மும்பை-டெல்லி 12 மணி நேரத்தில்: ரூ.98000 கோடி செலவில் உலகின் மிக நீளமான விரைவுச்சாலை!
மத்திய அரசுக்கு கோடிகளை கொட்டிகொடுக்க போகும் தங்கசுரங்கம் - நிதின் கட்கரி!
டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களை உள்ளடக்கும் எட்டு வழி விரைவுச்சாலையின் அம்சங்களை விரிவாக பார்ப்போம்!
டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களை இணைக்கும் வகையில் டெல்லி - மும்பை 8 வழி தேசிய விரைவுச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் நடந்து இதன் பணிகள் 202க்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1380 கிலோமீட்டர் தூரம் வரையிலான இந்த எட்டு வழி விரைவுச்சாலை சில நகரங்களுக்கிடையேயான பயண நேரத்தை 24 மணிநேரத்திலிருந்து 12-12.5 மணி நேரமாகக் குறைக்கும்.
ரூ.98,000 கோடி செலவில் உருவாக்கப்பட்டு வரும் மத்திய அரசின் எதிர்பார்ப்புக்குரிய திட்டங்களில் ஒன்றான இதன் பணிகளை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கடந்த சில நாட்களாக டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா, குஜராத் மற்றும் மத்திய பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தார்.
9 மார்ச் 2019 அன்று அடிக்கல் நாட்டப்பட்டதுடன் தொடங்கப்பட்ட இந்த விரைவுச்சாலை திட்டம், இந்தியாவின் பொருளாதார மையங்களான ஜெய்ப்பூர், அஜ்மீர், கிஷன்கர், சித்தோர்கர், கோட்டா, உதய்பூர், உஜ்ஜைன், போபால், இந்தூர், வதோதரா, அகமதாபாத் மற்றும் சூரத் ஆகியவற்றை இணைக்கும்.
மொத்தம் 1,380 கிலோமீட்டர் கொண்ட விரைவுச்சாலையில் 1,200 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூர சாலைப்பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்துக்காக 15,000 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விரைவுச் சாலையின் சில முக்கிய அம்சங்கள்:
* போக்குவரத்து பயன்பாடுகள் அதிகரிப்பதை பொறுத்து எதிர்காலத்தில் இது 12 வழி விரைவுச்சாலையாக விரிவுபடுத்தலாம் என்று கூறப்படுகிறது.
* உணவகங்கள், எரிபொருள் நிலையங்கள், தளவாட பூங்காக்கள் போன்ற வழக்கமான சாலையோர வசதிகளை கொண்ட விரைவுச்சாலையாக இது உருவாக்கப்பட்டு வருகிறது.
* இந்த விரைவுச்சாலையில், விபத்தில் பாதிக்கப்படுபவர்களை எளிதாக மீட்கும் வகையில் ஹெலிபோர்ட் உடன் கூடிய ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை ஏற்படுத்தப்பட இருக்கிறது. மேலும் ட்ரோன் சேவைகளைப் பயன்படுத்தும் திட்டமும் இருக்கிறதாம்.
* விரைவுச்சாலையின் இருபுறங்களிலும் இரண்டு மில்லியன் அளவு மரங்கள் மற்றும் செடிகள் நடப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
* விலங்குகள் எளிதாகக் கடந்து செல்லும் வகையிலும், விலங்குகளின் நடமாட்டத்தை எளிதாக்கும் வகையில் அதிக மேம்பாலங்களை உள்ளடக்கிய, ஆசிய அளவில் முதல் மற்றும் உலக அளவில் இரண்டாவது விரைவுச்சாலையாக இது இருக்கும்.
* இந்தத் திட்டம் மூலம் ஆண்டுக்கு 320 மில்லியன் லிட்டருக்கும் அதிகமான எரிபொருளின் சேமிக்கப்படுவதோடு, கார்பன் டை ஆக்சைடு உமிழ்வானது 850 மில்லியன் கிலோ அளவுக்கு குறையவும் செய்யும் என்று கூறப்படுகிறது.
* இந்த சாலையின் கட்டுமானத்தில் 12 லட்சம் டன்களுக்கு மேல் இரும்புகள் (எஃகு) பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அளவு இரும்பானது 50 ஹவுரா பாலங்கள் கட்டுவதற்கு சமம்.
* மேலும், 80 லட்சம் டன் சிமெண்ட் சாலையின் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது நம் நாட்டின் வருடாந்திர சிமெண்ட் உற்பத்தி திறனில் சுமார் 2 சதவீதம் ஆகும்.
* ஆயிரக்கணக்கான சிவில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ள இந்த திட்டம் 50 லட்சம் மனித வேலை நாட்களை உருவாக்குகிறது.
* மக்கள் பயன்பாட்டுக்கு இந்த விரைவுச்சாலை திறக்கப்பட்டதும், சுங்க கட்டணம் மூலம் மத்திய அரசுக்கு மாதம் ரூ.1,000 கோடி முதல் ரூ.1,500 கோடி வரை வருவாய் கிடைக்கும் என்று கூறியிருக்கிறார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.