Black hole படமெடுக்க உதவிய 29 வயது பெண் விஞ்ஞானி பற்றி தெரியுமா?
கருந்துளையை படமெடுக்க உதவிய கேத்தே பெளமன், இணையம் கொண்டாடும் புதிய நட்சத்திரம் ஆகியுள்ளார்!
கேத்தே பெளமன் (Katie Bouman) யார்? என்பது தான், இணையத்தில் இப்போது பலரும் ஆர்வத்துடன் எழுப்பும் கேள்வி. ஆனால் மொத்த இணையமும் இந்த கேள்விக்கான பதிலை அறிந்திருக்கிறது. பெளமன் வேறு யாருமில்லை, அண்மையில் நிகழ்த்தப்பட்ட அறிவியல் சாதனையான கருந்துளையை படமெடுத்த நிகழ்வின் பின்னணியில் இருக்கும் சாதனையாளர்களில் ஒருவர்.
பிரபஞ்சத்தில் எண்ணிப்பார்க்க முடியா தொலைவில் இருக்கும் எம் 87 கேலக்சி மையத்தில் வீற்றிருக்கும் பிரம்மாண்ட கருந்துளையை புகைப்படத்தில் பதிவு செய்த சாதனை உண்மையில் விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சி என்றாலும் இதில் பங்கேற்றவர்களில் பெளமனுக்கு விஷேச இடம் இருக்கிறது. ஏனெனில், அவர் உருவாக்கிய அல்கோரிதம் தான் கருந்துளையை படமெடுக்க கைகொடுத்திருக்கிறது.
இது வரை சாத்தியமே இல்லாதது என கருதப்பட்டது இப்போது கைக்கூடியிருக்கிறது என விஞ்ஞானிகள் வர்ணிப்பதில் இருந்தே இந்த சாதனையின் நீள அகலத்தை புரிந்து கொள்ளலாம். கருந்துளை என்பவை, நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அடர்த்தியானவை, அவற்றின் பூவியீர்ப்பு விசையானது மிக மிக அதிகமானது, அதன் பிடியில் இருந்து எதுவுமே தப்ப முடியாது என வர்ணிக்கப்படுகிறது. கருந்துளையில் இருந்து ஒளி உள்பட எதுவுமே மீண்டு வர முடியாது என்றும் சொல்லப்படுகிறது. ஒளியையும் விழுங்கி விடும் என்பதால் தான் கருந்துளை என்றும் அழைக்கப்படுகின்றன.
இப்படி இருக்க, கருந்துளையை விஞ்ஞானிகள் எப்படி படமெடுத்தனர்? முதல் முறையாக கருந்துளை படமெடுக்கப்பட்டுள்ளது என்று சொல்லப்படுவதை எப்படி புரிந்து கொள்வது?
இந்த இடத்தில் நாம் வழக்கமாக அறிந்திருக்கும் விஷயங்களில் இருந்து விலகி நிற்கத் தயாராக வேண்டும். ஏனெனில், வழக்கமான அம்சங்களில் இருந்து பாய்ச்சல் நிகழ்த்தும் அறிவியல் சார்ந்த ஆய்வின் அடிப்படையாக கருந்துளைகள் அமைகின்றன. இயற்பியல் அடிப்படையாகக் கருதப்படும் நியூட்டன் விதிகளை கேள்விக்குள்ளாக்க கூடிய அம்சங்களின் புதிய உண்மையை இந்த அறிவியல் தேடிக்கொண்டிருக்கின்றன. இவற்றின் ஆதாரமாக இருப்பது ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு. இந்த கோட்பாட்டை புரிந்து கொள்ள கருந்துளைகளின் சூட்சமத்தை அறிந்து கொள்ள வேண்டும் என கருதப்படுகிறது. ஏனெனில் ஐன்ஸ்டீன் விவரித்த ஸ்பேஸ் டைம், அதை வளைக்கும் ஈர்ப்பு விசை போன்றவற்றுக்கான விடைகளை கருந்துளை ஆய்வு கொண்டிருக்கிறது.
ஆனால் கருந்துளை பற்றி அறிந்து கொள்வது அத்தனை எளிதானதல்ல. அவை பூமியில் இருந்து மில்லியன் கணக்கான ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளன. மேலும் அவை பாரம்பரிய அறிவியலை தலைகீழாக புரட்டிப்போடும் தன்மை கொண்டிருக்கின்றன. கொஞ்சம் அசந்தால் அவை, வெறும் கருத்தாக்கம் அல்லது கற்பனை என்று கூட சொல்லிவிட நேரலாம்.
ஆனால், வானியல் விஞ்ஞானிகள் கருந்துளைகள் இருப்பதை ஏற்றுக்கொண்டுள்ளனர். இவைப்பற்றி மேலும் ஆழமாக அறிந்து கொள்ளும் முயற்சியில் பிரபஞ்சம் தொடர்பான பல புதிர்கள் விடுபடும் என்றும் நம்புகின்றனர்.
இந்த பின்னணியில் பார்த்தால், முதல் முறையாக கருந்துளையை படமெடுத்திருப்பது எத்தனை மகத்தான விஷயம் என உணர்ந்து கொள்ளலாம். ஆனால், படமெடுப்பது எனும் போது, நாம் அறிந்தது போல காமிராவை நீட்டி படமெடுப்பது அல்ல. அதெல்லாம் இங்கு சாத்தியம் இல்லை. வானியல் நிகழ்வுகள் அல்லது பொருட்களை படமெடுக்க சக்திவாய்ந்த தொலைநோக்கிகள் தேவை. ஆனால் கருந்துளையை படமெடுக்க ஆய்வுலகம் உருவாக்கி வைத்திருக்கும் எந்த தொலைநோக்கியும் போதுமானதல்ல. எ87 கேலெக்ஸி கருந்துளை நம் சூரிய மண்டலம் அளவுக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது. 6.5 பில்லியன் சூரியனின் நிறை கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இத்தகைய அதி பிரம்மாண்ட கருந்துளையை படமெடுக்க வேண்டும் எனில், பூமி அளவுக்கு பெரிய தொலைநோக்கி தேவை. அப்படி ஒரு தொலைநோக்கியை உருவாக்கவே முடியாதே. அப்படியே உருவாக்க முடிந்தாலும் அதை பயன்படுத்துவது எப்படி? இந்த சிக்கலுக்கு தான் கூட்டு முயற்சி மூலம் விஞ்ஞானிகள் தீர்வு கண்டுள்ளனர்.
பூமியின் வெவ்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட ஆறு பிரம்மாண்ட தொலைநோக்கிகளை ஒன்றிணைத்து, கருந்துளையை நோக்கக் கூடிய மெய்நிகர் தொலைநோக்கியை உருவாக்கினர். இந்த தொலைநோக்கியே ஈ.எச்.டி தொலைநோக்கி என குறிப்பிடப்படுகிறது.
இந்த மெய்நிகர் தொலைநோக்கி கூட, அப்படியே கருந்துளையை படமெடுத்துவிடக்கூடியது என கொள்வதற்கில்லை. இதற்கான செயல்முறை மிகவும் சிக்கலானது. ஒவ்வொரு தொலைநோக்கியும் கருந்துளையின் ஒவ்வொரு பகுதியை படமெடுக்க முயன்று அது தொடர்பான தரவுகளை திரட்டும். இவை எல்லாவற்றையும் ஒருங்கிணைத்தால் ஒட்டு மொத்தமாக ஒரு சித்திரம் கிடைக்கும். அதுவே கருந்துளையின் படமாக இருக்கும் என கருதப்பட்டது.
ஆனால், இதிலும் எண்ணற்ற நடைமுறைச் சிக்கல்கள் இருந்தன. எல்லா தொலைநோக்கிகளும் ஒரே நேரத்தில் செயல்பட வேண்டும். அதற்கு எல்லா இடங்களிலும் வானிலை ஒரே போல சாதகமாக இருக்க வேண்டும். இப்படி ஒரு நாளை தேடி தேர்வு செய்து, அதன் பிறகு அணு கடிகாரம் கொண்டு நேரத்தை துல்லியமாக கணக்கிட்டு தரவுகளை பதிவு செய்தனர்.
இந்தத் தரவுகளில் இருந்து தான் கருந்துளையின் தோற்றத்தை உருவாக்கினர் என்று ஒற்றை வரி சொன்னாலும், இதன் பின் இருந்த கூட்டு முயற்சியும், அறிவியல் ஒருங்கிணைப்பும் வியக்க வைக்கக் கூடியது. முதலில் திரட்டப்பட்ட தகவல்களுடன் கணக்கில் இருந்தன. அவற்றை ஒரே இடத்தில் அணுக இணையத்தை பயன்படுத்துவது சாத்தியம் இல்லை என்பதால் தரவுகள் அனைத்தும் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டன. அண்டார்டிகாவில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் வந்து சேர ஆறு மாத காலம் காத்திருக்க வேண்டியிருந்தது.
இந்த இடத்தில் தான் கேத்தே பெளமனின் பங்களிப்பு வருகிறது. டன் கணக்கில் குவிந்த தரவுகளை அலசி ஆராய்ந்து அதிலிருந்து பொருத்தமான தகவல்களை பெற சூப்பர் கம்ப்யூட்டர்கள் கைகொடுக்கும் என்றாலும் அதற்கு வழிகாட்ட வேண்டும் அல்லவா? அதாவது டன் கணக்கிலான தரவுகளில் இருந்து எந்த விவரங்களை எடுத்துக்கொள்ள வேண்டும், அவற்றை எப்படி அணுக வேண்டும் என்று சொல்ல வேண்டும் அல்லவா? அதைவிட முக்கியமாக வெறும் இறைச்சல் என கருதப்படும் தேவையில்லாத தரவுகளை விலக்க வேண்டும். இதற்கான அல்கோரிதமை தான் அமெரிக்காவின் புகழ்பெற்ற எம்.ஐ.டி பட்டதாரியான கேத்தே பெளமன் உருவாக்கிக் கொடுத்தார்.
இந்த அல்கோரிதம் மூலம் கருந்துளையை படமெடுக்கும் அதிசயம் சாத்தியமாகி இருக்கிறது.
மூன்று ஆண்டுகளுக்கு முன் இதற்கான பணியில் பெளமன் ஈடுபட்டிருந்தார். கருந்துளை படமெடுப்பை விஞ்ஞானிகள் அறிவித்து இதன் முக்கியத்துவம் குறித்து விவரித்துக்கொண்டிருந்த நிலையில், எம்.ஐ.டி பிரிவின் டிவிட்டர் பக்கத்தில் இது பற்றிய தகவல் பகிர்ந்து கொள்ளப்பட்டது. 3 ஆண்டுகளுக்கான அல்கோரிதமை உருவாக்கினார், அந்த படம் இன்று வெளியானது. எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
பெளமன் கருந்துளை படம் எடுக்கும் நிகழ்வு பற்றி பேசும் வீடியோ மற்றும் ஏற்கனவே நிலவுக்கு மனிதன் சென்ற நிகழ்வின் முக்கிய பங்காற்றிய எம்.ஐ.டி பெண் விஞ்ஞானி ஹாமில்டன் மார்கரெட்டுடன் பெளமனை ஒப்பிடும் டிவீட்களும் வெளியிடப்பட்டன.
இதைத்தொடர்ந்து டிவிட்டரில் ஆய்வாளர்களும், சாமானியாளர்களும் பெளமனின் சாதனையை பாராட்டி டிவீட்களை பகிரத்துவங்கினர். அவரும் தன் பங்கிற்கு ஃபேஸ்புக்கில் இந்த நிகழ்வு குறித்த தனது உணர்வை பதிவு செய்தார். விரைவில் இணைய உலகம் முழுவதும் அவரது புகழ் பரவியது. மகத்தான அறிவியல் சாதனையில் 29 வயது இளம் கம்ப்யூட்டர் வல்லுனரான பெளமனின் அல்கோரிதம் முக்கியப் பங்காற்றியது மக்களின் கவனத்தை ஈர்த்தது.
இதன் விளைவாக பிபிசி உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் போமன் நேர்காணல் வெளியாகி இருக்கிறது. இணையம் கொண்டாடும் புதிய நட்சத்திரமாக உருவாகி இருந்தாலும் பெளமன், இது தனிப்பட்ட சாதனை அல்ல, 200க்கும் மேற்பட்டவர்களின் கூட்டு முயற்சியின் பலன் என கருத்து தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 2016 ல், டெட் அமைப்பின் சார்பில் நிகழ்த்திய உரையில், கருந்துளையை படமெடுப்பதற்கான அல்கோரிதம் செயல்படும் விதம் பற்றி பெளமன் உற்சாகமாக பேசும் காணொலியும் இப்போது இணையத்தில் அதிகம் பார்க்கப்பட்டு, பகிரப்பட்டு வருகிறது.; https://www.ted.com/talks/katie_bouman_what_does_a_black_hole_look_like