தள்ளுவண்டியில் முட்டை விற்ற இளைஞர் ஐஏஎஸ் அதிகாரியாக உயர்ந்த கதை!
தள்ளுவண்டியில் முட்டை, காய்கறி விற்றவாரே படித்து, தனது விடாமுயற்சியால் ஐஏஎஸ் அதிகாரியாக முன்னேறியிருக்கிறார் பீகாரைச் சேர்ந்த மனோஜ் குமார் ராய். அவரது கதை நிச்சயம் வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் அனைவருக்குமே ஒரு முன்னுதாரணம் தான்.
முயற்சி திருவினையாக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த குறள் வரிகள் தான் என்றாலும், அதை நிஜவாழ்க்கையில் முயற்சித்துப் பார்ப்பவர்களுக்கு மட்டுமே வெற்றி வசப்படுகிறது. அப்படி தன் முயற்சியாலும், திட்டமிடலாலும், ஒரு காலத்தில் தெருத்தெருவாக காய்கறி விற்ற இளைஞர் ஒருவர் ஐஏஎஸ் அதிகாரியாக உயர்ந்துள்ளார்.
பீகாரைச் சேர்ந்த அந்த அதிகாரியின் பெயர் மனோஜ்குமார் ராய். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த போதும், தள்ளுவண்டியில் காய்கறி விற்பது, அலுவலகங்களை தூய்மைப்படுத்துவது என பொருளாதார ரீதியாக பல அழுத்தங்களைச் சந்தித்தபோதும், மனம் தளராமல் படித்து, ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று, இன்று வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் இளைஞர்கள் பலருக்கு அவர் வாழும் முன்னுதாரணமாகி இருக்கிறார்.
இதோ அவர் வாழ்க்கையில் எப்படி திட்டமிட்டு ஜெயித்தார் என்பதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்...
நம்பிக்கையே மூலதனம்
பீகார் மாநிலம் சுபால் என்ற குக்கிராமத்தில் பிறந்தவர்தான் மனோஜ்குமார் ராய். பிறந்தது முதலே வறுமையான சூழலில் கஷ்டப்பட்ட அவருக்கு, தன் குடும்பத்தின் நிலைமையை, தான் உயர்ந்த பதவிக்கு வந்தால் மட்டுமே மாற்ற முடியும் என்ற நம்பிக்கை வளர வளர மேலும் உறுதியானது. உயர்ந்த பதவியாக அவர் நினைத்தது கலெக்டர் வேலையைத்தான்.
எனவே, சிறுவயது முதலே தன் ஐஏஎஸ் கனவை நனவாக்க தேவையான முயற்சிகளை அவர் மேற்கொள்ளத் தொடங்கினார். தனது குக்கிராமத்தில் இருந்தால், வாழ்க்கையில் தான் ஆசைப்பட்ட இடத்திற்கு முன்னேற முடியாது என நினைத்த அவர், 1996ம் ஆண்டு டெல்லிக்கு குடிபெயர்ந்தார். ஆனால், கிராமத்தில் இருந்ததுபோல் அவரது வாழ்க்கை அங்கு இருக்கவில்லை. தனது அன்றாடச் செலவுகளுக்காக கிடைத்த வேலைகளையெல்லாம் செய்ய வேண்டி இருந்தது.
தள்ளுவண்டியில் வியாபாரம்
ஒருகட்டத்தில் தள்ளுவண்டியில் முட்டை மற்றும் காய்கறிகளை எடுத்துக் கொண்டு தெருத்தெருவாகச் சென்று விற்பனை செய்தார். பகுதி நேரமாக பல அலுவலகங்களில் துப்புரவுப் பணிகளையும் செய்தார். இப்படி பல கடினமான வேலைகளைச் செய்து கொண்டே, தனது ஐஏஎஸ் கனவை நிஜமாக்கும் வழிகளையும் அவர் தேடத் தொடங்கினார்.
அப்போது, புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்குப் பொருட்களை சப்ளை செய்யும் வேலை அவருக்குக் கிடைத்தது. கிடைத்த இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட மனோஜ், தனது வேலைக்கு இடையே அந்தப் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் உதவியுடன் சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தன்னைத் தயார்படுத்தத் தொடங்கினார்.
தனது வருமானத்தை சிக்கனமாகச் செலவு செய்து, டெல்லியில் உள்ள ஸ்ரீ அரவிந்தர் கல்லூரியில் மாலைநேர பட்டப்படிப்பை முடித்தார். காலை நேரத்தில் வழக்கம் போல தள்ளுவண்டியில் வியாபாரம் செய்து கொண்டே தனது படிப்பை அவர் தொடர்ந்தார். வியாபாரம், படிப்பு என ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளைச் செய்து வந்ததால், தனது வெற்றி கொஞ்சம் தள்ளிப் போவதை உணர்ந்த மனோஜ், 2001ம் ஆண்டு முழு மூச்சாக சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படிக்கத் தொடங்கினார்.
மாணவர்களுக்கு டியூசன்
இதற்காக டெல்லியிலிருந்து பாட்னாவுக்கு சென்ற மனோஜ், அங்கு ராஷ் பிகாரி பிரசாத் சிங் என்பவரிடம் தனது பயிற்சியைத் தொடங்கினார். கூடவே, தனது தொழிலும் தனது பயிற்சி தொடர்பாகவே இருந்தால், அது தனது சிவில் சர்வீஸ் தேர்வுக்கு உதவியாக இருக்கும் என நினைத்த மனோஜ், பகல் நேரத்தில் பயிற்சி மையத்தில் தனது தேர்வுகளுக்கு தயாரானது போக, மாலையில் தனது செலவுகளுக்காக பள்ளி மாணவர்களுக்கு டியூசன் எடுக்கத் தொடங்கினார்.
ஜியாகிரபியைத் தனது விருப்பப்பாடமாகத் தேர்வு செய்த அவர், மூன்றாண்டுகள் தன்னைத் தயார் செய்து கொண்டு, 2005ம் ஆண்டு முதன்முறையாக சிவில் சர்வீஸ் தேர்வை எழுதினார். ஆனால், அம்முயற்சியில் அவரால் வெற்றிபெற இயலவில்லை. இரண்டாவது முயற்சியிலும் ஆங்கிலம் அவருக்கு முட்டுக்கட்டையாக அமைந்தது. ஆங்கிலத்தில் தோற்றதால் அவரது ஓராண்டு முயற்சியும் வீணானது. மூன்றாவது முயற்சியில் அவரால் மெயின்ஸ் மற்றும் நேர்முகத் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை.இருப்பினும் விடாமல் முயற்சி செய்தார்.
வெற்றி வசப்பட்டது
தனது 30வது வயதில் கற்கும் முறையை மாற்றிக் கொண்டு நான்காவது முயற்சிக்குத் தயாரானார். பள்ளி மாணவர்களுக்கு டியூசன் வகுப்புகள் எடுத்ததால், என்சிஆர்டி-யின் 6-12 வகுப்புப் பாடப் புத்தகங்களை முழுக்க முழுக்க மனனம் செய்தார். இதன் மூலம் தனது பிரிலிம்ஸ் தேர்வுக்கு 80 சதவீதம் தயாரானார். திட்டமிட்டு அவர் மேற்கொண்ட பயிற்சிகளின் பலனாக, 2010ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று அகில இந்திய அளவில் 870ஆவது ரேங்கை மனோஜ் பெற்றார்.
பீகாரின் நாளந்தாவில் உள்ள ராஜ்கிர் ராணுவ தளவாட பேக்டரியின் நிர்வாக அதிகாரியாக அவருக்கு பதவி கிடைத்தது. கடுமையாக உழைத்தால் வாழ்க்கையில் நினைத்த நிலைக்கு உயர முடியும் என்பதை தனது வாழ்க்கையில் நிரூபித்துக் காட்டிய மனோஜ், தன்னைப் போலவே ஏழ்மையான நிலையில் உள்ள குடும்பங்களின் வாழ்க்கை நிலைமையை மாற்ற முடிவு செய்தார்.
ஏழை மாணவர்களுக்கு பயிற்சி
எனவே, ஏழை மாணவர்களுக்கு இலவசமாக சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பயிற்சியை அளிக்க அவர் முடிவு செய்தார். இதற்காக வார இறுதி நாட்களில், வீட்டில் ஓய்வெடுக்காமல், நாளந்தாவில் இருந்து பாட்னாவுக்கு 110 கி.மீ. பயணம் செய்து அங்குள்ள ஏழை மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கத் தொடங்கினார்.
திருமணத்திற்குப் பிறகு மனோஜின் இந்த நல்ல முயற்சிக்கு அவரது மனைவியும், காவல் அதிகாரியுமான அனுபமாவும் உறுதுணையாக செயல்பட்டு வருவதால், தொடர்ந்து அவரது பயிற்சி மையமும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. அவரிடம் படித்த பல மாணவர்கள் தற்போது அரசு பணியில் நல்ல நிலைமையில் உள்ளனர்.
தான் நினைத்தபடி நல்ல நிலைக்கு உயர்ந்து விட்ட பிறகு, ஏற்றி விட்ட ஏணியை மறக்காமல், தன்னைப் போலவே வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என ஆசைப்படும் ஏழ்மையான மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வரும் மனோஜின் முயற்சி பாராட்டுகளுக்கு உரியது. அதோடு, எப்படிப்பட்ட ஏழ்மையான சூழலிலும் மனம் தளராது உழைத்தால் நிச்சயம் ஒரு நாள் சமூகத்தில் பெரிய அந்தஸ்துக்கு முன்னேற முடியும் என்பதற்கும் மனோஜின் வாழ்க்கையே சிறந்த முன்னுதாரணமாக விளங்குகிறது.
வீடு, வீடாக நியூஸ் பேப்பர் போட்டவர் இன்று ஐஏஎஸ் அதிகாரி; நிரிஷ் ராஜ்புத் சாதித்தது எப்படி?