டோக்கியோ ஒலிம்பிக்கில் கால்பதிக்கும் யாஷாஸ்வினி சிங் - யார் இந்த வீராங்கனை?
இந்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதற்கான தயாராகி வருகிறார் இந்திய வீராங்கனை யாஷாஸ்வினி சிங் தேஸ்வால்.
"இந்தியாவில் பெண்களுக்கு குடும்பத்தினர் போதிய அளவை கொடுப்பதில்லை. விளையாட்டுத்துறையில் பெண்கள் சாதிக்க வேண்டும் என்றால், இங்கிருக்கும் மனநிலை மாற வேண்டும்,” என்கிறார் டோக்கியோ ஒலிம்பிக்கில் கால் பதிக்க போகும் இந்திய வீராங்கனை யாஷாஸ்வினி.
யார் இந்த யாஷாஸ்வினி?
இந்தோ திபெத் எல்லை காவல் படையில் மூத்த அதிகாரியாக இருந்தவர் தேஸ்வால். இவரது மகள் யாஷாஸ்வினி. இவர் கடந்த 2010ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிக்கு தனது மகள் யாஷாஸ்வினியை அழைத்துச் சென்றார். அப்போது, அங்கு துப்பாக்கிச்சூடும் போட்டியை பார்த்த யாஷாஸ்வினிக்கு துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ஆர்வம் ஏற்பட்டது.
தனது விருப்பத்தை தந்தையிடம் தெரிவிக்க, சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் வீரரும், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியுமான டிஎஸ்.திலன் மேற்பார்வையில் துப்பாக்கிச்சுடுதல் பயிற்சியில் ஈடுபட்டார் யாஷாஸ்வினி.
தொடர்ந்து கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டார் அவர். இதன் பயனாக 2014ஆம் ஆண்டு புனேயில் நடைபெற்ற 58ஆவது தேசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பல்வேறு பிரிவில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றார். இது அவருக்கு மேலும் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் அளித்தது. தொடர்ந்து பல தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிப் பெற்றுள்ளார். அதில் முக்கியமானது 2017ஆம் ஆண்டு ஜூனியர் சாம்பியஷன் பட்டம்.
இதுதொடர்பாக பேசிய அவர்,
“எனது குடும்பம் பயிற்சி மற்றும் போக்குவரத்துக்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர். இந்தியாவில் துப்பாக்கிச்சுடும் வீரர்களுக்கு போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லை. இதனால் அவர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்.”
”படிப்பு மற்றும் விளையாட்டு இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறேன். எனக்கு இது சற்று சவாலாக இருக்கிறது. நான் செல்லும் போட்டிகளுக்கு, என்னுடன் புத்தகங்களையும் எடுத்துச் செல்வேன். வெளிநாடு, உள்நாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளச் செல்வது தனக்கும், தனது பெற்றோருக்கும் சவாலானதாக இருக்கிறது,” என்கிறார்.
துப்பாக்கிச் சூட்டில் தொடர்ந்து பிரகாசித்த யாஷஸ்வினி, 2017ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எஃப் உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் உலகச் சாதனை படைத்தார். இந்த உலகச் சாதனை தான் அவரை வெளியுலகத்துக்கு அறிமுகப்படுத்தியது.
அதேபோல, 2019ஆம் ஆண்டு பிரேசிலில் நடந்த ஐஎஸ்எஸ்எஃப் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார் இந்த இந்திய வீராங்கனை. இந்த வெற்றிதான் அவருக்கு டோக்கியோ ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இடம் பெறும் வாய்ப்பையும் பெற்றுத் தந்துள்ளது.