ஆசைக்காக ட்ரம்ஸ் கற்றுக் கொண்டு அதையே தொழில் முனைவாக்கிய இளம் சிஇஓ ஷரண்!
8 வயதில் ட்ரம்ஸ் வாசிக்க கற்றுக் கொண்டு, 11 வயதில் அதனையே தனது தொழில் முனைவாக மாற்றி தமிழகத்தின் இளம் சிஇஓ ஆகி இன்று அதில் லட்சங்களில் வருவாயும் ஈட்டுகிறார் இந்த இளம் ஸ்டார்.
90’s கிட்ஸ் கிட்ட பதின்பருவத்தில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்டால் அவர்களிடம் புதிதாக எந்தப் பதிலும் இருக்காது. ஆனால் 21ம் நூற்றாண்டு டீனேஜ்கள் வேற லெவல் என்பதற்கான சிறந்த உதாரணம் எஸ்.பி.ஷரண்.
பப்ளி க்யூட் லுக்கிங் பாய் ஷரண் பார்க்க வேண்டுமானாலும் அமைதியானவராகத் தோன்றலாம் ஆனால் 13 வயதில் அவர் சாதித்திருப்பதைக் (சம்பாதித்திருப்பதை) கேட்டால் 90’s கிட்ஸ்க்கு நிச்சயம் தலைசுற்றும்.
ஷரண், சிஇஓ, ட்ரம்ஸ் சர்கிள்
நடைப்பழகத்தொடங்கியது முதலே ஷரணின் விளையாட்டுகளில் இணைந்து கிடந்த அம்சம் மேளம் அடித்தல். அறியாப்பருவத்தில் கையில் கிடைத்த பொருட்களைக் கொண்டு சப்தம் எழுப்பிக் கொண்டே இருந்தவர் 5 வயதில் அப்பா மேஜையில் போட்ட தாளத்திற்கு எசப்பாட்டாக தன்கைவரிசையை தாளம் போட்டு காட்டி இருக்கிறார். இப்படித் தான் ஷரணின் பேஷனான ட்ரம்ஸ் கற்றல் தொடங்கி இருக்கிறது. பின்னர் 8 வயது முதல் முறையாக ட்ரம்ஸ் வாசிக்கக் கற்றுக் கொண்டுள்ளார்.
தனக்கு பிடித்த விஷயத்தை ஒருவர் செய்யும் போது அதனை அடுத்த பரிணாமத்திற்கு எடுத்துச் செல்லலாம் என்ற சிந்தனைகள் வருவது சகஜம். அதே சிந்தனை தான் ஷரணுக்கும் வந்திருக்கிறது. இதற்கான விதையை விதைத்தது அவருடைய தந்தை சக்திவேல்.
“ஷரணிடம் 5ம் வகுப்பு பொது விடுமுறையின் போது என்ன செய்யப் போகிறாய் எனக் கேட்டேன். ஏனெனில் எங்கள் உறவினர்கள் அனைவரும் சென்னையில் இருக்கிறார்கள், வெளியூர் சென்றாலும் 1 வாரம் மட்டுமே செலவிட முடியும் என்று கூற இந்த விடுமுறையை பயனுள்ளதாக்க kidsprenuer பயிற்சியில் பங்கேற்குமாறு கூறினேன்.
ஷரணும் உடனே இசைவு தெரிவிக்க 2 நாட்கள் மட்டுமே நான் அழைத்து சென்று வந்தேன். டீனேஜ்கள் முதல் 25, 35 வயது மதிக்கத்தக்கவர்கள் வரை பங்கேற்ற அந்த பயிற்சி பட்டறை அவனுக்கு பிடித்துப் போகவே கோடை விடுமுறை ஷரணுக்கு கிட்ஸ்ப்ரீனரிலேயே சென்றது,” என்றார்.
பேஷனுக்காக ட்ரம்ஸ் கற்றுக்கொண்டாச்சு, 10 வயதிலேயே தொழில்முனைவருக்கான பயிற்சியும் எடுத்தாச்சு பிறகு என்ன இரண்டையும் ஃபியூஷன் செய்து ஒரு தொழிலைத் தொடங்கலாமே என்று தனது விருப்பதை தந்தையிடம் கூறி இருக்கிறார் ஷரண். 32 வயதில் தொழில்முனைவராக அவதாரம் எடுத்த சக்திவேல் தனது மகனின் ஆசைக்கு பச்சைக்கொடி காட்டியதோடு முதலீட்டிற்கான பணத்தையும் கொடுத்துள்ளார்.
2017ம் ஆண்டு ’ட்ரம்ஸ் சர்கிள்’ (Drums circle) என்ற நிறுவனத்தைத் தொடங்கி அதன் மூலம் டீம் பில்டிங் மற்றும் கார்ப்பரேட் ஊழியர்களுக்கு ஸ்ட்ரெஸ் ஃப்ரீனெஸ்ஸை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பதை நோக்கமாக வைத்து செயல்படத் தொடங்கியுள்ளார் ஷரண்.
கார்ப்பரேட் நிறுவனங்கள், பார்ட்டிகள், பொது இடங்கள் என பல்வேறு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்துள்ள ஷரண், பங்கேற்பாளர்களுக்கு ஜிம்பே (djembes), பாங்கோஸ், ஷேக்கர்களை வைத்து எப்படி வாசிப்பது என்பதை கற்றுக் கொடுக்கிறார். ஜெம்பே என்பது கால்களுக்கு இடையில் ட்ரம்ஸை வைத்து கைகளால் தட்டி ஓசை எழுப்பக் கூடியது.
ஆப்ரிக்க இசைக்கருவியான இதனை புனேயில் இருந்து வரவழைத்து ஷரணின் தொழில்முனைவு கனவுக்கு உறுதுணையாக இருந்துள்ளார் சக்திவேல்.
ஈவன்ட்டுகளில் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த இசைக்கருவிகளை வாசித்து ஒருங்கிணைந்த இசையை உருவாக்கும் போது அது ஒற்றுமையை பிரதிபலிப்பதோடு, மன அழுத்தத்தை குறைத்து பதட்டத்தை தணிக்கவும் உதவும் என்று சொல்கிறார் ஷரண்.
பதட்டம், ஸ்ட்ரெஸ் இது பற்றியெல்லாம் 11 வயதில் உங்களுக்கு என்ன புரிதல் இருந்தது என ஷரணிடம் கேட்டால், அதற்கும் பதில் சட்டென்று வந்து விழுகிறது. ட்ரம்ஸ் வாசிப்பதால் என்னால் மனதை ஒருநிலைப்படுத்த முடிந்தது, மேலும் கவனிப்புத் திறனும் அதிகரித்தது. ஒன்றுகூடல்கள் பலவற்றில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் பலதரப்பட்ட வயதினர் பங்கேற்பார்கள்.
குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் ஏதாவது ஒரு வகையில் ஒன்று சேர்ப்பது என்பது முடியாத காரியம் ஆனால் அதை சாத்தியமாக்கியது ட்ரம்ஸ் சர்கிள் என்கிறார் ஷரண். அவர்களுக்கு ட்ரம்ஸ் வாசிக்கத் தெரிகிறதோ இல்லையோ அதனை முயற்சித்து பார்க்கலாம் என்று நினைக்கிறார்கள், அவர்களை நான் சரியாக வழிநடத்துவதன் மூலம் நல்ல இசையை வெளிக்கொண்டு வர முடிகிறது.
”ட்ரம்ஸ் வாசிப்பதால் பங்கேற்பாளர்களுக்குள் இருக்கும் மனஇறுக்கங்கள் குறைந்து அந்த நிகழ்ச்சி முடியும் வரை அந்த இடமே சிரிப்பலைகளாலும், மகிழ்ச்சியாலும் நிரம்பி வழிவதை பார்க்க முடிகிறது,” என்கிறார் ஷரண்.
11 வயதில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கிய ஷரண் முதன்முதலில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது தனது வயது ஒத்த மாணவர்களுக்கே.
“எனது வீட்டின் அருகில் குடியிருக்கும் எழுத்தாளர் ஒருவர் கல்விச் சுற்றுலாவிற்காக 15 மாணவர்களை அழைத்து வந்திருந்தார். அவர்களைக் கொண்டு முதன்முதலில் எங்கள் வீட்டு மொட்டை மாடியில் தான் ட்ரம்ஸ் சர்கிள்க்கான முதல் நிகழ்ச்சியானது அரங்கேறியது,” என்கிறார் ஷரண்.
அதற்குப் பின்னர் கார்ப்பரேட் நிறுவனங்கள், குழந்தைகள் காப்பகங்கள், இல்லங்கள் மற்றும் பொது இடங்களில் ட்ரம்ஸ் சர்கிள் நிகழ்ச்சிகளை நடத்தத் துவங்கினோம். நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நான் முதன்முதலில் மேடைக்கு ஏறிய போது பலர் எனக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை, அவர்களை என்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது மிகவும் சிரமமாக இருந்தது. எனினும் நான் தொடர்ந்து நடத்திய நிகழ்ச்சிகளில் கற்றுக் கொண்ட அனுபவங்கள் எனக்குள் இருந்த அச்சத்தை போக்கியது இன்று என்னால் நிச்சயம் ஒரு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்த முடியும் என்ற நம்பிக்கை அதிகமாகவே இருக்கிறது என்று கூறுகிறார் இந்த பயமறியா இளங்கன்று.
எனக்கு பிடித்ததை செய்ய அப்பா அனுமதி கொடுக்கிறார் இப்போது ட்ரம்ஸ் பிடிக்கிறது அதனை செய்கிறேன் எதிர்காலத்தை பற்றி பெரிய இலக்கு இல்லை அப்போது என்ன பிடிக்கிறதோ அதைச் செய்வேன்.
என்னுடைய சிறந்த நண்பர், வழிகாட்டி எல்லாமே அப்பா தான். படிப்பு, தொழில்முனைவு என எல்லா விஷயத்தையும் அப்பாவுடன் கலந்து பேசியே முடிவெடுப்பேன். ட்ரம்ஸ் சர்கிள் தொடங்கிய 2 ஆண்டுகளில் ரூ. 7 லட்சம் வருமானம் ஈட்டியுள்ள ஷரண், எனக்கு பிடிக்கும் வரை தொழில்முனைவுப் பயணம் தொடரும் என்கிறார்.
ஷரண், சிஇஓ, ட்ரம்ஸ் சர்கிள்
குழந்தைகளுக்கு பெற்றோர் சுதந்திரம் கொடுக்க வேண்டும். அப்போது தான் அவர்களின் சிந்தனைக்கேற்ப அவர்களால் வளர முடியும். படிப்பு மட்டுமே வாழ்க்கையல்ல, ஷரண் 80 சதவிகித மதிப்பெண் எடுக்கக் கூடியவன் அவனிடம் 100 சதவிகித மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று நானோ என்னுடைய மனைவியோ எந்த அழுத்தமும் கொடுத்ததில்லை.
படிக்க வேண்டிய நேரத்தில் படிப்பு, விளையாட வேண்டிய நேரத்தில் விளையாட்டு, நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வழங்கும் நேரத்தில் அதற்கான ஏற்பாடுகள் என இப்போதே சரியான திட்டமிடல்களுடன் ஷரண் பயணித்து வருகிறார் என்று பெருமைப்படுகிறார் சக்திவேல். ஷரண் நிச்சயமாக ஒரு பொறியாளராக மாட்டார் எப்போதுமே அவருக்கு பிடித்ததையே செய்வார்.
ஷரணிடம் லேப்டாப், மொபைல் ஃபோன் என அனைத்து டெக்னாலஜிகளும் இருக்கிறது. பெற்றோரான நாங்களும் அவருக்கு முழு சுதந்திரத்தை கொடுத்திருக்கிறோம் அதனை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்கிறார் சக்திவேல்.
தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்று பழமொழிகளில் படித்திருக்கிறோம். தொழில்முனைவுப் பயணத்தில் சக்திவேல் 32 வயதில் எடுத்த முடிவை ஷரண் 11 வயதிலேயே எடுத்திருக்கிறார். இதனால் வாழ்க்கைக்கான புரிதல் அவருக்கு இளம் வயதிலேயே வந்திருக்கிறது.
ஏன் இந்த படிப்பை தேர்ந்தெடுத்தோம்? ஏன் இந்த வேலையில் சேர்ந்தோம்? என்று தெரியாமலேயே பலர் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருப்பவர்கள் மத்தியில் ஷரண் அடுத்த தலைமுறையின் விடிவெள்ளியாகவே திகழ்கிறார்.