப் பிறகு இத்திட்டத்தில் இருந்து முதலீட்டாளர்கள் கடன் பெற முடியும். குறைந்த பட்சம் 500 ரூபாய் வீதம், ஆண்டுக்கு 1.5 லட்சம் வரை அதிகபட்சம் முதலீடு செய்யலாம்.
இந்த வங்கியில் சேமிப்பு கணக்கு வட்டி விகிதம் அதிகரிப்பு; எந்த வங்கி? எவ்வளவு?